தமிழ்நாடு

செங்கல்பட்டில் நவீன புகைப்பட குறுங்குழும பொதுவசதி மையம்! : அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்துவைப்பு!

“தமிழ்நாட்டில் கட்டமைப்பு வசதிக்காகவும், விலை மதிப்புமிக்க தொழில்நுட்ப வளர்ச்சிக்காகவும் ஒன்றிய மாநில அரசுகளின் அரசு மானியங்களுடன் வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது” என்றார் அமைச்சர் தா.மோ. அன்பரசன்.

செங்கல்பட்டில் நவீன புகைப்பட குறுங்குழும பொதுவசதி மையம்! : அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்துவைப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், செங்குன்றம் பகுதியில் தமிழ்நாடு அரசு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் DIGI Photo Video Factory Limited சார்பில் தமிழக அரசு மானியமாக ரூ.4.73 கோடி, குழுமத்தின் பங்களிப்பாக ரூ.1.56 கோடி என மொத்தம் ரூ.6.29 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன புகைப்பட குறுங்குழும பொதுவசதி மையத்தினை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றி பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன்,

“தமிழ்நாட்டில் கட்டமைப்பு வசதிக்காகவும், விலை மதிப்புமிக்க தொழில்நுட்ப வளர்ச்சிக்காகவும் ஒன்றிய மாநில அரசுகளின் அரசு மானியங்களுடன் வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் வெள்ளி குழுமம், தங்க நகை குழுமம், பாசிமணி குழுமம், விசைத்தறி குழுமம், தையல் குழுமம், ஆயத்த ஆடை குழுமம் போன்ற பல்வேறு குழுமங்கள் அமைக்கப்பட்டு, அந்தந்த பகுதியில் உள்ள தொழில் முனைவோருக்கு மான்யத்தொகை வழங்கப்பட்டு இதுபோன்ற திட்டங்கள் மூலம் பல்வேறு பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.

இதனடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புகைப்பட குழுமம் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த காரணத்தின் பெயரில் இன்று உங்களின் அனைவரின் நல்வாழ்த்துகளுடன் இக்குழுமம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நமது செங்கல்பட்டு மாவட்டத்தின் மறைமலை நகரில் அமைந்துள்ள இக்குழுமத்தில் 30 புகைப்பட கலைஞர்கள் உறுப்பினராக உள்ளனர். இதற்காக 4,200 சதுர அடியில் தமிழ்நாடு அரசு மானியமாக ரூ.4.73 கோடி, குழுமத்தின் பங்களிப்பாக ரூ.1.56 கோடி என மொத்தம் ரூ.6.29 கோடி மதிப்பீட்டில் ஆல்பம் பிரிண்டிங் மிஷின், உயர் தொழில்நுட்ப ஆல்பம் / போட்டோ புக்ஸ் செய்யும் மிஷின், எம்போசிங் பிரிண்டர் மிஷின், அவுட்டர் ஆல்பத்திற்கான லார்ஜ் சைஸ் பிரிண்டிங் மிஷின் மற்றும் எடிட்டிங்லேப் என புகைப்படத்திற்கு தேவையான அத்தனை கருவிகளும் இங்கே வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ரூ.603.95 கோடி மதிப்பீட்டில் ரூ.161.28 கோடி மானியத்துடன் 43 தொழிற் குழுமம்கள் அமைத்திட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் முந்திரி குழுமம், கோவை மாவட்டத்தில் அச்சு வார்ப்பு குழுமம், மதுரை மாவட்டத்தில் வெப் ஆப்செட் பிரின்டிங் குழுமம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நவீன புகைப்பட குழுமம் இன்றைய நாள் தொடங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் நவீன புகைப்பட குறுங்குழும பொதுவசதி மையம்! : அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்துவைப்பு!

மீதமுள்ள 39 குழுமங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அது மட்டுமில்லாமல் நமது செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்லாவரத்தில் அரசு மானியம் ரூ.3 கோடி, ஒன்றிய அரசு ரூ.14 கோடி, குழும பங்களிப்பு ரூ.3 கோடி என மொத்தம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் தோல் பொருட்களுக்கான குழுமம் அமைக்கப்பட்டு வருகிறது.

21 ஏக்கர் பரப்பளவில் 23 கோடி திட்ட மதிப்பீட்டில் கடம்பாடியில் சிற்பப் பூங்கா, 28 ஏக்கர் பரப்பளவில் ரூ.8.26 கோடி மதிப்பீட்டில் திருக்கழுக்குன்றம் முள்ளிகுளத்தூரில் புதிய தொழிற்பேட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சிப்கோ நிறுவனம் குறு, சிறு தொழில் குழுமங்களுக்காக ஒன்றிய அரசால் ஒப்புதல் பெறப்பட்ட 49 பொது வசதி மையங்களில் 32 பொது வசதி மையங்கள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதன்மை நிலையில் இருக்கிறது

நடப்பு நிதியாண்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சரப்பாக்கத்தில் சித்த மருத்துவ மூலிகை பொருட்காட்சி, தயாரிப்பு குழுமம் புதுக்கோட்டை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆயத்த ஆடை குழுமங்கள், சேலம் மாவட்டத்தில் பட்டு நூல் குழுமம், நாமக்கல் மாவட்டத்தில் துணிவேல் வார்ப்பு குழுமம் என 6 குழுமங்களுக்கு ரூ.25 கோடி மதிப்பீட்டில் பொது வசதி மையங்கள் அமைக்கப்படும் என்று கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டு, இப்பணிகள் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி தரத்தினை உலக அளவில் உயர்த்த வேண்டும் என்பதன் அடிப்படையில் நம்முடைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருமுடிவாக்கம் பகுதியில் ரூ.47 கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் உற்பத்தி பெருங்குழுமத்தின் முதல் பகுதியாக தொழில் நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்பக் கருவிகள் பரிசோதிக்கும் உயர்நுட்ப பரிசோதனை கூடம் முதலமைச்சர் அவர்களால் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இதேபோன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ரூ.155 கோடி மதிப்பீட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவ தொழில் குழுமத்தில் மருத்துவ உற்பத்தி நிறுவனங்களுக்கு மொத்தம் 46 தொழில்மனைகளில் 40 மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இக்குழுமமும் செயல்பாட்டில் வரவுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 8598 ஏக்கர் பரப்பளவில் ரூ.15,171 தொழில்மனைகள், தொழில் கூடங்களுடன் 130 தொழிற்பேட்டைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 295 கோடி மதிப்பீட்டில் 512 ஏக்கர் பரப்பில் 8 புதிய தொழில் பேட்டைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 7 மாவட்டங்களில் 248.01 ஏக்கர் பரப்பளவில் ரூ.115.53 கோடி மதிப்பீட்டில் 8 தொழிற்பேட்டைகள் உருவாக்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் 283.40 ஏக்கர் பரப்பளவில் ரூ.115.64 கோடி மதிப்பீட்டில் 10 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கும் பணி இப்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது போன்று பொது வசதி மையங்கள் தொடங்குவதன் நோக்கம் என்னவென்றால், ஏழ்மை நிலையில் உள்ள ஒரே வகையான தொழில் முனைவோர்களை ஒருங்கிணைத்து பெரும்பகுதி அரசு மானியம் பெற்று, அவர்களின் தொழில்களை மேம்படுத்தி வாழ்க்கையில் முன்னேறி வளம் பெற உறுதுணையாக அமையும்.

தமிழ்நாடு அரசு தற்போது பொது வசதி மையங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து ஏற்படுத்தி வருகிறது. இதனை சுத்தமாக பராமரிக்கவும், நிர்வகிப்பவர்கள் சரியான முறையில் நிர்வகித்து நல்ல முறையில் பயன்படுத்திட வாழ்க்கையில் வளம்பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories