சென்னை எழுப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற அரசு கண் மருத்துவமனை, தற்போது 204 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பல லட்சம் பேருக்கு விழி (ஒளி) வழங்கிய அரும்பெரும் சேவையின் வழிப்பயணம் தொடங்கிய வரலாறை இந்த செய்தியின் வாயிலாக அறியலாம்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 1809 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மார்ஃபீல்டு கண் மருத்துவமனைக்கு அடுத்தபடியாக, 1819 ஆம் ஆண்டு சென்னை இராயப்பேட்டை 'பழைய மெட்ராஸ் கிளப்' அருகில் டாக்டர் ராபர்ட் ரிச்சர்ட்சன் என்பவரால் இந்த கண் மருத்துவமனை துவங்கப்பட்டது.
உலக அளவில் இரண்டாவது பழமையான கண் மருத்துவமனையாகவும், ஆசிய அளவில் முதலில் துவங்கப்பட்ட கண் மருத்துவமனை என்ற பெரும் இதையே சாரும். இந்த மருத்துவமனை இராயபேட்டையில் இருந்து 1844 ஆம் ஆண்டு சென்னை எழும்பூர் பகுதிக்கு இடம் மாற்றப்பட்டது. அப்போது ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த இந்த மருத்துவமனை நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
மேலும் 1887-ல் இந்த மருத்துவமனையின் வளாகத்தில் மூன்று தனித்தனி கட்டிடங்கள் கட்டப்பட்டன. அத்துடன் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு (OP ), ஐரோப்பியா மற்றும் இந்திய மாடல்களில் சமையல் கூடங்கள் குடியிருப்புகள் ஆகியவையும் கட்டப்பட்டன. மேலும் 1911-ல் 'தி லேடி லாவ்லீ பிளாக்' எனப்படும் கட்டிடமும் இங்கு கட்டப்பட்டது. இந்த கட்டிடங்கள் எல்லாம் நோயாளிகளுக்கான வார்டு மற்றும் ஆபரேஷன் தியேட்டர்களாக தற்போது வரை பயன்பாட்டில் இருக்கின்றன.
இங்குள்ள பழமையான கட்டிடங்கள் தொன்மை மாறாமல் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கட்டிடத்தின் வெளிப்புறத் தோற்றம் இப்பொழுதும் மிக கம்பீரமாக காட்சி அளிக்கிறது. மேலும் வைரஸ் மூலம் கண்களில் பரவும் 'மெட்ராஸ்-ஐ' எனப்படும் நோய் கண்டுபிடிக்கப்பட்டதும் இந்த மருத்துவமனையில் தான். மேலும் கண்புரை அறுவை சிகிச்சையும் இங்கு தான் முதன்முதலில் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவிலேயே முதன்முறையாக 1926 ஆம் ஆண்டு மருத்துவம் சம்பந்தமான படிப்பும், 1948 ஆம் ஆண்டு கன் வங்கியும் இந்த மருத்துவமனையில் தான் துவங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சிறப்பம்சமாக 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கண் மருத்துவமனை உபகரணங்கள் பழமையான கருவிகள், பழையான சான்றுகள் , குறிப்புகள், 1920-1930-களிலும், அதற்கு முன்பு சிகிச்சை அளிக்கப்பட்டவர்களின் விபரமும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த மருத்துவரின் குறிப்புகளும் உள்ளன.
சிகிச்சை பெற்றவர்களின் வரைபடமும் மேலும் பலத்தரப்பட்ட கருவிழி, விழித்திரை மாதிரிகளும். பழமையான கண் மருத்துவ கருவிகளும் என கண் மருத்துவர்களுக்கான பொக்கிஷமாக பழமையை தாங்கி நிற்கின்றது இந்த அருங்காட்சியகம்.
மருத்துவமனை வளாகமும் இங்கு வருபவர்களின் மனதை வருடும் வண்ணம் இயற்கை எழில் சூழ்ந்துள்ளது. மேலும் இந்த வளாகத்தில் எந்த பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கும் செல்லும் வகையில் நடைபாதை, மேற்கூரையுடன் சிறப்புர அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எளிதாக மழை, வெயில் காலத்திலும் எந்த ஒரு பகுதிக்கும் செல்லலாம்.
ஆசியாவிலேயே முதலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கண் மருத்துவமனை 2019-ல் 200ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இங்கு கருவிழி, கண் நீர் அழுத்தம், விழித்திரை உள்ளிட்ட 6 சிறப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மருத்துவமனைக்கு தினமும் 600-800 வெளி நோயாளிகள் வருகின்றனர், உள்நோயாளிகளாக தினமும் 50-60 பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.
சராசரியாக தினமும் 40 அறுவை சிகிச்சைகள், 478 படுக்க வசதிகள், எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் பயிற்சிக்காக வருகிறார்கள். இங்கிலாந்து லண்டனில் இதே போல் அருங்காட்சியகத்தில் தனி அறைதான் உள்ளது. ஆனால் இங்கு நமது அரசு கண் மருத்துவமனையில் அருங்காட்சியகத்திற்கென ஒரு தனிக்கட்டிடமே உள்ளது என்பது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விசயமாகும்.
"தானத்தில் சிறந்த தானம் 'அன்னதானம்', 'இரத்த தானம்', என்ற வரிசையில் 'கண் தானம்'-ம் இடம்பெற்றுள்ளது. இதற்கான விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. ஓயாத ஒளி வழங்கும் மருத்துவமனையின் சேவைக்கு மணிமகுடமாய், வலிகள் நிறைந்த மனித வாழ்வில் பிறருக்கு விழிகொடுத்து (கண்தானம்).. வாழ வழிக்கொடுப்போம்.. கண் தானம் செய்வோம் !