தமிழ்நாடு

மக்களுடன் முதல்வர் திட்டம் : திராவிட மாடல் அரசின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - முதலமைச்சர்!

மக்களுடன் முதல்வர் திட்டம் திராவிட மாடல் அரசின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரமாக மின்னிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

மக்களுடன் முதல்வர் திட்டம் : திராவிட மாடல் அரசின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் கலைஞர் வகுத்துத் தந்த சமூக நீதிப் பாதையில், ஏழையெளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில், பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி, இந்தியத் துணைக் கண்டமே போற்றும் வகையில் செயல்படுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கிடைத்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில், தாம் ஆட்சிப் பொறுபேற்றவுடன், தமது தேர்தல் பரப்புரையின் போது பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வு காண, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற துறையை உருவாக்கி, அனைத்து மனுக்களுக்கும் 100 நாட்களில் தீர்வு கண்டு வரலாற்று சாதனை படைத்தார். அதன் தொடர்ச்சியாக, பொதுமக்களின் கோரிக்கைகளைத் திறம்பட கையாண்டு, அவற்றை நிறைவேற்றிட ஏதுவாக, “முதல்வரின் முகவரித் துறை” என்ற தனித்துறையை உருவாக்க ஆணையிட்டார்.

இதன்மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 49 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு உரிய முறையில் தீர்வு காணப்பட்டு வருகிறது. அதோடு, தமிழக முதல்வர், நேரடியாக மாவட்டங்களுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டு, “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற முன்னெடுப்பின் கீழ், மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, கள ஆய்வுகள் மேற்கொண்டு, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் பொது மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்திட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

மக்களுடன் முதல்வர் திட்டம் : திராவிட மாடல் அரசின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - முதலமைச்சர்!

தமிழக முதல்வரின் இந்த முன்னெடுப்பின் நீட்சியாக, அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு மைல்கல்லாக “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் டிச.18 அன்று கோயம்புத்தூரில் தொடங்கி வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில், மக்களுடன் முதல்வர் திட்டம் திராவிட மாடல் அரசின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரமாக மின்னிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவு வருமாறு:-

உங்களில் ஒருவனான என்னை, உங்களுக்கான ஒருவனாக உருவாக்கி முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வைத்தீர்கள். நமக்கு வாக்களிக்காத மாற்றுச் சிந்தனை கொண்டோரும் 'தி.மு.க.வுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே!' என்று என்று எண்ணும் வகையிலான மக்கள் நலன் பேணும் ஆட்சியைக் கட்டமைத்து வருகிறோம்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், துமைப்பெண் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48, நான் முதல்வன் போன்ற நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் அனைத்தும் உங்களை வந்து சேர்வதை உறுதிசெய்திட ‘கள ஆய்வில் முதலமைச்சர்' என உங்கள் மாவட்டங்களுக்கு வந்தேன்.இதனை இன்னும் செம்மைப்படுத்திட வேண்டுமல்லவா!

உங்களின் தேவைகளும் அரசின் சேவைகளும் ஒரு குடையின்கீழ் சந்தித்து விரைவில் தீர்வுகள் கிடைத்தால் அது திராவிட மாடல் அரசின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரம் என மின்னிடுமே! அப்படியான திட்டமாக உருப்பெறுகிறது மக்களுடன்முதல்வர் திட்டம்! இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கத் திங்களன்று கோவைக்கு வருகிறேன்.

மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு இந்தத் திட்டத்தின் பயன் மக்களைச் சென்றடைய உதவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories