தமிழ்நாடு

”முதலீட்டாளர்களின் முதல் தேர்வு தமிழ்நாடு” : புதிய தொழிற்சாலையை திறந்து வைத்து முதலமைச்சர் பெருமிதம்!

முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக தமிழ்நாடு இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

”முதலீட்டாளர்களின் முதல் தேர்வு தமிழ்நாடு” : புதிய தொழிற்சாலையை திறந்து வைத்து முதலமைச்சர் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28.11.2023) பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் நிறுவப்பட்டுள்ள JR One காலணி உற்பத்தி தொழிற்சாலையை முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்து ஆற்றிய உரை:-

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் சிறப்பாக நடைபெறும், JR ஒன் ஃபுட்வேர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தித் திட்டத்தின் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான், பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் அமைக்கப்பட்டிருக்கின்ற சிப்காட் தொழில் பூங்காவைத் திறந்து வைத்து, ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டினேன். சரியாக ஓராண்டு காலத்தில் துவக்க விழாவில் பேசுவதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி!

முதலீட்டாளர்களின் முதல் தேர்வு, தமிழ்நாடு! மாநிலத்தில் முதலீடுகளுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதுதான் இதற்கு முக்கியமான காரணம். இங்கே பிசினஸ் செய்வது எவ்வளவு எளிதாக இருக்கிறது என்பதும், முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு எப்படித் திகழ்கின்றது என்பதற்கும் இது கண்கூடான சாட்சி! வளர்ச்சித் திட்டங்கள் என்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

தோல் மற்றும் காலணித் துறைகளை பொறுத்தவரைக்கும், இந்த அரசுப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது உங்களுக்கே அது நன்றாக தெரியும்! கடந்த ஆண்டு, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-ஐ நான் வெளியிட்டேன். இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு, இந்தத் துறையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது நமக்கெல்லாம் கண்கூடாவே தெரிகிறது.

”முதலீட்டாளர்களின் முதல் தேர்வு தமிழ்நாடு” : புதிய தொழிற்சாலையை திறந்து வைத்து முதலமைச்சர் பெருமிதம்!

இதுமாதிரியான வளர்ச்சியை பார்க்கும்போது, 2030-ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற நம்முடைய இலக்கை அடைகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை எங்களுக்கு வளர்ந்து கொண்டே போகிறது! இந்தத் துறையில், நம்முடைய தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தவேண்டும், இன்னும் பல பன்னாட்டு நிறுவனங்களை ஈர்த்திடவேண்டும் என்ற உந்துதல் காரணமாக, நமது அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில், 400 கோடி ரூபாய் செலவில் 250 ஏக்கர் பரப்பளவில் காலணி உற்பத்திப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிப்காட் / சிட்கோ மற்றும் பொது - தனியார் கூட்டாண்மை மூலம், 30-50 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்காக்கள் வடிவில் ஆயத்த தொழில்கூடங்களுடன் புதிய தோல் அல்லாத காலணி உற்பத்திக்கான பசுமைத் தொகுப்புகளை அரசு உருவாக்க இருக்கிறது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புறேன்.

தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில், இவ்வளவு சிறப்பான திட்டத்திற்கான திறப்பு விழா நடைபெறுகிறது. “பரவலான வளர்ச்சியே பார் போற்றும் வளர்ச்சி. சீரான வளர்ச்சியே சிறப்பான வளர்ச்சி” என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு! பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடுகளை ஈர்த்திட அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பலன் அளிக்கின்ற வகையில், இந்தத் திட்டத்திற்கான திறப்பு விழா இன்றைக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

”முதலீட்டாளர்களின் முதல் தேர்வு தமிழ்நாடு” : புதிய தொழிற்சாலையை திறந்து வைத்து முதலமைச்சர் பெருமிதம்!

இந்தத் திட்டத்தின் மூலமாக, பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும். இன்றைக்கு, முதற்கட்டமாக, 400 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், கோத்தாரி குழுமத்தைச் சார்ந்த JR One கோத்தாரி காலணி உற்பத்தித் தொழிற்சாலை துவக்கி வைக்கப்படுகிறது. 2028-ஆம் ஆண்டுக்குள், கோத்தாரி ஃபீனிக்ஸ் நிறுவனம், மேலும் 2,440 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 29 ஆயிரத்து 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்று விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டிருக்கிறது.

இவை எல்லாம் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை விதைத்திருக்கிறது. இதற்கெல்லாம் மணிமகுடமாக, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, வருகிற ஜனவரி மாதம் சென்னையில் நடத்த இருக்கிறோம். உங்களைப் போன்ற நிறுவனங்களோடு சேர்ந்துதான் இந்த மாநாட்டை நடத்த இருக்கிறோம்.

உலகம் முழுக்க இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர இருக்கிறார்கள். அதற்கு முன்பாகவே, ஃபீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம், இந்த அதிநவீன உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. சொல்லப்போனால், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னதாகவே, பல நிறுவனங்களோடு துவக்க விழாவை நான் சமீபத்தில் மேற்கொண்டிருக்கிறேன்.

உங்கள் தொழில் முயற்சி வெற்றி பெறவும், உங்களுடைய திட்டங்கள் மென்மேலும் வளர்ச்சி பெற்றிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்! இந்தத் தொழில் மேலும் சிறப்படைய அனைத்து உதவிகளையும் இந்த அரசு உறுதியாக செய்யும் என்று உறுதி அளித்து, என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories