ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்து சென்னை புறப்பட்ட பொழுது ரயில் இன்ஜினில் இருந்து மூன்று பெட்டிகள் தனியே கழன்றுள்ளது.
இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து உடனடியாக ரயில் ஓட்டுநருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இச்சம்பவம் நிகழ்ந்ததால் உடனடியாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் விரைந்து வந்தனர்.
பின்னர் துரிதமாக செயல்பட்ட ரயில்வே அதிகாரிகள் மீண்டும் பெட்டியை இணைத்தனர். இதனால் 30 நிமிடங்கள் தாமதமாக சேது எக்ஸ்பிரஸ் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இது தொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் ரயில்வே திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய பிளாட்பாரம் இருந்து சிறிது தூரத்தில் நிகழ்ந்துள்ளது என்று கூறப்படும் நிலையில், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கபட்டுள்ளது. எனினும் தொடர்ந்து ரயில்கள் இது போன்ற விபத்து நேர்வது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.