தமிழ்நாடு

“இவையெல்லாம் யாருடைய திட்டம்?” -எடப்பாடி பழனிசாமிக்கு பட்டியலிட்டு கேள்வியெழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பார்த்து வாக்களித்தவர்கள் மட்டுமல்ல நம்மை எதிர்த்தவர்களும் பாராட்டுகிறார்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

“இவையெல்லாம் யாருடைய திட்டம்?” -எடப்பாடி பழனிசாமிக்கு பட்டியலிட்டு கேள்வியெழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திருவண்ணாமலையில் வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திமுகழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவரது உரையின் விவரம் வருமாறு:

"நாடாளுமன்றக் களம் நமக்காக காத்திருக்கிறது. வெற்றிக் கனியைப் பறிக்க, அந்தத் தேர்தல் பணிக்கான தொடக்கப்புள்ளியான வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை நாம் தொடர்ந்து நடத்தி வருகிறோம். மத்திய மண்டல மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் கூட்டம் திருச்சியிலும் - தென் மண்டல மாவட்டங்களுக்கான கூட்டம் இராமநாதபுரத்திலும் - மேற்கு மண்டல மாவட்டங்களுக்கான கூட்டம் திருப்பூரிலும் நடந்தது. இப்போது உங்களுடைய முகங்களை பார்ப்பதற்காகவே இந்த வடக்கு மண்டல மாநாட்டிற்கு கழகத்தின் கோட்டையாக விளங்கும் திருவண்ணாமலைக்கு நான் வந்திருக்கிறேன்.

ஒளி மிகுந்த ஊரில் உங்கள் முகங்களில் எல்லாம் உதயசூரியனின் ஒளியை பார்க்கிறேன். தினமும் காலையில் சூரிய ஒளியை பார்க்கும்போது என்ன மாதிரியான உற்சாகம் ஏற்படுமோ, அதே மாதிரியான உற்சாகம்தான் உங்களை பார்க்கும்போதும் ஏற்படுகிறது! உற்சாகம் என்று சொல்வதைவிடப் புதியதொரு உணர்ச்சியும் எழுச்சியும் ஏற்படுகிறது என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்! ஒரு நாள் முழுவதும் – ஒரு வாரம் முழுவதும் - ஓய்வில்லாமல் உழைத்தாலும், அடுத்த நாள் கழக உடன்பிறப்புகளின் இருக்கப்போகிறோம் என்ற எண்ணம் வந்துவிட்டாலே புதிதாக ஒரு எனர்ஜி வந்துவிடும். ஏன் என்றால், நீங்கள்தான் ”சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி!” இந்தப் பாசப்பிணைப்பை ‘உடன்பிறப்பே…’ என்ற ஒரே ஒரு சொல் மூலமாக உருவாக்கிக் கொடுத்தவர் நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்.

“இவையெல்லாம் யாருடைய திட்டம்?” -எடப்பாடி பழனிசாமிக்கு பட்டியலிட்டு கேள்வியெழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலையும் தீபமும் போலதான், திருவண்ணாமலையும் தி.மு.க.வும்! யாராலும் பிரிக்க முடியாது! பல்வேறு வரலாற்றை நம்மடைய பொதுச் செயலாளர் அவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஒன்று, இரண்டை மட்டும் உங்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

நம்முடைய கழகம் உருவான அன்று நடந்த முதல் பொதுக்கூட்டத்தில் 1,451 ரூபாய் வசூலானது. அதில் 100 ரூபாய் இதே திருவண்ணாமலையை சேர்ந்த நம்முடைய அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ப.உ.சண்முகம் அவர்கள் வழங்கியது. 1957 தேர்தலில் நாம் முதன்முதலாக போட்டியிட்டு 15 பேர் வெற்றி பெற்றோம். அதில், 3 பேர் இந்த மாவட்டத்துக்காரர்கள்! முதல் நாடாளுமன்றத் தேர்தலில் 2 பேர் வெற்றி பெற்றார்கள். அதில் ஒன்று, இந்த திருவண்ணாமலை தொகுதி! சட்டமன்றத்துக்கு, ப.உ.சண்முகம், பி.எஸ்.சந்தானம், களம்பூர் அண்ணாமலை! நாடாளுமன்றத்திற்கு, இரா.தர்மலிங்கம்! இன்றைக்கும் இவர்கள் பெயரை வரலாறு சொல்லிக் கொண்டு இருக்கிறது! அப்படிப்பட்ட நம்முடைய ப.உ.ச. அவர்களுக்கும் இரா.தர்மலிங்கம் அவர்களுக்கும் கொஞ்சம் நாட்களுக்கு முன்புதான் நம்முடைய வேலு அவர்களின் சீரிய முயற்சியில் மாவட்டக் கழகம் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியது!

அண்ணன் துரைமுருகன் அவர்கள் சொன்னதுபோல, 1963-இல் தி.மு.க.விற்கு திருப்புமுனை தந்தது திருவண்ணாமலை இடைத்தேர்தல்! அப்போது ஆளுங்கட்சி, காங்கிரஸ்! நம்முடைய வேட்பாளர், ப.உ.ச. அவர்கள்! தேர்தல் பொறுப்பாளர், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்! அன்றைக்கு திருவண்ணாமலை கொடுத்த வெற்றிதான், 1967-இல் நாம் ஆட்சி அமைக்க அடித்தளமாக அமைந்தது!

அதேபோல், 2021 தேர்தலின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது, வரவேற்புரை ஆற்றுகிறபோது வேலு அவர்கள் பெருமையோடு குறிப்பிட்டுச் சொன்னார், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பயணத்தையும் இதே திருவண்ணாமலையில் இருந்துதான் நான் தொடங்கினேன். தொகுதி தொகுதியாகச் சென்று கோரிக்கை மனுக்களை வாங்கினேன். “உங்கள் கவலைகளை, கோரிக்கைகளை, எதிர்பார்ப்புகளை என்னிடம் ஒப்படைத்திருக்கிறீர்கள். ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் தீர்வு காண்பேன்” என்று சொன்னேன். ஸ்டாலினிடம் மனு கொடுத்தால் நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு, இலட்சக்கணக்கான மக்கள் மனு கொடுத்தார்கள். அந்த அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் வெள்ளம்போல் மக்கள் திரண்டார்கள். அன்றைக்கு வெற்றித் தீபத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் பெறுவதற்கு அடித்தளம் அமைத்தது, திருவண்ணாமலை தான் என்பதை பெருமையோடு குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன்!

“இவையெல்லாம் யாருடைய திட்டம்?” -எடப்பாடி பழனிசாமிக்கு பட்டியலிட்டு கேள்வியெழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்த பாக முகவர்களின் வடக்கு மண்டல மாநாட்டை எழுச்சியோடும் ஏற்றத்தோடும் அருணாசலம் நகரில் இருக்கும் கலைஞர் பெயரால் அமைந்த திடலில் நடத்திக் காட்டியிருக்கும் நம்முடைய மதிப்பிற்குரிய எ.வ.வேலு அவர்களுக்குப் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ”எதையும், யாரும் ஏவாமலேயே செய்யக் கூடியவர் வேலு” என்று தலைவர் கலைஞர் அவர்கள் பாராட்டினார். திருவாரூரில் கலைஞர் கோட்டம் - மதுரையில் கலைஞர் நூலகம் - சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனை - இதெல்லாம் எவ்வாறு அமைய வேண்டும் என்று நான் விரும்பினேனோ, அதே மாதிரி, அழகோடும் கம்பீரத்தோடும் அமைத்தவர்தான் நம்முடைய அன்புக்குரிய வேலு அவர்கள்! கழகத்தின் ‘விழா வேந்தன்’ என்றால் அது, வேலுதான் என்று திருவண்ணாமலை கலைஞர் சிலை திறப்பு விழாவில் நான் சொன்னேன். அப்படிப்பட்ட அவரோடு தோளோடு தோள் நின்று பணியாற்றும் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கு தலைமைக் கழகத்தின் சார்பிலும் – என்னுடைய முறையிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த மார்ச் 22-ஆம் நாள் அண்ணா அறிவாலயத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் இருந்தே நாம் தேர்தல் பணிகளை நாம் தொடங்கிவிட்டோம். தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டிகளை அமைத்திருக்கிறோம். இதோடு நான்கு வாக்குச் சாவடி முகவர்கள் மாநாட்டை நடத்தியிருக்கிறோம். இன்னும் சென்னை மண்டலம் மட்டும்தான் பாக்கி இருக்கிறது.

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) நியமிக்கப்பட்டார்கள். கோடிக்கணக்கான உறுப்பினர்கள் உள்ள நம்முடைய இயக்கத்தில் பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகே ‘வாக்குச்சாவடி பொறுப்பாளர்’ என்ற அடையாள அட்டை உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதைப் பெற்றிருக்கும் உங்களை எல்லாம் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

உங்களுக்கான வகுப்புகள் காலை முதல் மாலை வரை – நாங்கள் வரும் வரை நடந்திருக்கிறது. ’வாக்குச் சாவடிப் பொறுப்பாளர்களின் கடமைகளும் பணிகளும்’ என்ற தலைப்பில் நம்முடைய கழகத்தின் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ எம்.பி., அவர்களும் - ’வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் மற்றும் அதன் முக்கியத்துவம்’ குறித்து நம்முடைய அருமைச் செயல்வீரர் நந்தகுமார் அவர்களும் – ’சமூக வலைத்தளங்களின் பயன்பாடும், செயல்படுத்த வேண்டிய முறையும்‘ என்பது குறித்து அருமைத் தம்பி எஸ்.கே.பி. கருணா அவர்களும் உங்களுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். கழகத்தின் வரலாறு, அடிப்படைக் கொள்கைகள், திராவிட இயக்கத்தின் கோட்பாடுகள், நவீன தமிழ்நாட்டை உருவாக்க நாம் எடுத்த முயற்சிகள் – திராவிட மாடல் ஆட்சி ஆகியவை குறித்த அடிப்படை தகவல்களை நம்முடைய பேரன்பிற்குரிய லியோனி அவர்களும் - மருத்துவர் எழிலன் அவர்களும் உங்களுக்கு எடுத்துச் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.

இவர்கள் மூலமாக கொள்கை வழிகாட்டுதலும் – தேர்தல் பயிற்சியும் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது எல்லாவற்றையும் மனதில் வைத்து நீங்கள் செயல்பட வேண்டும். இதெல்லாம் இந்தத் தேர்தலுக்கு மட்டுமல்ல, எல்லா தேர்தலுக்கும் பயன்படுத்த வேண்டிய பணிகள்! திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, தர்மபுரி கிழக்கு, தர்மபுரி மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு - ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள்.

உங்களை எல்லாம் ஒருங்கிணைத்து, அழைத்து வந்திருக்கும் மாவட்டக் கழகச் செயலாளர்களான, அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் காந்தி, அமைச்சர் மஸ்தான், தா.உதயசூரியன், நந்தகுமார், புகழேந்தி, தடங்கம் சுப்பிரமணி, ஒய்.பிரகாஷ், தேவராஜி, வசந்தம் கார்த்திகேயன், தரணிவேந்தன், மதியழகன், பழனியப்பன் என அனைவர்க்கும் என்னுடைய நன்றியை தலைமைக் கழகத்தின் சார்பில் நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்!

வாக்குச்சாவடி பொறுப்பாளர்களான நீங்கள்தான் உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் வாக்காளர்களுக்கு முழு பொறுப்பாளர். வாக்குச் சாவடிப் பொறுப்பாளர் என்றால், நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கும் நீங்கள்தான் பொறுப்பாளர்! மறந்துவிடாதீர்கள்! உங்களை நம்பித்தான் ’நாற்பதும் நமதே! நாடும் நமதே!’ என்று நான் கம்பீரமாக முழங்குகிறேன்! அதே கம்பீரத்தோடு இன்று முதலே நீங்களும் தேர்தல் பொறுப்பாளராக கடமையாற்ற வேண்டும்! அந்த வகையில் வெற்றி ஒன்றுதான் உங்களின் இலக்காக இருக்க வேண்டும். இந்த வெற்றியை அடைவதற்கான வழிமுறைகளில் நீங்கள் மிகச்சரியாக செல்ல வேண்டும்!

“இவையெல்லாம் யாருடைய திட்டம்?” -எடப்பாடி பழனிசாமிக்கு பட்டியலிட்டு கேள்வியெழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் உங்களுக்கு நிறைய கடமைகள் இருக்கிறது. நீங்கள் மறந்துவிட கூடாது.

* வாக்காளர் பட்டியலைச் சரிபார்ப்பது, முதல் பணி! வாக்காளர் பட்டியலில் உங்கள் வாக்குச் சாவடிக்குரிய வாக்காளர்களின் விவரங்கள் சரியாக இருக்கிறதா, யாராவது போலி வாக்காளர்கள் இருக்கிறார்களா, இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறதா என்று முழுவதுமாகச் சரிபார்க்கும் கடமை உங்களுடையது.

* வாக்காளர்களை சந்தித்து, பிரச்சாரம் - பரப்புரை மேற்கொள்வதும், நம்முடைய சாதனைகளை அவர்களிடம் தொடர்ந்து எடுத்துச் சொல்வதும் இரண்டாவது பணி!

* வாக்குப்பதிவு நாட்களில் வாக்காளர்களை வாக்குப்பதிவு மையங்களுக்கு வரவைப்பது மூன்றாவது பணி! இது மிகமிக முக்கியமான பணி!

உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் நீங்கள் ஒருவராக மாற வேண்டும். முதலில், உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் ஒவ்வொருவரை பற்றியும் முழுவதுமாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்கான மாதிரிப் படிவம்தான் இப்போது, உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தொகுதிவாரியாக அச்சிடப்பட்டு உங்களிடம் சீக்கிரமாக வந்து சேரும். வாக்காளரின் பெயர், வயது, அவர்கள் குடும்பத்தினர் யார் யார், என்ன படித்திருக்கிறார்கள், என்ன தொழில் செய்கிறார்கள், எந்தக் கட்சியை சார்ந்தவர் என்ற முழு விவரமும் உங்களிடம் இருக்க வேண்டும். தினமும் ஒருமணி நேரத்தைக் கழகத்துக்காக ஒதுக்குங்கள். ஒதுக்குவீர்களா?

அடுத்ததாக, அரசின் திட்டங்களையும் முழுமையாகத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் இன்றைக்கு வழங்கப்பட்டிருக்கும் புத்தகத்தைப் படித்துப் பார்த்தாலே அரசின் திட்டங்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்துவிடும். யாருக்கு என்ன தேவையோ அதை பெற்றுத் தாருங்கள். முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதலில் உதவி, இவ்வாறு என்ன உதவி தேவை என்று கேட்டு நிறைவேற்றித் தாருங்கள். இதனைச் செய்து தர உங்கள் பகுதியின் ஒன்றிய – நகர – பேரூர் கழகச் செயலாளர்களையோ, சட்டமன்ற உறுப்பினர்களையோ அல்லது அமைச்சர்களையோ நீங்கள் அணுகுங்கள்.

வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கொண்டு வரும் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எல்லோரிடமும், குறிப்பாக அமைச்சர்களிடமும் கட்டாயமாகச் சொல்லுவேன். நீங்கள் கொண்டு வரும் தகுதி வாய்ந்த கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேற்றித் தரப்படும் என்ற உறுதியை நான் இங்கு அழுத்தம் திருத்தமாக குறிப்பிட விரும்புகிறேன்.

ஒவ்வொரு நாளும் பத்து வீட்டுக்குப் சென்று பேசுங்கள். ஒரு மாதத்தில் உங்கள் பூத்தில் இருக்கும் அத்தனை வீட்டிற்கும் சென்று வந்துவிடலாம். ஒரு சிலர் வரவேற்கவில்லை என்றாலும் திரும்ப திரும்ப செல்லுங்கள். நம்முடைய சாதனைகளை எடுத்துச் சொல்லிப் புரிய வையுங்கள். எல்லார்க்கும் பொதுவான மக்களாட்சியை நாம் நடத்திக் கொண்டு வருகிறோம். நம்முடைய திட்டங்களால் தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒருவிதத்தில் பயனடைகிறது. அப்படி பார்த்து பார்த்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதனால் மக்கள் நம்முடைய ஆட்சிமீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

கோடிக்கணக்கான பெண்களுக்கு பயனளிக்கும் திட்டம்தான் மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்! ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. 42 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பெற்றுவரும் 1000 ரூபாய் உதவித்தொகையை 1200 ரூபாயாக ஆக்கி இருக்கிறோம். 18 லட்சம் பள்ளி மாணவ மாணவியர்க்கு காலை உணவுத் திட்டம்! 13 லட்சம் பெண்களின் நகைக்கடன் ரத்து!

இவ்வாறு கோடிக்கணக்கான – இலட்சக்கணக்கானவர்கள் பயன்பெறும் திட்டங்களை நிறைவேற்றுகிற அரசுதான், நம்முடைய திராவிட மாடல் அரசு! இதையெல்லாம் நீங்கள் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். நம்முடைய திட்டங்கள் மூலமாக பயனடைந்தவர்கள், ஊடகங்களில் தரும் பேட்டிகளில் உள்ளத்தில் இருந்து பேசுகிறார்கள். அது மகிழ்ச்சியாக இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு இருந்ததைவிட, ஐந்து, ஆறு மாதங்களுக்கு முன்பு நான் சுற்றுப்பயணம் செய்தபோது இருந்த மகிழ்ச்சியைவிட, உணர்ச்சியைவிட, வரவேற்பைவிட இப்போது கடந்த இரண்டு மாதகாலமாக எங்கு பார்த்தாலும் பெண்கள் அலைமோதுகிற அந்தக் கூட்டத்தை நான் கண்கூடாகப் பார்க்கிறேன். என்ன காரணம்? 1,000 ரூபாய். அது இன்றைக்கு மகளிரை ஈர்த்திருக்கிறது. வாக்களித்தவர்கள் மட்டுமல்ல - நம்மை எதிர்த்தவர்கள்கூட இப்போது பாராட்டுகிறார்கள். இது நம்முடைய எதிரிகளை அச்சமடைய வைத்திருக்கிறது.

சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் பேசியிருக்கிறார். பத்திரிகைகளில் படித்துப் பார்த்தேன். அது பேச்சு அல்ல, வயிற்றெரிச்சல். தன்னுடைய வயிற்றெரிச்சலை வார்த்தைகளாகக் கொட்டி இருக்கிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்து எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்று பேசியிருக்கிறார். இந்த இரண்டரை ஆண்டுகால சாதனைகளைச் சொல்ல ஆரம்பித்தால் அதற்கே இரண்டு மணி நேரமாகும்! அவ்வளவு சாதனைகளை செய்திருக்கிறோம்!

“இவையெல்லாம் யாருடைய திட்டம்?” -எடப்பாடி பழனிசாமிக்கு பட்டியலிட்டு கேள்வியெழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ‘பச்சைப் பொய்யர்’ பழனிசாமி, சொன்னதிலேயே பெரிய பொய் எது என்றால் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களைதான் ரிப்பன் வெட்டி நாம் தொடங்கி வைக்கிறோமாம். பிளான் போட்டு, கட்டி முடித்து வைத்துவிட்டார்களாம். நாம் சென்று ரிப்பன் வெட்டிவிட்டு வந்துவிட்டோமாம். யாரு? பொய்ச்சாமி, மன்னிக்கவும் பழனிசாமி பேசுகிறார்.

நான் கேட்கிறேன், மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோமே? அது நீங்கள் போட்ட திட்டமா?. எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களை அன்போடு பணிவோடு கேட்கிறேன், விடியல் பயணம் – பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் நீங்கள் போட்ட திட்டமா?; காலைச் சிற்றுண்டித் திட்டம், யார் போட்ட திட்டம்?; புதுமைப் பெண் திட்டத்தில், மாணவியர்க்கு 1000 ரூபாய் தருகிறோமே, இது பழனிசாமியின் திட்டமா?

இலட்சக்கணக்கான மாணவர்களை முன்னேற்றும் ’நான் முதல்வன் திட்டம்’ அ.தி.மு.க. திட்டமா?; நம்மைக் காக்கும் 48, இல்லம் தேடிக் கல்வி - இதெல்லாம் என்ன என்றாவது பச்சைப் பொய்யர் பழனிசாமிக்கு தெரியுமா?; 2 லட்சம் உழவர்களுக்கு மின் இணைப்பு கொடுத்திருக்கிறோம். இது அ.தி.மு.க. திட்டமா; அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகி வருகிறார்களே? இது பா.ஜ.க.வின் பாதம்தாங்கியாக இருக்கிறாரே பழனிசாமி அவரின் ஆட்சியில் நடந்ததா?; மாபெரும் தமிழ்க் கனவு – தமிழ் பரப்புரைக் கழகம் நடத்தி வருகிறோமே! இந்த திட்டம் எல்லாம் பழனிசாமியின் கனவிலாவது வந்திருக்குமா?

தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் – அருட்பிரகாச வள்ளலார் - மகாகவி பாரதியார் ஆகியோருக்கான விழாக்களை நம்மை திராவிட மாடல் அரசு நடத்துகிறதே, இவர்களின் கொள்கைகளாவது என்ன என்று கம்பராமாயணம் படித்த பழனிசாமி சொல்வாரா? வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு போராடிய இடஒதுக்கீட்டு தியாகிகளுக்கு மணிமண்டம் அமைத்து வருகிறோமே, இது அ.தி.மு.க. ஆட்சியில் போட்ட திட்டமா?

ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்த பழனிசாமி தன்னுடைய ஆட்சியில் கண்டுகொண்டாரா? அரசு ஊழியராக இருக்கும் மகளிருக்கு மகப்பேறு விடுப்பை 9 மாதத்தில் இருந்து 12 மாதம் ஆக்கியது நம்முடைய தி.மு.க. ஆட்சி! ஆட்சிக்கு வந்து 1000 நாட்கள் கூட ஆகவில்லை, ஆயிரம் கோயில்களில் குடமுழுக்கு நடத்தியிருக்கும் ஆட்சிதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி.

இது எதுவும் பழனிசாமி கண்ணுக்கு ஏன் தெரியவில்லை? தெரிந்து கொள்ள விரும்பவில்லையா? இல்லை, இன்னும் தரையிலேயேதான் ஊர்ந்துகொண்டு இருக்கிறாரா? தலையைக் கொஞ்சம் தூக்கிப் பாருங்கள் பழனிசாமி அவர்களே! தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது!

நான்காண்டுகாலம் ஆட்சி அதிகாரம் இருந்தபோது மக்களுக்காக எதையுமே செய்யாமல், இப்போது பதவி பறிபோன பிறகு, தன்னைப் போலவே எல்லாரும் இருப்பார்கள் என்று நினைக்கிறார் பழனிசாமி. மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள் என்று நினைத்துவிட்டார் போல! அதனால்தான் பொய் பொய்யாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்!

அவரின் ஆட்சியில் தமிழ்நாடு எல்லா துறைகயிலும் முதலிடம் பிடித்ததாம். பழனிசாமி சொல்கிறார். நாம் கேட்பது, சொந்தமாக விதைத்து அறுவடை செய்வதுதான் பெருமை! மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகவும் - போராடிய ஏழை விவசாயிகளுக்கு எதிராகவும் பேசிய – போலி விவசாயி பழனிசாமிக்கு இதெல்லாம் எப்படி தெரியும்? உண்மையில், அவரின் ஆட்சியில் தமிழ்நாட்டு நலன்களும் உரிமைகளும் பா.ஜ.க.விடம் அடகு வைத்து காவு கொடுக்கப்பட்டது! இதுதான் வரலாறு!

போதைப் பொருளான குட்கா விற்க லஞ்சம் வாங்கியதற்காக ஒரு அமைச்சர் வீட்டிற்கே ரெய்டு வந்ததை மறைக்க முடியுமா? சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ் மரணம் இன்னும் ஆறாத வடுவாக இருக்கிறது!தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் காக்கை குருவிகளை சுடுவது போல 13 பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, டி.வி.யைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னீர்களே பழனிசாமி… உங்கள் முகத்திரைதான் நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் அப்பட்டமாகக் கிழிந்து தொங்கியதே! மறந்துவிட்டீர்களா?

எல்லாவற்றுக்கும் மேல், பொல்லாத ஆட்சி - அதற்குப் பொள்ளாச்சியே சாட்சி என்று தமிழ்நாடே கொதித்ததே மறந்துவிட்டதா? பொள்ளாச்சி பாலியல் கொடுமை நெஞ்சில் ஈரம் இருக்கும் எல்லோரையும் கதற வைத்தது… ஆனால் பழனிசாமி அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை… இதுதான் பழனிசாமி ஆட்சியின் லட்சணம். இதையெல்லாம் மக்கள் மறந்து இருப்பார்கள் என்று நினைத்து வாய்ச்சவடால் விட்டுக்கொண்டு இருக்கிறார் திருவாளர் பழனிசாமி.

“இவையெல்லாம் யாருடைய திட்டம்?” -எடப்பாடி பழனிசாமிக்கு பட்டியலிட்டு கேள்வியெழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

தி.மு.க. குடும்பக் கட்சியாம்! ஆமாம், குடும்பக் கட்சிதான்! அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன், தி.மு.க. குடும்பக் கட்சிதான். கோடிக்கணக்கான தமிழ்க் குடும்பங்களை வாழவைக்கும் கட்சி, தி.மு.க. பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் காட்டிய பாதையில், ஒற்றைக் கையெழுத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களின் மனதில் மகிழ்ச்சியை உருவாக்கிய கட்சி, தி.மு.க.!

பச்சைப் பொய் பழனிசாமி அவர்களே! சம்பந்திக்கும், சம்பந்தியின் சம்பந்திக்கும் காண்ட்ராக்ட் கொடுத்து, ஹைகோர்ட் – சுப்ரீம் கோர்ட்டு என்று ஓடிக்கொண்டே இருக்கும் உங்களுக்கு, குடும்பக் கட்சி என்று விமர்சிக்க எந்த யோக்கியதையும் இல்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்த அனைத்துத் தேர்தலிலும் தோற்றவர் பழனிசாமி. வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் முழுமையாகத் தோற்கடிக்கப்படுவார்! பா.ஜ.க. கூட்டணியில் இருந்தால் டெபாசிட் கூட தேறாது என்று திட்டம் போட்டு, டெபாசிட்டைக் காப்பாற்றிக் கொள்ள தனியாகப் பிரிந்த மாதிரி ’உள்ளே வெளியே’ நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்.

சிறுபான்மை இனத்தவர் மீது திடீர் என்று பாசம் பொங்குகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்புரிமை ரத்து, முத்தலாக் தடை என்று எல்லா சட்டத்தையும் கண்ணை மூடி ஆதரித்தவர் பழனிசாமி. அதை எதிர்த்த தி.மு.க.வினரைச் சட்டமன்றத்திலேயே எப்படியெல்லாம் பேசினார், பா.ஜ.க.விற்கு எப்படியெல்லாம் பல்லக்கு தூக்கினார் என்று எல்லோருக்கும் நன்றாக தெரியும்! “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார்கள்” என்று கேட்டார் பழனிசாமி. இப்படியெல்லாம் ஆணவத்தோடு பேசிவிட்டு, இப்போது, ‘கூட்டணி தர்மம்’ என்று சப்பைக்கட்டு கட்டி தன்னுடைய நாடகத்திற்கு ஸ்க்ரிப்ட் எழுதிக்கொண்டு இருக்கிறார்.

ஆனால் மக்கள் இப்போதும் என்ன கேட்கிறார்கள், "மக்களை காவு கொடுத்துவிட்டு எதற்காக கூட்டணி வைத்தார்?" பா.ஜ.க.வை விமர்சிக்காமலேயே பா.ஜ.க.விற்கு எதிராக கூட்டணி அமைக்கிறேன் என்று அவர் போடும் நாடகம், மிகப்பெரிய நரித்தனத்தின் அடையாளம்! இவ்வாறெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் ஆட்டுவிக்கப்படுகிறார். தேர்தல் நெருங்க நெருங்க அதுவும் அம்பலம் ஆகிவிடும்.

தேர்தல் என்ற போர்க்களம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளாக தமிழ்நிலத்தில் அதிகமான போர்கள் நடந்த மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம்! முதலாம் தெள்ளாற்றுப் போர் – இரண்டாம் தெள்ளாற்றுப் போர் – திருவண்ணாமலைப் போர் – வந்தவாசிப் போர் – தேசூர்ப் போர் – ஆரணிப் போர் – செங்கம் கணவாய்ப்போர் – சேத்துப்பட்டில் போர் என்று வரிசையாக எத்தனையோ போர்க்களங்களைப் பார்த்த ஊர், இந்தத் திருவண்ணாமலை வட்டாரம்!

இப்போது நாம் இந்திய ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தில் நிற்கிறோம். இந்த தேர்தல் களத்தில் நாம் காணப் போகும் வெற்றிதான் - எதிர்கால இந்தியாவிற்கு மிக மிக முக்கியம்! 100 ஆண்டு காலமாக சமூகநீதியின் மூலமாக தமிழ்நாடு பல்வேறு முன்னேற்றங்களை அடையத் தொடங்கியது. கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி எத்தனையோ முன்னெடுப்புகளை செய்திருக்கிறது. தொடர்ந்து இப்போது இந்தியாவே தலைநிமிர்ந்து பார்க்கும் ஆட்சியை நடத்தி வருகிறோம். இந்த திராவிட மாடல் கோட்பாடானது – இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தப்படுமானால் - உலகில் தலைசிறந்த நாடாக இந்தியா உயரும்!

மக்களைப் பிளவுபடுத்தி அடிமைப்படுத்தும் பாசிச பா.ஜ.க.விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் களத்திற்கு இந்தத் திருவண்ணாமலை பாசறைக் கூட்டமானது நல்ல வழிகாட்டியாக அமையட்டும். நிறைவாக, தீபம் தெரிவதைப் போல - இந்தியாவிற்கான நம்பிக்கை ஒளி தெரிகிறது. இந்தியா வாழ்க! இந்தியா கூட்டணி வெல்க! நாற்பதும் நமதே! நாடும் நமதே!

banner

Related Stories

Related Stories