பஞ்சாப் மாநிலத்தில் 27வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு - ஹரியானா அணிகள் விளையாடின. தொடரின் தொடக்கத்தில் இருந்தே அபாரமாக விளையாடிய தமிழ்நாடு அணி அமிர்தசரஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியிலும் அசத்தியது.
இரு அணிகளும் முதல் பாதியில் கோல் ஏதும் அடிக்கவில்லை என்றாலும், 2வது பாதி ஆட்டத்தில் முனைப்பு காட்டினர். 56வது நிமிடத்தில் ப்ரியதர்ஷினி முதல் கோல் அடித்து அசத்தினார்.
ஆட்ட நேர முடிவுயும் கட்டத்தில் 83வது நிமிடத்தில் நட்சத்திர வீராங்கனை இந்துமதி இரண்டாவது கோல் அடித்து தமிழ்நாடு அணியின் வெற்றியை உறுதிசெய்தார். பின்னர் போட்டியின் கூடுதல் நேரத்திலும் ஹரியானா வீராங்கனைகள் கோல் பதிவு செய்யவில்லை. முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் ஹரியானாவை வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
2018 ஆம் ஆண்டு மணிப்பூரை வீழ்த்திய வரலாற்றுடன் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு, 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மகுடத்தை அலங்கரித்து அசத்தியுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டு அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழ்நாடு அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "27வது சீனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் தமிழக மகளிர் அணி சிறப்பான வெற்றியைப் பெற்றதற்கு பாராட்டுக்கள். உங்களின் அர்ப்பனிப்பு, திறமை எங்களை பெருமைப்படுத்தியுள்ளது. இன்னும் பல வெற்றிகளை பெற்று நம் மாநிலத்திற்கு நீங்கள் பெருமை சேர்க்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.
அதேபோல் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் "தேசிய சீனியர் மகளிர் கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழ்நாடு மகளிர் கால்பந்தாட்ட அணிக்கு என்னுடைய வாழ்த்துகள். பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 2 - 1 என்ற கோல் கணக்கில் ஹரியானாவை வீழ்த்தி தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித்தந்துள்ள ப்ரியதர்ஷினி, இந்துமதி உட்பட அத்தனை வீராங்கனையரையும் பாராட்டுகிறேன். இன்னும் பல சாதனைகளை புரியட்டும். கழக அரசு அவர்களுக்கு துணை நிற்கும்" என தெரிவித்துள்ளார்.