தமிழ்நாடு

“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!

“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (28.8.2025)  விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் இராம.சரவணன் - மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் செல்வி இராம.சரவணன் ஆகியோரின் மகள்  சாய்ஸ்ரீ - ஜீனத்பிரியன் இணையரின் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

இந்த மணவிழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை, 

விழுப்புரம் வடக்கு மாவட்ட IT விங்கினுடைய துணை அமைப்பாளர் சகோதரர் இராம.சரவணன் அவர்களுடைய அன்பு மகள் தங்கை சாய்ஸ்ரீ மற்றும் தம்பி ஜீனத்பிரியன்  இணையருடைய திருமணத்தை உங்கள் அனைவருடைய முன்னிலையில் நடத்தி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். உங்கள் அனைவரின் சார்பாக அவர்களுக்கு என்னுடைய திருமண வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த திருமணத்தை நான்தான் நடத்தி வைக்க வேண்டும் என்று  நம்முடைய மாவட்ட கழகச் செயலாளர் அண்ணன் மஸ்தான் அவர்களும், சகோதரர் இராம.சரவணன் அவர்களும் கழகத்துடைய மற்ற நிருவாகிகளும் என்னை சந்தித்து இந்த தேதியை என்னிடத்தில் பெற்றார்கள். நான் ஏற்கனவே ஒப்புக் கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால் என்னால் உங்கள் மாவட்டத்திற்கு வர இயலாது அப்படிப்பட்ட ஒரு சூழல் இல்லை என்று நான் எடுத்துக் கூறிய போது நீங்கள்  விழுப்புரம் மாவட்டத்திற்கு வரவேண்டாம் நாங்கள் சென்னைக்கு வந்துவிடுகிறோம். உங்களுடைய அலுவல் இல்லத்திலேயே இந்த திருமணத்தை   நடத்தி வைத்துக் கொடுங்கள் என்று  அண்ணன் மஸ்தான் அவர்களும், சகோதரர் சரவணன் அவர்களும் உறுதியோடும், அன்போடும், உரிமையோடும் என்னிடத்தில் கேட்டுக் கொண்டார்கள். 

இதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழக உடன் பிறப்புகளுக்கும் நமக்கும் இருக்கக்கூடிய அந்த பாசப் பிணைப்பு வேறு எந்த கட்சியிலும், எந்த இயக்கத்திலும் இந்த பாசப்பிணைப்பு உணர்வை உங்களால் அறியமுடியாது. அந்த வகையில் அந்த பெருமையோடு நான் இந்த திருமணத்தை நடத்தி வைத்து இருக்கின்றேன். இன்றைக்கு இந்த திருமணம் இன்னும் பெருமையோடு சொல்லவேண்டும் என்றால், சுயமரியாதை திருமணமாக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல இந்த திருமணத்தில் இன்னொரு சிறப்பு இருக்கிறது. உங்களில் பல பேருக்கு தெரிந்திருக்கும் சில பேருக்கு தெரிந்திருக்காது, இந்த திருமணம்  காதல் திருமணம் என்று சொல்லும் போது நான் கூடுதல் மகிழ்ச்சியடைந்தேன்.

அதுமட்டுமல்ல இது ஒரு சாதி மறுப்பு திருமணமாக இன்று சிறப்பாக பெருமையாக நடத்தப்பட்டிருக்கிறது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியும், உங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கும். ஜீனத்பிரியன்  சாய்ஸ்ரீயும் 5 ஆண்டுகள் காதலித்து இன்றைக்கு திருமண விழாவில் இணைந்திருக்கின்றார்கள். 

“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!

காதலித்து திருமணம் செய்து கொள்வது எவ்வளவு கஷ்டம் என்று உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும், குறிப்பாக எனக்கும் நன்றாகத் தெரியும். முதலில் பையனும் பொண்ணும் அவர்களுக்குள் காதல் பந்தந்தில் ஒன்றாக வேண்டும். பையன் பெண்னையும், பெண் பையனையும் கன்வின்ஸ் செய்ததற்கு பிறகு இரண்டு பேரும் சேர்ந்து அவர்களுடைய அப்பா, அம்மாவை  கன்வின்ஸ் பண்ணணும், ஒத்துக் கொள்ள வைக்க வேண்டும். அதுமட்டுமல்ல அப்பா, அம்மா சம்மதம் மட்டும் பத்தாது இன்றைக்கு சொந்த பந்தம், பெரியப்பா, பெரியம்மா, அத்தை, மாமா இப்படி அத்தனைபேருடைய சம்மதமும் வாங்க வேண்டும். அதில் பல பேர் அறிவுரை கூறுவார்கள் நம்ம குடும்பத்துக்கு லவ் மேரேஜ் எல்லாம் செட் ஆகாது என்று, பையன் யாரு என்று தெரியாது, என்ன படித்திருக்கிறான் என்று தெரியாது, பொண்ணு யாரு என்று தெரியாது, என்ன படித்திருக்கிறார் என்று தெரியாது என்ன வேலைக்கு போவான் என்று தெரியாதுமா, இப்படி பல பேர் குறுக்க நிற்பார்கள். இதையெல்லாம் கடந்து தான்  பல்வேறு தடைகளையெல்லாம் தாண்டிதான் சாய்ஸ்ரீ – ஜீனத்பிரியன் இன்றைக்கு இணைந்திருக்கின்றார்கள். எனக்கும் காதல் திருமணம் தான் அந்த எக்ஸ்பீரியன்ஸ்யால் தான் பேசுகிறேன். 

மணமகளுடைய தந்தை சகோதரர் இராம.சரவணன் அவர்கள்  இன்றைக்கு ITவிங்கில் மிகச் சிறப்பாக களப்பணியும், கழகப்பணியும் ஆற்றிக் கொண்டிருக்கிறார். அதே போல் அவருடைய துணைவியார் செல்வி இராம.சரவணன் அவர்கள்  மாவட்டக் கவுன்சிலராக சிறப்பாக மக்கள் பணியை செய்து கொண்டு வருகின்றார். கழகப்பணி மக்கள் பணி மட்டுமல்ல,  இந்த குடும்பம் இன்றைக்கு மிக, மிக முக்கியமான கல்விப் பணியிலும் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு எங்களுடைய வாழ்த்துகள். அண்ணன் இராம.சரவணன் நடத்துகின்ற கல்வி நிறுவனங்களில் கிட்டத்தட்ட 2,000 மாணவர்கள் படிப்பதாக நான் கேள்விப்பட்டேன். அவருடைய இந்த கல்விப் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்.  பல்வேறு குழந்தைகளுக்கு அவர் இந்த கல்வியை தர வேண்டும். 

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு  நான்கு ஆண்டுகளை கடந்து இன்றைக்கு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நான்கு ஆண்டுகளில்  எண்ணற்ற திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்காக  கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  உதராணத்திற்கு இரண்டு மூன்று திட்டங்களை மட்டும் நான் எடுத்துக் கூற விரும்புகின்றேன்.

மகளிர் விடியல் பயணத் திட்டம்,  முதலமைச்சர் அவர்கள் போட்ட முதல் கையெழுத்து, அவர் போட்ட ஐந்து கையெழுத்துகளில் முதல் கையெழுத்து மகளிருக்கான விடியல் பயணத் திட்டம்.  இதுவரைக்கும் இந்த நான்கு வருடங்களில் மட்டும் 750 கோடி முறை மகளிர் இந்த திட்டத்தின் மூலம் பயணித்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு மாதமும் சராசரியாக மாதம் 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை இந்த திட்டத்தின் மூலம்  மட்டும் சேமித்து வருகிறார்கள்.

“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!

அதேமாதிரி பல்வேறு திட்டங்கள் கல்விக்காக தமிழ்புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்கின்ற 8 இலட்சம்  மாணவ, மாணவிகளுக்கு  மாதம் 1,000 ரூபாய் நம்முடைய தலைவர் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். அதாவது மாணவர்கள் பள்ளிகல்வி படித்தால் மட்டும் பத்தாது உயர்கல்வி படிக்க வேண்டும். பள்ளிப்பு படிப்பு மட்டும் பத்தாது காலேஜ் சென்று படிக்க வேண்டும். அதிலும் தனியார் கல்லூரியாக இருந்தாலும் சரி படிப்பதற்காக இந்த கல்வி ஊக்கத்தொகையை கொடுத்திருக்கிறார்.

அதே மாதிரி நேற்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் முதலமைச்சருடைய காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்கள். முன்பெல்லாம் காலை சீக்கிரம் எழுந்து வேலைக்கு செல்கின்ற பெற்றோர்களுக்கு சமைப்பதற்கு நேரம் இருக்காது. காலையில் எழுந்திருத்து பையனை வெறும் வயிற்றோடு, பசியோடு அனுப்பிவிடுவார்கள். பள்ளிக்கு சென்று வா, மதியம் பார்த்துக்கலாம், சாப்பிட்டுக்கலாம், பள்ளி முடிந்து வந்த பிறகு சாப்பிட்டுக்கலாம் என்று அனுப்பிவைத்து விடுவார்கள். அனுப்பிவைத்த பிறகு அதே நினைப்பாகவே இருப்பார்கள்.  குழந்தை பள்ளிக்கு சென்றதே,  காலையில் சாப்பிடவில்லையே, பசியோடு இருக்குமே, பாடத்தை கவனித்ததா, படித்ததா, பள்ளியில் சென்று தூங்கிவிட்டதா பசியில் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். அதை போக்குவதற்கு உருவாக்கிய திட்டம் தான் நம்முடைய முதலமைச்சருடைய காலை உணவுத் திட்டம். இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பெற்றோரும், மகிழ்ச்சியோடு, தைரியத்தோடு தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புகிறார்கள். என் குழந்தையை பார்த்துக் கொள்வதற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இருக்கிறார்கள். நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது.

பள்ளிக்கூடத்திற்கு சென்ற பிறகு முதலில் அவர்களுக்கு தரமான  காலை உணவு, அதன் பிறகு தரமான கல்வியை  கொடுக்கிறது நம்முடைய அரசு என்று இன்றைக்கு பெற்றோர்கள் எல்லாரும் நம்முடைய முதலமைச்சர் அவர்களை வாழ்த்தி, மகிழ்ச்சியோடு அனுப்பி வைக்கின்றார்கள். 21 இலட்சம் குழந்தைகள் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் மூலம் பயன்பெற்று வருகிறார்கள். நேற்று முன்தினம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டத்தை  விரிவாக்கம் செய்திருக்கிறார்கள்.

எல்லாவற்றிக்கும் மேலாக ஒரு திட்டம், உங்கள் அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கும் அந்த திட்டம், இன்றைக்கு இந்தியாவில் இருக்கின்ற ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு முதலமைச்சரும் இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்தவேண்டும் என்று எப்படி செயல்படுத்துகின்றீர்கள் என்று பார்த்து, பார்த்து கேட்டுக் கொண்டு போகிறார்கள். அதுதான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். கிட்டத்தட்ட 1 கோடியே 16 இலட்சம் மகளிருக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கடந்த 2 வருடங்களாக மாதம் 1000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். 

கிட்டத்தட்ட ஒவ்வொரு மகளிருக்கும் 1 கோடியே 16 இலட்சம் மகளிருக்கு 24,000 ரூபாயை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இந்த 2 வருடங்களில் மட்டும் கொடுத்திருக்கிறார்கள். அதுபோக இன்னொரு சிறப்பான அறிவிப்பும் மகிழ்ச்சியான அறிவிப்பும் வெளியிட்டிருக்கிறார்கள். சில இடங்களில் நான் போகும்போது தாய்மார்கள் என்னை சூழ்ந்து கொண்டு நன்றி தெரிவிக்கின்றார்கள். அப்பாவிடம் சொல்லுங்கள் 1000 ரூபாய் கரெக்டா வந்துவிடுகிறது. மாதம் 15ந்தேதி சரியாக பேங்கில் வந்துவிடுகிறது. நான் கேட்பேன் எதற்கு அம்மா பயன்படுத்துகிறீர்கள் என்று. அவர்கள் கூறுவார்கள் என்னுடைய மருத்துவ செலவிற்கு பயன்படுத்துகின்றேன். என்னுடைய குழந்தைகளுடைய கல்வி செலவிற்கு நான் பயன்படுத்துகின்றேன். அவசர உதவிக்கு பயன்படுத்துகின்றேன் என்று சொல்கின்றார்கள்.

சில இடங்களில் தாய்மார்கள் நான் விண்ணப்பித்தேன் வரவில்லை, எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியவில்லை, ரிஜக்ட் ஆகிவிட்டது என்று குறைகளைச் சொன்னார்கள். அதை நான் முதலமைச்சர் அவர்களிடத்தில்  தெரிவித்தேன். இன்றைக்கு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அதற்கான விண்ணப்பங்களும் வாங்கப்படுகிறது. விரைவிலே இன்னும் கூடுதல் எண்ணிக்கையிலான அந்த மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் வழங்க முதலமைச்சர் அவர்கள் அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பார்கள்.

“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!

நம்முடைய அரசினுடைய பல்வேறு திட்டங்களினால், இன்றைக்கு 11.20 சதவீதம் வளர்ச்சியோடு இன்றைக்கு இந்தியாவிலே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது என்று ஒன்றிய அரசினுடைய புள்ளிவிவரங்களில் தெரிவித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த திராவிட மாடல் அரசிற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கு நாம் அத்தனைபேரும் நம்முடைய முழு ஆதரவை தரவேண்டும். இங்க இருக்கின்ற அத்தனைபேரும் உங்களுடைய ஆதரவை கொடுப்பீர்கள். ஆனால் நான் உங்களிடம் கேட்பது எல்லாம் அடுத்த 6 மாதங்கள் தான், வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6, 7 மாதங்கள் தான் இருக்கிறது.

நாம் அத்தனை பேரும் ஒரு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இரண்டாவது முறையாக முதலமைச்சராக உட்கார வேண்டும் என்றால், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் 7வது முறையாக ஆட்சியில் அமர வேண்டும் என்றால்,  நீங்கள் அத்தனை பேரும், உங்கள் உற்றார் உறவினர்கள், உங்கள் நண்பர்கள், பக்கத்து வீட்டுக் காரர்கள், எதிர் வீட்டுக்காரர்கள் என்று அத்தனைபேரிடமும் இந்த தேர்தல் பிரச்சாரத்தை அரசினுடைய சாதனைகளை முதலமைச்சருடைய பணிகளை திட்டங்களை நீங்கள் மக்களிடம் எடுத்துக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

2026 சட்டமன்ற தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை, சென்ற முறை பெற்ற வெற்றியை விட மிகப் பெரிய வெற்றியை நாம் பெற்றாக வேண்டும். தலைவர் அவர்கள் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இலக்கு கொடுத்திருக்கிறார்கள். நாம் அத்தனைபேரும் களத்தில் இறங்கி முழுப்பணியாக செய்தோம் என்றால், நிச்சயம் 200 இல்ல 200க்கும் அதிகமான தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெறும். அதற்கு நாம் அத்தனைபேரும் இந்த திருமண விழாவில் உறுதி ஏற்போம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நேரத்தில் மணமக்களுக்கு ஒரு வேண்டுகோள், காதல் திருமணம் தான் இருந்தாலும் ஒரு வேண்டுகோள், இனிமேல் தான் நிறைய சோதனைகள் வரும், இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் மிகவும் சுமூத்தாக போய்விடும், அதன் பிறகு  ஏதாவது பிரச்சனையை யாராவது கொண்டுவருதற்குள், இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நல்ல நண்பர்களாக, கணவன் மனைவியாக மட்டுமல்ல நல்ல நண்பர்களாக நீங்கள் இரண்டு பேரும் சுயமரியாதையோடு எதற்கு விட்டுக் கொடுக்க வேண்டுமோ அதற்கு விட்டுக் கொடுத்து, எதற்கு விட்டுக் கொடுக்க கூடாதோ அதற்கு விட்டுக் கொடுக்காமல்,  தந்தை பெரியார் அவர்கள் சொல்லி கொடுத்த சுயமரியாதையோடு நீங்கள் இரண்டு பேரும் வாழ வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

எந்த முடிவு எடுத்தாலும், அதை இரண்டு பேரும் கலந்து பேசி, அந்த முடிவில் உறுதியோடு இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். முக்கியமாக தலைவர் அவர்கள் எல்லா திருமண விழாக்களிலும் வைக்கின்ற ஒரு வேண்டுகோள் தான், உங்களுக்கு பிறக்கின்ற குழந்தைக்கு அது ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் பிள்ளையாக இருந்தாலும் சரி அழகான ஒரு தமிழ்பெயரை அந்த குழந்தைக்கு வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, மணமக்கள் இருவரும் கழகமும், கலைஞரும் போல, கழகத் தலைவரும் உழைப்பும் போல வாழ்க, வாழ்க என்று வாழ்த்தி, இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்."

banner

Related Stories

Related Stories