தமிழ்நாடு

“இந்தியாவை காக்கும் கடமை பத்திரிகைகளிடம் தான் இருக்கிறது”: விகடன் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

ஜனநாயகம் காக்க - அதன் மூலமாக இந்தியாவை காக்க வேண்டிய கடமை என்பது நான்காவது தூணாக இருக்கின்ற பத்திரிகைகளிடம் தான் இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவை காக்கும் கடமை பத்திரிகைகளிடம் தான் இருக்கிறது”: விகடன் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20.9.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், விகடன் குழுமத்தின் சார்பில் “கலைஞர் 100 - விகடனும் கலைஞரும்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய சிறப்புரை பின்வருமாறு :- உரையினை தொடங்குவதற்கு முன்னால், வரவேற்புரை ஆற்றியிருக்கக்கூடிய திரு. சீனிவாசன் அவர்கள் இங்கே எடுத்து வைத்திருக்கக்கூடிய உரிமையோடு எடுத்து வைத்திருக்கக்கூடிய, நம்பிக்கையோடு எடுத்து வைத்திருக்கக்கூடிய, அவருடைய கோரிக்கைக்கு ஒரு விளக்கம் சொல்ல விரும்புகிறேன். அவர் எடுத்து வைத்திருக்கக்கூடிய கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையை முதலில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

“இந்தியாவை காக்கும் கடமை பத்திரிகைகளிடம் தான் இருக்கிறது”: விகடன் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

நாங்கள் ஆட்சிக்கு வரும் முன்னர் இந்த நூல்கள் வாங்கக்கூடிய விஷயத்தில் நடந்திருக்கக்கூடிய பல்வேறு தவறுகள் இங்கே சொல்லமுடியாது. சொல்வதும் முறையல்ல. ஆனால் அவைகள் எல்லாம் சரிசெய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. சரி செய்வதற்கே இவ்வளவு நாட்கள் ஆகியிருக்கிறது. அதற்குள் நான் போக விரும்பவில்லை.  சீனிவாசன் சொன்னது போன்று ஒளிவு மறைவற்ற நூல்கள் தேர்வு செய்ய online வழியாக விண்ணப்பங்கள் பெற்று அதனை தேர்வு செய்ய நிபுணர்கள் அடங்கிய தேர்வுக்குழு அமைப்பதற்கான பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கூடுதலாக, இன்னொரு தகவல். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நூல்கள் வாங்குவதற்கு 190 உறுப்பினர்கள் பரிந்துரைக்க, 20 துறை சார்ந்த நிபுணர்கள் தேர்வு செய்து மூன்றரை இலட்சம் புத்தகத்தை 50 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறோம் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

'கலைஞர் 100 - விகடனும் கலைஞரும்' என்ற புத்தகத்தை நாங்கள் தயாரித்திருக்கிறோம், அதற்கு நீங்கள் உங்களுடைய அணிந்துரையை வழங்கிட வேண்டும் என்று என்னிடத்தில் கோரிக்கை வைத்தார்கள். இந்தப் புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்தார்கள். அதைப் பார்த்ததும் நான் மெய் மறந்து போனேன். மெய் சிலிர்த்துப் போனேன். மிகப் பிரமிப்பாக இருந்தது.

இப்போது எனக்கு இருக்கக்கூடிய கவலையெல்லாம் தலைவர் கலைஞர் அவர்கள் இருந்து இதைப் பார்க்கவில்லையே என்ற அந்த கவலை தான் என்னை இப்போது ஆட்கொண்டிருக்கிறது. அவர் பார்த்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஆனால் அவர் இல்லை என்று சொன்னாலும் அவருடைய அன்பு மகனாக இருக்கக்கூடிய நான் அதைப் பார்த்து அவர் சார்பில், மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன். 

“இந்தியாவை காக்கும் கடமை பத்திரிகைகளிடம் தான் இருக்கிறது”: விகடன் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு விழாவை, ஊடகங்களும் – ஊடகவியலாளர்களும் முக்கியமாக கலைஞரை கொண்டாடியாக வேண்டும். 

பத்திரிக்கையாளர் - எழுத்தாளர் - அரசியல் ஆளுமை - திரையுலக கதை வசனகர்த்தா -  நாடக நடிகர் -  சின்னத்திரை வசனகர்த்தா என்று பன்முக ஆற்றலைக் கொண்டவர் கலைஞர் என்பதால், அவரை ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் அனைவருமே போற்றுவது பொருத்தமான ஒன்று.

அப்படிப்பட்ட கடமையைதான், ஆனந்த விகடன் மறக்காமல் - மறுக்காமல் இன்றைக்கு அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில், இந்த நிகழ்ச்சியை சிறப்போடு நடத்திக் கொண்டிருக்கக்கூடிய நிர்வாக இயக்குநர் திரு.சீனிவாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை உங்கள் அனைவரின் சார்பில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பேரறிஞர் அண்ணா அவர்களை பற்றி 'தி இந்து' குழுமத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட 'மாபெரும் தமிழ்க் கனவு'. அதேபோல், தலைவர் கலைஞர் அவர்களை பற்றி தயாரிக்கப்பட்ட 'தெற்கிலிருந்து ஒரு சூரியன்' போல, விகடன் சார்பில்
'கலைஞர் 100' புத்தகத்தை இந்த மேடைகளில், நாம் பார்க்கிறோம், இனி அனைத்து மேடைகளிலும் இதைப் பார்க்கத்தான் போகிறோம். 

“இந்தியாவை காக்கும் கடமை பத்திரிகைகளிடம் தான் இருக்கிறது”: விகடன் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

இது ஏதோ திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் - தோழர்கள் - பொறுப்பாளர்கள் மட்டுமல்ல, பத்திரிகையாளர்கள் - பொதுமக்கள் எல்லோரும் வாங்கிப் படித்துப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். 

கலைஞர் 100 - வெளியிடுகின்ற ஆனந்த விகடன், இன்னும் சில ஆண்டுகளில் 'விகடன் 100' விழாவை காண இருக்கிறது. அதற்கு முன்கூட்டியே இந்த விழாவின் மூலமாக என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அந்த நிகழ்ச்சிக்கு நிச்சயமாக என்னை அழைப்பார்கள். நம்முடைய கலைஞானியையும் அழைப்பார்கள். இந்து ராம் அவர்களையும் அழைப்பார்கள். இருந்தாலும் முன்கூட்டியே என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

விகடன் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து திராவிட இயக்கத் தலைவர்களோடு  ஆனந்த விகடன் நெருக்கமான நட்பைப் பெற்றிருந்தது. நம்முடைய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் குடிஅரசு ஏட்டை நடத்தியபோது, அதற்கு அதிகப்படியான விளம்பரங்களை பெற்றுத் தந்தவர், யார் என்று கேட்டால், ஆனந்த விகடனின் பிதாமகரான எஸ்.எஸ். வாசன் அவர்கள்தான்.

பேரறிஞர் அண்ணா
பேரறிஞர் அண்ணா

அதேபோல் பேரறிஞர் அண்ணா அவர்களும் எஸ்.எஸ்.வாசன் அவர்களும் மிகமிக நெருக்கமாக இருந்தவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்முறையாக முதலமைச்சராக 1967-ஆம் ஆண்டு வெற்றி பெற்று  சட்டமன்றத்திற்கு  உள்ளே வருகின்ற நேரத்தில் 'வருக அண்ணாதுரை' என்று விகடன் தலையங்கம் தீட்டியது.

அதுமட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முதல் மாநாட்டின்போது தனியாக 8 பக்கம் சிறப்புப் பகுதியை வெளியிட்டதும் ஆனந்த விகடன்தான். இங்கே குறிப்பிட்டு நினைவுபடுத்தினார்கள், இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு. பேரறிஞர் அண்ணா அவர்கள் அதை சென்னையில் நடத்தியபோது, அலங்கார ஊர்திகள் தயாரிக்கின்ற பொறுப்பை எஸ்.எஸ்.வாசன் அவர்களிடம்தான் முதலமைச்சராக இருந்த அண்ணா அவர்கள் ஒப்படைத்து இருந்தார்கள். அன்றைக்குப் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கலைஞர் அவர்களும், எஸ்.எஸ்.வாசன் அவர்களும் இணைந்து நடத்திய ஊர்வலம் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தநேரத்தில், தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய கவிதாஞ்சலி, இன்றைக்கும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். யாரும் அதை மறக்க முடியாது… அதில் கடைசியாக சொல்வார். 'இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா' என்று அந்தக் கவிதை எல்லாரையும் கலங்க வைக்கும்.

“இந்தியாவை காக்கும் கடமை பத்திரிகைகளிடம் தான் இருக்கிறது”: விகடன் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

இந்தக் கவிதையை கேட்டு அதிகம் கலங்கினார் எஸ்.எஸ்.வாசன் அவர்கள். 'உலகிலேயே இதயத்தை இரவலாகக் கேட்ட தலைசிறந்த கவிஞர் நீங்கள்தான்' என்று வாசன் அவர்கள் கலைஞரை பாராட்டினார். இதை கலைஞர் அவர்களே பல மேடைகளில்  குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

அதே நட்பானது எஸ்.எஸ்.வாசன் அவர்களின் புதல்வர் மரியாதைக்குரிய எஸ்.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும் தலைவர் கலைஞர் அவர்களுக்கும் தொடர்பு இருந்தது. 1980-ஆம் ஆண்டு 'ஆனந்த விகடன் பொன்விழா' நடந்தது. அப்போது அதிமுக ஆட்சி, எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சர். ஆனாலும், அந்த விகடன் பொன்விழாவிற்கு, பல நிகழ்ச்சிகள், அதில் கவியரங்க நிகழ்ச்சிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைத்தான் இந்த விகடன் அழைத்தது.

கலைஞர் பேசினார், அந்தக் கவிதையாகவே சொன்னார். கொள்கையிலே வேறுபாடு இருந்தாலும் – அதைச் சொல்கையிலே பண்பாடு தேவை என்று செய்கையிலே காட்டியவன் விகடன் தானே!" என்று தலைவர் கலைஞர் அவர்கள் கவிதையால் பாராட்டினார்.

"எத்தனையோ அரசியல் மாறுபாடுகள் - கருத்து வேறுபாடுகள் இவற்றிற்கு இடையே எல்லாவற்றையும் கடந்து அன்பும், நட்பும், தூய்மையான பாசமும் இருவரிடையே நிலவிட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு தோழமை வேண்டும் என்றால், அது நானும், பாலுவும் கொண்டுள்ள தோழமைதான்'- என்று தலைவர் கலைஞர் அவர்களே எழுதி இருக்கிறார். அந்தளவிற்கு இருவரும் நட்பாக இருந்தவர்கள்.

“இந்தியாவை காக்கும் கடமை பத்திரிகைகளிடம் தான் இருக்கிறது”: விகடன் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

மூத்த பத்திரிக்கையாளர், என்னுடைய அன்பிற்குரிய திரு. சோலை அவர்கள் என்ன பற்றி ஒரு புத்தகம் எழுதினார். 2010-ஆம் ஆண்டு விகடன் பிரசுரம்தான் வெளியிட்டது. 'ஸ்டாலின் - மூத்த பத்திரிக்கையாளர் பார்வையில்' என்ற தலைப்பில் அந்த புத்தக வெளியீட்டு விழா, சென்னை காமராசர் அரங்கில் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.இன்று கலைஞர் 100 நூலை விகடன் தயாரித்து வெளியிடுகிறது. எனவே, இந்த நட்பு என்பது காலம் காலமாக தொடரக்கூடிய ஒரு குடும்ப நட்பாக விளங்கிக் கொண்டிருக்கிறது!

இந்தப் புத்தகம் தலைவர் கலைஞர் பற்றிய கருவூலமாக அமைந்திருக்கிறது. இதைப் படிக்கும்போது தலைவர் கலைஞருடைய வாழ்க்கையோடு நாம் பயணிப்பதை போலவே அமைந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், தலைவர் கலைஞர் அவர்களுடைய டைரியைப் போல இருக்கிறது என்றே சொல்லலாம். முக்கியமான காலக்கட்டத்தில், தலைவர் கலைஞர் அவர்கள் அளித்திருக்கக்கூடிய பேட்டிகள், நிருபர்களுக்கு தந்திருக்கக்கூடிய பதில்கள், விகடன் எழுதிய கட்டுரைகள் எல்லாம் இதில் இடம் பெற்றிருக்கிறது. 

தன்னுடைய கலைப் பயணம் பற்றி 60 வாரங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியிருக்கிற துணுக்குகளை படித்தாலே ஐம்பது ஆண்டு கால சினிமா உலகத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

1969-ஆம் ஆண்டு அண்ணா மறைவிற்கு பிறகு, தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற நேரத்தில், "கழகத்தின் முன்னேற்றத்திற்குப் பெருமளவு காரணமாக இருந்த திரு. கருணாநிதியின் ஆர்வமும் ஆற்றலும் அவரது நிர்வாகத்திலும் பிரதிபலித்து, தமிழகம் மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று விகடன் உளமார விரும்புகிறான்" - என்று 23.2.1969 தேதியிட்ட விகடன் தலையங்கம் எழுதி இருந்தது.

“இந்தியாவை காக்கும் கடமை பத்திரிகைகளிடம் தான் இருக்கிறது”: விகடன் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

1989-ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தப்போது, 'கலைஞரே வருக! கருத்தான ஆட்சி தருக'- என்று தலையங்கம் தீட்டியதும் ஆனந்த விகடன்தான். அப்படிப்பட்ட ஆட்சியை தான் கலைஞர் அவர்கள் தந்தார்கள்.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும், கலைஞர் அவர்கள் எடுத்த நிலைப்பாடுகளை இந்த நூலில் நாம் தெரிந்து கொள்ளமுடியும். கலைஞருடைய உழைப்பு, அறிவு, ஆற்றல் பற்றி தெரிந்து கொள்வதற்கு கருவூலமாக இந்த நூல் அமைந்திருக்கிறது. இந்த ஐம்பது ஆண்டு காலத்தில் கலைஞரை பற்றிய 108 பதிவுகள் இதில் இடம் பெற்றிருக்கிறது. இதற்கு மேல், மீதியை புத்தகத்தை வாங்கி நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள். 

பத்திரிக்கை அதிபர்கள் எல்லாம் பெருமளவு இங்கே குழுமியிருக்கிறீர்கள். எனவே அவர்கள் குழுமியிருக்கக்கூடிய இந்த மேடையில், ஒரு ஆட்சி செயல்படுத்தி வருகிற நல்ல திட்டங்களை மனப்பூர்வமாக ஆதரித்து எழுதுங்கள். அப்படி எழுதினால்தான், நீங்கள் விமர்சிக்கும்போதும், அதற்கு உண்மையான மதிப்பும் மரியாதையும் இருக்கும்.

எதையும் ஆதரித்து எழுதாமல் - விமர்சித்து மட்டுமே எழுதினால், அந்த விமர்சனங்களுக்கு மதிப்பே இருக்காது. சரியானதை ஆதரிப்பதும், விமர்சனம் இருந்தால் அதை சுட்டிக் காட்டுவதும்தான் நடுநிலையான பத்திரிகைக்கு இருக்கக்கூடிய தர்மம்! அதன்படி தமிழ்நாட்டு ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்று மிகுந்த பணிவோடு நான் கேட்டுக்கொள்கிறேன். எனக்காக இல்லை, நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக, இந்த சமுதாயத்திற்காக, இந்த இனத்திற்காக. ஏன் என்றால், இன்று ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகோதரத்துவம், சமூகநீதி ஆகியவை நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. இதை அரசியல்ரீதியாக நாங்கள் எதிர்கொண்டு தடுப்போம். ஆனால், அது மட்டும் போதாது.

“இந்தியாவை காக்கும் கடமை பத்திரிகைகளிடம் தான் இருக்கிறது”: விகடன் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

ஜனநாயகத்தினுடைய நான்காவது தூணாக இருப்பது, போற்றப்படுவது, பத்திரிகைகள்தான். எனவே, தங்களுடைய கடமையை நீங்கள் செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்து, ஆனந்த விகடன் போன்ற இதழ்கள் இந்தியாவின் விடுதலைப் போராட்டக் காலத்தில் வீறுகொண்ட போராட்டங்களை ஆதரித்த இதழ்கள்.

1930-ஆம் ஆண்டும் - 1942-ஆம் ஆண்டும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஆனந்த விகடன் நெருக்கடிக்கு உள்ளானது. 'அடக்குமுறை நீண்டநாள் தலைவிரித்தாட முடியாது'- என்று அப்போது ஆனந்தவிகடன் தலையங்கம் தீட்டியது. 'இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுங்கள் என்று சொல்வது ஆட்சேபகரமானது என்றால் விகடனும் குற்றவாளிதான்'- என்று அப்போது துணிச்சலாக விகடன் தலையங்கம் எழுதியது!

அதே ஆனந்த விகடனில், கடந்த மாதம் 16.8.2023 இதழில் தீட்டப்பட்ட தலையங்கம் மிகமிக முக்கியமானது. ஒன்றிய அரசால் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பத்திரிகை மற்றும் காலமுறை இதழ்கள் பதிவு மசோதாவை கண்டித்து அந்த தலையங்கம் இருந்தது.

  • கொடுமையான விதிகளுடன் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய மசோதா, பத்திரிகைச் சுதந்திரத்தை மிக மோசமாக நசுக்கும், அபாயகரமான விதிகளைக் கொண்டுள்ளது என்றும் -

  • இவர்கள் செய்துள்ள திருத்தத்தின் மூலமாக செய்தித்தாள் பதிவாளர் - ஒரு செய்தித்தாள் நிறுவனத்துக்குள் நுழைந்து சோதனையிட முடியும் என்றும் - 

  • நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாவிலும், பத்திரிகைச் சுதந்திரத்தைப் பறிக்கும் பல அம்சங்கள் உள்ளன என்றும் - 

  • ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகைச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலை ஒன்றிய அரசு தொடர்ச்சியாகச் செய்து வருகிறது என்றும், ஆனந்த விகடன் கண்டித்து தலையங்கம் தீட்டி இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம், ஒன்றிய அரசு அமல்படுத்திய தகவல் தொழில்நுட்பத் திருத்த விதிகள் 2023-ம், இதேபோன்ற மோசமான அம்சங்களை கொண்டிருந்தது என்று விகடன் தலையங்கம் கண்டித்திருக்கிறது. விமர்சனம் செய்பவர்களின் குரல்வளையை நெரிப்பது ஜனநாயகத்திற்கு அழகல்ல என்றும் சொல்லி இருக்கிறது விகடன்.

நான் சொல்லவில்லை. விகடன் தலையங்கம் சொல்லி இருப்பதைதான் இங்கே  நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இதைத்தான் நான் வாசித்தேன். இதைத்தான் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கிற நெருக்கடி என்று சொல்கிறேன். நான் அரசியல் பற்றிப் பேசவில்லை, ஜனநாயகத்தை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

“இந்தியாவை காக்கும் கடமை பத்திரிகைகளிடம் தான் இருக்கிறது”: விகடன் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

மணிப்பூர் மாநிலம் நான்கு மாதங்களாக எரிந்து கொண்டு இருக்கிறது. அதை பற்றி நான் விவரிக்க விரும்பவில்லை. அது எல்லாருக்கும் தெரியும். மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று மூன்று வாரங்களாக விகடன் இதழிலேயே தொடர் கட்டுரை வெளியாகி இருக்கிறது. அங்கு உண்மையில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்றார்கள். சென்று விட்டு அந்த அறிக்கையையும் கொடுத்தார்கள்.

அப்படி அறிக்கை கொடுத்தவர்கள் மீதே மணிப்பூர் அரசு வழக்கு போட்டிருக்கிறது. எடிட்டர்ஸ் கில்டு அமைப்புக்கே இந்த நிலைமை என்றால், யோசித்துப் பார்க்கவேண்டும். ஏன் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கடுமையாக இதை கண்டித்திருக்கிறார்.

உச்சநீதிமன்றமாக இருந்தாலும், தேர்தல் ஆணையமாக இருந்தாலும், அரசியல் சட்ட அமைப்புகள் அனைத்தும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்ற இந்த நேரத்தில், ஜனநாயகம் காக்க - அதன் மூலமாக இந்தியாவை காக்க வேண்டிய கடமை என்பது நான்காவது தூணாக இருக்கின்ற பத்திரிகைகளிடம் தான் இருக்கிறது.

ஜனநாயகம் காக்கப்பட்டால் தான் பத்திரிக்கைத் துறை என்பதே எதிர்காலத்தில் இருக்கும் என்பது என்னுடைய அக்கறையுள்ள வேண்டுகோளாக நான் இங்கே சுட்டிக்காட்டுகிறேன். அதை இந்த மேடையில் வைப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதித்தான் எடுத்துச் சொன்னேனே தவிர வேறு ஒன்றும் இல்லை!

காலத்தால் அழிக்கமுடியாத ஒரு கருவூலத்தை கலைஞருக்காக உருவாக்கிக் தந்திருக்கக்கூடிய இந்த நூலை அர்ப்பணித்திருக்கக்கூடிய ஆனந்த விகடன் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் அவர்களுக்கும் - விகடன் பிரசுரம் ஆசிரியர் குழுவுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை, வணக்கத்தை தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories