தமிழ்நாடு

கைவிட்ட உறவினர்கள்.. அதிகாலையில் தாயின் சடலத்தை 3 கி.மீ வீல் சேரில் தள்ளி சென்ற மகன்.. திருச்சியில் சோகம்

உறவினர்கள் யாரும் வரவில்லை என்பதால் தனது தாயின் சடலத்தை 3 கி.மீ வரை வீல் சேரில் தள்ளி சென்று இறுதி சடங்கு செய்த மகனின் செயல் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கைவிட்ட உறவினர்கள்.. அதிகாலையில் தாயின் சடலத்தை 3 கி.மீ வீல் சேரில் தள்ளி சென்ற மகன்.. திருச்சியில் சோகம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திருச்சி மாவட்டம் மணப்பாறை சேர்ந்தவர்கள் பெரியசாமி (80) - ராஜேஸ்வரி (74) தம்பதியினர். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ள நிலையில், வயதான காலத்தில் இவர்களை கடைசி மகனான முருகானந்தம் என்பவர் கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தாய் ராஜேஸ்வரிக்கு பக்கவாதம் ஏற்பட்டு படுத்த படுக்கையில் கிடந்துள்ளார். நாளாக நாளாக அவரது உடலில் ஒரு அலர்ஜியால் அரிப்பு ஏற்பட்டு அவரது உடல் முழுவதும் புண்ணாக மாறியிருக்கிறது.

கைவிட்ட உறவினர்கள்.. அதிகாலையில் தாயின் சடலத்தை 3 கி.மீ வீல் சேரில் தள்ளி சென்ற மகன்.. திருச்சியில் சோகம்

இப்படி தாயும் தந்தையும் உடல் நிலை மோசமாகி படுத்த படுக்கையில் இருந்ததால், முருகானந்தத்தின் மனைவி அவர்களை கவனிக்க முடியாது என்று கூறி அவரை விட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் முழு நேரமும் பெற்றோர்களை கவனிக்க வேண்டிய நிர்பந்தத்தில் முருகானந்தம் தள்ளப்பட்டதால் தான் செய்து கொண்டிருந்த எலெக்ட்ரீஷியன் வேலையையும் விட்டுவிட்டார்.

மேலும் உடல்நிலை சரியில்லாத தாயை தொற்று ஏற்பட்டு விடும் என்பதால் உறவினர்கள் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை. இதனால் மிகுந்த வேதனையில் இருந்துள்ளார் முருகானந்தம்.

கைவிட்ட உறவினர்கள்.. அதிகாலையில் தாயின் சடலத்தை 3 கி.மீ வீல் சேரில் தள்ளி சென்ற மகன்.. திருச்சியில் சோகம்

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் வழக்கம்போல் விழித்த முருகானந்தம் தூங்கிக்கொண்டிருந்த தனது பெற்றோரை சென்று பார்த்துள்ளார். அப்போது அவரது தாய்க்கு மூச்சில்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மகன் செய்வதறியாது திகைத்தபோது உறவினர் சிலரை அழைத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் யாரும் வரவில்லை என்பதால் தானே உடலை நல்லடக்கம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

அதன்படி தாயின் உடல் முழுக்க துணியால் சுற்றி, அவர் பயன்படுத்தி வந்த வீல் சேரில் அவரை அமரவைத்துள்ளார். அப்போது சடலம் கீழே சரியாமல் இருக்க முதுகுப் பக்கம் தலையணை வைத்தும், தலை கீழே விழாமல் இருக்க தகடு போன்ற பிளேட் ஒன்றையும் வைத்து சேலையால் சடலத்தை இறுகக் கட்டியுள்ளார்.

கைவிட்ட உறவினர்கள்.. அதிகாலையில் தாயின் சடலத்தை 3 கி.மீ வீல் சேரில் தள்ளி சென்ற மகன்.. திருச்சியில் சோகம்

பின்னர் அதிகாலையிலேயே அவரது வீட்டிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவிலுள்ள நகராட்சி மயானத்திற்கு வீல் சேரில் தாயின் சடலத்தை வைத்து தள்ளியபடியே மணப்பாறை நகராட்சியின் எரிவாயு தகன மேடை அமைந்துள்ள செவலூர் பிரிவு சாலைக்கு எடுத்து சென்றுள்ளார். மயானத்தின் வாசலில் வீல் செருடன் நிற்பதை கண்டதும் எரிவாயு தகன மேடை பராமரிப்பாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து சடலத்தை வீல் சேரில் எடுத்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர், இது குறித்து கேட்டுள்ளார். அப்போது அவர், "ஆம்புலன்ஸ் மூலமாக சடலத்தை மயானத்துக்கு கொண்டு வந்தா நிறைய செலவாகும்னு நெனச்சேன். அதனாலதான் விடியறதுக்குள்ள நாமளே யார்கிட்டயும் சொல்லாம, யாருக்கும் தெரியாம அம்மாவை அடக்கம் செஞ்சுடணும்னு நினைச்சேன். எங்க அம்மா செத்ததும் எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை" என்று கண்ணீருடன் பரிதாபமாக கூறியுள்ளார்.

கைவிட்ட உறவினர்கள்.. அதிகாலையில் தாயின் சடலத்தை 3 கி.மீ வீல் சேரில் தள்ளி சென்ற மகன்.. திருச்சியில் சோகம்

இதையடுத்து தாய் ராஜேஸ்வரிக்கு மகன் முருகானந்தம் முறைப்படி இறுதி சடங்குகள் செய்து தகனம் செய்தார். தாயின் சடலத்தை யார் உதவியுமின்றி 3 கி.மீ வரை வீல் சேரில் தள்ளி கொண்டு வந்த மகனின் செயல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories