தமிழ்நாடு

"போதைப் பொருட்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்" : காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!

குற்றங்கள் குறைய போதைப் பொருட்கள் முற்றிலுமாக ஒழிக்கபட வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

"போதைப் பொருட்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்" : காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (17.10.2023) செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை:-

தமிழ்நாட்டின் 3 முக்கிய மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டத்தில் உங்கள் மாவட்டங்களில் உள்ள நிகழ்வுகள் அவை குறித்து நீங்கள் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தீர்கள்.செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களும் தொழில் வளர்ச்சி அதிகம் காணக்கூடிய மாவட்டங்கள் ஆகும். குற்ற நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகளும், காரணங்களும் இங்கு அதிகம் உள்ளன. எனவே, காவல்துறை அதிகபட்ச கவனத்துடன் செயல்பட வேண்டும். ஒரு மாநிலம் வளர்ச்சியடைய வேண்டுமென்றால், அந்த மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும்; குற்றங்கள் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளில், நமது மாநிலத்தில் பெரிய அளவில் எந்தவொரு சட்டம் – ஒழுங்குப் பிரச்சனையும் ஏற்படவில்லை. இதன் காரணமாகத்தான், முதலீட்டாளர்களை ஈர்ப்பதில், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே, இந்த நிலை தொடர காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து, சட்டம் – ஒழுங்கைப் பேணிப் பாதுகாத்து, அமைதியான ஒரு சூழ்நிலை நிலவிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

கொலை, கொலை முயற்சி, செயின் பறிப்பு ஆகியவை மக்கள் மத்தியில் அச்சத்தையும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பற்றிய விமர்சனம் ஏற்பட காரணமாகும். எனவே, மாவட்ட அளவில் நீங்கள் புதிய அளவிலான அணுகுமுறைகள், தொழில் நுட்பங்கள், Friends of Police ஏற்படுத்துதல் மூலம் இவ்வகை குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் நடக்காமல் தடுப்பு நடவடிக்கைகள் நீங்கள் எடுக்க வேண்டும்.

அடுத்தபடியாக, நீங்கள் அனைவரும் கண்ணுங்கருத்துமாக இருந்து தடுக்க வேண்டியது போதைப் பொருட்களைத் தான். போதைப் பொருளுக்கு எதிராக, அதனை முற்றிலும் ஒழித்திட கடுமையான நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம். வருங்காலத் தலைமுறையினரைப் பாதுகாக்கும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்டு மாதம் 11-ஆம் நாள், போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதோடு, எனது தலைமையில் ஒரு கோடி மாணவர்களுக்கும் மேல் போதைத் தடுப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொள்கிறார்கள்.

இந்த 3 மாவட்டங்களில் ஏராளமான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன. அந்தப் பள்ளிகளில், கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியரிடையே போதைப் பொருட்கள், குட்கா, பான்மசாலா போன்றவற்றை உட்கொள்வதால் ஏற்படும் கேடுகள் குறித்த விழிப்புணர்வினை நீங்கள் தொடர்ந்து ஏற்படுத்திட வேண்டும். அதோடு, பள்ளிகள் கல்லூரிகள் அருகே பெட்டி கடைகளில் போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

'சில இடங்களில் காவல் துறையினருக்குத் தெரியாமல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க வாய்ப்பில்லை' என்பதை சிலர் பெரிய குற்றச்சாட்டாகப் பரப்பி வருகிறார்கள். இதை நான் நம்பவில்லை என்றாலும், உயர் அதிகாரிகளாகிய நீங்கள் அதைத் தீவிரமாகக் கண்காணித்திட வேண்டும்.

இதுபோன்று கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் புழங்கும் பகுதிகள் கண்டறியப்படும் நேர்வுகளில், சம்பந்தப்பட்ட பகுதியைச் சார்ந்த காவல் துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல்துறை தலைவரை நான் கேட்டுக்கொள்கிறேன். இதில் எவ்விதமான சமரசமும் ஏற்கதக்கதல்ல.

அடுத்தபடியாக, கள்ளச்சாராய விற்பனை பற்றி ஏற்கனவே வாரந்தோறும், திங்கட்கிழமைகளில், மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை, வருவாய்துறை, ஆயத்தீர்வைத் துறை மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து, ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், அதில் கள்ளச்சாரயப் புழக்கத்தை தடுப்பதில் உள்ள சிரமங்களைக் கண்டறிந்து, அவற்றை ஒழிப்பதற்கான கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியதை நினைவூட்ட விரும்புகிறேன்.

வாரந்தோறும் நடைபெறும் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், போதைப் பொருட்கள், குட்கா, பான்மசாலா தடுப்பு குறித்த நடவடிக்கைகளை ஆய்வு செய்வதோடு, அவை தொடர்பாக எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்தும் உள்துறை செயலருக்கு அறிக்கை அனுப்பி வைக்கவேண்டும். உள்துறை செயலரும், தலைமைச் செயலரும் அதன் மீது தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதை இவ்வளவு விரிவாக நான் சொல்வதற்குக் காரணம், பல்வேறு நிகழ்வுகளில் குற்றங்களுக்கு மையப்புள்ளியாக போதைப் பொருள்கள் இருக்கின்றன. போதை தான் அதிகமான குற்றங்களுக்கு தூண்டு கோலாக இருக்கிறது. எனவே போதைப் பொருள் தடுப்பு என்பது குற்றத்தடுப்பில் மிக முக்கியமானது!

எனவே, "எங்கள் மாவட்டத்தில் போதைப் பொருள் நடமாட்டம் இல்லை" என்று ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி.யும் உறுதி எடுத்து தடுத்துக் காட்ட வேண்டும். ஏனென்றால், இது உங்களது வேலை மட்டுமல்ல, உங்களுடைய கடமை!

அடுத்து, சாலை விபத்துகளை பற்றி குறிப்பிட விரும்புகிறேன். தமிழ்நாட்டில் அதிகப்படியான உயிரிழப்புகள் சாலை விபத்துகளினால் ஏற்படுகின்றன என்பதை அறியும்போது, எனக்கு மிகுந்த வேதனையும், வருத்தமும் ஏற்படுகிறது.

அரசு சார்பில் விபத்துகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், பயணம் செய்வோரின் செயல்பாடு இதில் மிக இன்றியமையாதது. எனவே, பொது மக்களிடையே தொடர்ந்து சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வை காவல் துறையினர் ஏற்படுத்திட வேண்டும். பிற துறையினருடன் இணைந்து, சாலை விபத்துகளைத்தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குறிப்பாக, இந்த மூன்று மாவட்டங்களில் வாகன போக்குவரத்து மிக அதிகம் என்பதால், சாலை மேம்பாடு, சமிக்ஞைகள் (Signals) அமைத்தல், தெரு விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகளையும் மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை பொறுத்தவரை, அவ்வகையான குற்றங்களைத் தடுப்பதற்கும், குறைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக, பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுதருதல், சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்குதல், போக்சோ வழக்குகளைத் தீவிரமாக கண்காணித்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்று தரும் வரை தொடர் கண்காணிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் நீங்கள் அனைவரும் நேரடியாக கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோல், சமூக வலைதளங்களின் மூலம் வன்முறை மற்றும் சாதிய கருத்துக்களையும், வதந்திகளை பரப்புபவர்களையும் கண்காணிக்க வேண்டும். பொய்யான செய்திகள் குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதாவது,

போதைப் பொருள் தடுப்பு

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு

சமூக வலைதளங்கள் மூலம் குழப்பம் ஏற்படுத்துதல்

காவல் துறையின் மீது மக்களுக்கு நல்லெண்ணம் ஏற்படும், நம்பிக்கை ஏற்படும். அந்த நம்பிக்கை ஏற்படுத்துவது காவல்துறையைச் சார்ந்த உங்கள் ஒவ்வொருவருடைய பொறுப்பு.

நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளைத் தொடர்ந்து கண்காணித்து, உரிய சாட்சிகளை ஆஜர்படுத்தியும், சரியான தரவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தும், குற்றம் இழைத்தவர்களுக்கு விரைவாக உரிய தண்டனையைப் பெற்றுதர வேண்டும்.

"போதைப் பொருட்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்" : காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!

பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு வரும்போது அவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்களோ, அதைப் பொறுத்துதான் காவல்துறையினர் மீது மக்களுக்கு நல்லெண்ணம் ஏற்படும் – நம்பிக்கை ஏற்படும்.அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவது காவல் துறையைச் சேர்ந்த உங்கள் ஒவ்வொருவரின் பொறுப்பு!

நமது அரசு, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பாளர் என்ற பதவியை உருவாக்கி, காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் புகார்களைப் பெற்று, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ்பெறப்படும் மனுக்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி, சரியான தீர்வுகாணப்படவேண்டும். பொதுமக்கள் தங்களின் மனுக்களுக்கு தீர்வு ஏற்படாதா என்ற ஏக்கத்தோடு, நம்பிக்கையோடு எனக்கு மனுக்களை அனுப்புகிறார்கள். அந்த மனுக்களின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து, அது தொடர்பான விவரங்களை மனுதாரருக்கும் தெரிவித்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

முதல்வரின் முகவரி திட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் மனுக்கள் தொடர்பாக, சில மனுதாரார்களை நானே நேரடியாகத் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்வுகள் பற்றி கேட்டறிவதற்காக நான் முடிவு செய்திருக்கிறேன்.

”அவர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு சரியான முறையில் கிடைத்ததா?” என்றும்,

“காவல் துறையினரால் எவ்வாறு நடத்தப்பட்டார்கள்?” என்பதையும் நான் தெரிந்து கொள்ள இருக்கிறேன்.

எனவே, ஒவ்வொரு மனுவின் மீதும் முறையான விசாரணை செய்திட வேண்டுமென்று அறிவுறுத்த விரும்புகிறேன்.

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தவேண்டும் என்று நான் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தேன்.

சில மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முழுமையாக கலந்து கொள்ளவில்லை என எனக்கு தெரியவந்துள்ளது. இதுவும் தவிர்க்கப்பட வேண்டும்.

பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து, நேரில் அவர்களிடம் குறையைத் தெரிவிக்க வரும்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கண்டிப்பாக இருக்கவேண்டும். மக்களை சந்திக்க வேண்டும். அவர்களுக்காகத்தான் நாம் பணியில் இருக்கிறோம் என்பதை நீங்களும் நினைவில் கொள்ள வேண்டும்.

நமது அரசு கடந்த 2 ஆண்டுகளில் காவல் துறை மற்றும் காவலர்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கியுள்ளது.

1) வாரத்தில் ஒருநாள் விடுமுறை.

2) பெண்காவலர்களுக்கு 8.00 மணிக்கு மேல் பணிக்கு வரும் சலுகை

3) காவலர்களின் குழந்தைகளுக்கு காப்பக வசதி.

4) காவல் நிலையங்களில் மேலும் பல வசதிகளை மேம்படுத்துதல்

5) காவலர்களுக்கான குடியிருப்புகளை மேம்படுத்துதல் மற்றும் புதிய காவலர் குடியிருப்புகளைக் கட்டுதல் போன்ற நடவடிக்கைகளை நமது அரசு மேற்கொண்டுள்ளது.

காவலர்களுக்கு வழங்கப்படும் இந்தச் சலுகைகள் மற்றும் வசதிகளை காவல் கண்காணிப்பாளர்கள் கண்காணித்து, அவற்றை உறுதி செய்திட வேண்டும். இதன் மூலம் அவர்களுடைய பணி மேலும் சிறப்பானதாக அமையும்.

நான் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு ஆய்வுக் கூட்டத்திலும் குறிப்பிடும் ஒரு விஷயம், அடுத்து வரும் சில மாதங்கள் நமக்கு மிகவும் முக்கியமானவை.

குறிப்பாக, வடகிழக்குப் பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், காவல்துறையினர், மாவட்ட நிருவாகத்தினருடன் ஒருங்கிணைந்து, மழைக் காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோன்று, வரவிருக்கும் பண்டிகை காலங்களில் பொது இடங்களில் ஏற்படும் மக்கள் நெரிசலைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, மக்கள் தங்கு தடையின்றி, பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள போக்குவரத்தினை சீர்செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பண்டிகை காலங்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூடும் இடங்களில், சங்கிலிப் பறிப்பு போன்ற குற்றச்செயல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திடவேண்டும்.

சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் வழங்கப்பட்ட அறிவுரைகள், அறிவிப்புகள் பின்பற்றப்படுகிறதா? நடைமுறைக்கு வந்துவிட்டதா? என நான் மாவட்டங்களுக்கு செல்லும்போது ஆய்வு செய்கிறேன். அதுபோல, நீங்களும் உங்கள் துறை மூலம் வழங்கப்படும் உத்தரவுகள் காவல் நிலைய அளவில் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை நேரடி ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் நான் தெரிவித்த கருத்துகளை, காவலர் முதல் காவல்கண்காணிப்பாளர் வரை மனதிலே நிறுத்தி, அரசுக்கு நற்பெயரை ஈட்டித் தரும் வகையில் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். சட்டம்-ஒழுங்கினை மீண்டும் ஒருமுறை பேணிக் காத்து, குற்றங்கள் நடைபெறாமல் காத்திட வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories