தமிழ்நாடு

”ஆண்டிற்கு 100 பதக்கங்கள் வெல்வதை உறுதி செய்ய வேண்டும்”.. அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!

ஆண்டும் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் தேசிய அளவில் பதக்கங்கள் வெல்வதை இலக்காகக் கொண்டு விளையாட்டுத்துறை அலுவலர்கள் செயல்பட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

”ஆண்டிற்கு 100 பதக்கங்கள் வெல்வதை உறுதி செய்ய வேண்டும்”.. அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி  அறிவுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் நேரு இளையோர் மையம் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்ற திட்டப்பணிகள், மேம்பாட்டுத் திட்டங்கள் , செயல்பாடுகள் மற்றும் சட்டமன்ற அறிவிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது:-

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்று வருகின்ற பல்வேறு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. இதற்கு முன்பு உங்களில் பலரை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மற்றும் விளையாட்டு அரங்கங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய வரும்போது நான் ஏற்கனவே சந்தித்திருக்கிறேன். ஆனால் இன்று அனைவரையும் ஒரே இடத்தில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

முதலில் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும், மாநில அளவிலும் மிகச் சிறப்பாக நடத்தி முடித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். முதலமைச்சர் கோப்பை போட்டி வருடந்தோறும் நடைபெறுகின்ற போட்டிதான். ஆனால் இந்த வருடம் மாநிலம் முழுவதும் அல்ல இந்தியா முழுவதும் இந்த முதலமைச்சர் கோப்பை போட்டி குறித்து பேசி வருகிறார்கள். எனவே உங்கள் அத்தனை பேருடைய ஒருங்கிணைப்பு, முயற்சியாலும் தான் முதலமைச்சர் கோப்பை போட்டி மிகப் பெரிய வெற்றியடைந்துள்ளது.

”ஆண்டிற்கு 100 பதக்கங்கள் வெல்வதை உறுதி செய்ய வேண்டும்”.. அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி  அறிவுறுத்தல்!

தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 3.25 இலட்சம் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இவ்வளவு வீரர், வீராங்கனைகளை நம்மால் கையாளக்கூடிய அளவிற்கு விளையாட்டு கட்டமைப்பு உள்ளது என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது.

அதேபோன்று, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், பெரும்பாலான மாவட்டங்களில் மாணவர்களுக்கென சிறப்பு விடுதிகள், விளையாட்டு அரங்கங்கள், மைதானங்கள் ஆகியவை உள்ளது. பல்வேறு விளையாட்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள 76 பயிற்றுநர்கள் அனைவரும் வெளிப்படையான முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும். சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மினி விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் 10 சட்டமன்றத் தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையினை ஏற்று பணிகள் தொடங்கப்படவுள்ளது.

அதேபோல். எளிய பின்னணியில் இருந்து வரும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்க அவர்களது பொருளாதார தேவைகளை நிறைவு செய்ய முதன்முறையாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு நிறுவனங்கள் இதுவரை பல கோடி ரூபாய்க்கும் மேல் நிதியுதவி அளித்துள்ளார்கள்.

”ஆண்டிற்கு 100 பதக்கங்கள் வெல்வதை உறுதி செய்ய வேண்டும்”.. அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி  அறிவுறுத்தல்!

நாமும் பல்வேறு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பயணச் செலவிற்காக தொடர்ந்து நிதியுதவி வழங்கி வருகின்றோம். அவர்களும் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார்கள். பன்னாட்டுப் போட்டிகளையும் தெளிவான திட்டமிடுதலோடு நடத்தக்கூடிய திறமை பெற்றவர்கள் என்பதை நிரூபித்து செஸ் ஒலிம்பியாட், ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப், சர்வதேச ஸ்குவாஷ், சர்வதேச அலை சறுக்கு போட்டி என பல்வேறு சர்வதேசப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம்.

அதைத் தொடர்ந்து வரும் வாரங்களில், HCL நிறுவனத்துடன் இணைந்து. சைக்ளத்தான் போட்டியினை நடத்த உள்ளோம். சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் உள்ளிட்ட பல சர்வதேசப் போட்டிகளையும் நடத்த உள்ளோம். குளோபல் ஸ்போர்ட் சிட்டி ஒலிம்பிக் அக்காடமி களையும் தொடங்க உள்ளோம்.

ஒடிசா மாநிலத்துடனும், சென்னை இராமச்சந்திரா பல்கலைக்கழகத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையினை வழங்கி வருகின்றோம். 2021ஆம் ஆண்டு முதல் இதுவரை 65 கோடி ரூபாய் வழங்கியுள்ளோம். அதேபோல் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசாணை பிறப்பித்ததன் அடிப்படையில் உயரிய ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

வருகிற ஜனவரி மாதம் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை நடத்த உள்ளோம். இதற்காக 36 மையங்கள் தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டை இந்திய ஒன்றியத்தின் விளையாட்டு தலைநகரமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு அரசுடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உழைத்து வருகின்றது.

ஆனால் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடுகள், உட்கட்டமைப்பு, மனித உழைப்பு இருந்தும் மாநில, தேசிய, சர்வதேச அளவிலான வீரர், வீராங்கனைகளை அதிக அளவில் உருவாக்கவில்லை என்பதை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். திறமையான வீரர், வீராங்கனைகளை உருவாக்குவது உங்கள் அனைவரின் கைகளில் தான் உள்ளது. நாம் திட்டங்களை தீட்டி அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து கட்டுமானங்களை மட்டுமே ஏற்படுத்தி தர முடியும். ஆனால் அதைப் பயன்படுத்திக் கொண்டு மிகச்சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்குவதை நீங்கள் தான் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இன்றைய சூழலில், விளையாட்டை வாழ்க்கையாக எடுத்துக் கொண்டு, ஒரு மாணவன், மாணவி வருவது என்பது மிகப்பெரிய சவால். எதிர்காலத்தில் சாதிக்க முடியுமா, நமக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமா, மாநில தேசிய அளவில் இடம் கிடைக்குமா என பல கேள்விகள் அவர்கள் முன் இருக்கும். இதனால், அவர்களது பெற்றோர் பிள்ளைகளை விளையாட்டுக்கு அனுப்புவதற்கு மிகவும் யோசிக்கிறார்கள்.

ஆனால் ஏழை எளிய நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள், தங்கள் பிள்ளைகளை நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளை நம்பி அனுப்புகிறார்கள். அதை முதலில் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நம்மை நம்பி சுமார் 2,500 குழந்தைகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். அவர்களுடைய நம்பிக்கைக்கு உகந்த வகையில் மிகச்சிறந்த உலகத்தரம் வாய்ந்த வீரர், வீராங்கனைகளாக உருவாக்குவது நம்முடைய துறையின் கடமையாகும்.

விளையாட்டை மேம்படுத்திட மாநில மற்றும் ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களை அதிகாரிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். திட்டங்களின் பயன்கள் குறித்தும் தெரிந்து வைத்திருந்தால் தான் அதன் பலன்களை வீரர்கள் பெற்றுக் கொள்ள முடியும். நம்முடைய விடுதி மாணவ, மாணவியர்கள் மட்டுமின்றி பள்ளிகளில் இருந்து திறமையானவர்களை கண்டறிந்து அரசின் விளையாட்டுத் திட்டங்கள் குறித்து தெரியப்படுத்தி பயிற்சி அளிக்க வேண்டும். ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்படக்கூடிய தொகை முறையாக அவர்களுக்காக செலவிடப்பட வேண்டும்.

”ஆண்டிற்கு 100 பதக்கங்கள் வெல்வதை உறுதி செய்ய வேண்டும்”.. அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி  அறிவுறுத்தல்!

மேலும், விளையாட்டு விடுதிகளில் காணப்படும் காலியிடங்களை நிரப்பிட முயற்சி செய்திட வேண்டும். தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வீரர், வீராங்கனைகளின் தேர்வுகள் நேர்மையான முறையில் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும். வீரர், வீராங்கனைகளின் பாதுகாப்பு என்பது மிக மிக அவசியம். அதில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளக் கூடாது.

2021ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற போட்டிகளில் நமது வீரர்கள் குறைவான அளவில் தான் பதக்கங்களை வென்றுள்ளனர். இனிவருங்காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் தேசிய அளவில் பதக்கங்கள் வெல்வதை இலக்காகக் கொண்டு விளையாட்டுத்துறை அலுவலர்கள் செயல்பட வேண்டும். ஒவ்வொரு பயிற்சியாளரும் குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ஒரு தேசிய பதக்கத்தையாவது பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும்.

மாவட்டங்களில் இருந்து வந்திருக்கக்கூடிய விளையாட்டு அலுவலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியோர்களின் கோரிக்கைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். நாட்டு நலப் பணித்திட்டத்திற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

இனிவருங்காலங்களில் இது போன்ற ஆய்வுக் கூட்டங்கள் மாதத்திற்கு ஒருமுறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் அவர்கள் தலைமையிலும், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையிலும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை எனது தலைமையிலும் நடைபெறும். அனைத்து விளையாட்டுத் துறை அலுவலர்களும் சிறப்பாக பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

banner

Related Stories

Related Stories