
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்-2024 போட்டி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த நவ.5-ம் தேதி தொடங்கி இன்று வரை இந்த போட்டி நடைபெற்றது.
இரு பிரிவில் நடந்த இந்த போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் முதல் முறையாக கிராண்ட் மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார். அதேபோல்,சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரணவ் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து "சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024"-ன் நிறைவு விழா நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வெற்றி பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அரவிந்த் சிதம்பரத்திற்கும் சாலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற பிரனவ் க்கு பாராட்டுக்கள். விளையாட்டு துறையில் முதலமைச்சர் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து விளையாட்டு வீரர்களுக்கு முழுமையான உதவிகளை மேம்படுத்தியுள்ளார்.
முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி விளையாட்டுத்துறை தமிழகத்தில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. தேசிய அளவைக் கடந்து சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது தமிழ்நாடு விளையாட்டு துறை.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள கிராண்ட்மாஸ்டர் குகேஷ் எலைட் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளார். இத்தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் 2780 புள்ளிகளைப் பெற்று அரவிந் சிதம்பரம் தனது கெரியரின் உச்சத்தை அடைந்துள்ளார்.
தமிழ்நாட்டில் மட்டும் 30 கிரான்ட் மாஸ்டர்ஸ் உருவாகியுள்ளனர். செஸ் போட்டியின் மீது ஆர்வம் கொண்டு இந்த போட்டிகளை நேரில் பார்க்க வந்த 3500 பார்வையாளர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.








