தமிழ்நாடு

உங்களது வாழ்த்துக்கள் நான் மென்மேலும் உற்சாகத்துடன் உழைப்பதற்கான எரிபொருள் : அமைச்சர் உதயநிதி நெகிழ்ச்சி!

பிறந்த நாளை சிறந்த நாளாக்கிய அனைவருக்கும் நன்றி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தள்ளார்.

உங்களது வாழ்த்துக்கள் நான் மென்மேலும் உற்சாகத்துடன் உழைப்பதற்கான எரிபொருள் : அமைச்சர் உதயநிதி நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிறந்த நாள் வாழ்த்துகளை நான் மென்மேலும் உற்சாகத்துடன் உழைப்பதற்கான எரிபொருளாகவே எடுத்துக்கொள்கிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் அறிக்கை விடுத்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

பிறந்த நாள் என்பது ஆண்டுதோறும் வரும் இன்னொரு நாள்தான். ஆனால், அதை நம் சுற்றமும் சூழலும் சேர்ந்து வாழ்வில் மறக்கமுடியாத சிறந்த நாளாக மாற்றுவதை நினைக்கையில் மகிழ்வாகவும் நெகிழ்வாகவும் இருக்கிறது. அதேநேரம் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டியதற்கான கால கடிகாரமாகவும் இந்த நாளை நான் பார்க்கிறேன்.

இன்றைய பிறந்த நாளில், முதலமைச்சர் - கழகத் தலைவர் அவர்களின் வாழ்த்துதான் முதல் வாழ்த்து. நேரில் சென்றதும், 'இளைஞர் அணி மாநாடு குறித்து, நான் முரசொலியில் எழுதிய கடிதத்தைப் படித்தாயா?' என்றபடி வாழ்த்தினார்கள்.

1988-ஆம் ஆண்டு சென்னையில் தேசிய முன்னணித் தொடக்க விழா பேரணியில், தன்னுடைய தலைமையில், கழக இளைஞர் அணியினர் தேசிய கட்சித் தலைவர்கள் முன்னிலையில் அணிவகுத்து வந்ததை அந்தக் கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ள தலைவர் அவர்கள், அதேபோன்ற ஒரு பிரம்மாண்ட கூட்டத்தைச் சேலத்தில் என் தலைமையில் 2-வது மாநில மாநாட்டில் திரட்ட உள்ளதைக் குறிப்பிட்டு, 'கடல் இல்லா சேலம், கருப்புச் சிவப்புக் கடலினைக் காணட்டும்' என்று அந்தக் கடிதத்தை முடித்திருந்தார்கள். அந்த வாழ்த்துகளுடன் நேரிலும் என்னை வாழ்த்தியது நிறைவாக இருந்தது.

அதன்பின்னர் கழகம் தந்த பேரறிஞர் அண்ணா-அவரின் தம்பி முத்தமிழறிஞர் கலைஞர் இருவரும் துயில்கொள்ளும் மெரினா கடற்கரையில் அவர்களது நினைவிடத்தில் கழகத்தின் மூத்தத் தலைவர்களுடன் சென்று மரியாதை செலுத்தினேன்.

கழக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு, 'நீட் விலக்கு நம் இலக்கு' கையெழுத்து இயக்கம் ஆகியவற்றின் நோக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், கடந்த 15-ஆம் தேதி குமரிமுனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை முன்பு மாபெரும் இருசக்கர வாகனப் பேரணியைத் தொடங்கி வைத்தேன். அப்போது 'கோட்சே தூக்கிலிடப்பட்ட இந்நாளில், கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக, பெரியாரின் பேரன்கள் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து புறப்படுகிறோம்' என்று என் சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்திருந்தேன்.

அன்று தொடங்கி, தமிழ்நாட்டின் 234 தொகுதிகளையும் 4 மண்டலங்களாகப் பிரித்துக் கடந்த 13 நாட்களாக இருசக்கர வாகனங்களில் வலம் வந்த இளைஞர்கள் இன்று சேலத்தில் மாநாட்டுத் திடலில் ஒன்றுகூடி, தங்களின் பேரணியை நிறைவு செய்கின்றனர். அவர்கள் நிறைவு செய்யும் அந்தத் தருணத்தில் நாங்கள் இன்று அய்யா பெரியாரின் நினைவிடத்தில், மலர் தூவி மரியாதை செய்துகொண்டிருந்தோம். இந்த ஒற்றுமை, நெகிழ்வையும் நிறைவையும் தந்தது.

பெரியார் திடலில் இனமான ஆசிரியர் அய்யா அவர்களை சந்தித்து வாழ்த்துபெறச் சென்றிருந்தபோது, 'திராவிட இயக்கக் கொள்கை ஜீவநதி உதயநிதி அவர்களுக்கு வாழ்த்துகள்' என்று இன்றைய விடுதலை நாளிதழில் அவர் தந்திருந்த என் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியை என்னிடம் காண்பித்து மகிழ்ந்தார்.

என்னுடைய கொள்கைப் பிடிப்பை வரிக்கு வரி பாராட்டி எழுதியிருந்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன். அந்த வாழ்த்துச் செய்தியின் கடைசிவரியை, 'வயது ஏறுவது அவருக்கு மூப்பு அல்ல முதிர்ச்சியே' என்று முடித்திருந்தார். இதை வாழ்த்துக் கடிதம் என்பதைவிட, பெரியார் பேரனுக்கான பாடமாகவே எடுத்துக்கொள்கிறேன். இனமான ஆசிரியர் அவர்களுக்கு இனமான மாணவனின் நன்றி.

உங்களது வாழ்த்துக்கள் நான் மென்மேலும் உற்சாகத்துடன் உழைப்பதற்கான எரிபொருள் : அமைச்சர் உதயநிதி நெகிழ்ச்சி!

என் பிறந்தநாளை சிறந்த நாளாக்குவதில் அமைச்சர் அண்ணன் சேகர்பாபு அவர்களும் ஒருவர். என் பிறந்தநாளை முன்னிட்டு கழக மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி, மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்விக்கான ஊக்கத்தொகையை, பெரியார் திடலில் என் கைகளால் வழங்க வைத்த அவருக்கு என் அன்பும் நன்றியும்.

அதன்பின்னர் கலைஞருடைய கோபாலபுரம், சி.ஐ.டி. காலனி இல்லங்களுக்குச் சென்று பாட்டிகளிடமும் கழகத் துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அத்தை கனிமொழி அவர்களிடமும் வாழ்த்து பெற்றேன்.

அதைத் தொடர்ந்து என் தொகுதியில் நான் கலந்துகொண்ட இரு நிகழ்ச்சிகள் என் வாழ்கையில் மறக்கமுடியாத நிகழ்வாக, என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய நிகழ்ச்சிகளாக அமைந்தன.

ஒன்று சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் சிலைத் திறப்பு விழா. வி.பி.சிங் அவர்கள் என் மனதுக்கு நெருக்கமான தலைவர்களில் ஒருவர். அவருடைய சிலை, அவருடைய நினைவு நாளான இன்று, என்னுடைய திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட மாநிலக் கல்லூரி

சேப்பாக்கம் வளாகத்தில் அமைத்து, என் தொகுதிக்கு மேலும் பெருமை சேர்த்துத் தந்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வி.பி.சிங் அவர்களின் சிலை, தமிழ்நாட்டில் அமைக்கப்படுவது ஏன்? என்று, ஒவ்வொரு இந்தியனும் தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டால், அவரின் சிலை ஒவ்வொரு மாநிலத்திலும் அல்லவா அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் எழும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசுப் பணிகளில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பி.பி.மண்டல் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரையைச் செயல்படுத்தி சமூக நீதியை நிலைநாட்டிய வி.பி.சிங் அவர்களுக்குக் கலைஞருடைய இடத்தில் இருந்து நம் முதலமைச்சர் அவர்கள் அந்தச் சிறப்பைச் சேர்த்துள்ளார்கள்.

இந்தச் சிலை திறப்பு விழாவுக்கு வி.பி.சிங் அவர்களின் மனைவி உள்பட குடும்பத்தினரையும் உத்தரபிரதேசத்தில் இருந்து முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அவர்களையும் அழைத்திருந்தது மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தது.

அதைத்தொடர்ந்து என் தொகுதிக்கு உட்பட்ட 'லேடி வில்லிங்டன் மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி'யின் நூற்றாண்டு நிறைவையும் கலைஞர் நூற்றாண்டு தொடக்கத்தையும் கொண்டாடும் வகையில், என் பெயரிலான அறக்கட்டளையின் சார்பில், அமைக்கப்பட்ட நினைவு வளைவை திறந்து வைத்தோம்.

இன்னும் எத்தனை பிறந்த நாள் வந்தாலும் இந்தக் கல்விக் கூடங்களின் வளாகங்களில் நடைபெற்ற இந்த இரு நிகழ்ச்சிகளும் என் மனதில் என்றும் பசுமையாக நினைவில் நிற்கும்.

அதைத் தொடர்ந்து குறிஞ்சி இல்லத்தில் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்பட கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், திரைத்துறையினரின் வாழ்த்தைப் பெற்றேன். கழகத்தினர் நீண்ட வரிசையில் காத்திருந்து, என்னை வாழ்த்தி மகிழ்ந்தனர். கழகத்தினர் பொன்னாடை, பூங்கொத்துகளை அன்பளிப்பாகத் தருவதைத் தவிர்க்கவேண்டும் என்பதற்காக, இல்லம் அருகிலேயே மகளிர்

சுயஉதவிக்குழுவின் 'மதி தயாரிப்பு' பொருட்களின் விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன் பிறகு கழக நிர்வாகிகள் இளைஞர் அணி சகோதரர்களுடன் மதிய உணவு உண்டு மகிழ்ந்தேன்.

உங்களது வாழ்த்துக்கள் நான் மென்மேலும் உற்சாகத்துடன் உழைப்பதற்கான எரிபொருள் : அமைச்சர் உதயநிதி நெகிழ்ச்சி!

கழகத்தினர் எனக்கு வழங்கிய 'மதி தயாரிப்பு' பொருட்களை என் தொகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று வழங்கி மகிழ்ந்தேன்.

கழகத் தலைவர், பொதுச் செயலாளர், முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், முத்தமிழறிஞர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மக்கள், கழக இளைஞர் அணியைச் சேர்ந்த சகோதரர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர்,

அய்யா ஆசிரியர் அவர்கள், அண்ணன் கே.எஸ்.அழகிரி, அண்ணன் வைகோ. அண்ணன் திருமாவளவன், அண்ணன் பாலகிருஷ்ணன், அண்ணன் முத்தரசன், அண்ணன் ஜவாஹிருல்லா, அண்ணன் அப்துல் சமது, அண்ணன் திருநாவுக்கரசர், அண்ணன் பீட்டர் அல்போன்ஸ், அண்ணன் செல்வப்பெருந்தகை, சகோதரர் துரை வைகோ,

சூப்பர் ஸ்டார் ரஜினி சார், உலக நாயகன் கமல் சார், சத்யராஜ் சார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சார், இயக்குநர்கள் அருண்ராஜா காமராஜ் சார், மாரிசெல்வராஜ் சார், சகோதரர்கள் சிவகார்த்திகேயன், சந்தானம், சூரி மற்றும் கீர்த்தி சுரேஷ், முரளி ராமசாமி உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்... இப்படி நேரிலும் அலைபேசியிலும் வாழ்த்தியவர்கள், சமூக வலைத்தளங்களின் வாயிலாக வாழ்த்தியவர்கள் என அனைவருக்கும் என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிஞ்சி இல்லத்தில் தொண்டர்களின் வாழ்த்துகளைப் பெற விரிவான ஏற்பாடுகளை செய்திருந்த மாவட்ட கழகச் செயலாளர்கள் சகோதரர் சிற்றரசு, அண்ணன் மயிலை வேலு ஆகியோருக்கும் நன்றி.

பிறந்த நாள் வாழ்த்துகளை, நான் மென்மேலும் உற்சாகத்துடன் உழைப்பதற்கான எரிபொருளாகவே எடுத்துக்கொள்கிறேன். பாசிச சக்திகளை வீட்டுக்கு அனுப்ப, 'இந்தியா கூட்டணி’யின் ஒற்றுமையை, சக்தியை உலகுக்குப் பறைசாற்றும் வகையில், மாநில உரிமை மீட்பு முழக்கத்துடன் சேலத்தில், வரும் டிசம்பர் 17-ஆம் தேதி நாம் முன்னெடுக்கும் கழக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைக்க உறுதியேற்போம்.

வாழ்த்திய அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.

banner

Related Stories

Related Stories