தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். அவர் நடிகர் மட்டுமல்லாது பெரியாரின் கருத்துக்களை பொது வெளியில் துணிச்சலுடன் பேசக்கூடியவர். மேலும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத திட்டங்களைக் கடுமையாகவும் விமர்சித்து வருகிறார்.
தந்தையைப் போன்று மகள் திவ்யா சத்யராஜும் அரசியலில் ஆர்வம் கொண்டவர். ஊட்டச்சத்து நிபுணராக இருக்கும் இவர் ’மகிழ்மதி’ என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் பின் தங்கிய குடும்பங்களின் குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார்.
மேலும் அரசியல் சார்ந்த கருத்துக்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். சனாதனத்திற்கு எதிராகவும் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் அரசியலில் ஆர்வம் இருப்பதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
இதையடுத்து சத்யராஜ் மகள் பிரபல கட்சியில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக செய்திகள் பரவின. இதற்கு தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
பா.ஜ.க அழைத்தது உண்மைதான் என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், "தேர்தலில் போட்டியிட ஒரு கட்சியிலிருந்து அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால் எந்த ஒரு மதத்தைப் போற்றும் கட்சியுடனும் இணைய எனக்கு விருப்பம் இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மைகள் செய்யவே அரசியலுக்கு வரவேண்டும் என நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.