விளையாட்டு

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி : 2 பிரிவுகளிலும் பட்டத்தை தட்டிச் சென்ற தமிழ்நாட்டு வீரர்கள் !

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி : 2 பிரிவுகளிலும் பட்டத்தை தட்டிச் சென்ற தமிழ்நாட்டு வீரர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, விளையாட்டுத்துறையில் பல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டை உலகமே உற்று நோக்கும் வகையில் தற்போது விளங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் இருந்து பல முன்னேற்றம் ஒவ்வொரு முறையும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்-2024 போட்டி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த நவ.5-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி (இன்று) வரை இந்த போட்டி நடைபெற்றது.

மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என்று இரு பிரிவில் நடந்த இந்த போட்டியில்,

* மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவை சேர்ந்த அர்ஜுன் எரிகைசி, தமிழ்நாட்டை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவை சேர்ந்த லெவோன் ஆரோனின் உள்பட 8 சர்வதேச மற்றும் இந்திய வீரர்களும்,

* சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திகேயன் முரளி, வி. பிரணவ், எம். பிரனேஷ் மற்றும் ஆர்.வைஷாலி போன்ற 8 இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் விளையாடினர்.

அரவிந்த் சிதம்பரம் (மாஸ்டர்ஸ் பிரிவு)
அரவிந்த் சிதம்பரம் (மாஸ்டர்ஸ் பிரிவு)

இந்த நிலையில் இந்த போட்டியின் இறுதி கட்டம் இன்று நடைபெற்ற நிலையில், இதில் மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் பட்டம் வென்று அசத்தியுள்ளனர்.

அதாவது கடந்த ஒரு வாரமாக சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இந்த போட்டித் தொடர் நடைபெற்ற நிலையில், மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் நம்பர் ஒன் வீரரான அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட 8 கிரான் மாஸ்டர்கள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்தினர். சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரனேஷ், வைஷாலி, ப்ரணவ் உள்ளிட்ட 8 கிரான் மாஸ்டர்கள் பங்கேற்று மௌன யுத்தம் நடத்தினர்.

மொத்தம் 7 சுற்றுகளாக நடைபெற்ற மாஸ்டர் பிரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், இந்தியா நம்பர் ஒன் வீரர் அர்ஜுன் எரிகைசி, அமெரிக்காவின் லெவோன் அரோனியன் ஆகிய மூவரும் 4.5 புள்ளிகளை பெற்று சமநிலையை எட்டினர். இந்த 3 பேர்களில் யார் சாம்பியன் என்பதை தீர்மானிப்பதற்காக டைப்ரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.

பிரணவ் ( சேலஞ்சர்ஸ் பிரிவு)
பிரணவ் ( சேலஞ்சர்ஸ் பிரிவு)

இந்த 7 போட்டிகளிலும் அரவிந்த் சிதம்பரம் தோல்வியை சந்திக்காததால், அரவிந்த் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். பிளே ஆஃப் டைப்ரேக்கர் போட்டியில் அர்ஜுன் எரிகைசியும் லெவோன் அரோனியனும் பலப்பரீட்சை நடத்தினர் இதில் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற ஆட்ட கணக்கில் லெவோன் அரோனயன் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் லெவோன் ஆரோனியனை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற ஆட்டக் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் அரவிந்த் சிதம்பரம். தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் முதல் முறையாக இதுபோன்ற ஓபன் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதேபோல் நடப்பாண்டிலும் தமிழ்நாட்டைச்சேர்ந்த வீரர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளனர்.

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி : 2 பிரிவுகளிலும் பட்டத்தை தட்டிச் சென்ற தமிழ்நாட்டு வீரர்கள் !

அதேபோல் நடப்பாண்டு முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட சேலஞ்சர்ஸ் தொடரில் ஏழு சுற்றுகளில் முடிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரணவ் 4 வெற்றி, 3 டிரா என 5.5 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வசமாக்கினார். சேலஞ்சர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்ற பிரணவ், அடுத்த ஆண்டு நடைபெறக்கூடிய மாஸ்டர் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார்.

மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என இரண்டு பிரிவுகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் சாம்பியன் பட்டம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமையை தேடித் தந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் நிறைவு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றி, வீரர் - வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

அப்போது மாஸ்டர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் என்ற அரவிந்த் சிதம்பரத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.15 லட்சத்திற்கான பரிசுத் தொகையையும், சேலஞ்சர்ஸ் பிரிவில் பட்டம் வென்ற பிரணவிற்கு ரூ.6 லட்சத்திற்கான பரிசுத் தொகையையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

banner

Related Stories

Related Stories