தமிழ்நாடு

“எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரின் சொத்து மட்டும் ரூ.300 கோடி” : அதிமுக மா.செ மீது ஒன்றிய செயலாளர் புகார்!

எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கடந்த அதிமுக ஆட்சியில் 300 கோடிக்கு மேல் சொத்து சேர்த்து வைத்திருப்பதாக அதிமுக ஒன்றிய செயலாளர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

“எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரின் சொத்து மட்டும் ரூ.300 கோடி” : அதிமுக மா.செ மீது ஒன்றிய செயலாளர் புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்து வருபவர் வெங்கடாசலம். கடந்த அதிமுக ஆட்சியில் சில மேற்கு சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த இவர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பட்டியலில் முன்னிலையில் இருப்பவர். மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு பினாமியாகவும் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் கடந்த அதிமுக ஆட்சியின் பொழுது சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்து வைத்திருப்பதாக அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஏ.வி.ராஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு சேலம் புது ரோடு பகுதியில் ஹோட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்த வெங்கடாசலம் தற்போது 300 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார், அவரது வீடு மட்டும் 10 கோடி ரூபாய் வரை இருக்கும். இது தவிர சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், கரூர் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளிலும் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொத்து உள்ளது.” என சொத்து பட்டியலை ஏ.வி.ராஜி வெளியிட்டார்.

“எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரின் சொத்து மட்டும் ரூ.300 கோடி” : அதிமுக மா.செ மீது ஒன்றிய செயலாளர் புகார்!

மேலும் பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியின் போது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி தன்னிடம் மட்டுமல்லாமல், பலரிடமும் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், தனக்கு மட்டும் பல லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றும் இதேபோன்று பலரிடமும் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி உள்ளார்.

இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி இடம் எழுத்து மூலமாகவும், நேரடியாகவும் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டிய அதிமுக ஒன்றிய செயலாளர், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ள அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியும் எழுப்பி உள்ளார்.

எடப்பாடியின் ஆதரவாளரான வெங்கடாசலத்தின் மீது அதிமுக ஒன்றிய செயலாளரே 300 கோடி ரூபாய் சொத்து சேர்த்து வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டியிருப்பது அதிமுக வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வெங்கடாசலமே இவ்வளவு சொத்து சேர்த்திருக்கும் பொழுது எடப்பாடி பழனிச்சாமியின் சொத்து மதிப்பு என்பது பல ஆயிரம் கோடி இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

banner

Related Stories

Related Stories