தமிழ்நாடு

”நம் இன எதிரிகளின் கோபத்துக்கு காரணம் இதுதான்” : பேரவையில் அனல் தெறிக்க பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்தியாவின் பொருளாதாரத்துக்கு 9 விழுக்காடு பங்கைத் தருகிறது தமிழ்நாட்டின் பொருளாதார வளம்! இது, திராவிட மாடல் ஆட்சியின் முதல் சாதனை.

”நம் இன எதிரிகளின் கோபத்துக்கு காரணம் இதுதான்” : பேரவையில் அனல் தெறிக்க பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை:-

பேரவைத் தலைவர் அவர்களே, எங்கள் ஊனோடும் உயிரோடும் கலந்துவிட்ட அன்னைத் தமிழ்மொழிக்கு இனிய வணக்கம்! பார்போற்றும் வகையில் மூவேந்தர் கொடிகட்டி ஆண்ட தமிழ்நாட்டுக்குக் கம்பீர வணக்கம்! இறுதிமூச்சு இருக்கும்வரை சுயமரியாதைச் சுடரொளியாகச் சுற்றிச்சுழன்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குத் திராவிட வணக்கம்! இனம் காக்க, 75 ஆண்டுகளுக்கு முன்பு, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் பேரியக்கத்தை உருவாக்கிய பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணாவுக்கு அன்பான வணக்கம்!

ஐம்பது ஆண்டு காலம் இயக்கத்தை நடத்தி, ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து, நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி; எங்களை எல்லாம் உருவாக்கிய தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞருக்குக் கனிவான வணக்கம்!

தமிழும், தமிழ்நாடும், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும்தான் எங்களை எந்நாளும் இயக்கிக் கொண்டிருக்கும் இயங்கு சக்திகள்! ஐந்தும் நம்மை இயக்கிக் கொண்டிருப்பதால்தான், உற்சாகமாக உயர்ந்து கொண்டு இருக்கிறோம். இந்தியாவில் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை நாம் அடைய, இந்த உன்னத தலைவர்கள் போட்டுத் தந்த வழித்தடம்தான் அதற்குக் காரணம்.

திராவிட மாடல் வழித்தடத்தில் நாம் இயங்கிக் கொண்டிருப்பதால்தான், தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை; தடுக்கவும் முடியாது! "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது." ஒரு காலத்தில் ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்று நாமே முழங்கினோம். இன்று, "தெற்கு வளர்கிறது; வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது" என்ற அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம். இத்தகைய தகுதியும் பெருமையும் தமிழ்நாட்டிற்கு எதனால் சாத்தியமானது? திராவிட இயக்கத்தால்தான். ஆட்சி என்பது வெறும் அதிகாரம் அல்ல; கொள்கையைச் செயல்படுத்தும் ‘களம்’ என்று மாற்றிக் காட்டியவர்கள்தான் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும்!

‘இன்னார்க்கு மட்டுமே இன்னது’ என்பதை மாற்றி ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற கருத்தியலை அரசியல் களத்தில் விதைத்தார் தந்தை பெரியார்! அதனை ஆட்சி நிர்வாகத்தில் செயல்படுத்தியவர்கள் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும். அதே கோட்பாட்டை இன்றைய நவீன காலச் சிந்தனைகளுடன் இணைத்து, ‘திராவிட மாடல்’ ஆட்சியை உங்கள் அனைவரது பேராதரவுடன் நான் நடத்தி வருகிறேன். நான் என்றால், தனிப்பட்ட நான் அல்ல; அப்படி எப்போதும் நான் கருதியது இல்லை. "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" என்று நான் பொறுப்பேற்கும்போது, அந்தச் சொல்லை உச்சரித்த அடியேன் நான் தான். உச்சரிக்க வைத்தவர்கள், கோடிக்கணக்கான உடன்பிறப்புகளையும் உள்ளடக்கிய தமிழ்நாட்டு மக்கள். அந்தத் தமிழ்நாட்டு மக்களுக்காகவே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் சிந்தித்துச் செயல்பட்டு வருகிறேன். என் மனச்சாட்சிப்படி நான் செயல்பட்டு வருகிறேன். எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாண உறுதிமொழிக்கு உண்மையாக நான் ஆட்சி செய்து வருகிறேன். இன்னும் சொன்னால், தந்தை பெரியாரின் வாரிசாக, பேரறிஞர் அண்ணாவின் வாரிசாக இருப்பவர் எப்படிச் செயல்பட வேண்டுமோ, அப்படிச் செயல்பட்டு வருகிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் இன்று இருந்து, ஆட்சி செய்திருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி நான் ஆட்சி நடத்தி வருகிறேன். இதுதான் கலைஞருக்கும் பெருமை; அவர் மகனான இந்த ஸ்டாலினுக்கும் பெருமை என்பதை உணர்ந்தவன் நான்.

”நம் இன எதிரிகளின் கோபத்துக்கு காரணம் இதுதான்” : பேரவையில் அனல் தெறிக்க பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

14 வயதில் தமிழ்க் கொடி ஏந்தி, 95 வயது வரையிலும் அதனை உயர்த்திப் பிடித்திருந்த தமிழினத் தலைவர் கலைஞருக்கு இது நூற்றாண்டு விழா கொண்டாடும் ஆண்டு. இந்த ஆண்டில், அவரது உயிரினும் மேலான இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருக்கிறது என்பதுதான் எனக்குக் கிடைத்த பெருமை. பெருமைமிகு கலைஞரின் நூற்றாண்டில், வியப்புமிகு திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிற சிறப்புமிகு தகுதியால், மகிழ்ச்சிமிகு மனநிலையில் இந்த மாமன்றத்தில் நான் கம்பீரமாக நின்றுகொண்டு இருக்கிறேன். இத்தகைய நெகிழ்ச்சிமிகு ஆண்டின் தொடக்கத்தில், கடந்த 12-ஆம் நாளன்று மாண்புமிகு ஆளுநர் உரையுடன் 2024-2025-ஆம் ஆண்டுக்கான பேரவை நடவடிக்கைகள் தொடங்கி இருக்க வேண்டும்.

ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரையாற்றுவது என்பது சட்டமன்ற மரபு. அரசின் கொள்கை அறிக்கையாக அமைச்சரவை தயாரித்துத் தருவதை அப்படியே இந்த மன்றத்தில் வாசிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. ஆனால், ஆளுநர் அவர்கள் தனது அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இம்மாமன்றத்தையும் பயன்படுத்திக் கொண்டாரோ! என்று கருதும் வகையில் நடந்து கொண்டார்.

இது, எங்களை அல்ல; நூற்றாண்டுப் பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தையே அவமானப்படுத்தும் செயல் அல்லவா? கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களை அலட்சியப்படுத்தும் காரியமல்லவா? மக்களாட்சி மாண்புக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அரசியல் சட்டத்தை மீறி, தான் ஏற்றுக்கொண்ட பதவிப்பிரமாணத்துக்கு மாறாக செயல்படுவது அல்லவா?

எங்களைப் பொறுத்தவரை, இதுபோன்ற எத்தனையோ தடைகளை உடைத்து எழுந்து வந்தவர்கள். "தடைக்கற்கள் உண்டென்றால், அதை உடைக்கும் தடந்தோள்கள் உண்டு" என்பதை 75 ஆண்டுகளாக மெய்ப்பித்துக் காட்டி வரும் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவன் என்ற தகுதியோடு சொல்கிறேன்..." நான் ஸ்டாலின்! அதுவும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! பாசிசத்தை - எதேச்சாதிகாரத்தை - இந்தியாவில் நெஞ்சுயர்த்தி எதிர்கொண்டு இருக்கும் நாம், இதுபோன்ற சிறுபிள்ளை விளையாட்டுச் செயல்களைப் பார்த்து பயந்துவிட மாட்டோம். போற்றுவோர் போற்றட்டும்; புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்! எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்!"" என்பதுதான் இவர்களுக்கு நான் சொல்லும் பதில்!

பேரவைத் தலைவர் அவர்களே! உழைப்பு! உழைப்பு! உழைப்பு! என்று தலைவர் கலைஞர் அவர்கள் என்னைப் பாராட்டினார். எங்களுக்கு இப்படித்தான் உழைக்கக் கற்றுக் கொடுத்தார். அந்த உழைப்பால்தான் தமிழ்நாட்டுக்குச் சிறப்பு சேர்த்துக் கொண்டு இருக்கிறோம். இந்த உயர்வுக்குக் காரணமான அவை முன்னவர் அண்ணன் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுக்கும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை செயலாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரவைத் தலைவர் அவர்களே, என் கையில் முதலமைச்சர் என்ற பொறுப்பு வந்து 33 மாதங்கள் ஆகிறது. இவை "முன்னேற்ற மாதங்கள்!" "சாதனை மாதங்கள்!" இந்தியாவின் பொருளாதாரத்துக்கு 9 விழுக்காடு பங்கைத் தருகிறது தமிழ்நாட்டின் பொருளாதார வளம்! இது, திராவிட மாடல் ஆட்சியின் முதல் சாதனை.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது; இது, இரண்டாவது சாதனை. ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி 7.24 விழுக்காடாக இருக்கும்போது தமிழ்நாட்டின் வளர்ச்சியானது 8.19 விழுக்காடாக உயர்ந்துள்ளது! இது, மூன்றாவது சாதனை. இந்திய அளவில் பணவீக்கமானது 6.65 விழுக்காடாக இருக்கும்போது, தமிழ்நாட்டில் அது 5.97 விழுக்காடாக குறைந்து உள்ளது! இது, நான்காவது சாதனை.

ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது! இது, ஐந்தாவது சாதனை. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது! இது, ஆறாவது சாதனை. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை 3-ஆவது இடத்துக்கு உயர்த்தி உள்ளோம்! இது, ஏழாவது சாதனை.

கல்வியில் இரண்டாவது இடத்துக்குத் தமிழ்நாட்டை உயர்த்தியது இந்த ஆட்சியின் எட்டாவது சாதனை. புத்தாக்கத் தொழில்கள் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது ஒன்பதாவது சாதனை. இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், விளிம்புநிலை மக்கள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து, தங்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருவதாகச் சொல்லத் தொடங்கி இருப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் பத்தாவது சாதனை.

இந்தப் பத்து மட்டுமல்ல, இந்தியாவின் தென் மூலையில் ஒரு ஆட்சி நடக்கிறது; அதன் திட்டங்களைத் தெரிந்து வந்து நம் மாநிலத்தில் செயல்படுத்துங்கள் என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் இங்கு வந்து பார்த்துச் செல்வதுதான் திராவிட மாடல் ஆட்சியின் வரலாற்றுச் சாதனை. இப்படி, இன்று முழுவதும் என்னால் பட்டியலிட்டுக் கொண்டே இருக்க முடியும், ஆனால், நேரம் போதாது.

இந்தச் சாதனைகளுக்கு எல்லாம் மகுடம் சூட்டுவதுபோல் ஒரு சாதனை இருக்கிறது. அது தான் மிக மிக முக்கியமானது. நமது ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து வகையிலும் வளர்ந்து வருவதைப் பார்த்து நம் இன எதிரிகளுக்கு பொறாமையும் கோபமும் வருகிறது அல்லவா? அதுதான் திராவிட மாடல் ஆட்சியின் மாபெரும் சாதனை என்பதைப் பெருமையுடன் இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

ஆதிக்கக் குவியலை அகற்றுவதும், அடிமைப் பள்ளத்தை நிரப்புவதும் இவர்களது கோபத்துக்குக் காரணம். அந்தக் கோபத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் காட்டுகிறார்கள். அரசியல் சட்டப் பதவியில் இருக்கும் ஆளுநரும் அதற்கு விதிவிலக்கல்ல. அதற்காக நாம் அமைதியாக இருக்க முடியாது. நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும், நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் நாளாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

ஒவ்வொரு முறை நான் கையெழுத்து போடும் போதும், இதனால் பயன்பெறப்போகும் இலட்சக்கணக்கான மக்களின் முகங்களைப் பார்க்கிறேன். சில திட்டங்களின் பெயரைச் சொல்லி, இதன் மூலமாக எத்தனை இலட்சம் பேர் பயனடைந்திருக்கிறார்கள் என்று எனது செயலாளர்களிடம் கேட்டேன். அவர்களின் பதில் எனக்கு மகிழ்ச்சி அளித்தது.

மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை, "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை"யாக ஒரு கோடியே 15 லட்சத்து 16 ஆயிரத்து 292 மகளிர் பெறுகிறார்கள். "விடியல்" பேருந்து பயணத் திட்டம் மூலமாக 445 கோடி முறை பயணித்து பெண்கள் பயனடைந்து இருக்கிறார்கள். "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தால் பயனடைந்தவர்கள் ஒரு கோடி பேர். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 16 லட்சம் பிள்ளைகள் வயிறார உணவு உண்கிறார்கள். நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் 13 லட்சத்து 12 ஆயிரம் பேர். கூட்டுறவுக் கடன் தள்ளுபடி பெற்றவர்கள் 1 லட்சம் பேர்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் "புதுமைப் பெண்" திட்டப்படி 2 ஆண்டுகளுக்கு, 4 லட்சத்து 81 ஆயிரத்து 75 மாணவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 2 ஆண்டுகளில், 28 லட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளார்கள். ‘இல்லம் தேடி கல்வித் திட்டத்தில்’ 24 லட்சத்து 86 ஆயிரம் பள்ளிப் பிள்ளைகள் பயனடைந்திருக்கிறார்கள். 62 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் புதிய குடிநீர் இணைப்பை பெற்றுள்ளது. 2 லட்சம் உழவர்கள் புதிய மின் இணைப்பு பெற்றுள்ளார்கள். உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 30 லட்சம் முதியோர் மாதந்தோறும் பெறுகிறார்கள். உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 5 லட்சம் மாற்றுத்திறனாளிகள் மாதந்தோறும் பெறுகிறார்கள். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தால் பயனடைந்தவர்கள் 42 லட்சத்து 33 ஆயிரம் பேர்.

முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீடு தொகை உயர்ந்த பிறகு பயன்பெற்றவர்கள் 20 லட்சத்து 55 ஆயிரம் பேர். மீன்பிடி கால உதவித்தொகை பெற்றவர்கள் 4 லட்சத்து 86 ஆயிரம் பேர். மீன்பிடி இல்லாதகால உதவித்தொகை பெற்றவர்கள் 5 லட்சத்து 15 ஆயிரம் பேர். ‘நம்மைக் காக்கும் 48’ திட்டத்தால் பயனடைந்தவர்கள் 2 லட்சம் பேர். ‘முதல்வரின் முகவரி திட்ட’த்தினால் பயனடைந்தவர்கள் 19 லட்சத்து 69 ஆயிரம் பேர்.

‘மக்களுடன் முதல்வர் திட்ட’த்தின் மூலமாக, 3 லட்சத்து 40 ஆயிரம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டு உள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 45 லட்சம் குடும்பங்களுக்கு 6 ஆயிரம் மற்றும் ஆயிரம் என நிவாரணத் தொகை வழங்கி இருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, இந்த 33 மாதங்களில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று 6 ஆயிரத்து 569 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகளை இலட்சக்கணக்கான மக்களுக்கு வழங்கியுள்ளேன்.இப்படி, தமிழ்நாட்டின் ஒவ்வொருவர் இல்லந்தோறும் உதவி செய்து வரும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி! ஒவ்வொரு தனிமனிதரின் கோரிக்கையையும் கேட்டு நிறைவேற்றிக் கொடுக்கும் ஆட்சி இது. இவை எல்லாம் வெறும் எண்ணிக்கை அல்ல; இவை எல்லாம் திராவிட மாடல் ஆட்சியின் எண்ணங்கள்! தமிழ்நாட்டில் சமூகச் சீர்திருத்த ஆட்சி நடைபெற்று வருவதன் அடையாளங்கள்!

மகளிருக்கு உரிமைத் தொகை, விடியல் பேருந்து திட்டத்தின் மூலமாக பெண்ணினத்தின் பொருளாதார-சமூக நிலை உயர்கிறது. தன்னம்பிக்கையையும், தற்சார்பு நிலையையும் அவர்கள் அடைகிறார்கள். பெண்களின் சமூகப் பங்களிப்பு 40 விழுக்காட்டில் இருந்து 65 விழுக்காடாக உயர்ந்துவிட்டது. உயர்கல்வி பெற வரும் அரசுப் பள்ளி மாணவியர்க்கு உதவித்தொகை தருவதன் மூலமாக 34 விழுக்காடு மாணவிகள் அதிகமாக கல்லூரிகளை நோக்கி வந்துள்ளார்கள்.

நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக, உயர் நிறுவன வேலைகளில் சேர்வதற்கு இளைஞர்கள் தகுதி பெற்று விட்டார்கள். பன்னாட்டு செஸ் ஒலிம்பியாட், கேலோ இந்தியா போட்டிகளை நடத்தியதன் மூலமாக விளையாட்டு ஆர்வம் அதிகமாகி விட்டது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக்கப்பட்டு வருவதன் மூலமாக கர்ப்பக்கிரகத்தில் சமத்துவம் நுழையத் தொடங்கி விட்டது. பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, சமூக முன்னேற்றத்தையும் சேர்த்து கொடுத்து வருகிறோம்.

சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்துச் சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதையும் உள்ளடக்கி ‘எல்லார்க்கும் எல்லாம்‘ என்ற ‘திராவிட மாடல்’ கொள்கையை உருவாக்கி, அதன் தடத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியானது செயல்பட்டு வருகிறது.

அதனால்தான் இந்தியாவின் முன்னணி பத்திரிக்கைகள் மட்டுமல்ல, உலகளாவிய பத்திரிக்கைகளின் கவனத்தை ஈர்த்து அவர்களது பாராட்டை பெறும் அரசாக கழக அரசு இயங்கி வருகிறது.தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை, ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை முதல் பக்கத்தில் பாராட்டி உள்ளது. 2015-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பைவிட, 2023-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி சிறப்பாகக் கையாண்டது என்று ‘தி இந்து’ ஆங்கில நாளேடு பாராட்டியது. பசுமை, சுற்றுச்சூழல் திட்டங்களைச் சிறப்பாகக் கையாண்டு வருவதாக ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ புகழ்ந்துள்ளது.

புத்தாக்க நிறுவனங்கள் மூலமாக ‘பெஸ்ட் பெர்பாமென்ஸ்’ செய்கிறது தமிழ்நாடு என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ சொல்கிறது. மிக்ஜாம் புயலின்போது அரசு இயந்திரம் துரிதமாகச் செயல்பட்டதை ‘டெக்கான் கிரானிக்கல்’ பாராட்டியது. காலை உணவுத் திட்டத்தை பாராட்டிய ‘தினத்தந்தி’ நாளிதழ், ‘அன்று காமராசர்- இன்று மு.க.ஸ்டாலின்‘ என்று தலையங்கம் தீட்டியது. மக்களைத் தேடி வரும் அரசு என்று பாராட்டியது ‘தினகரன்‘. முதலீட்டாளர்கள் மாநாட்டை பாராட்டி தலையங்கம் தீட்டியது ‘தினமணி‘.கேலோ இந்தியா - சாதித்துக் காட்டிய தமிழ்நாடு என்று எழுதியது ‘இந்து தமிழ் திசை‘. இப்படி முன்னணி பத்திரிகைகள் பாராட்டி இருக்கின்றன.

பேரவைத் தலைவர் அவர்களே! இவை அனைத்தும் கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையில் சாதிக்கப்பட்டவை. மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளை நான் அதிகம் விவரிக்கத் தேவையில்லை, விரும்பவுமில்லை. மாநில முதலமைச்சர்களே டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்தும் அவலத்தைப் பார்க்கிறோம்.நாம் இரண்டு பெரிய இயற்கை பேரிடர்களைச் சந்தித்தோம். அதற்குக்கூட நிவாரணத் தொகை தரவில்லை.

30-06-2022 முதல் ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையை நிறுத்தி விட்டார்கள். இதனால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு புதிய சிறப்புத் திட்டங்களைத் தருவதில்லை. தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையின் சோகக் கதையை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். மெட்ரோ ரயில் வேண்டாம் என்று கூறி, மோனோ ரயிலுக்குக் கொடி பிடித்தவர்கள் இன்று மெட்ரோ ரயிலுக்கு வந்திருப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு உங்களது ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தாலும், அதனைச் செயல்படுத்துவதற்குத் நீங்கள் ஆட்சியில் இருந்தவரை முனைப்புக் காட்டவில்லை. எங்களது ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான், பணி ஆணைகள் வழங்கப்பட்டன; ஒப்பந்தங்கள் அனைத்துப் மேற்கொள்ளப்பட்டன; அனைத்துப் பணிகளும் தொடங்கப்பட்டன. நான் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல், பிரதமரைச் சந்திக்கும் போதெல்லாம் மெட்ரோ ரயில் பணிகளுக்கான நிதி தொடர்பான கோரிக்கைகளை வைக்கிறேன். ஆறு நாட்களுக்கு முன்பு கூட பிரதமருக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதியிருக்கிறேன். இதற்கான ஒன்றிய அரசின் நிதியை இதுவரை தராததால், இந்த முழுத்தொகையையும் மாநில அரசின் நிதியில் இருந்தும், மாநில அரசு வாங்கும் கடனிலிருந்து மட்டுமே இதுவரை செலவிடப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் பா.ஜ.க.வோடு கூட்டணியில் இருந்தபோது பேசாமல் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இப்போதாவது பேசுகிறாரே என்ற அளவில் ஆறுதல் தருகிறது. இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் எங்களுடன் இணைந்து ஒன்றிய அரசிடம் நிதி பெற குரல் கொடுக்க வேண்டும் என தங்கள் வாயிலாகக் நான் கேட்டுக் கொள்கிறேன்.

”நம் இன எதிரிகளின் கோபத்துக்கு காரணம் இதுதான்” : பேரவையில் அனல் தெறிக்க பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பேரவைத் தலைவர் அவர்களே, அதேபோல், நேற்றையதினம் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பேசும்போது "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தின்கீழ் அரசாணை வெளியிடப்பட்டதா? நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதா? என்ற விவரங்களை கேட்டிருக்கிறார்கள்.

சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களது தொகுதிகளில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத 10 முக்கிய கோரிக்கைகளை, அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் அனுப்பி வைக்குமாறு, நான் கடந்த 22-08-2022 அன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டேன். அதனடிப்படையில் பெறப்பட்ட பணிகள் 07-10-2023 அன்று எனது தலைமையில் நடைபெற்ற உயர்நிலை குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டது.

நடப்பாண்டில் 234 சட்டமன்ற தொகுதிகளில் 797 பணிகள், 11 ஆயிரத்து 132 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டு, அதில் 582 பணிகளுக்கு உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளன. அவற்றில் 63 பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் உள்ள பணிகளுக்கு உரிய ஆணைகள் வழங்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இத்திட்டத்தின்கீழ் அளித்திருக்கக்கூடிய அவர் தொகுதியின் கோரிக்கைகளில், ஐந்து கோரிக்கைகள் நடப்பாண்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றில் மூன்றுக்கு உரிய ஆணைகள் வெளியிடப்பட்டு அதில் ஒரு பணி முடிக்கப்பட்டுள்ளது. இரண்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மீதமுள்ள இரண்டு பணிகளுக்கு அரசாணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த அரசு "சொல்வதைத்தான் செய்யும், செய்வதைத்தான் சொல்லும்" என்பதனை பேரவைத் தலைவர் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பேரவைத் தலைவர் அவர்களே, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பாபநாசம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் முனைவர் ஜவாஹிருல்லா அவர்கள் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இஸ்லாத்தைத் தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இந்த முரண்பாட்டை உடனடியாகக் களைய வேண்டும் என ஒரு நீண்டகால கோரிக்கையை முன் வைத்திருக்கிறார். சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின சமூகத்தினர் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்குத் தேவையான பல்வேறு நலத் திட்டங்களையும், ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த, சிறுபான்மையின மக்களின் நலன்களை என்றென்றும் பாதுகாத்து வரும் இந்த அரசு பேராசிரியர் திரு. ஜவாஹிருல்லா அவர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து, சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, ஆவன செய்யப்படும் என்பதையும் பேரவைத் தலைவர் வாயிலாக இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பேரவைத் தலைவர் அவர்களே, இந்த பதிலுரையில் முக்கியமான ஒரு அறிவிப்பையும் இம்மாமன்றத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிராமப்புற விளிம்புநிலை மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2001-ஆம் ஆண்டிற்கு முன் பல்வேறு அரசுத் திட்டங்களின் மூலம் கட்டப்பட்ட ஏறத்தாழ 2 இலட்சத்து 50 ஆயிரம் வீடுகளை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் பழுதுபார்க்கவும், புனரமைக்கவும் 2,000 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த 2 நாட்களில் மொத்தம் 15 உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது 8 உறுப்பினர்கள் 68 திருத்தங்களை அளித்துள்ளனர். இந்த அரசுக்கு உதவும் வகையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் தெரிவித்திருக்கிறார்கள். தங்கள் தொகுதிக்கான கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்கள். அவை உரிய அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

உங்களது ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு, உங்களின் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு உறுதியாக நிறைவேற்றித் தரும். எனவே, இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு தங்களது திருத்தங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றித் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு எனது உரையை நிறைவு செய்கிறேன். "வாழ்க தமிழ்! வெல்க தமிழ்நாடு!"

banner

Related Stories

Related Stories