முரசொலி தலையங்கம்

“நாடாளுமன்றத்தையே காக்க முடியாத பா.ஜ.க ஆட்சிதான் நாட்டை காக்கப் போகிறதா?” : வெளுத்து வாங்கிய முரசொலி !

நாடாளுமன்ற வளாகத்துக்குள்ளேயே கண்ணீர் புகைவீச்சு என்பது ஒன்றிய பாஜக அரசுக்கு அவமானம் ஆகும். நாடாளுமன்றத்தின் பாதுகாப்பையே கோட்டை விட்டு விட்டார்கள். நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி விட்டார்கள்.

“நாடாளுமன்றத்தையே காக்க முடியாத பா.ஜ.க ஆட்சிதான் நாட்டை காக்கப் போகிறதா?” : வெளுத்து வாங்கிய முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடாளுமன்றத்தையே காக்க முடியாதவர்கள்...

இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை கடந்த மே 28 ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியது. அடிக்கல் நாட்டு விழாவை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று பிரதமர் நரேந்திரமோடி நடத்தினார். ‘இந்திய மக்கள் அமிர்தப் பெருவிழாவுக்காக ஒரு பரிசை வழங்கியுள்ளனர்’ என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டார் பிரதமர்.

மூன்று நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஞான துவார், சக்தி துவார், கர்ம துவார் என்றெல்லாம் பெயர் சூட்டினார்கள். புதிய கட்டடத்தின் மக்களவை அறையில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. 65 ஆயிரம் சதுர அடியில், பழைய நாடாளுமன்றக் கட்டடத்தை விட மூன்று மடங்கு பெரிதாகக் கட்டினார்கள். 940 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது.

புதிய நாடாளுமன்றம் என்பது 140 கோடி மக்களின் பிரதிபலிப்பாகும் என்றும், இந்தியாவின் உறுதியை உலகுக்கு எடுத்துரைக்கும் நமது ஜனநாயகத்தின் கோவில் என்றும், இந்தியா அடிமை மனப்பான்மையை விட்டு கலையின் பழமையான பெருமையைத் தழுவி நிற்பதற்கு இந்த நாடாளுமன்றக் கட்டடம்தான் வாழும் உதாரணம் என்றும், இந்தக் கட்டடத்தின் ஒவ்வொரு துகளிலும் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை நாம் பெறுகிறோம் என்றும் சொல்லிக் கொண்டார்கள். இந்த அத்தனை பெருமைகளையும் கேள்விக்குள்ளாக்கிய, கேலிக்குள்ளாக்கிய நாளாக நேற்றைய தினம் அமைந்து விட்டது. நான்கு பேர் உள்ளே நுழைந்து கண்ணீர் புகையை வீசிவிட்டார்கள். இந்தியாவின் பாதுகாப்பை நினைத்து அனைவரது கண்களும் எரிகிறது.

“நாடாளுமன்றத்தையே காக்க முடியாத பா.ஜ.க ஆட்சிதான் நாட்டை காக்கப் போகிறதா?” : வெளுத்து வாங்கிய முரசொலி !

2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குள் தீவிரவாதத் தாக்குதல் நடந்த போதும் பா.ஜ.க.தான் ஆட்சியில் இருந்தது. இப்போதும் பா.ஜ.க.தான் ஆட்சியில் இருக்கிறது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாளில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

நாடாளுமன்றத்துக்குள் செல்ல நான்கு கட்ட கடும் சோதனைகள் இருக்கும் நிலையில், தடை செய்யப்பட்ட பொருள்களுடன் மர்மநபர்கள் இரண்டு பேர் எப்படி நுழைந்தனர்?

நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்த நினைவு நாளில், எவ்வாறு இப்படி ஒரு பாதுகாப்புக் குறைபாடு நடந்தது என்பதும் கேள்வியாக எழுந்துள்ளது. மர்மநபர்கள் இருவரும் காலணிக்குள் மறைத்து வைத்திருந்த புகைக் குண்டுகளை எடுத்து வீசியது, நாடாளுமன்ற கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. திடீரென இரண்டு பேர் மக்களவைக்குள் குதித்ததைப் பார்த்த மக்களவை உறுப்பினர்கள், துரிதமாகச் செயல்பட்டு, அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து அவைக் காவலர்களிடம் ஒப்படைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இல்லையென்றால், 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சம்பவம் போன்று மீண்டும் நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதாகவும் எம்.பி.க்கள் கூறியுள்ளனர்.

மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இருவரும், திடீரென மக்களவைக்குள் குதித்து, ‘சர்வாதிகாரம் ஒழிக’ என்று கோஷம் எழுப்பி, வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகைக் கருவியை கையில் வைத்திருந்தபடி, நாடாளுமன்றத்துக்குள் புகுந்தனர்.

“நாடாளுமன்றத்தையே காக்க முடியாத பா.ஜ.க ஆட்சிதான் நாட்டை காக்கப் போகிறதா?” : வெளுத்து வாங்கிய முரசொலி !

நாடாளுமன்ற வளாகத்துக்குள் செல்ல நுழைவு வாயிலில் செல்வதற்கு முதற்கட்ட சோதனை நடைபெறும். அதன்பிறகே, வரவேற்பறையிலேயே பார்வையாளர்களை புகைப்படம் எடுக்கப்பட்டு தனி அடையாள அட்டை வழங்கப்படும். புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இருக்கிறதா என சோதிக்கப்படும். இவ்வாறு, நாடாளுமன்றத்துக்குள் ஒரு பார்வையாளர் நுழைய வேண்டும் என்றால் நான்கு கட்ட பாதுகாப்பு சோதனையைக் கடக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் மெட்டல் டிடக்டர், மற்றும் ஸ்கேனர் சோதனை நடத்தப்படும்.

இவ்வாறு நாடாளுமன்றத்தில் அவைக்குள் பார்வையாளர்களாக நுழைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பரிந்துரைக் கடிதம் அவசியம், இந்தப் பரிசோதனைகளின்போது அந்தக் கடிதமும் சோதனை செய்யப்படும். இரண்டாவதாக நாடாளு மன்றத்தின் வரவேற்பறையில் பார்வையாளராக நுழைபவரின் பெயர், முகவரி, அடையாள அட்டை, எம்.பி.யின் பரிந்துரைக் கடிதம் அனைத்தும் சரிபார்க்கப்படும். பிறகு மக்களவை மற்றும் மாநிலங்களவைக்குள் நுழைவதற்கான இடத்தில் மூன்றாம் கட்டமாக சோதனை நடத்தப்பட்டு, நான்காம் கட்டமாக ஒவ்வொரு அவைக்குள்ளும் தனித்தனியாக சோதனை நடத்தப்படும். இவ்வாறு நான்கு கட்ட சோதனையைத் தாண்டித்தான் ஒருவர் நுழைய முடியும் என்பதால், தடை செய்யப்பட்ட பொருள்களுடன் இருவர், மக்களவைக்குள் எவ்வாறு நுழைந்தனர் என்பது இதுவரை பதில் கிடைக்காத கேள்வியாக உள்ளது. நாடாளுமன்றத்தில் பாதுகாப்புக் குறைபாடே இதற்குக் காரணம்.

கேட்டால், ‘இது ஆபத்தான புகைக் குண்டு அல்ல’ என்கிறார் சபாநாயகர் ஓம் பிர்லா. இந்தச் சொல்லைத் தான் பயன்படுத்தலாம், இதனைப் பயன்படுத்தக் கூடாது என்று பிரிக்கும் அளவுக்கு – வீசப்படத் தகுதியானது, வீசப்பட்ட தகுதியற்றது என்ற பகுப்பு குண்டுகளில் இருக்கிறதா? சபாநாயகர்தான் சொல்ல வேண்டும்.

“நாடாளுமன்றத்தையே காக்க முடியாத பா.ஜ.க ஆட்சிதான் நாட்டை காக்கப் போகிறதா?” : வெளுத்து வாங்கிய முரசொலி !

‘சம்பவம் நடந்த போது பாதுகாவலர்கள் உள்ளே இல்லை’ என்கிறார் சபாநாயகர். உள்ளே இல்லாதவர்களை பாதுகாவலர்களாக எப்படிச் சொல்ல முடியும்?

கோவையில் கார் சிலிண்டர் வெடித்தபோது, ‘தமிழ்நாட்டை தீவிரவாதிகளின் புகலிடம்’ என்று பரப்பிய பா.ஜ.க.வினர் இப்போது எங்கே போனார்கள்? கவர்னர் மாளிகை இருக்கும் சாலையில் பெட்ரோல் பாட்டில் வீசப்பட்டதை தேசிய முகமைதான் விசாரிக்க வேண்டும் என்றார்களே, நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை வீசப்பட்டதை யார் விசாரிப்பது, ஐ.நா.சபையா? இண்டர்போலா? உலகநீதிமன்றமா?

நாடாளுமன்ற வளாகத்துக்குள்ளேயே கண்ணீர் புகை வீச்சு என்பது ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு அவமானம் ஆகும். நாடாளு மன்றத்தின் பாதுகாப்பையே கோட்டை விட்டு விட்டார்கள். இதன் மூலமாக நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி விட்டார்கள். நாடாளு மன்றத்தையே காக்க முடியாத பா.ஜ.க. ஆட்சிதான் நாட்டையும் நாட்டு மக்களையும் காக்கப் போகிறதா?

banner

Related Stories

Related Stories