தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பின்தங்கிய தொகுதி என்று எதுவும் இருக்கவே கூடாது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

ஒவ்வொரு தனிமனிதரின் வீட்டின் கதவையும் தட்டி அவர்களுக்கு நன்மை செய்யும் அரசாக நம்முடைய தமிழ்நாடு அரசு இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பின்தங்கிய தொகுதி என்று எதுவும் இருக்கவே கூடாது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (08.09.2022) திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை:

சபாநாயகராக, அவையில் சட்டமன்ற உறுப்பினர்களை போதும், போதும் என்று சொல்லி, சட்டமன்ற உறுப்பினர்களை உட்கார வைப்பார். ஆனால், அப்படிப்பட்ட சபாநாயகரை யாரும் உட்கார வைக்க முடியாது. அதனால்தான், நேற்றைய தினம், அவரை நன்றாக பேசுங்கள், சுருக்கமாக பேசுங்கள் என்று சொன்னேன். ஆனால், அதை அவரே குறிப்பிட்டுக் காட்டி, நன்றாகப் பேசினார். ஆனால், சுருக்கமாக பேசவில்லை. இருந்தாலும், அவர் ஆற்றிய உரை, அவர் எடுத்துச் சொன்னக் கருத்துக்கள், நம்முடைய கழகம் ஆட்சிக்கு வந்து செய்திருக்கக்கூடிய சாதனைகள், மக்களுக்குப் போய் சேரவேண்டும் என்கின்ற அந்த உணர்வோடு, அழகோடு, தெளிவோடு, விளக்கமாக அவர் எடுத்து வைத்திருக்கிறார். அதற்காக நான் அவருக்கும், அதைப்போல, அவருக்கு முன்பு உரையாற்றியிருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

வீரத்தின் விளைநிலமாக இருக்கக்கூடிய இந்த திருநெல்வேலிச் சீமையில் நடைபெறக்கூடிய இந்த அரசு விழாவில் கலந்து கொண்டு உங்களை எல்லாம் சந்திக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்.

தமிழ்நாட்டில் பின்தங்கிய தொகுதி என்று எதுவும் இருக்கவே கூடாது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று திருஞான சம்பந்தரும், தண்பொருநைப் புனல் நாடு எனச் சேக்கிழாரும், பொன் திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி என்று கவிச்சக்கரவர்த்தி கம்பராலும் பாடப்பட்ட ஊர் இந்த நெல்லை.

பாண்டிய நாட்டின் தலைநகரமாகவும் சில காலம் செயல்பட்ட ஊர் இந்த நெல்லை.

வீரமா?

நெல்கட்டாஞ்செவல் பூலித்தேவன், ஒண்டி வீரன், அழகுமுத்துக்கோன்!

இலக்கியமா?

சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் பிறந்த ஊர். சாகித்ய அகாடமி விருது வாங்கிய பத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் சொந்த ஊர் இந்த ஊர்.

ஆன்மிகமா?

நெல்லையப்ப சுவாமி கோயில் வானுயர எழுந்து நிற்கிறது.

கல்வியா?

இங்கு இல்லாத கல்வி நிறுவனங்கள் இல்லை என்பது மட்டுமல்ல, தமிழகத்தில் அதிகமான இந்த கல்வி நிறுவனங்கள் முதன்முதலாக உருவானது நெல்லைச் சீமையில்தான். ‘தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு’ என்று அழைக்கப்படக்கூடிய பாளையங்கோட்டை இருக்கக்கூடிய நகரம் இது. நெல்லையப்பர் கோவில் குடமுழுக்கு 1944-ஆம் ஆண்டு நடந்தது. அதன் பிறகு, 1974-ஆம் ஆண்டு கழக ஆட்சியில் தான் குடமுழுக்கு நடத்தப்பட்டது. திருப்பணிக் குழுத் தலைவராக இருந்த திருமுருக கிருபானந்தா வாரியார் அவர்களை நியமித்து, குடமுழக்கை சிறப்பாக நடத்திக் காட்டியவர் அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்து நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். 1973-ஆம் ஆண்டு நெல்லைச் சீமையில் ஈரடுக்குப் பாலத்தை அமைத்து தந்தவர், அந்த ஈரடுக்குப் பாலத்திற்கு திருவள்ளுவர் பெயரை சூட்டி மகிழ்ந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். இத்தகைய சிறப்புமிக்க வரலாற்றைப் பெற்றிருக்கக்கூடிய இந்த மாநகரத்தில் இந்த அரசு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருக்கக்கூடிய மாண்புமிகு ராஜகண்ணப்பன் அவர்கள் இந்த விழாவை மிகுந்த எழுச்சியோடு, ஏற்றத்தோடு, சிறப்போடு ஏற்பாடு செய்திருக்கிறார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையின் அமைச்சராகவும், இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராகவும், இரட்டைக் குதிரை வேகத்தில் அவர் செயல்பட்டிருக்கிறார். அவரது மாவட்டம் ராமநாதபுரமாக இருந்தாலும், இந்த நெல்லையைத் தொல்லையாக நினைக்காமல் தனது எல்லையாக வைத்துச் செயல்பட்டிருக்கிறார். அவரையும், அதேபோல, இந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் திரு.விஷ்ணு, இ.ஆ.ப., அவர்களையும், நெல்லை மாநகரத்தினடைய மேயர் சரவணன் அவர்களையும், மாவட்ட நிர்வாகத்தையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் நான் அரசின் சார்பில் மனதார வாழ்த்துகிறேன் அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஓராண்டு காலத்தில், திருநெல்வேலி மாவட்டத்துக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் செய்திருக்கக்கூடிய நலத்திட்டங்கள் அதனால் மக்கள் அடைந்திருக்கக்கூடிய பயன்கள் என்பவை மிகமிக அதிகம்.

இன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ், 1,113 பேர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுப் பயனடைந்துள்ளார்கள்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ், இதுவரை 25 தரிசுநிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டு விளைநிலங்களாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கூட்டுறவுத் துறையின் சார்பில், 9 ஆயிரத்து 389 விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பின்தங்கிய தொகுதி என்று எதுவும் இருக்கவே கூடாது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

28 ஆயிரத்து 129 பயனாளிகளுக்கு, நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ், இதுவரை, 20 இலட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுப் பயனடைந்திருக்கிறார்கள்.

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின்கீழ், 54 ஆயிரத்து 917 மாணவ மாணவியர் பயனடைந்திருக்கிறார்கள்.

மகளிருக்கான இலவசப் பயண திட்டத்தின்கீழ், இதுவரை, 6 கோடியே 92 இலட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து பயனடைந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஒரு லட்சம் உழவர்களுக்கு புதிதாக இலவச மின் இணைப்பு தரப்பட்டுள்ளது என்றால், அதில் இந்த நெல்லை மாவட்டத்தில் 3,421 பேர் பயனடைந்திருக்கிறார்கள்.

இந்த வரிசையில் இன்றைய தினம் மேலும் பல்வேறு சாதனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ரூபாய் 156 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டிலான 727 பணிகளுக்கு இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

ரூபாய் 74 கோடியே 24 லட்சம் மதிப்பிலான 29 முடிவுற்ற திட்டப்பணிகள் மக்களுடைய பயன்பாட்டிற்காக இன்று இந்த மேடையிலே, இந்த விழாவிலே துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

30 ஆயிரத்து 658 பயனாளிகளுக்கு ரூபாய் 117 கோடியே 78 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் இந்த மேடையிலே வழங்கப்பட இருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று சொன்னாலும், பல்வேறு திட்டப்பணிகளைச் சொல்லலாம்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வற்றாத ஜீவநதியாக ஓடிக் கொண்டிருப்பது தண்பொருநை எனப்படக்கூடிய தாமிரபணி!

பொருநை நாகரிகம் தோன்றிய இடம் இது. ஆதிச்சநல்லூர், சிவகளை உள்பட தாமிரபரணி ஆற்றங்கரையில் நடக்கும் அகழாய்வில் கிடைக்கும் பொருட்களைக் காட்சிப்படுத்தி பொருநை நாகரிகத்தின் பெருமையைக் கூறும் வகையில் 15 கோடி ரூபாய் மதிப்பில் பொருநை அருங்காட்சியகம் நெல்லையில் அமைகிறது.

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய கனவுத் திட்டம்தான் தாமிரபரணி – நம்பியாறு – கருமேனியாறு நதிநீர் இணைப்புத் திட்டம்! நம்முடைய சபாநாயகர் அப்பாவு அவர்கள் அதைத் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

2009-ம் ஆண்டு, நான் துணை மேயராக இருந்தபோது, நம்முடைய முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள், அந்தத் திட்டத்திற்கு முதற்கட்டமாக, 369 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். ஆனால், அதற்கு பிறகு வந்த ஆட்சியில், கடந்த காலத்தில் 10 ஆண்டுகளில் எந்தப் பணியும் நடைபெறவில்லை, அது கிடப்பில் போடப்பட்டது.

மீண்டும் இப்பொழுது நம்முடைய கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், அந்தத் திட்டத்தை விரைந்து முடிக்க நான் உத்தரவிட்டிருக்கிறேன். அதைத் தான் இங்கே குறிப்பிட்டார். ஆகவே, அந்தப் பணிகள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கூடிய நிலையில், நான் உறுதியோடு சொல்கிறேன். மக்களுடைய பயன்பாட்டிற்கு 2023-த்திற்குள் அது முடிக்கப்பட்டு மக்களுடைய பயன்பாட்டிற்கு வரப்போகிறது.

இந்தத் திட்டம் நிறைவேறும் நிலையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வறட்சியான பகுதியான இருக்கக்கூடிய 20,340 ஹெக்டேர் வேளாண் நிலம் பயன்பெறுவதுடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களும் இதனால் பயன் பெறப்போகிறது.

நெல்லை என்றால் நினைவுக்கு வருவது கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரும், மகாகவி பாரதியாரும்தான். அவர்கள் பயின்ற பள்ளியான நெல்லை சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் அலங்கார வளைவு, கலையரங்கம், அவர்கள் படித்த வகுப்பறையை மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை வருங்காலத் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் ஒலி-ஒளி காட்சி அமைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பின்தங்கிய தொகுதி என்று எதுவும் இருக்கவே கூடாது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

இதற்காக 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுப் பணிகள் தொடங்கி உள்ளது.

பாண்டிய மன்னர்கள், பாளையக்காரர்களின் கோட்டையாக இருந்து, தற்போது மேடை காவல் நிலையமாக உள்ள கட்டடம், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு மக்களுடைய பார்வைக்கு இங்கே அர்ப்பணிக்கப்படுகிறது.

முத்தமிழறிஞர் கலைஞரால் கொண்டுவரப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் மணிமண்டபத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நூலகம் கட்டப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் – பாபநாசம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கக்கூடிய காணிப் பழங்குடி இன மக்களின் நீண்டநாள் கனவான பட்டா கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தனிநபர் உரிமைப் பட்டா 78 பேருக்கு வழங்கப்படுகிறது.

காணி இன மக்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில், தேன், தோட்டப்பயிர்கள், கிழங்கு வகைகள் ஆகியவற்றை மதிப்பு கூட்டிச் சந்தைப்படுத்தும் வகையில், அவர்களுக்கு அங்ககச் சான்று வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு கிடைக்கும் வகையில் விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்காகவும், தமிழகம், இந்தியாவிலே முதன்மை மாநிலமாக விளங்கவும் நகர்ப்புற மாவட்டங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறப் பகுதிகளிலும், தொழில்முனைவோர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (TANSIM) மூலம் மதுரை, திருநெல்வேலி, மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில், வட்டாரப் புத்தொழில் மையங்கள் அமைக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்ததுள்ளது.

நெல்லை பாளையங்கோட்டை மாவட்ட கிளப்பில், புத்தொழில் மற்றும் புத்தாக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டப் புத்தாக்க மையத்தின் கீழ், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் மையமாக இது செயல்படும். அதேபோல, கல்லூரிகளுக்குச் சென்று வேலைவாய்ப்பு, தொழில் உருவாக்கம், மற்றும் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும்.

காடுகளை வளமாக வைத்திருக்க யானைகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. நெல்லை மாவட்டம் அகத்தியர்மலை யானைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இம்மாவட்டத்திலுள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு ராம்சர் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது!

கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் இப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சூரிய மின்கலன் உற்பத்தி ஆலை அமைக்கப்படவுள்ளது.

இன்று கூட காலையில், தினமணி பத்திரிகையில், பல்வேறு செய்திகளை நான் பார்த்தேன். நீங்களும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்த மாவட்டத்திற்கு என்னென்ன தேவைப்படுகிறது என்பதை எடுத்து வெளியிட்டிருந்தார்கள். மிக்க மகிழ்ச்சி! அது குறித்து நான் அதிகாரிகளோடு உடனடியாக கலந்து ஆலோசனை செய்தேன். எனவே, அது குறித்து ஒரு அறிவிப்பை இந்த மேடையில் மகிழ்ச்சியோடு அறிவிக்க விரும்புகிறேன்.

முதலாவதாக, திருநெல்வேலி மாவட்டத்தில், இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையிலும், மக்களிடையே சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், மணிமுத்தாறு அணை அருகே ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா (Biodiversity Eco Park) ஒன்று அமைக்கப்படும்.

இரண்டாவது, வாழை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, களைக் காட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வாழை ஏல மையம் ஒன்று அமைக்கப்படும்.

அடுத்து, திருநெல்வேலி மாவட்டத்தின் கடற்கரையோரப் பகுதிகளில், விளையாட்டு வீரர்கள் அதிக எண்ணிக்கையிலும், மிகுந்த ஆர்வத்துடனும் உள்ளனர். இவர்களை ஊக்குவித்து, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் அதில் பங்கெடுக்கச் செய்யும் வகையில் இராதாபுரத்தில் விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் ஒன்று அமைக்கப்படும்.

நிறைவாக, நெல்லை மக்களுடைய மற்றொரு நீண்டகாலக் கோரிக்கையான திருநெல்வேலி மாநகர மேற்கு புறவழிச் சாலை அமைப்பதற்கான நில எடுப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் நிறைவடைந்த பின், 370 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று கட்டங்களாக, திருநெல்வேலி மாநகரத்திற்கு மேற்கு புறவழிச் சாலை அமைக்கப்படும். இத்தகைய சிறப்பான பணிகளைத்தான் மாதம்தோறும், வாரம்தோறும், ஏன் தினந்தோறும் தொடங்கிச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இரண்டு முக்கியமான திட்டங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமலில் உள்ளதைப் பார்த்து நான் உள்ளபடியே இந்த மாவட்ட நிர்வாகத்தை மனம் திறந்து பாராட்டுகிறேன்.

தமிழ்நாட்டில் பின்தங்கிய தொகுதி என்று எதுவும் இருக்கவே கூடாது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

தமிழகத்தில் முதன்முறையாக, நெல்லை மாவட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் உடல்நல ஆலோசனை மற்றும் சிகிச்சை குறித்த டிஜிட்டல் பராமரிப்பு முறைக்காகத் ‘தாய்-கேர் நெல்லை’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, கர்ப்பிணித் தாய்மார்களைத் தொடர்ந்து கண்காணித்து, அவர்களின் முழு உடல் பரிசோதனைத் தரவுகளும் டிஜிட்டல் முறையில் பராமரிப்பு செய்யப்படும்.

கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழப்புகள் இல்லாத நிலையை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டத்திற்காக, இந்த மாவட்டத்தினுடைய ஆட்சியர் திரு.விஷ்ணு அவர்களுக்கு, தமிழக அரசினுடைய “நல் ஆளுமை” விருது அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 1200 குளங்கள் மற்றும் தாமிரபரணி நதியின் வழித்தடங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் நெல்லை நீர்வளம் என்ற அமைப்பு 30-07-2021 அன்று மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களால் தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பில், தன்னார்வ இயக்கங்கள் இணைக்கப்பட்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், நீர்நிலைகளை மேம்படுத்தும் நோக்கிலும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1200 குளங்கள் கணக்கெடுக்கப்பட்டு, டிஜிட்டல் மேப்பிங் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்தில், பல குளங்கள் தூர்வாரப்பட்டு, புத்துணர்வு ஆக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு, வடகிழக்குப் பருவமழையின்போது, நீர் செல்லாமல் இருந்த குளங்கள் இந்தத் திட்டத்தில் சீரமைக்கப்பட்டு ஐம்பதுக்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியுள்ளது. இதுபோன்று, நெல்லை மாநகர்ப் பகுதிக்குள் மழைவெள்ளக் காலங்களில் தண்ணீர் புகுவதைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் திருப்பணிக் கரிசல்குளம் உபரிநீர் வெளியேறும் கால்வாய் அழிந்து, காணமால்போய் இருப்பது கண்டறியப்பட்டு அந்தக் கால்வாய் இப்போது தூர்வாரப்பட்டிருக்கிறது. இதனால், எதிர்வரக்கூடிய பருவமழையின்போது மாநகருக்குள் வெள்ளநீர் வருவது தடுக்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செல்லும்போது, அந்தந்த மாவட்டங்கள் அவற்றுக்கே உரிய தனித்தன்மையுடன் வளர்ச்சியடைந்து வருவதை நான் பார்க்கிறேன். அனைத்து மாவட்டங்களும் வளர்வதுதான் சீரான வளர்ச்சி!

சட்டமன்றத்தில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதிக்கான கோரிக்கைகளை முன்வைக்கும்போது, சொல்லிவைத்தது போல, அனைவருமே, என்ன பேசுவார்கள் என்றால், “என்னுடைய தொகுதி பின்தங்கிய தொகுதி, ஆகவே இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தரவேண்டும்” என்று கேட்பார்கள்.

என்னைப் பொறுத்தவரையில், பின்தங்கிய தொகுதி என்று எதுவும் இருக்கவே கூடாது. அதனால்தான், நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பத்து பிரச்சினைகளை எழுதி, மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து, அதனை நிறைவேற்றித் தரும் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற மகத்தான திட்டத்தை 234 தொகுதிக்கும் நான் தொடங்கி வைத்திருக்கிறேன்.

இது, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் கிடையாது. நம்முடைய தமிழ்நாட்டில் தான் இது உருவாகியிருக்கிறது!

இரண்டு தினங்களுக்கு முன்பு, டெல்லி மாநிலத்தின் மாண்புமிகு முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அவர்கள் சென்னைக்கு வந்திருந்தார். அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரியில் சேருகிறபோது, அந்தக் கல்லூரி மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய திட்டத்தை தொடங்கி வைக்கக்கூடிய நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அதில் கலந்து கொண்டு பேசுகிறபோது சொன்னார், 'இது அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டிய முன்மாதிரித் திட்டம்' என்று பெருமையோடு சொன்னார். இப்படி, தமிழக அரசு கொண்டு வரும் அனைத்துத் திட்டங்களும் இந்தியாவுக்கே முன்மாதிரித் திட்டங்களாக அமைந்துள்ளன!

கடந்த ஏப்ரல் மாதம், டெல்லி சென்ற நான் அங்கிருந்த மாதிரி பள்ளிகளைப் பற்றிக் கேள்விபட்டு அங்கு சென்று பார்வையிட்டேன். தமிழ்நாட்டில் இதே மாதிரி உருவாக்குவேன், அதனை நீங்கள் தொடங்கி வைக்க வர வேண்டும் என்று முதலமைச்சராக இருக்கக்கூடிய அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்தேன். ஆறு மாதத்தில், அவரை இங்கு வரவழைத்து அதனைத் தொடங்கி வைக்கவும் நாங்கள் செய்துவிட்டோம்.

“இரண்டு ஆண்டு ஆகும் என்று நினைத்தேன். ஆறு மாதத்தில் ஆரம்பித்துவிட்டீர்களே!” என்று மாண்புமிகு அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் மனம் திறந்து பாராட்டினார்.

இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் வேகம்!

என்னைப் பொறுத்தவரை, செய்வதைத் திருத்தமாகச் செய்ய வேண்டும், விரைவாகச் செய்ய வேண்டும்!

திட்டமிடுவதற்கு முன்னால் எவ்வளவு அவகாசம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், திட்டமிட்டு அறிவித்த பிறகு, காலதாமதம் ஆகக்கூடாது என்று நினைக்கக்கூடியவன் நான். ஏனென்றால், கலைஞருடைய மகன் நான்.

எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு – என்கிறார் திருவள்ளுவர்.

அதைப் பின்பற்றுபவன் நான்! அதனால்தான், இன்றைய தினம் தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறது. திட்டங்கள் மட்டுமல்ல, எந்தத் தனிமனிதருக்கு ஏற்படக்கூடிய குறையாக இருந்தாலும், அதனையும் உடனடியாக தீர்க்கும் அரசாகவும் நம்முடைய அரசு இருக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன், உத்தரவையே போட்டிருக்கிறேன்.

அண்மையில் பார்த்திருப்பீர்கள், டானியா என்ற ஒரு பள்ளிச் சிறுமி ஆவடி பகுதியைச் சார்ந்தவர். தொலைக்காட்சிகளில் அவரைப் பற்றிய செய்தி எல்லாம் பரபரப்பாக வந்தது. சமூக ஊடகங்களில் எல்லாம் வந்தது, அதையெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த, வீராபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா ஆகியோரின் அன்பு மகள்தான் டானியா. அவருக்கு ஒன்பது வயது. நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். முகச்சிதைவு நோய் அவருக்கு ஏற்பட்டது. முகத் தோற்றம் அப்படியே மாறி, பாதிக்கப்பட்டது. அவரோடு படிக்கக்கூடிய மாணவிகள் கூட கேலி செய்து அந்த டானியாவை புறக்கணிக்கின்ற ஒரு சூழல். அந்த செய்தி எனக்கு கிடைத்தது. உடனடியாக, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு.நாசர் அவர்களோடு நான் தொடர்பு கொண்டேன். அதற்குரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள், உடனே சென்று பாருங்கள் என்று நான் உத்தரவிட்டேன். உடனடியாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரும், அமைச்சர் அவர்களும் சென்று அந்தச் சிறுமி டானியாவைப் பார்த்திருக்கிறார்கள்,

விசாரித்திருக்கிறார்கள். பெற்றோர் சொல்லியிருக்கிறார்கள், 'பிறந்தபோது நன்றாகத்தான் இருந்தார். மூன்று வயதில் அவர் முகத்தில் ஒரு கரும்புள்ளி வந்தது. அதன் பின்னர்தான், முகம் இப்படி சிதைந்துவிட்டது. இதற்காக நாங்கள் பல லட்சம் ரூபாய் நாங்கள் செலவு செய்து பார்த்தோம்' பயனில்லை, என்று அழுதுகொண்டே டானியாவின் பெற்றோர் சொல்லியிருக்கிறார்கள். இந்த செய்தியை என்னிடம் சொன்ன உடனே, உடனடியாக, அவரை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனை, சவீதா என்கின்ற அந்த மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லி, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யச் சொன்னேன்.

அங்கே இருக்கக்கூடிய புகழ்மிக்க மருத்துவர்கள் 10 பேர் கொண்ட ஒரு கமிட்டியைப் போட்டார்கள். அறுவை சிகிச்சை 10 மணி நேரம் நடந்தது.

இந்தியாவில் இதுவரைக்கும் இது மாதிரி அறுவை சிகிச்சை நடந்ததாக வரலாறு கிடையாது. அதுதான் முதல் முறை. சவீதா மருத்துவமனையில் நடைபெற்ற அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. இரண்டு, மூன்று நாட்கள் கழித்து நான் நேரடியாக, அந்த மருத்துவமனைக்குச் சென்று டானியாவைப் பார்த்தேன். அவரும், அவர் குடும்பமும், என்னையும் அரசையும், நன்றிப் பெருக்குடன் வாழ்த்தினார்கள். அந்தக் குழந்தையின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியைத்தான் எனக்கு மிகப்பெரிய பாராட்டு, எனக்கு எவ்வளவோ பாராட்டுக் கிடைக்கலாம், அந்தப் பாராட்டுக்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது.

உலகத்தில் இதைவிடப் பெரிய பரிசு இருக்கவே முடியாது. இலட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுதான் நமது அரசின் சாதனை.

முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இன்றைய தினம், இந்த விழாவில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் முப்பதாயிரம் குடும்பங்கள் பயனடைய இருக்கின்றன.

கூட்டுறவுக் கடன்கள் தரப்பட்டுள்ளன.

வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது.

திருநங்கையர்க்கு கடனுதவி தரப்பட்டுள்ளது.

தொழில் முதலீட்டு கடன்கள் தரப்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சி சார்பில் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

- இப்படி பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலமாக, ஒவ்வொரு தனிமனிதரின் வீட்டின் கதவையும் தட்டி அவர்களுக்கு நன்மை செய்யும் அரசாக நம்முடைய தமிழ்நாடு அரசு இருக்கிறது.

தமிழ்நாட்டில் பின்தங்கிய தொகுதி என்று எதுவும் இருக்கவே கூடாது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக, மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் பெறும் கல்லூரி மாணவியர், அந்த விழா முடிந்தவுடன், தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஒரு மாணவி அளித்த பேட்டி, அதை நானும் பார்த்தேன், பார்த்தபோது நான் பெருமைப்பட்டேன். அந்த மாணவி சொல்கிறார், இந்த ஆண்டு மட்டும், 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயன்பெறுகிறார்கள் என்றால், அவ்வளவு குடும்பங்களில் கல்வி என்னும் அணையா விளக்கு ஏற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் இப்போது, அனைத்துக் குடும்பங்களையும், அக்கறையோடு கவனிக்கக்கூடிய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

நாம் அனைவரும் தமிழ்ச் சமுதாயம் என்ற ஒற்றைக் குடும்பத்தின் உறுப்பினர்கள். அதில் நானும் ஒருவன். நீங்களும் ஒருவர். நாம் அனைவரும் இணைந்து நமது மாநிலத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக ஆக்குவோம். அனைத்து மக்களின் மனங்களிலும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் ஏற்படுத்தும் ஆட்சியாக நாம் நடத்துவோம், அது தான் உண்மையான திராவிட மாடல் ஆட்சி அதைத் தான் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். எனவே தொடர்ந்து இந்த அரசுக்கு நீங்கள் ஆதரவு தாருங்கள் என்று அன்போடு கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories