
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆற்றிய உரை:-
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பாக நடைபெறுகின்ற இந்த சிறப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திக்கின்ற இந்த வாய்ப்பை பெற்றதற்கு உள்ளபடியே நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். வந்திருக்கக்கூடிய அனைவருக்கும் முதலில் என்னுடைய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த அரங்கில் இருக்கக்கூடிய நீங்கள் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு துறையில் நிச்சயமாக திறன் மிக்கவர்களாக இருப்பீர்கள். அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக இன்றைக்கு இந்த மேடையில் 2 பேர் அமர்ந்திருக்கிறார்கள்.
World Skills Taipei 2025 Software Development Skill பிரிவில் கரூர் பள்ளப்பட்டியைச் சேர்ந்த தம்பி முகம்மது மஃபாஸ் Medal of excellence-ஐ பெற்று இன்றைக்கு நம்முடைய தமிழ்நாட்டிற்கு பெருமைத் தேடி தந்து இருக்கிறார்.
அதே மாதிரி, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தம்பி சுரேந்திரன் அவர்கள் Plastering & Dry Wall Systems Skill பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்றிருக்கிறார். இவர்கள் இரண்டு பேருக்கும் நம்முடைய துறையின் சார்பாக, அரசு சார்பாக நாம் அனைவரும் நம்முடைய வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்வோம்.
திறனை வளர்த்துக் கொள்வது என்றால், அது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. அதற்கு consistency வேண்டும், discipline வேண்டும், முக்கியமாக hard work நிச்சயமாக வேண்டும். இந்த மூன்றும் இல்லாதவர்களால் எந்தவொரு திறனையும் நிச்சயம் வளர்த்து கொள்ள முடியாது.
சில பேருக்கு திடீர் என்று சில விஷயங்களில் ஆர்வம் வரும். அதில் அதிக நேரம் ஆர்வம் செலுத்துவார்கள். சில நாளைக்கு அந்த விஷயம் குறித்து படிப்பார்கள், கற்றுக் கொள்ள முயற்சி செய்வார்கள். அதன்பிறகு அதை பாதியிலேயே விட்டுட்டு, வேறு ஏதாவது விஷயத்துக்கு சென்றுவிடுவார்கள். அந்த மாதிரி இருந்தால், ஒவ்வொரு திறனையும் நாம் வளர்த்துக் கொள்ள முடியாது.
Consistency, discipline, hard work இந்த மூன்றும் தொடர்ந்து இருந்தால் தான் நீங்கள் வாழ்க்கையில் இன்னும் பல உயரத்துக்கு நிச்சயம் சென்றடைய முடியும். இதற்கு சரியான ஒரு எடுத்துக்காட்டுதான் நம்முடைய முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
பள்ளி மாணவராக இருக்கும்போதே 'மாணவ நேசன்' என்று ஒரு கையெழுத்துப் பத்திரிகையை தொடங்கினார். அதன் பின்பு அது முரசொலியாக மாறியது. அப்போது ஆரம்பித்து, தன்னுடைய வாழ்நாளின் கடைசி காலம் வரை கலைஞர் அவர்கள் எழுதிக் கொண்டே இருந்தார்கள், படித்து கொண்டே இருந்தார்.
தமிழ்நாட்டில் பேனா என்று சொன்னால் கலைஞர் பெயர் தான் பலருக்கும் ஞாபகத்திற்கு வரும். அந்த அளவுக்கு எழுதிக்கொண்டே இருந்தார். அதிகாலையிலேயே எழுந்து பேப்பரை படித்து, முழு விவரத்தையும் தெரிந்து கொள்வார். டெக்னாலஜியில் முழுக்க, முழுக்க அப்டேட்டாக இருப்பார். அவர் இருக்கும் வரை சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தார்.
அரசியல் களத்தில் எதிரிகள் மாறி, மாறி வந்தாலும் கலைஞர் அவர்கள் நிலைத்து நின்றார் என்றால், அதற்கு காரணம் அவருடைய கடின உழைப்பு. அந்த வகையில், தமிழ்நாட்டில் பல திறமையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நம்முடைய திறன் மேம்பாட்டுக் கழகம் இன்றைக்கு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மாணவர்களுடைய திறனை மேம்படுத்த நம்முடைய முதலமைச்சர் அவர்கள், ‘நான் முதல்வன்’ திட்டத்தை ஆரம்பித்தார்கள். அந்த திட்டம், எந்த அளவுக்கு பயன் கொடுத்திருக்கின்றது என்று, உங்களை எல்லாம் பார்க்கும் போது, இங்கு வந்திருக்கக்கூடிய வெற்றியாளர்களையெல்லாம் பார்க்கும்போது தெளிவாக தெரிகின்றது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் நடத்துகின்ற TN Skills Competitionஇல் வெற்றி பெற்ற மாணவர்கள், இன்றைக்கு World Skills Competition வரைக்கும் சென்று சாதிக்கின்றீர்கள்.
சென்ற 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தைவானில் நடந்த ஆசிய திறன் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் பங்கேற்றுள்ளீர்கள். இப்போது, இந்த ஆண்டுக்கான World Skills Competitionல் கலந்து கொள்வதற்கு நம்முடைய மாணவர்கள் தயாராகி கொண்டிருக்கிறார்கள். உங்களில் பலர் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று எங்களுடைய வாழ்த்துகளை நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.
போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் உடனே வழங்க வேண்டும் என்று இன்றைக்கு பல பெரிய நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.
அதே மாதிரி நான் முதல்வன் திட்டத்தில் வளாக வேலைவாய்ப்பு முகாம்கள் (Campus placement drives) நடந்து கொண்டிருக்கிறது. கடந்த டிசம்பர் தொடங்கி இப்போது வரை நடந்த வேலைவாய்ப்பு முகாம்களில் கிட்டத்தட்ட 1,200 மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருக்கிறது நம்முடைய அரசு.
நான் முதல்வன் திட்டம் மூலமாக வருகின்ற ஜூன் மாதம் வரை தமிழ்நாடு முழுவதும் 100-க்கும் அதிகமான வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இதன் மூலமாக, இன்னும் பல ஆயிரம் மாணவர்களுக்கு, Infosys, Amazon, TATA, TVS, Apollo Group என்று பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கின்றது.
மாணவர்களுக்கு தேவையான Skill Training-ஐ அந்த நிறுவனங்களே கொடுத்து, அவர்களை பணிக்கு எடுத்துக் கொள்ள முன்வருகின்றார்கள்.
பயிற்சி என்றால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல. உலகில் பலநாடுகளில் இருக்கின்ற தொழிற்சாலைகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் நம்முடைய மாணவர்கள் பயிற்சிக்காக சென்று வருகிறீர்கள்.

அரசினுடைய SCOUT திட்டத்தின் மூலமாக, 10 மாணவர்கள் தென்கொரியாவில் பயிற்சி முடித்துவிட்டு திரும்பியிருக்கார்கள். இன்னும் இரண்டு மாதத்தில், மேலும் 90 மாணவர்கள் Germany, Japan, Poland, Bahrain, Singapore உள்ளிட்ட நாடுகளுக்கு பயிற்சிக்காக செல்ல இருக்கிறார்கள்.
மற்ற மாநிலங்களில் எல்லாம், பள்ளிப் படிப்பும், கல்லூரி படிப்புமே பெரிய கனவாக இருந்து வரும் நேரத்தில், நம்முடைய தமிழ்நாட்டில் மட்டும்தான் நாம் அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
மாணவர்கள் இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும் என்று தான், 2 நாட்களுக்கு முன்னர் 10 லட்சம் லேப்டாப்களை கல்லூரி மாணவர்களுக்கு வழங்குகின்ற நிகழ்ச்சியை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். இப்படி தொடர்ந்து மாணவர்களுக்கான திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தந்து கொண்டிருக்கிறார்கள்.
UPSC தேர்வை எடுத்துக் கொண்டால், முன்பு எல்லாம், அதில் தேர்வாகின்ற தமிழ்நாட்டு மாணவர்களுடைய எண்ணிக்கை வருடந்தோறும் குறைந்து கொண்டே வந்தது. அதை சரி செய்ய வேண்டும் என்று நான் முதல்வன் திட்டத்தின் கீழ், UPSC தேர்விற்கு தயாராகின்ற மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் ஊக்கத் தொகையை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிமுகம் செய்தார்கள்.
2021-இல் தமிழ்நாட்டில் இருந்து UPSC-க்கு தேர்வானவர்கள் வெறும் 27 பேர் தான் இருந்தார்கள். இன்றைக்கு நான் முதல்வன் திட்டம் வந்த பிறகு, சென்ற 2025 ஆம் ஆண்டு 59 பேர் தமிழ்நாட்டில் இருந்து UPSC தேர்வினை கிளியர் செய்துள்ளார்கள்.
அதேபோல, இரயில்வே தேர்வு, வங்கி தேர்வு, பணியாளர் தேர்வு வாரிய தேர்வு என்று அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் படிக்கின்ற மாணவர்களுக்கு நம்முடைய அரசு எல்லாவிதமான உதவிகளையும், ஊக்கத்தையும் அளித்து வருகின்றது.
எனவே, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அடிக்கடி சொல்வது போல, மாணவர்களாகிய நீங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நம்முடைய முதலமைச்சர் அவர்களும், நம்முடைய அரசும் என்றைக்கும் தயாராக இருக்கின்றது.
நாளைக்கு உங்களில் இருந்தும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் உருவாக வேண்டும். பெரிய, பெரிய நிறுவனங்களில் நீங்கள் அதிகாரிகளாக சென்று உட்கார வேண்டும். மற்றவர்களுக்கு நீங்களும் ஒரு Inspire ஆக இருக்க வேண்டும்.
நீங்கள் வேலை தேடுகின்ற நிலைமை மாறி, இன்றைக்கு நான்கு பேருக்கு வேலை கொடுக்கின்ற நிலைமைக்கு நீங்கள் உங்களை உருவாக்கி கொள்ள வேண்டும். அதற்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், என்றைக்கும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
திறன் போட்டியில் வென்ற உங்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து, இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.








