தமிழ்நாடு

”தமிழ்நாடு மீனவர்கள் என்றால் பாஜக அரசுக்குப் பாரபட்சமா? - இனியும் பொறுக்க முடியாது” : கி.வீரமணி ஆவேசம்!

தமிழ்நாடு மீனவர்கள் என்றால் பா.ஜ.க. அரசுக்குப் பாரபட்சமா? என தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

”தமிழ்நாடு மீனவர்கள் என்றால் பாஜக அரசுக்குப் பாரபட்சமா? - இனியும் பொறுக்க முடியாது” : கி.வீரமணி ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையாலும், கடற்கொள்ளையர்களாலும் தாக்கப்படுவது, கொல்லப்படுவது அன்றாட செய்தியாகிவிட்டது. இதனைத் தடுத்து நிறுத்தவேண்டிய ஒன்றிய பா.ஜ.க அரசு - தமிழர்கள் என்பதால் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுகிறது. இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து போராட முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டு மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும். இலங்கை அரசின் கடற்படைத் தாக்குதலைத் தடுத்து நிறுத்துவோம் என்றெல்லாம் வாய்க்கிழிய பேசியது பா.ஜ.க

தாக்கப்படுவதும், பொருள்களைக் கொள்ளை அடிக்கும் படுபாதகமும்... ஆனால், நடப்பு என்ன?

வானிலை அறிக்கைபோல் நாள்தோறும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையாலும், கடற்கொள்ளையர்களாலும் தாக்கப்படுவதும், பொருள்களைக் கொள்ளை அடிக்கப்படுவதும் படுபாதகமும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்தியப் பெருங்கடல் உலகிலேயே அதிக அளவு மீன்களைப் பிடிக்கக் கூடிய பகுதியாகும். உலகளவில் 15 விழுக்காடு மீன்கள் இங்கே பிடிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டு மீனவர்கள் பரம்பரைப் பரம்பரையாக இந்தப் பகுதிகளில் மீன்பிடித்து வருகின்றனர்.

இலங்கையில் உள்நாட்டுச் சண்டை நடைபெற்றபோது, அதைக் காரணமாகக் கூறி, தமிழ்நாட்டு மீனவர்கள்மீதான தாக்குதல்கள் தொடங்கப்பட்டன.போர்தான் முடிந்துவிட்டதே! இப்பொழுது எதற்காக இந்தக் கெடுபிடிகளும், இலங்கைக் கடற்படையின் தாக்குதல்களும்?

இலங்கைக் கடற்படையின் தொடர் அட்டூழியம்!

2006 ஆம் ஆண்டில் இலங்கைக் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்தார்; 12 பேர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அதே ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி கன்னியாகுமரி அருகே இலங்கைக் கடற்படை தமிழ்நாடு மீனவர்களின் வலைகளை அறுத்துத் துவம்சம் செய்தது. மீனவர்கள் கடலில் குதித்து நீந்தி உயிர் தப்பி வந்தனர்.

2011 ஆம் ஆண்டு நாகை இராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 62 பேர் கைது செய்யப்பட்டனர். 2013 இல் 150 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது. 2014 ஆம் ஆண்டில் 110 மீனவர்கள் கைது! 2015 இல் 67 மீனவர்கள் கைது, 38 படகுகள் அபகரிக்கப்பட்டன. 2016 ஆம் ஆண்டில் 82 மீனவர்கள் கைது, 29 படகுகள் பறிமுதல். 2.2.2021 அன்று தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் கொடூரமான வகையில் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டார். கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி பாம்பனைச் சேர்ந்த மீனவர் தோழர் பிரிட்ஜோ இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டார்.

”தமிழ்நாடு மீனவர்கள் என்றால் பாஜக அரசுக்குப் பாரபட்சமா? - இனியும் பொறுக்க முடியாது” : கி.வீரமணி ஆவேசம்!

தமிழ்நாட்டு மீனவர்களிடம் ஹிந்தியில் பேசச் சொன்ன இந்தியக் கடற்படையினர்!

மயிலாடுதுறை மாவட்டம், வானகிரி மற்றும் தரங்கம்பாடி, செருதூர், கிளிஞ்சல்மேடு ஆகிய பகுதிகளிலிருந்து சுதீர் (30), செல்வகுமார் (42), செல்லதுரை (46), சுரேஷ் (41), விக்னேஸ்வரன் (24), மகேந்திரன் (31), பாரத் (24), பிரசாந்த் (24), மோகன்ராஜ் (32), வீரவேல் ஆகிய 10 பேர் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இரவு 3 மணிக்கு ஜெகதாப்பட்டினத்திற்கு கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, இந்தியக் கடற்படையின் ரோந்து கப்பல், மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகைச் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியிருக்கிறது.

பின்னர் மீனவர்களின் படகிற்குள் சென்று சோதனையிட்டு, ‘‘நீங்கள் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளீர்களா? போதைப்பொருள்கள் ஏதும் கடத்துகிறீர்களா?’’ எனக் கேட்டுள்ளனர்! என்ன நடக்கிறது எனப் புரியாமல் மீனவர்கள் தவித்துள்ளனர். இலங்கைக் கடற்படைதான் நம்மை தாக்குகிறது என்று நினைத்துள்ளனர்.

ஆனால், ஹிந்தியில் பேசச் சொல்லி தாக்கியதன் மூலம், தாக்கியவர்கள் இந்திய கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்பது பின்னர்தான் தெரியவந்திருக்கிறது. மீனவர்கள் சென்ற படகில் இந்திய தேசியக் கொடி கட்டப்பட்டிருந்ததைப் பார்த்த பின்பும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் வீரவேல் என்ற மீனவர் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். படகில் சென்ற மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். மீனவர் அனைவரையும் மண்டியிடச் செய்துள்ளனர். கடற்படையில் இருந்த அதிகாரிகள் அனைவரும் ஹிந்தி மொழியில் பேசியதற்கு, மீனவர்கள் தமிழில் பதில் கூறியுள்ளனர். இதில் கோபமுற்ற இந்தியக் கடற்படை காவலர்கள் ஹிந்தி மொழியில் பதில் சொல்லுமாறு மீனவர்களைத் தாக்கியுள்ளனர்.

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியமும் அதிகரித்துள்ளது. மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் தாக்கி அவர்களின் பொருட்களை கொள்ளையடிக்கும் நிகழ்வு தொடர் கதையாகி வருகிறது.

அந்த வகையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 4 பேர் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த நிகழ்வு மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த நெடுஞ்செழியன், ராமகிருஷ்ணன், மதியழகன், குமாரவேல் ஆகியோர் ராமகிருஷ்ணனுக்குச் சொந்தமான பைபர் படகில் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.

ஏற்கெனவே கடந்த மாதம் இறுதியில், நாகையில் 15 மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு மீனவர்கள்மீது தொடர்ந்து இலங்கைக் கடற்கொள்ளையர்களின் தாக்குதல் நிகழ்வுகள் அதிகரித்து வருவது மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

”தமிழ்நாடு மீனவர்கள் என்றால் பாஜக அரசுக்குப் பாரபட்சமா? - இனியும் பொறுக்க முடியாது” : கி.வீரமணி ஆவேசம்!

இலங்கைக் கடற்கொள்ளையர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதோடு மீனவர்களையும் தாக்கி, அவர்களிடம் இருந்து கொள்ளையடித்துச் செல்லும் இலங்கைக் கடற்கொள்ளையர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ்நாடு மீனவர்கள், இந்தியக் கடற்படை ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி இலங்கைக் கடற்கொள்ளையர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய அரசு பலமுறை இந்நிகழ்வுகளை இலங்கை அரசிடம் எடுத்துச் சென்றபோதும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. இந்தியக் கடல்பகுதியிலிருந்து இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்த மீனவர்கள் அத்துமீறுவதால் இலங்கை அரசு அவர்களைக் கைது செய்து, மீன்பிடிச் சாதனங்களையும் படகுகளையும் கைப்பற்றுவதாகக் கூறுகிறது. ஆயினும் மீனவர்கள் கைது செய்யப்படாமல் கொல்லப்படுவதாக தமிழ்நாட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜனவரி 2006 ஆம் ஆண்டில் இந்திய மீனவர்கள் கடல் எல்லையை மீறுவதைக் கட்டுப்படுத்தவும், அவ்வாறு அவர்கள் மீறினாலும் அவர்கள் மீது வன்முறை பயன்படுத்தப்படாதிருக்கவும் கைப்பற்றப்பட்ட படகுகளை விரைவாக திருப்பவும் வேண்டிய வழிமுறைகளை வரையறுக்கவும் இரு நாட்டு மீனவர்களுக்கும் உரிமம் பெற்ற மீன்பிடிப்பிற்கான வாய்ப்புகளை கண்டறியவும் ஏற்படுத்தப்பட்ட ஓர் இணை செயற்குழு செயலற்று உள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் 530 தமிழ்நாட்டு மீனவர்கள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இதனைத் தீவிரமாக எதிர்க்காத ஒன்றிய அரசின் போக்கையும் ஊடகங்களின் அக்கறையின்மையையும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது .

இவ்வளவுக்கும் இந்தியா - இலங்கை - மாலத்தீவுகளுக்கிடையே திருட்டு -பயங்கரவாதம் மற்றும் கடல் பாதுகாப்பு போன்றவற்றில் கூட்டாகத் தகவல்களைப் பகிர்ந்து செயலாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தும், அது காகிதக் கப்பலாகத்தான் இருந்துவருகிறது.

இந்தியா நினைத்தால் ஒரு கையளவு உள்ள சுண்டைக்காய் நாடான இலங்கையைக் கட்டுப்படுத்த முடியாதா? மாறாக, என்ன நடக்கிறது? இலங்கைத் தீவு பொருளாதாரச் சீரழிவில் கவிழ்ந்த கப்பலான நிலையில், இந்தியாவின் மோடி அரசு நேசக்கரம் நீட்டியதும், கோடிக்கணக்கான ரூபாயைக் கொட்டியழுததுமுண்டே!

காரணம், தமிழ்நாடு தமிழர்கள் சம்பந்தப்பட்டது என்றால், இந்தியாவை ஆளும் ஒன்றிய பி.ஜே.பி. அரசுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை என்பதுதானே!

இலங்கையின்மீது தமிழ்நாட்டு மீனவர்கள் படையெடுத்தா சென்றார்கள்?

ஒன்றிய அமைச்சராக இருந்த மறைந்த பி.ஜே.பி.யைச் சேர்ந்த சுஷ்மா சுவராஜ், 2015 மார்ச் முதல் நாள் இலங்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசும்போது என்ன சொன்னார்? ‘‘ஒரு நாடு அதன் நாட்டு எல்லையைப் பாதுகாக்க முழு உரிமையும் உள்ளது’’ என்று கூறினாரா இல்லையா? தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கையின்மீது படையெடுத்தா சென்றார்கள்? ஒரு பொறுப்பு வாய்ந்த ஒன்றிய காபினெட் அமைச்சர் இப்படி பேசினார் என்றால், தமிழ்நாட்டு மீனவர்களுக்கான பாதுகாப்பை எங்கே போய்த் தேட முடியும்?

ஒரு மாநில அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தத்தான் முடியும் - அதற்குமேல் அதற்கு அதிகாரம் கிடையாதே! நமது முதலமைச்சர் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு இந்தப் பிரச்சினைமீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கேளாக் காதுடையதாக ஒன்றிய பி.ஜே.பி. அரசு நடந்துகொள்வது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது அல்லவா!

ஆடு - ஓநாய்க் கதை போல்...

கடலில் எல்லையை வரையறை செய்ய முடியாமல் காற்றடித்த திசையில் மீன் பிடிப் படகுகள் செல்லுவது இயற்கையானதுதானே! ஆடு - ஓநாய்க் கதை போல் இலங்கை அரசுக்கு வக்காலத்து வாங்குபவர்கள். இலங்கையில் மட்டுமல்ல - இந்தியாவுக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினைக்காக திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் இராமேசுவரத்தில் மாநாடு நடத்தியதுண்டு. ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றவர்கள் பங்கேற்ற அம்மாநாட்டில் இதுகுறித்துத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. ஜெகதாப்பட்டினத்தில் அண்மையில் திராவிடர் கழகத்தின் சார்பில் ‘‘மீனவர்கள் பாதுகாப்பு மாநாடு’’ நடத்தப்பட்டது.

ஜனநாயக முறைப்படி மக்கள் குரல் எழுப்பினால், அதை மதிக்கக் கூடிய மாண்பு - ஜனநாயகத்தில் நம்பிக்கை உடைய அரசால்தான் புரிந்துகொள்ள முடியும். அப்படி புரிந்துகொள்ள மறுக்கும் எதேச்சதிகாரப் பாசிச பி.ஜே.பி. அரசை வீழ்த்த மக்கள் சக்தியால் கண்டிப்பாக முடியும்.

வாதாடுவோம் - போராடுவோம் - வெற்றி பெறுவோம்!

மீனவர்கள் பிரச்சினைதானே என்று அலட்சியப்படுத்தாமல், அவர்கள் நம் இனத்தவர்கள் என்பதற்காகக் கூட அல்ல - மனித உரிமை, மனிதநேய அடிப்படையில், ‘‘அவர்களுக்காக வாதாடுவோம் - போராடுவோம் - வெற்றி பெறுவோம்!’’ என்ற உறுதியை ஏற்போம்!

banner

Related Stories

Related Stories