மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பவானி ஆறு, கேரள மாநிலத்தில் பயணித்து மீண்டும் தமிழ்நாட்டில் அத்திக்கடவு வந்து சேருகிறது. பின்னர் பில்லூர் அணை வழியாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் பவானியாற்று நீர், மேலும் 75 கிலோமீட்டர் தூரம் பயணித்து காவிரி ஆற்றில் கலக்கிறது.
மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கின்போது, ஆற்றில் வீணாகும் தண்ணீரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் வறட்சிப் பகுதிகளில் உள்ள 1045 குளங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் அத்திக்கடவு - அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக 1957ம் ஆண்டு முதன் முதலில் அப்போதைய தமிழ்நாடு முதல்வர் காமராஜரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். எனினும் 1972ம் ஆண்டில்தான் முதலமைச்சர் கலைஞர் தலைமையிலான திமுக அரசால் கொள்கை ரீதியாக இத்திட்டம் ஏற்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் இத்திட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்த பின் 1990ம் ஆண்டு அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் கலைஞர் முயற்சிகள் மேற்கொண்டார். ஆட்சிமாற்றம் காரணமாக மீண்டும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
பல்வேறு தடைகளை தாண்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட தீவிர முயற்சியின் பயனாக அத்திக்கடவு அவினாசி திட்டப்பணிகள் நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகிக்கும் இத்திட்டத்தின் தொடக்க விழா பவானி காலிங்கராயன் அணைக்கட்டு முதலாவது நீரேற்று நிலையத்தில் நடைபெற உள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 24 ஆயிரத்து 468 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
திட்டத்துக்கான பம்பிங் ஸ்டேஷன்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் நிலம் கையகப்படுத்தப்படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், திமுக ஆட்சி வந்த பின்புதான் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த பணி நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.