
புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் அமைச்சர் சீவ.வீ மெய்யநாதன் வழங்கினார். இதன் பின்னர் அமைச்சர் சீவ.வீ.மெய்யநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்: 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரை தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு உலக மகளிர் டென்னிஸ் போட்டி சென்னை ஓபன் w250 யானது செப்டம்பர் 12 முதல் நேற்று வரை நடைபெற்ற முடிந்துள்ளது. இதில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பரிசுகளை வழங்கி சிறப்பித்துள்ளார்.
எதிர்காலத்தில் சர்வதேச தரத்திலான போட்டிகளை நடத்துவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஜல்லிக்கட்டு மைதானம் இதுவரை உலகத்தில் இல்லாத வகையில் மிகப் பிரமாண்டமான முறையில் மதுரையில் அமையப்பட உள்ளது. அடுத்த கட்டமாக ஜல்லிக்கட்டு போட்டிகளை விளையாட்டாக மாற்றுவதற்கு சட்ட விதிகளை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதற்கான நடவடிக்கைகள் முழு வடிவம் பெற்ற பிறகு தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டாக மாற்றுவதற்கு நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும்.
விளையாட்டு துறையை தமிழக முதலமைச்சர் நேரடி பார்வையில் கையாண்டு வருகிறார். தேவைக்கேற்ப எந்தெந்த சூழ்நிலையில் எதற்கு நிதி ஒதுக்க வேண்டுமோ சிறப்பு நிதிகளை ஒதுக்கி விளையாட்டு துறையை மேம்படுத்தி வருகிறார். 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் வெற்றிக்கு பிறகு உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்தியாவில் விளையாட்டு தலைநகரமாக சென்னையை மாற்றுவதற்காக தேவைக்கேற்ப நிதி ஒதுக்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஈடுபட்டுள்ளார்." எனத் தெரிவித்துள்ளார்.








