இந்திய சமூகம் கடந்த 2000 ஆண்டுகளாக சாதிய பாகுபாடுகளால் சிக்கிவருகிறது என்றால் உலகளவில் பாலின பாகுபாடு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அதன் காரணமாக உலகம் முழுவதும் பெண்கள் ஒடுக்கப்படுபவர்களாகவும், ஆண்களில் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்து வருபவர்களுமாகவே இருந்து வந்தனர். மேலும் பெண்கள் வீட்டு வேலைகளை கவனித்து குடும்பத்தை மட்டுமே கவனித்து வந்தனர்.
அதோடு அவர்கள் வெளியே வேலைக்கு செல்லாமல் அடுப்படியில் மட்டுமே இருந்து வந்தனர். தற்போதும் ஒரு சில இடங்களில் இந்த சூழல் இருந்து வருகிறது. படித்தாலும் பெண்கள் சில சமயங்களில் பணிக்கு செல்ல இயலவில்லை. இதனாலே குழந்தைகளிடம் 'அம்மா என்ன வேலை செய்கிறார்?' என்று கேட்டால், 'வீட்டில் சும்மா இருப்பதாக' தெரிவிப்பர்.
ஆனால் குடும்பத்தில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. பெண்களின் அயராது உழைப்புக்கும், ஈடுபாடுக்கும் முறையான ஊதியமோ அங்கீகாரமும் கிடைப்பதில்லை. இந்த சூழலில் அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மைக் கழகம் (IIM) ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் குடும்ப சூழலில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான பங்களிப்பு குறித்து இடம்பெற்றிருந்தது.
இந்த ஆய்வானது 15 முதல் 60 வயது பெண்களிடம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், ஒரு குடும்பத்தில், வீட்டு வேலைகளில் ஆண்களை ஒப்பிட்டு பார்க்கையில் பெண்கள் பங்களிப்பு மிகவும் அதிகமானது என்று தெரியவந்துள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு பெண்கள் சுமார் 7.2மணி நேரம் குடும்ப வேலைகளில் ஈடுபட்டால், ஆண்கள் வெறும் 2.8 மணி நேரம் மட்டுமே ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்த ஆய்வறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது தமிழ்நாட்டின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பெண்களுக்கு வலு சேர்க்கும் வகையில் இருக்கப்போகிறது. கடந்த செப்.15 பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
இந்த உரிமை திட்டத்தால் பெண்கள் தங்களின் சிறு சிறு தேவைகளுக்காக அடுத்தவர்களிடம் முறையிட தேவை இருக்காது. இந்த உரிமை திட்டமானது மகளிரின் வாழ்வில் பெரும்பங்காற்றுகிறது.