தமிழ் சினிமாவின் வெள்ளித்திரையில் வெறும் பிம்பங்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருந்த காலத்தில், சாமானிய மனிதனின் வீட்டு முற்றத்தில் கேமராவை வைத்து, நடுத்தர வர்க்கத்து வாழ்க்கையின் நாடித் துடிப்பை அப்படியே திரைக்குக் கடத்திய மாபெரும் கலைப் பிரம்மா இயக்குநர் கே. பாக்யராஜ்.
கண்கள் பேசும் மொழியை விட, மௌனங்கள் பேசும் கணங்களை விட, பாக்யராஜின் திரைக்கதை பேசிய யதார்த்தம் தமிழ் நெஞ்சங்களை என்றென்றும் ஆளுகின்றது!

பாரதிராஜாவின் பாசறையில் மலர்ந்த பாக்கியராஜ் தொடக்க காலத்தில் 'கோவை ராஜா' என்ற பெயருடன் கோலிவுட்டின் கதவுகளைத் தட்டியவர். இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் 'பதினாறு வயதினிலே' திரைப்படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்து, பின் 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் கழுதை இழுக்கும் ஒரு சாதாரண காட்சியில் அவரே நடித்து, தாயின் ஆசையைத் திரையில் நிஜமாக்கினார்.
பாரதிராஜாவின் 'புதிய வார்ப்புகள்' படத்தின் மூலம் நாயகனாக உருவெடுத்து, தமிழ் சினிமாவின் புதிய வார்ப்பாகவே மாறினார். பாக்கியராஜ் என்றாலே நினைவுக்கு வருவது சுவாரஸ்யத்தின் உச்சக்கட்டக் கதைகள்தான். 'அந்த 7 நாட்கள்' திரைப்படத்தின் 'பாலக்காட்டு மாதவன்' கதாபாத்திரம், காதலின் தியாகத்தை இமயத்தின் உயரத்தில் கொண்டு போய் நிறுத்தியது. 'முந்தானை முடிச்சு' படத்தில் அவர் கையாண்ட 'முருங்கைக்காய்' குறியீடு, இன்றுவரை தமிழ் பாப்-கலாச்சாரத்தின் தவிர்க்க முடியாத நகைச்சுவை அங்கமாக திகழ்கிறது.

'மௌன கீதங்கள்' மற்றும் 'சின்ன வீடு' போன்ற படங்களில், மனித உறவுகளின் சிக்கல்களையும், தம்பதிகளுக்குள் இருக்கும் ஈகோவையும் மிக நளினமான அழகியலோடு, எவ்வித ஆபாசமும் இன்றி நகைச்சுவையோடு கையாண்ட விதம் தனித்துவமானது.
தூறல் நின்னு போச்சு திரைப்படம் கிராமத்துப் பெண்களின் மனங்களை வருடிக் கொடுத்த தென்றல். விடியும் வரை காத்திரு சீட்டின் நுனியில் அமர வைத்த திரைக்கதை வித்தை. அவரது இயக்கத்தில் வசனங்கள் கூர்மையாக இருக்கும், அதே சமயம் அது பாமரனுக்கும் புரியும் எளிய மொழியில் இருக்கும்.
"காதலிப்பது தப்பில்லை, ஆனால் தன் காதலியையே இன்னொருவனுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும்போதும் , காதலின் புனிதம் கெடாமல் காப்பது தான் கலை" என்று 'அந்த 7 நாட்கள்' படத்தின் மூலம் உலகிற்குச் சொன்னவர். அவரது பெரிய கண்ணாடி, கையில் எப்போதும் இருக்கும் பேனா, முகத்தில் வழியும் அந்த வெள்ளந்திச் சிரிப்பு... இவை யாவும் வெறும் பாக்கியராஜின் அடையாளங்கள் அல்ல; 80, 90-களின் தமிழ் சினிமாவின் பொற்கால அடையாளங்கள்.

திரைத்துறைக்கு அடையாளமாக திகழும் ஜாம்பவான்களில் ஒருவரான கே.பாக்யராஜ், இன்று (ஜூன் 27) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு திரைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். அண்மையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு திரையுலகை பெரும் துயரத்தில் ஆழ்த்திய நிலையில், தற்போது பாக்யராஜின் மறைவு மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனினும் அரை நூற்றாண்டு காலத்தைக் கடந்து இன்றும் தமிழ் சினிமாவின் "திரைக்கதை ஆசானாக" விளங்கும் கே.பாக்கியராஜ் அவர்களின் கலைப்பயணம் இன்னும் பல தலைமுறைகளுக்கு சினிமா கற்றுக் கொடுக்கும் பல்கலைக்கழகமாய் ஒளிரும் என்பதில் ஐயமில்லை!






