தமிழ்நாடு

With-hold என்றால் என்ன அர்த்தம்? எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு பாடம் எடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு !

With-hold என்றால் என்ன அர்த்தம்? எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு பாடம் எடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 சட்ட முன்வடிவுகள் குறித்து விவரிக்க அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இன்றைக்கு நடைபெற்றிருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவையினுடைய சிறப்புக் கூட்டத்தொடரில் ஆளுநர் அவர்களால் ஒப்புதல் அளிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டிருக்கக்கூடிய 10 சட்ட முன்வடிவுகளை மீண்டும் பேரவையில் மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டு மீண்டும் இன்றைக்கு ஆளுநருக்கு அனுப்பப்பட இருக்கிறது.

அதன் மீதான விவாதத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் இன்றைக்கு உரையாற்றி ஆளுநர் எந்த அளவில் ஜனநாயக விரோத போக்கினை கையாண்டு, இந்த சட்ட முன்வடிவுகளுக்கு நீண்ட காலமாக தன்னுடைய ஏற்பினை அளித்திடாமல் அவர் வைத்திருந்தார் என்பதையும், இன்றைக்கு தன்னுடைய ஏற்பினை அளிக்காமல் அதைத் திருப்பி அனுப்பியிருக்கக்கூடிய சூழல்கள் குறித்தும் முதலமைச்சர் அவர்களால் கொண்டு வரப்பட்டிருக்கக்கூடிய தீர்மானத்தின் மீது கருத்துக்களை எடுத்து வைத்தார்கள். ஆளுநருடைய நடவடிக்கைகள் சட்டப்பேரவையின் மாண்பிற்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கக்கூடிய வகையில் எந்த அளவிற்கு அமைந்திருக்கிறது என்பதையும், நாம் சுதந்திரத்திற்கு முன்பிருந்தும், அதற்கு பின்பும் கூட தமிழ்நாடு சட்டப்பேரவை நெடிய வரலாற்றில் நாம் கட்டிக்காத்து இருக்கக்கூடிய விழுமியங்களும், மாண்புகளும் மாண்பிற்குரிய தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் எவ்வாறு மீறப்பட்டிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டி நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஒரு அற்புதமான உரையினை மிக நிதானமாக, மிகத்தெளிவாக, மிக மென்மையான, ஆனால் அதே சமயம் திடமாகவும், உறுதியாகவும் நம்முடைய பேரவையின் மாண்பையும், அரசினுடைய நிலைப்பாட்டையும் காக்கக்கூடிய வகையில் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

இந்த விவாதத்தில், இறுதியாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், தன்னுடைய கருத்துக்களை எடுத்து வைத்து விட்டு, இறுதியாக வெளிநடப்பு செய்வதற்கு முன்பாக, வெளிநடப்பு செய்வதற்கு வேண்டுமென்றே ஒரு காரணம் அவர்களுக்கு வலிந்து தேடி, கண்டுபிடித்து கொண்டு அதை முன் வைத்துக்கொண்டு இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும்போது அவையில் இருத்தல் கூடாது என்கின்ற காரணங்களுக்காக, அந்த கட்சியினுடைய காரணங்களுக்காக, வலிந்து ஒரு காரணத்தை கண்டுபிடித்து, தேடி (lame excuse என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்) நொண்டிச் சாக்கு என்று, அது உள்ளபடியே ஒரு நொண்டிச் சாக்கினை கண்டுபிடித்துக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவரும், எதிர்க்கட்சியின் அதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள்.

அவ்வாறு வெளிநடப்பு செய்வதற்கு முன்பாக அவர்கள் தெரிவித்து இருக்கக்கூடிய கருத்து, மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் பெயரில் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அந்த அம்மையாருடைய பெயர் இல்லை அவர்களால் அவருடைய ஆட்சியில் 2020ஆம் ஆண்டில் வைக்கப்பட்ட அந்த பெயர் இல்லாமலேயே இந்த சட்ட முன்வடிவு இங்கு கொண்டு வரப்படுகிறது, எனவே அந்த பெயர் இல்லாத காரணத்தால், நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று ஒரு காரணத்தைச் சொல்லி விட்டு அவர்கள் வெளிநடப்பு செய்தார்கள். அது எவ்வாறு தவறு, அது எத்தகைய பொய்ச் செய்தி என்பதை எல்லாம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் , அவையில் அந்தந்த மசோதாக்களுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறபோது விளக்கமளித்திருக்கிறார். அதனையொட்டி நானும், பத்திரிக்கையாளர்களான உங்கள் முன் இந்த உரிய விளக்கத்தினை அளிப்பதற்கு நான் விரும்புகிறேன்.

With-hold என்றால் என்ன அர்த்தம்? எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு பாடம் எடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு !

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் கடந்த அதிமுக ஆட்சியில் 2012-ஆம் ஆண்டில் முதன்முறையாக உருவாக்கப்படுகிறது. அதாவது, 2012-ஆம் ஆண்டுதான் இதற்கான பல்கலைக்கழகத்தை உருவாக்கி அதற்கான சட்ட முன்வடிவு அன்றைய தினம் இருக்கக்கூடிய ஆளுநருக்கு அனுப்பப்பட்டு ஏற்கப்பட்டு, அது சட்டமாகிவிடுகிறது. அதுதான் ஒரிஜினல் Act. அந்த சட்டம் வருகிறபோது, அது வெறும் மீன்வள பல்கலைக்கழகம். அதற்கு வேறு எந்த தலைவர் பெயரும் அப்போது இல்லை. அதுதான் ஒரிஜினல் Act. அதற்கு பின்பு 2020-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 9-ஆம் நாள், அதாவது 2012-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய மீன்வள பல்கலைக்கழகத்திற்கு 2020-ஆம் ஆண்டில், இன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி அன்றைக்கு முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஜனவரி 9ஆம் தேதி ஒரு சட்ட முன்வடிவு கொண்டு வரப்படுகிறது. அந்த பல்கலைக்கழகத்திற்கு மறைந்த முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் பெயரை சூட்டி, அந்த பல்கலைக்கழகத்தின் பெயர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் என்று அவர்கள் உருவாக்குகிறார்கள். இந்த சட்ட முன்வடிவு 2020-ஆம் ஆண்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த சட்ட முன்வடிவோடு சேர்த்து இந்த திருத்தங்களோடு சேர்த்து வேறு திருத்தங்களும் அவர்கள் செய்திருக்கிறார்கள். நாம் அதற்குள் போகவில்லை. ஆகவே, 2020-ஆம் ஆண்டுதான் இந்த சட்ட முன்வடிவினை அவர்கள் மீண்டும் அம்மையாருடைய பெயரைச் சூட்டி ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆளுநர் அதற்கான ஒத்திசைவை தரவேயில்லை. இவர்கள் அம்மையாருக்காக பேர் இல்லை என்று சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்கிறார்கள் அல்லவா? அதை அவர்கள் 2020-லிருந்து 2021 வரை அந்த ஓராண்டு காலமும் ஆளுநருடைய பரிசீலனையில் வைத்திருந்தார். அதில் எந்தவிதமான ஒரு ஒப்புதலும் கொடுக்கவில்லை.

அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், அவருடைய அமைச்சரவையும், அந்த கட்சியான அதிமுகவும், அந்த ஓராண்டு காலம் வரை அதற்கான எந்த ஒரு முன்னெடுப்புகளும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2020-ஆம் ஆண்டில் அனுப்பினார்கள், 2021 வரை அப்படியேதான் இருந்தது.

2021-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, முதலமைச்சர் அவர்கள் தலைமையில், திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு, 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி அன்று நாம் ஒரு சட்ட முன்வடிவை கொண்டு வருகிறோம். அது என்ன சட்டம் கொண்டு வருகிறோம் என்று சொன்னால், ஆளுநர் துணைவேந்தர் நியமிப்பதற்கு பதிலாக தமிழ்நாடு அரசே துணைவேந்தர்களை நியமிக்கும் (Government of Tamil Nadu will appoint the Vice-Chancellor) என்கின்ற அந்த திருத்தத்தை நாம் கொண்டு வருகிறோம்.

இந்த திருத்தத்தை நாம் எதற்கு கொண்டு வருகிறோம் என்றால், முதன்முதலாக கொண்டு வந்த ஒரிஜினல் Act 2012-ஆம் ஆண்டில் தான் நாம் அதை கொண்டு வரமுடியும். என்னவென்று கேட்டால், நடுவில், 2020-ஆண்டில் ஆளுநர் அவர்களுக்கு அன்றைய அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அனுப்பப்பட்ட அந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. அந்த பெயர் மாற்றமும் நடைமுறைக்கு வரவில்லை. எனவேதான், 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ஆம் நாள் சட்ட முன்வடிவை நிறைவேற்றுகிறபோது, அந்த ஒரிஜினல் Act 2012-ல் இருக்கக்கூடியதுபோல, அரசாங்கம்தான் துணைவேந்தர்கள் நியமிக்கவேண்டும் என்று நாம் கொடுத்தோம்.

அதற்குப் பிறகு, ஆளுநர் அவர்கள் திருப்பி அனுப்பிய 10 மசோதக்களில், நாம் அனுப்பிய மசோதா, 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ஆம் நாள் அந்த சட்ட முன்வடிவையும், அதேபோல 2020-ல் அம்மையார் பெயர் சூட்டி அனுப்பப்பட்ட அந்த மசோதாவையும் ஆளுநர் இப்போதுதான் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். அம்மையாருடைய பெயர் சூட்டியதை ஆளுநர் அவர்களால் நிராகரிக்கப்பட்டு அந்த சட்ட முன்வடிவும் நம்மிடத்தில் இன்றைக்கு திரும்பி வந்திருக்கிறது. அதேபோல, கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பியிருக்கக்கூடிய துணைவேந்தர்களை அரசே நியமனம் மேற்கொள்ளும் என்ற அந்த மசோதாவும் நம்மிடம் வந்திருக்கிறது.

With-hold என்றால் என்ன அர்த்தம்? எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு பாடம் எடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு !

நாம் இந்த இரண்டு மசோதாக்களையும் இன்றைய சட்டப்பேரவையில் எந்த மாற்றமும் செய்யாமல் மறுபடியும் சரிப்படுத்தி, உடனடியாக அனுப்புகிறோம். இன்றைக்கு நம்முடைய முதலமைச்சருடைய தலைமையில் இருக்கக்கூடிய இந்த அரசுதான், அம்மையாருடைய பேர் சூட்டப்பட்டிருக்கக்கூடிய அந்த சட்ட முன்வடிவை ஆளுநர் தன்னுடைய ஒத்திசைவை அளிக்காமல் திருப்பி அனுப்பியிருந்தாலும்கூட, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எந்தவித காழ்ப்புணர்வுகளை காட்டாமல், அந்த மசோதாவையும் மீண்டும் இன்றைக்கு சட்டப்பேரவையில் அம்மையாருடைய பேர் சூட்டப்படவேண்டும் என்கின்ற அந்த மசோதாவையும் வைத்து இன்றைக்கு கொடுக்கிறோம்.

இந்த அடிப்படை உண்மையை கூட என்ன வருகிறது, என்ன என்ன சொல்கிறார்கள் என்று புரிந்துகொள்ளாமல் இந்த அரசு அம்மையாருடைய பெயர் சூட்டப்பட வேண்டும் என்று ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட அந்த மசோதாவுக்கு உயிர் கொடுத்து மீண்டும் அதை ஏற்று இந்த அரசாங்கம் வைக்கிறபோது அவையில் நின்று அதை வரவேற்றிருக்க வேண்டிய அந்த தார்மீக கடமை இருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள், அதற்கு என்ன மசோதா என்று தெரியாமல், ஏதோ நாங்கள் வெளியில் செல்லவேண்டும் என்பதற்காக ஒரு நொண்டிச் சாக்கை கண்டுபிடித்து அம்மையாருடைய பெயரே இல்லாமல் நீங்கள் இந்த மசோதா கொண்டு வருகிறீர்கள் என்று ஒரு பொய்யான காரணத்தை என்ன, ஏது என்று புரிந்து கொள்ளாமலும் அல்லது புரிந்துகொண்டு வேண்டுமென்றே ஏதாவது ஒரு நொண்டிச் சாக்கை கண்டுபிடித்து வெளியே சென்றிருக்கிறார்கள். இது வேறு ஒன்றுமல்ல. முழுக்க, முழுக்க இது அரசியல்.

இந்த அரசியலில் அதிமுக-வுக்கும், பிஜேவுக்கும் இருக்கக்கூடிய இரகசிய தொடர்புகள் இன்றைக்கு வெளியே வந்திருக்கிறது. அதைத்தான் நம்முடைய அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்று சொன்னார். அதனால், நான் “அடிப்பதுபோல அடிக்கிறேன், நீ அழுவதுபோல அழு” என்று சொல்லக்கூடிய, இரண்டு பேருக்கும் இருக்கக்கூடிய தொடர்பு நாங்கள் பிஜேபி கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம் என்று சொல்லக்கூடியவர்கள் இன்றைக்கு வெளிப்படையாக அந்த அம்மையார் பெயர் கூட வைக்காமல் திருப்பி அனுப்பி இருப்பதை கண்டிக்கக்கூடிய சூழ்நிலை இல்லாமல், ஏன் அந்த அம்மையார் பெயரை வைக்காமல் நீங்கள் திருப்பி அனுப்பியிருக்கிறீர்கள் என்று கேட்கக்கூடிய அந்த திராணி இல்லாமல், மீண்டும் நாம் வைத்து அதே சட்ட முன்வடிவை அனுப்புகிற போது, அதை வரவேற்க கூட இன்றைக்கு அந்த அம்மையார் பெயராலேயே கட்சியை நடத்திக் கொண்டு அவருடைய புகழை பாடுவதாக சொல்லிக் கொண்டிருக்கக் கூடியவர்கள் அம்மையார் பெயரை அந்தப் பல்கலைக்கழகத்துக்கு வைக்கக்கூடிய மசோதாவைக் கூட வரவேற்பதற்கோ, ஏற்றுக்கொள்வதற்கோ மனம் வராமல், பிஜேபி-வுடன் இருக்கக்கூடிய நட்புதான் முக்கியம், நாம் எங்கே ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், டெல்லியில் இருக்கக்கூடியவர்கள் கோபித்துக் கொள்வார்களோ என்கின்ற அந்த பயத்தின் காரணமாக இன்றைக்கு அவர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது மட்டும் கிடையாது. யாரோடு தொடர்புகளை வைத்துக் கொண்டிருக்கிறார்கள், வெளியே வந்துவிட்டாலும் கூட இன்றைக்கும் அதிமுகவுக்கும், பிஜேபிக்கும் இருக்கக்கூடிய அந்த தொடர்புகள், அந்த தொடர்புகளுடைய அழுத்தத்தால்தான் அரசியல் ரீதியாக இன்றைக்கு வெளிநடப்பு செய்திருக்கிறார்கள் என்பதை நான் உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

With-hold என்றால் என்ன அர்த்தம்? எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு பாடம் எடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு !

கேள்வி : with-hold என்றால் என்ன அர்த்தம்?

அமைச்சர் அவர்களின் பதில்: with-hold என்று ஆளுநர் சொல்லியிருந்தாலோ அல்லது குடியரசுத் தலைவர் சொல்லியிருந்தாலோ அது நிலைவையில் இருப்பதாக அர்த்தம் கிடையாது. The bill is no more under consideration with-hold and returned ஆளுநர் with-hold செய்து திருப்பி அனுப்புகிறார் என்று சொன்னால், அந்த சம்பந்தப்பட்ட பில் பரிசீலனையில் ஒரு போதும் இல்லை. With-hold and returned என்று வந்துவிட்டால், அவர் அதற்கான ஒத்திசைவை, தன்னுடைய ஏற்பிசைவை அளிக்கவில்லை. இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால், அந்த குறிப்பிட்ட பில், அந்த சட்ட முன்வடிவை ஆளுநர் நிராகிக்கிறார் என்பதுதான் பொருளாகும். ஏற்கனவே, நீட் பிரச்சனையில், நாம் சட்டமன்றத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தபோது, இதேபோல ஒரு பில்லை குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறபோது, குடியரசுத் தலைவரும் இதேபோல with-held and returned என்று அனுப்பி வைத்தார். அன்றைக்கும் சட்டசபையில் என்ன சொன்னார்கள், இதை அவர் நிராகரிக்கவில்லை, with-held தான் செய்திருக்கிறார் என்று ஒரு சொத்தை வாதத்தை சொன்னார்கள். ஆனால், அதற்கு அடுத்து நீதிமன்றங்களிலும், பல இடங்களிலும் அது தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. With-held என்று சொன்னாலே, ஏற்றுக்கொள்ளப்படவில்லை, அது நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடர்ச்சியாக நீதிமன்ற வாதங்களும், அன்றைக்கு இருக்கக்கூடிய ஒன்றிய அரசின் சார்பில் வந்திருந்த வழக்குரைஞர்களும் (solicitors) விவாதத்தில் அன்றைக்கு தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். எனவே, with-hold என்பதை மாத்திரம் சொல்லிவிட்டு, ஆளுநர் அதை நிராகரிக்கவில்லை, அவருடைய பரிசீலனையில், நிலுவையில்தான் வைத்திருக்கிறார் என்று சொல்வது முற்றிலும் தவறானது. அதைத்தான் சட்டமன்றத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.

கேள்வி : ஆளுநர் அவர்கள் அவருடைய அரசியலமைப்பு அதிகாரத்தைதான் உபயோகித்திருக்கிறார், அரசியலமைப்புக்குள்தான் அவர் செயல்படுகிறார் அதனால் ஆளுநருடைய தவறு ஏதும் கிடையாது என்று சொல்கிறார்கள். அது பற்றி…

அமைச்சர் அவர்களின் பதில் : இத்தனை நாட்கள் ஆகியும், எந்தவித காரணமும் சொல்லாமல் அப்படியே வைத்திருக்கிறார். இப்போதுகூட அரசாங்கம் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்ற பிறகு இந்த நடவடிக்கை ஏற்பட்டிருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு முன்பாகவே நாம் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறோம். குடியரசுத் தலைவர் அவர்களிடத்தில் எடுத்துச் சென்றிருக்கிறோம். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்தும் வலியுறுத்தி இருக்கிறார்கள். ஜனநாயக ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கின்றபோது இந்த மசோதாக்கள் மீது எந்தவொரு முடிவையும் எடுக்காத ஆளுநர் அவர்கள், இன்றைக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றதற்கு பிறகு இதை திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். அதிலும் முற்றிலுமாக அவர்கள் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள் என்பது உண்மை.

banner

Related Stories

Related Stories