என் குடும்பத்தில் அனைவருமே கடவுள் நம்பிக்கை உடையோரே! ஆனால் யாரும் பெரியாருக்கு எதிராக இதுவரை பேசியதில்லை.
அவர்களைப் பொறுத்தவரை பெரியாரும் ஒரு ஞானி. அவர் கருத்துகளில் நியாயம் இருப்பதாக நம்புகிறார்கள். பொதுவாக சராசரி தமிழ் மக்களின் நிலை இதுதான்.
பா.ஜ.க.காரர்கள் மண்டையைப் பிய்த்துக் கொண்டு அலைகிறார்கள். மதுரையில் கள்ளழகரை ஆற்றில் இறக்கி குளிப்பாட்டிவிட்டு நேரே வாக்குச்சாவடிக்குப் போய் ஒரு திராவிடக் கட்சிக்கு வாக்களித்துச் செல்வதை அவர்களால் விளங்கிக்கொள்ளவே முடியவில்லை.
ஊருக்கு ஊர் மாரியம்மன் கோயில் திருவிழாக்கள் நடக்கின்றன. ஆனால் அவ்வூரில் பெரியார் சிலையில் யாரேனும் கைவைத்தால் அவ்வூர் வாலிபர்கள், காப்புக் கட்டிய கையோடு வந்து எதிர்த்து கேள்வி கேட்பதைப் பார்த்து விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
ஏனெனில் தமிழனுக்கு, இந்த தொண்டுக் கிழவன் மூத்திரச்சட்டியைத் தூக்கிக் கொண்டு தொண்ணூறு வயதுகளில் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்தது நமக்காகத்தான் என உரைத்திருக்கிறது.
பெரியாரை மதவாதிகள் எப்படியாவது வீழ்த்திவிடவேண்டும் என்று பல்வேறு முயற்சிகளில் ஈடுபடும்போது, “நம் ஆளை எவனோ ஒருவன் வந்து களங்கப்படுத்தப் பார்க்கிறான்” என்கிற உணர்வு அவர்களுக்குள் எழுகிறது. காரணம் இதுதான்.
தமிழ்நாட்டில் மதம் வேறு, ஆன்மீகம் வேறு, சமூகம், அரசியல் என்பவை வேறு. இந்தத் தெளிவை பெரியார் சரியாக உருவாக்கியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் தாங்கள் அறியாமலேயே, தம்முள் பதிந்துகிடக்கும் பெரியாரின் கருத்துகளால் வழிநடத்தப்படுகிறார்கள்.
அவர் மனித விடுதலையைப் பேசினார். பெண் விடுதலையைப் பேசினார். தீண்டாமையைச் சாடினார், மூட நம்பிக்கைகளைச் சாடினார், ஒட்டு மொத்தமாக அவர் சமுகநீதிக்காகப் பாடுபட்டார். கடவுள் மறுப்பு என்பது அதில் ஒரு பகுதி மட்டுமே.
இது பெரியார் மண்..
நன்றி :- முரசொலி (10.07.22)