தமிழ்நாடு

"மக்களுக்கு கலங்கரை விளக்காக திகழும் திராவிட மாடல் ஆட்சி".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

மக்களுக்கு எந்நாளும் உதவக்கூடிய கலங்கரை விளக்காக திராவிட மாடல் ஆட்சி திகழும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

"மக்களுக்கு கலங்கரை விளக்காக  திகழும் திராவிட மாடல் ஆட்சி".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (2.7.2022) கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரை:-

பேசாமல் அப்படியே கொஞ்ச நேரம் நின்று கொண்டு உங்களை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என்று சொல்லும் அளவுக்கு மாபெரும் கடல் அலையை இங்கே நான் பார்க்கிறேன்.

கடல் இல்லாத இந்த கரூருக்கு, மக்கள் கடலையே உருவாக்கி இருக்கிறார் நம்முடைய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள். அலை இல்லாத கரூருக்குள் மக்கள் அலையை உருவாக்கி இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள்.

இங்கு மட்டுமல்ல, இந்த மாவட்டத்திற்குள்ளே நுழைந்ததில் இருந்தே நான் பார்க்கிறேன், பார்க்கும் இடமெல்லாம் மக்கள்!

நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் பெருமையோடு எடுத்துச் சொன்னார்கள்.

நோக்க நோக்க மகிழ்ச்சி என்று சொல்லிப் பாராட்டும் அளவுக்கு மக்கள் தலைகளால் கரூரை மக்களூராக மாற்றிக் காண்பித்திருக்கிறார் நம்முடைய மாண்புமிகு அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள். எப்போதும், எந்த நேரத்திலும், எதையும் மிகப் பிரமாண்டமாகச் செய்துகாட்டக் கூடியவர் அவர். அடுத்த பிரம்மாண்டத்தை மிஞ்சக்கூடிய அளவுக்கு, அடுத்த பிரம்மாண்டத்தையும் அவரே தான் செய்வார். அந்த வகையில் ஒப்பில்லாத மிகப் பிரம்மாண்டமான ஒரு அரசு விழாவாக இது அமைந்துள்ளது.

எந்தப் பணியாக இருந்தாலும் அதற்கு ஒரு டார்கெட் நிர்ணயிப்பார். எந்தச் சூழலிலும் அந்த டார்கெட்டை முடித்துக் காட்டக் கூடியவர் என்று அவரை நான் ஏற்கனவே பலமுறை பாராட்டி இருக்கிறேன், வாழ்த்தியிருக்கிறேன். அவர் அமைச்சராக வருவதற்கு முன்பு, மின்சாரத்துறை எந்த நிலைமையில் இருந்தது என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

மக்களின் குறைகளை உடனடியாகத் தீர்க்க மின்னகம் சேவை மையம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மிகக் குறுகிய காலத்தில் ஒரு லட்சம் உழவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

316 துணை மின் நிலையங்கள் ஆகிய மாபெரும் சாதனைகளைச் செய்து அந்த துறையை மீட்டெடுத்து வருகிறார்.

அதே நேரத்தில், கரூர் மாவட்டத்தை மட்டுமல்ல, கோவை மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சராக பொறுப்பேற்று அந்த மாவட்டத்தையும் சேர்த்துக் கவனித்து, எங்கும் எந்தத் தொய்வும் இல்லாமல் அவர் செயல்பட்டு வருகிறார். இத்தகைய ஆற்றலை அனைவரும் பெற வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு தன்னை அவர் நிரூபித்துக் கொண்டு வருகிறார்.

"மக்களுக்கு கலங்கரை விளக்காக  திகழும் திராவிட மாடல் ஆட்சி".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

அந்த வரிசையில்தான், 80 ஆயிரத்து 750 பேருக்கு 500 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கும் விழா,

28 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 95 பணிகளை திறந்து வைக்கும் விழா,

582 கோடி ரூபாய் மதிப்பிலான 99 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா என சுமார் 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கான விழாவாக இது அமைந்திருக்கிறது.

இதுவும் பிரமாண்டம்தான்!

கர்நாடக மாநிலத்தின் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரிக்கு ஆடு தாண்டும் காவிரி என்று பெயர். அதாவது அவ்வளவு குறுகிய அளவுதான் அந்த நீர்ப்பகுதியின் அகலம் இருக்கும். ஆனால் தமிழ்நாட்டின் எல்லையில் நுழையும் காவிரி ஆறானது, கரூர் மாவட்டம், குளித்தலையில் பாயும்போது விரிவடைந்து பாயும். அதனால் அதற்கு ‘காகம் கடக்கா காவிரி’ என்று பெயர். அதாவது காகம் கூட கடக்க முடியாத அளவு என்று அதன் பிரமாண்டத்தைச் சொல்வார்கள்.

கரூர் என்றாலே பிரமாண்டம்தான். அதற்கு இந்த விழவே மிகப் பெரிய சாட்சி, எடுத்துக்காட்டு. இதற்கான ஏற்பாடுகளைச் செய்து அதில் வெற்றி பெற்றிருக்கக்கூடியவர், மன்னிக்க வேண்டும், மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கக்கூடியவர் அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களையும், அதேபோல் அவருக்கு துணை நின்று பணியாற்றி இருக்கக்கூடிய, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நம்முடைய மேயர், துணைமேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பில் பொறுப்பேற்று இருக்கக்கூடிய பிரதிநிதிகள், அதிலும் குறிப்பாக, சிறப்பாக சொல்ல வேண்டுமென்றால் நம்முடைய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அவர்களையும், மற்றுமுள்ள அதிகாரிகள், அலுவலர்களையும் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுறேன், நன்றி கூற விரும்புகிறேன்.

இன்று நடைபெறும் இந்த விழாவில்,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 26 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 55 பணிகளுக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 பணிகளும், பேரூராட்சித்துறையின் சார்பில் 9 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 9 பணிகளுக்கும், கலை பண்பாட்டுத் துறை சார்பில் 1 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு பணிக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் 387 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 பணிகளுக்கும்,

மாநகராட்சித் துறை சார்பில் 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 பணிகளுக்கும், நீர்வளத்துறை சார்பில் 91 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 பணிகளுக்கும்,

"மக்களுக்கு கலங்கரை விளக்காக  திகழும் திராவிட மாடல் ஆட்சி".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

என மொத்தம் 582 கோடி ரூபாய் மதிப்பிலான 99 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. இதை எல்லாம் விரைவில் உறுதியாக நான் வந்து திறக்கப் போகிறேன், விரைவாக, அந்த உறுதியை நான் முன் கூட்டியே வழங்க விரும்புகிறேன்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 5 திட்டப்பணிகளும்,

வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் ஒரு பணியும்

நில அளவைப் பதிவேடுகள் துறை சார்பில் 3 திட்டப்பணிகளும்,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறைசார்பில் 33 திட்டப்பணிகளும்,

கூட்டுறவுத் துறை சார்பில் 14 திட்டப்பணிகளும்,

பொதுப்பணித்துறை சார்பில் 9 திட்டப்பணிகளும்,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 2 திட்டப்பணிகளும்,

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை (சத்துணவு) சார்பில், 6 திட்டப்பணிகளும்,

நபார்டு மற்றும் கிராம சாலைகள் சார்பில் 3 திட்டப்பணிகளும்,

நீர்வளத்துறை சார்பில் 19 திட்டப்பணிகளும் இன்றைக்கு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இவற்றின் மொத்த மதிப்பு என்னவென்று கேட்டால் 28 கோடி ரூபாய்.

ஏராளமான சாலைகள் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.

அங்கன்வாடி மையங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.

உணவு தானியக் கிடங்குகள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.

பல்வேறு இடங்களில் துணை சுகாதார நிலையக் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

குடியிருப்புடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

அங்கன்வாடி கட்டடங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

பள்ளிகள் மறுசீரமைப்புச் செய்யப்பட்டிருக்கிறது.

பள்ளிகளில் சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தையும் நான் இங்கே ஊர் வாரியாக சொல்லத் தொடங்கினால், நேரம் அதிகமாகும். அதனால், ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு ஊருக்கும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள் செய்து முடிக்கப்பட்டும் இருக்கிறது. புதிதாக கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டும் இருக்கிறது.

இந்த ஓராண்டு காலத்தில் ஓய்வில்லாமல் மக்கள் பணியை ஆற்றி வருகிறோம் என்பதற்கு இந்த கரூர் மாவட்டத்தில் செய்யப்பட்டிருக்கக்கூடிய சாதனைகளே சாட்சியாக அமைந்திருக்கிறது!

பொதுவாக, புதிதாக ஆட்சிக்கு வந்த ஒரு அரசாங்கத்திடம் முதல் ஆறு மாத காலம் எதையும் எதிர்ப்பார்க்க மாட்டார்கள். இது தான் வழக்கம்.

“இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள், எனவே அவர்களுக்கு ஆறு மாத காலம் அவகாசம் கொடுக்கலாம்”- அப்படி என்று சொல்வார்கள்.

துறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளும் காலம், முதல் ஆறு மாத காலம். அடுத்த ஆறு மாத காலம் என்பது திட்டமிடும் காலமாக அது அமையும். இரண்டாவது ஆண்டுதான் செயல்படுத்தத் தொடங்கும் காலமாக அமையும். ஆனால் ஆட்சிக்கு வந்த நொடியில் இருந்து செயல்படுத்தும் காலமாகத் தொடங்கிய ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி!

உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சி! ஏனென்றால் தலைவர் கலைஞர் அவர்கள் என்னுள் இருந்து என்னை இயக்கிக் கொண்டு இருக்கிறார். தலைவர் கலைஞர் அவர்கள் இருந்தால், என்ன நினைப்பார், என்ன சிந்திப்பார், எப்படிச் செயல்படுத்துவார் என்று நித்தமும் சிந்தித்து, நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

இந்த ஓராண்டு காலத்தில்

திட்டமிட்டோம் -

செயல்பட்டோம் -

உருவாக்கினோம் -

மக்கள் கையில் கொடுத்துள்ளோம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு மக்களுக்கு பயனுள்ள காலமாக இந்த ஓராண்டு காலம் அமைந்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் கரூர் மாவட்டத்திற்கென்று அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை, அனைத்தையும் அல்ல, பலவற்றை, இந்த ஓராண்டிலேயே நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம்.

இங்கே மாண்புமிகு அமைச்சர் திரு.செந்தில்பாலாஜி அவர்கள் பேசுகின்றபோது சொன்னரே, கரூர் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்துவோம் என்று சொன்னோம். செய்து காட்டியிருக்கிறோம்!

"மக்களுக்கு கலங்கரை விளக்காக  திகழும் திராவிட மாடல் ஆட்சி".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

புகளூர், பள்ளப்பட்டி பேரூராட்சிகளை நகராட்சிகள் ஆக்குவோம் என்று சொன்னோம். அதை நிறைவேற்றி இருக்கிறோம்.

அரவக்குறிச்சியில் அரசு கலை - அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தோம். அதை நிறைவேற்றியிருக்கிறோம்.

கரூரில் சுற்று வட்டச் சாலை,

சாயப்பட்டறைப் பூங்கா,

காமராசர் மார்க்கெட்டில் புதிய வளாகம் ஆகியவை அறிவிக்கப்பட்டு விரைவில் நிறைவேற்றப்பட இருக்கிறது.

அதுமட்டுமல்ல, ஜவுளித்தொழிலில் தலைசிறந்து விளங்கும் இந்த கரூர் மாவட்டத்தில், இந்தத் தொழிலை மேலும் மேம்படுத்திட சிப்காட் பூங்கா ஒன்று அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவித்து இருந்தோம்.

இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் இப்போது நடைபெறத் தொடங்கி இருக்கிறது. நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் சொன்னோர்களே, நேற்று இரவு நான் கரூருக்கு வந்தவுடனே இந்த மாவட்டத்தில் உட்பட்டிருக்கக்கூடிய தொழில் முனைவோர்கள், என்னை சந்திக்கக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பை நம்முடைய அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். கிட்டதட்ட ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் அவரோடு நான் கலந்து பேசினேன். அவர்கள் பேசுகிறபோது சொன்னார்கள், நமது ஆட்சியிலே இப்போது ஒரு வருடத்தில் கிடைத்திருக்கக்கூடிய நன்மைக்கு நன்றி தெரிவித்தார்கள். அதே நேரத்தில் சில கோரிக்கைகளையும் முன் வைத்தார்கள். அந்த அடிப்படையில், சில அறிவிப்புகளை நான் வெளியிடுகிறேன்.

இந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிப்பொருட்களை வாங்க பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு, இந்தப் பொருட்களை காட்சிப்படுத்தத் தேவையான காட்சி அரங்கம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளதாக சொன்னார்கள். இதனை இந்த அரசு ஏற்று, ஜவுளி உற்பத்தியாளர்களுடன் இணைந்து அத்தகைய பெரும் காட்சி அரங்கம் மற்றும் வளாகம் ஒன்று கரூர் மாவட்டத்தில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதே போன்று கரூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஜவுளிப்பொருட்களின் தரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்த பரிசோதனைகளை இங்கேயே மேற்கொள்வதற்காக, சர்வதேச தரத்திலான ஜவுளிப்பொருட்கள் பரிசோதனை நிலையம் (Advanced Testing Lab) ஒன்றும் கரூர் மாவட்டத்தில் அமைக்கப்படும்.

அதே போல் மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிய பேருந்து நிலையம் வேண்டும் என்பது இந்த மாநகர மக்களின் நீண்டகால கோரிக்கை. இதனை நிறைவேற்றக்கூடிய வகையில், திருமாநிலையூரில் 47 கோடி ரூபாய் செலவில் நவீன புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

மற்ற கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோடு, அமைச்சர்களோடு கலந்து பேசி வருங்காலத்தில் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புறேன்.

இந்த ஓராண்டு காலத்தில் இந்த கரூர் மாவட்டத்திற்கு செய்திருக்கக்கூடிய சாதனைகள் மட்டுமல்ல, இதேபோல் மற்ற மாவட்டங்களுக்குச் செய்திருக்கக்கூடிய சாதனைகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்திருக்கக்கூடிய சாதனைகளைப் பார்க்கும்போது நான் மனநிறைவை அடைகிறேன்.

இந்த ஓராண்டு காலமானது எனக்கு மனநிறைவைத் தருகிறது. ஒவ்வொருவருக்கும் அவரது மனச்சாட்சிதான் நீதிபதி என்று சொல்லுவார்கள். அந்த வகையில் எனது மனசாட்சி அளிக்கும் தீர்ப்பு இது!

இதுதான் மக்களுடைய மனங்களிலும் இருக்கிறது என்பதன் அடையாளம் தான் உங்கள் முகங்களில் பார்க்கக்கூடிய மகிழ்ச்சி. நான் செல்கின்ற இடமெல்லாம் மக்கள் அலையலையாக வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, அந்த மக்களின் முகங்களில் நான் மலர்ச்சியைப் பார்க்கிறேன், மகிழ்ச்சியைப் பார்க்கிறேன்.

'உன்னுடைய ஆட்சிக் காலத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்' என்று அவர்கள் முகங்கள் சொல்கின்றது.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். இந்த முகங்களின் மூலமாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மக்களை முன்னேற்றும் ஆட்சியாக அமைந்துள்ளதை என்பதை தெளிவாக அறிய முடிகிறது. அதனால்தான் நான் வீண் விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிப்பதில்லை. இப்போது எனக்கு மக்களுக்கு நன்மை செய்வதற்கே நேரம் போதவில்லை. அதனால் அக்கப்போர் மனிதர்களின் அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்வதற்கு தயாராக இல்லை. அதற்கு நேரமில்லை.

“மானத்தைப் பற்றிக் கவலைப்படும் ஆயிரம் பேருடன் கூட போராடலாம். ஆனால் மானத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரே ஒரு ஆளுடன் நாம் போராடவே முடியாது" என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்வார். அடிக்கடி சொல்வார். அப்படி மானத்தைப் பற்றிக் கவலைப்படாத மனிதர்கள் வைக்கும் விமர்சனத்தைப் பற்றி நான் மதிக்க விரும்பவில்லை.

தி.மு.க. ஆட்சியானது எப்படிச் செயல்படுகிறது என்பதை இதுபோன்ற மனிதர்கள் முன்னால் மைக்கை நீட்டாமல், தமிழ்நாட்டு மக்கள் முன்னால் மைக்கை நீட்டித் தெரிந்துகொள்ளுங்கள், யாருக்கு சொல்கிறேன், இதோ இங்கே இருக்கக்கூடிய ஊடகத் துறையைச் சார்ந்திருக்கக்கூடிய நண்பர்களுக்கு சொல்கிறேன். உரிமையோடு சொல்கிறேன். யார் யாரிடமோ மைக்கை நீட்டுகிறீர்களே, மக்களிடம் சென்று மைக்கை நீட்டிப் பாருங்கள். மிகவும் உரிமையோடு உங்களிடத்தில் கேட்கிறேன்.

பேருந்துகளில் இலவசப் பயணம் என்பது அதிலிருந்து நகைக்கடன் தள்ளுபடி என்பதுவரை பயன்பெற்ற கோடிக்கணக்கான பெண்களிடத்தில் சென்று நீங்கள் கேளுங்கள்!

இல்லம் தேடிக் கல்வி திட்டம் முதல் உயர்கல்வி கற்கக்கூடிய அரசுப் பள்ளி மாணவியருக்கு ஆயிரம் ரூபாய் என்பது வரையிலான கல்வித் திட்டங்கள் குறித்து மாணவச் செல்வங்களிடத்தில் சென்று நீங்கள் மைக்கை நீட்டுங்கள்!

நான் முதல்வன் திட்டம் முதல் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பது வரையிலான திட்டங்கள் குறித்து இளைஞர்களிடத்தில் சென்று கேளுங்கள்!

இருளர்கள், நரிக்குறவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என விளிம்புநிலைக்குக் கீழே இருக்கக்கூடிய மக்களிடம் இந்த ஆட்சியைப் பற்றிப் போய் கேளுங்கள்!

தூர்வாரிய பணிகள் முதல் விளை பொருட்களூக்கான தொகுப்புகள் வரை அதனால் பயனடையும் நம்முடைய வேளாண் பெருங்குடித் தோழர்களிடம் இந்த ஆட்சியைப் பற்றிக் கேளுங்கள்!

'மீண்டும் மஞ்சப்பை' முதல் சுற்றுச் சூழலுக்கான எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள் பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் சென்று கேளுங்கள்!

இந்த ஆட்சியில் சமூகநீதி எந்தளவுக்கு போற்றிப் பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து சமூகநீதிக்காகப் போராடுபவர்களிடம் சென்று கேளுங்கள்!

அவர்கள் இந்த ஆட்சியின் சாதனைகளைப் பற்றிச் சொல்வார்கள். தாங்கள் அடைந்த பயனைப் பற்றிச் சொல்வார்கள். நியாயமான கோரிக்கையை யார் வைத்தாலும் அதை நிறைவேற்றித் தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அனைவருடைய கருத்தையும் கேட்டு. அதனை செயல்படுத்தித் தருபவனாகத்தான் நான் இருக்கிறேனே தவிர, நான் நினைப்பது மட்டும்தான் நடக்க வேண்டும் என்று நினைப்பவனல்ல நான்.

இத்தகைய மக்களிடம் கருத்துகளைப் பெற்று ஊடகங்கள் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தாங்களும் இருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக நாள்தோறும் மைக் முன்னால் வாந்தி எடுப்பவர்கள் அளிக்கும் பேட்டிகளுக்கு நான் பதில் சொல்வதற்கு என்றைக்கும் தயாராக இல்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை விமர்சிப்பதன் மூலமாக என்னை எதிர்த்து கருத்துச் சொல்வதன் மூலமாக பிரபலம் அடையலாம் என்று நினைப்பவர்களைப் பார்த்து நான் வருத்தப்படுகிறேன்.

நான் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் வீட்டில் அவர்களின் வீட்டில் விளக்கு ஏற்றவேண்டும் என்று விரும்புகிறவன். அதுவும் சாதாரண விளக்காக அல்ல, அது அறிவு விளக்குகளாக, அன்பு விளக்குகளாக, சேவை விளக்குகளாக, மற்றவர்களுக்கு பயன் தரும் விளக்குகளாக அமைய வேண்டும் என்று நினைக்கிறேன்.

உங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் நாற்காலியை தமிழ்நாட்டு மக்கள் எனக்கு வழங்கி இருக்கக் காரணம் என்ன? தங்களுக்கு நல்லது செய்வான் என்ற நம்பிக்கையில் தான்! அந்த நம்பிக்கையை நான் எந்நாளும் காப்பாற்றுவேன்.

இந்த மாவட்டம், முன்பு கருவூர் என்று தான் அழைக்கப்பட்டது. அதுவே பின்பு கரூர் ஆனது என்பார்கள். அந்த கரூரில், 95 வயது வரையில் தமிழ்ச் சமுதாயத்துக்காக எழுதியும், பேசியும், செயல்பட்டும், உழைத்த தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள், சட்டமன்றத்திற்கு முதன்முதலில் நுழையக் காரணமான குளித்தலை தொகுதியை உள்ளடக்கிய மாவட்டம் இந்த மாவட்டம்.

தலைவர் கலைஞர் அவர்களின் சட்டமன்ற வாழ்க்கை கருவான ஊர் இந்த கரூர் மாவட்டம். அமைச்சர் செந்தில்பாலாஜி என்னை மக்கள் கடல் அலையில் மிதக்க வைத்துள்ளார். நேற்று இரவிலிருந்து இந்த நிமிடம் வரையில். அதற்காக மீண்டும், மீண்டும் உங்கள் அனைவரின் சார்பில் என்னுடைய வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்தக் கூட்டத்தின் வாயிலாக ஒரு கோரிக்கையை கரூர் மாவட்ட தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் கரூர் மாவட்ட மக்களுக்கு நான் வைக்க விரும்புகிறேன். என்னவென்று கேட்டால், நமது மாநிலத்தினுடைய தொழில் துறையில் மிகவும் முன்னேறிய மாவட்டங்களில் ஒன்றாக திகழக்கூடிய இந்த கரூர் மாவட்டம். ஜவுளி உற்பத்தித் தொழில், கொசு வலை உற்பத்தி, வாகனங்களுக்கு கூண்டுகள் கட்டுதல், முருங்கை ஏற்றுமதி போன்ற பல்வேறு துறைகளில் நம்முடைய மாநிலத்தில் முதன்மை மாவட்டமாக இந்த மாவட்டம் விளங்குகிறது. இந்தத் தொழில் வளர்ச்சியில் கரூர் மாவட்டம் மேலும், மேலும் உயர்ந்து ஏற்றுமதியில் சிறந்து இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால் திருப்பூர் மாவட்டத்திற்கிணையாக வளர வேண்டும் என்பது என்னுடைய ஆசை. என்னுடைய கோரிக்கை. அதனை நீங்கள் நிறைவேற்றுவீர்களா? உங்களை தான் கேட்கிறேன், நீங்கள் நிறைவேற்றத் தயாராய் இருக்கிறீர்களா? எனவே அப்படிப்பட்ட உணர்வோடு நான் சொல்ல விரும்புவது மாவட்டங்களுக்குள் இத்தகைய ஆரோக்கியமான தொழில் போட்டிகள் இருக்கத்தான் வேண்டும். ஏன் என்று கேட்டீர்கள் என்றால், மாவட்டங்கள் வளர, மாநிலம் வளரும், அந்த வளர்ச்சிக்கு எந்நாளும் உதவக்கூடிய கலங்கரை விளக்காக திராவிட மாடல் ஆட்சி திகழும், திகழும் என்பதை இந்தக் கரூரில் வீரமாக நான் சூளுரைத்து விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories