நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க படுதோல்வி அடைந்தாலும், அதை மூடி மறைத்து குஜராத் வெற்றியை பெரிதுபடுத்தி காட்டப்படுகிறது.
பிரதமர் மோடி பா.ஜ.க அல்லாத மாநிலங்களில் ஆளுநரை பயன்படுத்தி போட்டி அரசாங்கம் நடத்தி வருவதாகவும், ஆளுநர் ரவி மதச்சார்பின்மைக்கு எதிராகவும், இந்திய அரசியலமைப்புக்கு எதிராகவும் பேசி வருகிறார்.
மேலும் ஆன்லைன் சூதாட்டத்தால் மாணவர்கள், அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவிற்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்காமல் ஆன்லைன் சூதாட்ட அதிபர்களை அழைத்து கூட்டம் நடத்தி இருப்பது புரியாத புதிராக உள்ளது என்றார்.
மேலும் யாரை வேண்டாம் என மக்கள் நினைக்கிறார்களோ அவர்களை அழைத்து கூட்டம் நடத்தி இருப்பது பெற வேண்டியதை பெற முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா? அல்லது கொடுக்க வேண்டியதை கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா? என கேள்வி எழுப்பினார்.