தமிழ்நாடு

“ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதே இலக்கு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

திராவிட மாடல் ஆட்சியில் இளைஞர்களின் தகுதிக்கும் திறமைக்குமான பணி நிச்சயம் கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதே இலக்கு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு சென்னை ராயப்பேட்டையிலுள்ள நியூ கல்லூரியில் நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஒரு லட்சமாவது பணி நியமன ஆணையினை வழங்கினார். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது வருமாறு:-

உங்களது தகுதிக்கும் திறமைக்குமான பணி நிச்சயம் கிடைக்கும் என்ற வாழ்த்துகளை நான் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முகாம் எனக்கு முழுமனநிறைவை அளிக்கக் கூடிய முகாமாக இருக்கிறது.

வேலை வாய்ப்பு முகாமை தொடக்கி வைப்பதற்காக மட்டுமே என்னை அழைக்காமல் - ஒரு லட்சமாவது பணி நியமன ஆணையை வழங்குவதற்காக அமைச்சர் சி.வி.கணேசன் என்னை அழைத்துள்ளார். இதை விட ஒரு அரசாங்கத்துக்கு - முதலமைச்சரான எனக்கு மகிழ்ச்சியான செய்தி என்ன இருக்க முடியும்? இன்றைக்கு மிகப் பெரிய பிரச்னையாக இருப்பது வேலையின்மை தான்.

“ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதே இலக்கு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

அதுவும் கடந்த இரண்டு ஆண்டு கொரோனா காலம் என்பது புதிய வேலை வாய்ப்புக்குக்கு சவாலான காலமாக அமைந்திருந்தது. அத்தகைய நெருக்கடியான காலக்கட்டத்தில் திமுக ஆட்சி அமைந்தது.

கொரோனாவையே காரணமாக வைத்து வேலையின்மை பிரச்னையை கண்டும் காணாமல் திமுக அரசு விட்டுவிடவில்லை. ஒரு லட்சம் பேருக்கு இந்த ஓராண்டு காலத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளோம்.இந்த அரசின் மகத்தான சாதனைகளில் ஒன்றாக இந்த விழா நடந்து கொண்டு இருக்கிறது.

இதற்குக் காரணமான அமைச்சர் கணேசன் அவர்களை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். ஒரு லட்சம் குடும்பங்களில் ஒளியேற்ற நீங்கள் காரணமாக அமைந்திருக்கிறீர்கள். தொழிலாளர் துறை அமைச்சராக மட்டுமல்ல தொழிலாளர் தோழனாகவே அமைச்சர் கணேசன் செயல்பட்டு வருகிறார்

திமுக ஆட்சி காலத்தில் 6 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 25 க்கும் மேற்பட்ட தொழில்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தினை நிர்ணயித்து அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது. 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.புதிதாக 12 ஐடிஐ நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த 15 மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் பெரிய அளவில் 65 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறிய அளவில் 817 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

மொத்தமாகச் சொல்வதாக இருந்தால் 882 முகாம்களை இதுவரை நடத்தி இருக்கும் இத்துறையின் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். இந்த முகாம்களில் இதுவரை 15 ஆயிரத்து 691 நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன. இதுவரை நடந்த முகாம்களில் 99 ஆயிரத்து 989 பேர் பல்வேறு வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை அறிவிக்கிறேன்.

ஒரு லட்சம் என்பது முடிவல்ல, இதனை தொடக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதை இலக்காக வைத்துச் செயல்படுங்கள். ஒரு இளைஞருக்கு வேலை கிடைப்பதன் மூலமாக ஒரு குடும்பம் முன்னேறுகிறது. அது மட்டுமல்ல, அவரது தலைமுறையே முன்னேற்றப் பாதைக்குச் செல்கிறது.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories