
முரசொலி தலையங்கம் (23-07-2026)
கீழ்வெண்மணியும் கீழ்த்தரமான விமர்சனமும்!
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவருமான ச.தமிழ்ச்செல்வன், கீழ்வெண்மணிக் கொடூரம் குறித்து ஆற்றிய உரையில் தந்தை பெரியாரையும், தலைவர் கலைஞரையும் மிகக் கீழ்த்தரமான விமர்சனத்தைச் செய்துள்ளார்.
1968 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் நாளன்று கீழ்வெண்மணியில் 44 உயிர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டன. கூலி உயர்வு கேட்டார்கள் என்ற காரணத்துக்காக பண்ணையார்களால் பூட்டிய வீட்டுக்குள் தீ வைத்து கொளுத்தப்பட்டன அந்த உயிர்கள். இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயப் போராட்டங்களைத் தொகுத்து 'திருப்பி அடித்த வரலாறு' என்ற பெயரில் புத்தகமாக எழுதி இருக்கிறார் ச.தமிழ்ச்செல்வன். அந்த நூல் குறித்த நிகழ்ச்சியில் உரையாற்றும் போது ஆய்வு நோக்கமோ, ஆராய்ச்சிக் கருத்துக்களோ இல்லாமல் கிண்டல், நக்கல் தொனியில் பெரியாரைப் பற்றிச் சொல்லி இருக்கிறார் ச.தமிழ்ச்செல்வன்.
கீழ்வெண்மணி கொடூரம் தொடர்பாக பெரியார் வெளியிட்ட அறிக்கையை முழுமையாக உள்வாங்காமல் மேலோட்டமாக படித்து விட்டு பேசி இருக்கிறார் ச.தமிழ்ச்செல்வன். அப்போது பெரியாருக்கு 90 வயது. அன்றைய தேதியில் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை பொது மருத்துவமனையில் இருந்தார். ஐந்து நாட்கள் கழித்துதான் மருத்துவமனையில் இருந்து வந்தார். மருத்துவமனையில் இருந்தபடியே தான் அந்த அறிக்கையை எழுதினார்.
காந்தி கொலை, காமராசரை வீட்டுக்குள் வைத்து கொளுத்த முயற்சித்தது போன்ற வன்முறைக்கு இணையானது கீழ்வெண்மணி சம்பவம் என்று பெரியார் சொல்கிறார். இதுபோன்ற சட்டவிரோத, பலாத்கார நாச வேலைகளை இன்றைய சட்டங்கள், நீதிமன்றங்கள், ஜனநாயக அமைப்பு முறைகள் மூலமாகத் தீர்க்க முடியாது என்கிறார் பெரியார். அரசும், போலீசும், சட்டமும், நீதிமன்றங்களும் யாருக்கு சார்பாக இருக்கும் என்பது தான் பெரியார் எழுப்பும் கேள்வி ஆகும். குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றம் விடுதலை செய்ததை வைத்து பார்த்தால் பெரியார் அறிக்கையின் உண்மையான பொருள் புரியும்.
கீழ்வெண்மணி கொடூரம் குறித்து 'விடுதலை' நாளிதழில் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வந்தார் பெரியார். அதைத் தெரிந்து கொள்ளாமல் பெரியாரை 'மடத்தனம்' என்பதுதான் மடத்தனம் ஆகும்.
‘திராவிட இயக்கம் குறித்த ஓர் ஆவணம்' என்ற தலைப்பில் 1951 இல் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதை தமிழ்ச்செல்வன் போன்றவர்கள் பார்க்கவும். சமூக சீர்திருத்தக் கொள்கைக்குள் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பும் ஜனநாயக உள்ளடக்கமும் உண்டு என்கிறது அந்த அறிக்கை. இதனை ஆதரித்து பி.ஆர்.பரமேஸ்வரனும், நல்லசிவமும் பிற்காலத்தில் எழுதி இருக்கிறார்கள்.
"நான் பெரியாரையும் அண்ணாவையும் சந்திக்காமல் போயிருந்தால் கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன் என்று சொன்னவர் கலைஞர். அந்தக் கம்யூனிஸ்ட் (கலைஞர்) ஆட்சிக்கு வந்துவிட்டார். அவர் தான் பக்கிரிசாமியை சுட்டுக் கொன்றார்” என்கிறார் ச.தமிழ்ச்செல்வன். கீழ்வெண்மணி சம்பவம் நடந்தபோது முதலமைச்சராக இருந்தவர் பேரறிஞர் அண்ணா. இது கூடத் தெரியவில்லை அவருக்கு.

புற்றுநோயால் தனது வாழ்க்கையின் இறுதிப்பகுதியில் இருந்தார் முதலமைச்சர் அண்ணா. இரண்டு மாதத்தில் மறைந்தார் அண்ணா. எத்தகைய சூழ்நிலையில் அண்ணா இருந்தார் என்பதும் முக்கியமானது. கீழ்வெண்மணிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் கலைஞரை அனுப்பி வைத்தார். அவர் வரும் வரை காத்திருந்தார். இரவு 12 மணிக்கு கலைஞர் உள்ளிட்ட அமைச்சர்கள் வந்தார்கள். அவர்களிடம் பேசிவிட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு நிருபர்களைச் சந்தித்தார் அண்ணா.
இது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் வந்த போது உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பி.ராமமூர்த்தி அவர்கள், “அந்த நிமிடமே அண்ணா கண்ணீர் விட்டார். மறுநிமிடமே அந்த சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்தார். அதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கைவிட்டார். அவர் உடல் நலமற்று இருந்ததால் அமைச்சர்களை உடனே வெண்மணிக்கு அனுப்பி நிலைமைகளை அறிந்து வரச் செய்தார்” என்று பேசி இருக்கிறார். விசாரணை ஆணையம் வேண்டாம், கொலை வழக்காகப் பதிவு செய்யுங்கள் என்று முதல்வர் அண்ணாவிடம் சொன்னதும் பி.ராமமூர்த்தி அவர்கள் தான்.
1969 பிப்ரவரி 3 அன்று முதலமைச்சர் அண்ணா அவர்கள் மறைந்தார்கள். முதலமைச்சராக கலைஞர் அவர்கள் பொறுப்பேற்றார். 1969 ஜனவரி 27, பிப்ரவரி 25, 28 ஆகிய நாட்களில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கீழ்வெண்மணி தொடர்பான விவாதம் நடைபெற்றது. 28.2.1969 அன்று விவாதங்களுக்கு பதிலளித்து முதலமைச்சர் கலைஞர் பேசினார். மிராசுதார் கோபாலகிருஷ்ணனை ‘கொடும்பாவி' என்று குறிப்பிட்டார் முதலமைச்சர் கலைஞர்.
1969 சனவரி 18 அரசு, விவசாயிகள், பண்ணையார்கள் பங்கேற்கும் முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளை தி.மு.க. அரசு ஏற்பாடு செய்தது. 17 உடன்பாடு ஏற்பட்டது. இதனடிப்படையில் கூலி நிர்ணயம் செய்யப்பட்டது. கணபதியா பிள்ளை ஆணையத்தின் அறிக்கையும் 1969 செப்டம்பரில் வெளியானது. இதனை முழுமையாக தி.மு.க. அரசு ஏற்றுக் கொண்டது. ஆணையம் நிர்ணயித்த கூலியையும் விவசாய அமைப்புகள் ஏற்றுக் கொண்டன. இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நியாயமான கூலிக்கான சட்டத்தை இயற்றியது. தொடக்கத்தில் இந்த சட்டம் கீழ்த்தஞ்சை மாவட்டத்துக்கு மட்டுமே உருவாக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு தி.மு.க. அரசு, இதனை மாநிலம் முழுமைக்கும் அமல்படுத்தியது.
1971 ஆம் ஆண்டு நில உச்சரம்புச் சட்டத்தை திருத்த முதலமைச்சர் கலைஞர் எடுத்த முயற்சிக்கும் இந்த சம்பவம் தான் முக்கியமான காரணம் ஆகும்.
கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏழு பேருக்கு தலா பத்தாண்டுகள் சிறைத்தண்டனை தரப்பட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் விசாரணையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். பிற்காலத்தில் கோபாலகிருஷ்ணன், கொலை செய்யப்பட்டார்.
இதுபற்றி கலைஞர் தனது ‘நெஞ்சுக்கு நீதி'யில் எழுதி இருக்கிறார்... “கோபாலகிருஷ்ணன் என்ற நிலப்பிரபு வெண்மணி நிகழ்ச்சி நடைபெற்ற பல ஆண்டுகளுக்குப் பிறகு கொலையுண்டார் என்பதிலிருந்து வெண்மணியின் வெங்கொடுமைக்கு எப்படி பதில் கூறப்பட்டது என்பதையும் புரிந்து கொள்ளலாம்” என்று எழுதி இருக்கும் கலைஞரைத் தான் கிண்டல் அடிக்கிறார் ச.தமிழ்ச்செல்வன்.
“இந்தியாவில் கம்யூனிசம் பரவாமல் கம்யூனிஸ்ட்டுகளே பார்த்துக் கொள்வார்கள்” என்று பெரியார் சொன்னார். அதைத் தான் இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.






