தமிழ்நாடு

“பொதுமக்களுக்கு என்ன தெரிவிக்க விரும்புகிறீர்கள்?” : முதல்வர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

“மாண்டஸ்” புயல் சின்னம் காரணமாக  சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களிடம் கள நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

“பொதுமக்களுக்கு என்ன தெரிவிக்க விரும்புகிறீர்கள்?” : முதல்வர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
news
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (9.12.2022) சென்னை, எழிலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மாண்டஸ் புயல் சின்னம் காரணமாக கனமழை பெய்து வருவதையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக கள நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், விழுப்புரத்தில் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முகாம்களில் செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

நேற்று (8.12.2022) தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த “மாண்டஸ்” புயலானது தற்போது தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 210 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது என்றும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மாமல்லபுரம் அருகே இன்று (9.12.2022) நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக 9-12-2022 முதல் கடலோரப் பகுதிகளில் கன, மிக கனமழை மற்றும் அதி கனமழை பெய்யும் என்றும், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், தரைக்காற்றும் வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து “மாண்டஸ்” புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Ø  தலைமைச் செயலாளர் அவர்கள் 8-12-2022 அன்று பல்வேறு துறை அலுவர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

Ø  பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் அவர்களால் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

Ø  மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன.

Ø  பொதுவான எச்சரிக்கை நடைமுறை (Common Alert Protocol) மூலம் குறுஞ்செய்திகள் வாயிலாக 58.47 லட்சம் நபர்களது செல்பேசிகளுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

Ø  புயல், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் TNSMART செயலி மூலமாகவும், Twitter, Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ø  கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 424 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு புயல்  குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Ø  தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 476 வீரர்கள் அடங்கிய 14 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

Ø  இதில் பாதிப்பிற்குள்ளாகும் என கருதப்படும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 121 வீரர்கள் கொண்ட 3 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

Ø  கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Ø  சென்னையில் 169 நிவாரண மையங்களும், தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 882 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Ø  121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன.

Ø  தற்போது 29 நிவாரண மையங்களில் 648 குடும்பங்களை சார்ந்த 2204 நபர்கள் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. 

அதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (9-12-2022) மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு கள நிலவரத்தை கேட்டறிந்து புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு விழிப்புடன் தயார்நிலையில் இருப்பதற்கு அறிவுரை வழங்கினார்கள்.

மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க மாவட்ட நிருவாகம் அறிவுறுத்தும் போது, அதனை ஏற்று புயலின் தாக்கம் வரும் வரை காத்திராமல் நிவாரண முகாம்களில் முன்கூட்டியே தங்குமாறும், அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதை தவிர்க்குமாறும், பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

மேலும், புயல் தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் அறிவுரைகளை வழங்கினார்.

Ø  பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பல் துறை மண்டலக் குழுக்கள் அமைக்க வேண்டும்,

Ø  பலத்த காற்று காரணமாக விழும் மரங்களை உடனடியாக அகற்ற மர அறுப்பான்கள் மற்றும் இதர உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைக்கவும், போதுமான அளவு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும்.

Ø  பாதிப்பிற்குள்ளாகக்கூடிய இடங்களில் முன்கூட்டியே தேவையான படகுகள், உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும்.

Ø  மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Ø  அனைத்து துறை அலுவலர்களும் தலைமை இடத்தில் இருக்க வேண்டும்.

Ø  மின் கம்பங்கள், மின் கடத்திகள் ஆகியவற்றின் இருப்பு வைத்திருப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகும் மின் இணைப்புகளை சீரமைக்க குழுக்கள் அமைக்க வேண்டும்.

Ø  மணல் மூட்டைகள், கம்பங்கள், அவசரகாலத்தில் தேவையான மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும்.

Ø  பாதிப்பிற்குள்ளாகும் / தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

Ø  நிவாரண முகாம்களை தயாராக வைத்திருப்பதோடு, குடிநீர், கழிவறை வசதிகள் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்,

Ø  தங்குதடையின்றி குடிநீர் வழங்குவதற்கு போதுமான ஜெனரேட்டர்கள் வைத்திருக்க வேண்டும்.

Ø  பேரிடர் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களுக்கும், நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் சீரான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

Ø  பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Ø  நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்களுக்கும், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் உணவு அளிக்கும் வகையில் சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

Ø  அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உபரி நீர் வெளியேற்றும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும்.

Ø  நெடுஞ்சாலை, நீர் வள ஆதாரத்துறை, மின் வாரியம், தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட துறைகள் களப்பணியாற்ற தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார்.

பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு :- “முதலமைச்சர் : மக்களின் பாதுகாப்பிற்காக எல்லாவித நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறேன். அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மானிட்டரிங் ஆபிசர் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களும் அந்தந்த பகுதிகளுக்கு சென்று கவனித்து, என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே எவ்வளவு மழை வந்தாலும் எவ்வளவு காற்றடித்தாலும் அதை சமாளிப்பதற்கும், அதிலிருந்து மக்களை காப்பதற்கும் இந்த அரசு உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

 கேள்வி: மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் பேசினீர்களே, நிலைமை எப்படி இருக்கிறது என்று தெரிவித்தார்கள்? 

முதலமைச்சர் அவர்களின் பதில் : சில முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள், சில முகாம்களில் தங்க வைக்கப்பட வேண்டிய சூழ்நிலை வரவில்லை. மக்களுக்கு உரிய வகையில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது, மக்களும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்.

 கேள்வி: பொதுமக்களுக்கு என்ன தெரிவிக்க விரும்புகிறீர்கள்?

முதலமைச்சர் அவர்களின் பதில்: பொதுமக்கள் அரசு மூலமாக எடுக்கப்படும் எல்லா நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு தந்தால், சூழ்நிலையை வெற்றிகரமாக கையாளலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

    banner

    Related Stories

    Related Stories