ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியும், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நட்ராஜ் சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு அரசு குறித்தும் முதலமைச்சர் அவர்கள் பற்றியும் அவதூறு கருத்தைப் பரப்பியுள்ளார்.
இதையடுத்து நட்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஷீலா காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அந்த புகார் மனுவில், "முன்னாள் காவல்துறை அதிகாரியும், அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நட்ராஜ் தமிழ்நாடு அரசு குறித்தும் முதலமைச்சர் குறித்தும் பல அவதூறான செய்திகளை சமூகவலைதளத்தில் பரப்பி வந்துள்ளார். மேலும் தமிழ்நாடு காவல்துறை பாதுகாப்பில் தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் பொய்யான கருத்து ஒன்றைக் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சிறப்பாக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், திட்டமிட்டே அவர் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும், மதக்கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்கிற நோக்கில் இது போன்ற அவதூறு கருத்துக்களைப் பரப்பி வந்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை அடுத்துச் சாதி, சமய உணர்ச்சிகளைத் தூண்டி விட முயற்சித்தல், அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுதல், பொது குழப்பத்தை ஏற்படுத்துதல், வதந்தியைப் பரப்புதல், தகவல் தொழிநுட்ப சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் நட்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.