இந்திய தொல்லியல் துறையில் பழங்கால சிலைகளை பதிவு செய்திருக்கக்கூடிய நபர்களின் விவரங்களைச் சேகரித்த போது, சென்னை ஆர்.ஏ. புரம் முகவரியை கொண்ட ஷோபா துரைராஜன் என்பவர் பழங்கால சிலைகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலிஸார் ஆர்.ஏ.புரம் 7வது பிரதான சாலையில் உள்ள ஷோபா துரைராஜன் என்பவரின் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அஸ்திர தேவர், அம்மன், வீர பத்ரா, மகாதேவி ஆகிய 7 பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் 7 சிலைகளை மீட்டனர்.
பின்னர் ஷோபாவிடம் விசாரணை நடத்தியதில், "பொழுது போக்கிற்காக கலைப்பொருட்களை சேகரிப்பதாகவும், 2005 மற்றும் 2008 ஆம் ஆண்டு பிரபல மறைந்த சிலை கடத்தல் மன்னன் தீன தயாளனின் அபர்ணா ஆர்ட் கேலரியில் சிலைகளை வாங்கியதாக: கூறியுள்ளார்.
மேலும், இவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட நிற்கும் விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி ஆகிய சிலைகளின் கீழ் உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ கோயில் என பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்ட போலிஸார் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆதிகேசவ கோவிலுக்கு சென்று விசாரித்தனர்.
அப்போது, 2011ஆம் ஆண்டு மர்ம நபர்கள் சிலர் கோவிலுக்கு புகுந்து ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சிலைகளைத் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் கோவிலிலிருந்து திருடப்பட்ட சிலைகள் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த சிலைகள் எனவும் சர்வதேச சந்தையில் 5 கோடி ரூபாய்க்கு மேல் இந்த சிலைகளின் மதிப்பு இருக்கும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மீதமுள்ள நான்கு சிலைகள் எந்த கோவிலுக்கு சொந்தமானவை என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.