தமிழ்நாடு

"மக்களுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க-வின் கொள்கை": முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை என்பதே எல்லா மக்களும், எல்லா நலனையும் பெற வேண்டும் என்பதுதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"மக்களுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க-வின் கொள்கை": முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.06.2022) வேலூரில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரை:-

வேலூர் என்பது வீரத்தின் அடையாளம். விவேகத்தின் அடையாளம். விடுதலையின் அடையாளம்.போர்க்களத்தின் அடையாளம். இத்தகு சிறப்புகள் அனைத்தும் பொருந்திய, நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும், சீர்மிகு மாவட்டமாம் வேலூரில் நடைபெறும் இந்த அரசு விழாவில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியாவின் முதலாவது சுதந்திரப் போராட்டம் 1857-இல் நடந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்வார்கள். அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக, அனலும் கனலும் தெறித்த ஊர்தான் இந்த வேலூர்.

1806-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் நாள் வேலூர் கோட்டையில் நடத்திய புரட்சிதான் அதனுடைய தொடக்கமாக அமைந்திருக்கிறது. இந்தியர்கள் அடிமைகளாக வாழத் தயாராக இல்லை என்பதை பிரிட்டிஷ் ஆட்சிக்கு அறிவித்தது. அத்தகைய எழுச்சி மிகுந்த ஊரில் இந்தக் கோட்டையில் இந்த விழா நடந்துகொண்டு இருக்கிறது.

"மக்களுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க-வின் கொள்கை": முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

இன்னொரு மகிழ்ச்சிக்குரிய பெருமை என்ன என்றால், என்னுடைய அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய என்னுடைய ஆருயிர் அண்ணன் துரைமுருகன் அவர்களின் மாவட்டமும் இதுதான். எனவே கூடுதல் மகிழ்ச்சியோடு நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன்.

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களும், இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களும் அடுத்தடுத்து நம்மை விட்டு விலகிய நிலையில், கழகத்தைக் கொண்டு செலுத்தக்கூடிய பெரும் கடமை, என்னுடைய தோளில் முழுமையாக விழுந்தது. அப்போது என்னைத் தாங்கி நிற்கக்கூடிய தூணாக இருந்தவர்தான் இங்கு இருக்கக்கூடிய அண்ணன் துரைமுருகன் அவர்கள்.

கட்சியைப் பொறுத்தவரை கழகத்தின் பொதுச்செயலாளராக, சட்டமன்றத்தைப் பொறுத்தவரையில் அவை முன்னவராக, ஆட்சியைப் பொறுத்தவரை அமைச்சராக இருந்து, எனக்கு வழிகாட்டும் திசைகாட்டியாக இருக்கிறார் அண்ணன் துரைமுருகன் அவர்கள்.

'துரை' - 'துரை' என்று தலைவர் கலைஞர் அவர்கள் எப்படி அவரை அழைத்து அருகில் வைத்துக் கொள்வாரோ, அதேபோல, என்னோடும் தோளோடு தோள் கொடுத்து நின்று வருகிறார் அண்ணன் அவர்கள். அவரை நான் சக அமைச்சராக அல்ல, என்னுள் ஒருத்தராக நினைத்துதான் அவரிடம் நான் அன்பு செலுத்தி வருகிறேன்.

"மக்களுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க-வின் கொள்கை": முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

என்னைச் சிறு வயது இளைஞராக பார்த்தவன் என்று அவர் அடிக்கடி எடுத்துச் சொல்வார். உண்மைதான். அவர் என்னை இளைஞராகப் பார்த்தவர், இன்று தலைவராகப் பார்க்கிறார். ஆனால், நான் உங்களை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் இடத்தில், இனமானப் பேராசிரியர் இடத்தில் வைத்துப் பார்க்கிறேன் என்று முன்பு ஒரு முறை சொன்னேன். அதையே இந்தக் கூட்டத்தில், இந்த விழாவில் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அண்ணன் துரைமுருகன் அவர்களின் பொதுவாழ்வுப் பொன்விழாவை முன்னிட்டு, சிறப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து நான் பேசினேன். சட்டமன்றத்தின் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தொடர்ந்து அவரை வாழ்த்திப் பேசினார்கள். அண்ணன் துரைமுருகன் அவர்கள் நூற்றாண்டு விழாவையும் காண வேண்டும் என்று அந்த எண்ணத்தை, எனது வாழ்த்துகளை உங்கள் அனைவரின் சார்பாகவும் அங்கு சொன்னது மட்டுமல்ல, இங்கும் அதை வழிமொழிய நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

நான் சிறப்பாக செயல்படுகிறேன், - வேகமாக உழைக்கிறேன் என்று சொன்னால், அதற்கு அண்ணன் துரைமுருகன் போன்ற என்னுடைய அமைச்சரவைச் சகோதரர்கள் அனைவரும் அளித்து வரும் ஒத்துழைப்பும், செயல்பாடுகளும்தான் காரணம்.

அனைத்துத் துறைகளிலும் இந்த அரசு சிறப்பாகச் செயல்படுகிறது என்று சொன்னால், அனைத்து அமைச்சர்களும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள் என்று பொருள்.

"மக்களுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க-வின் கொள்கை": முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

அனைத்துத் துறைகளும் வளர வேண்டும், அனைத்து மாவட்டங்களும் வளர வேண்டும், அனைத்துத் தரப்பு மக்களும் வளம்பெற்று பல்வேறு வாய்ப்புகள் பெருக வேண்டும் என்கிற உணர்வோடு பாடுபட்டுக் கொண்டிருக்கக்கூடிய அரசு தான் இந்த திராவிட மாடல் அரசு. அதுதான் இன்றைக்கு ஆட்சிப்பீடத்தில் இருக்கிறது. இந்த மாடல் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, காலையில் நான் சொன்னதுபோல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டக்கூடிய மாடல் என்று போற்றிப் புகழப்படக்கூடிய சூழலில், வேலூரில் இந்த அரசு விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணமான அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்களையும், அண்ணன் துரைமுருகன் அவர்களும் நானும் என்ன நினைக்கிறோம் என்பதை அறிந்து சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் செயல்வீரர் தம்பி நந்தகுமார் அவர்களையும், அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய டாக்டர் ஜெகத்ரட்சகன் அவர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர் தம்பி கதிர் ஆனந்த் அவர்களையும், சட்டமன்ற உறுப்பினர் வேலூர் கார்த்திகேயன் அவர்களையும், சகோதரி அமுலு விஜயன் அவர்களையும், மேயர், துணை மேயர் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அதேபோல, நம்முடைய மாவட்டத்தின் ஆட்சியர் திரு. குமாரவேல் பாண்டியன் ஐ.ஏ.எஸ் அவர்களையும், மற்றுமுள்ள அதிகாரிகளையும், அலுவலர்களையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன், அவர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்பிகிறேன்.

வேலூரில் அரசு நலத்திட்ட விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்ட நேரத்தில், கடந்த ஓராண்டு காலத்தில் இந்த மாவட்டத்திற்கு என்னென்ன பணிகளை செய்திருக்கிறோம்? என்னென்ன சாதனைகளைச் செய்திருக்கிறோம்? என்கின்ற பட்டியலை என்னுடைய அலுவலகத்தில் இருக்கக்கூடிய செயலாளர் அவர்களிடத்தில் நான் கேட்டேன், கொடுத்தார்கள். ஒரு புத்தகம் போடும் அளவுக்கு கட்டுகளாகக் கொண்டுவந்து கொடுத்தார்கள். “இவ்வளவும் இந்த ஓராண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களா, செய்யப்பட்ட உதவிகளா” என்று நானே சந்தேகப்பட்டு, வியந்து அவர்களைக் கேட்டேன். “ஆமாம்” என்று சொன்னார்கள். அவை அனைத்தையும் இந்த விழாவில் சொல்வதாக இருந்தால், கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஆகும். அந்தளவுக்கு மகத்தான சாதனைகளை இந்த ஓராண்டு காலத்தில் செய்துள்ள காரணத்தால், உங்கள் முன்னால் நான் கம்பீரமாக இன்றைக்கு நின்று கொண்டிருக்கிறேன்.

"மக்களுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க-வின் கொள்கை": முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

வேலூருக்கு என்னென்ன பணிகள் நடந்திருக்கிறது என்று இங்கு அமைச்சர்கள் சொன்னார்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சொன்னார்கள்.

வேலூர் மாநகராட்சியைப் பொறுத்தவரை ஏராளமான திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் 52 பணிகள், 963 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேர்வு செய்யப்பட்டு, 24 பணிகள் 334 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகொண்டா மற்றும் ஒடுக்கத்தூர் பேரூராட்சிகளில், சாலை மற்றும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பேரணாம்பட்டு நகராட்சியில் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

வருகந்தாங்கல் ரயில்வே பாலம் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

சிறுகளம்பூர் இருளர் இன மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடத்தில், இம்மாவட்டத்தில் 12 புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் துவக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம், 704 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூபாய் 61 கோடியே 55 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

45 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூபாய்

3 கோடியே 25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

7,305 அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு ஒரு கோடியே 73 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

346 புதிய சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கிறது.

கூட்டுப் பண்ணைத் திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட 16 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கும் ரூபாய் 80 இலட்சம் மூலநிதி வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டு காலமாக 4,647 இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் 7897 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

முதல்வரின் முகவரி திட்டத்தின்கீழ் 34,672 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

சமூகப் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் 12,415 தகுதியுடைய நபர்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

1,915 உழவர்களுக்கு உழவர் பாதுகாப்புத் திட்ட நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

230.81 ஹெக்டேர் பரப்பளவுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

- இப்படி நான் சொல்லிக் கொண்டே போகலாம்.

இங்கு இருக்கின்ற அரசு அதிகாரிகள் “அந்தத் திட்டத்தை சொல்லவில்லையே, இந்த திட்டத்தைச் சொல்லவில்லையே” - என்று நினைக்கலாம். ஒவ்வொரு துறையிலும் பல்வேறு பணிகளைச் செய்தாலும், அதில் ஒன்றிரண்டை நேரத்தின் அருமை கருதி நான் சிலவற்றை மட்டும் சொல்லியிருக்கிறேன். எனவே “நமது துறையைச் சேர்ந்த திட்டங்களை எல்லாம் முதலமைச்சர் அவர்கள் சொல்லாமல் விட்டு விட்டாரே!” என்று சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்த அதிகாரிகள் வருத்தப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அந்த வகையில், இப்போதும் பல பணிகள் இந்த வேலூர் மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பாலாற்றின் குறுக்கே பொய்கை கிராமத்தில் தடுப்பணை, சேண்பாக்கம் கிராமத்தில் தரைகீழ் தடுப்பணை, அகரம் ஆற்றின் குறுக்கே கோவிந்தம்பாடி கிராமத்தில் தடுப்பணை, பொன்னையாற்றின் குறுக்கே குகையநல்லூர் கிராமத்தில் தடுப்பணை - என 58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டும் பணிகள் விரைவில் துவங்கப்பட இருக்கிறது.

பழுதுபார்த்தல், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் திட்டத்தின் (RRR) கீழ், பின்வரும் 9 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

முத்துக்குமரன் மலை முதல் பீஞ்சமந்தை பழங்குடியின மலை கிராமம் வரை, 6.55 கிலோமீட்டர் தூரம் தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பேரணாம்பட்டு நகராட்சியில், அண்ணாநகர் சிறுவர் விளையாட்டுப் பூங்கா அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் நகராட்சியில் தார்ச்சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கரிகிரி, தொரப்பாடி மற்றும் பத்தலபல்லி ஆகிய பகுதிகளில் 864 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

நரிக்குறவர் இனமக்கள் 43 நபர்களுக்கு 98 இலட்சம் ரூபாய் மதிப்பிலான தொகுப்புவீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில், மேலும் சில புதிய திட்டங்களை இந்த விழா மூலமாக நான் அறிவிப்பதற்காகத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், நம்முடைய மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் இந்த மாவட்டத்தினுடைய மண்ணின் மைந்தன் அண்ணன் துரைமுருகன் அவர்கள் இந்த மேடையில் கலைஞர் காலத்தில், அதற்குப் பிறகு இப்போது நான் பொறுப்பேற்று நான் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய இந்த ஆட்சியின் மூலமாக எத்தனை திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, எதைக் கேட்டாலும் கொடுத்திருக்கிறார்கள், தட்டாமல் தந்திருக்கிறார்கள் என்று பெருமையோடு சொல்லி, இவ்வளவு திட்டங்களைப் பெற்றாலும் இன்னும் ஒரு திட்டம் பாக்கி இருக்கிறது என்று ஒரு கோரிக்கையை வைத்தார். அதாவது,

காட்பாடி வட்டம், மகிமண்டலம் கிராமத்தில், சுமார் 300 ஏக்கர் பரப்பளவில், புதியதாக சிப்காட் தொழிற்பேட்டை அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை நான் அமைச்சர் அவர்களுக்கு இங்கே நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இதன் மூலமாக, அவர் சொன்னது போல ஆயிரக்கணக்கானவர்களுக்கு, இந்த மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு நிச்சயமாக வேலைவாய்ப்பு உருவாகும்.

வேலூர் வட்டம், மேல்மொணவூர் மற்றும் அப்துல்லாபுரம் கிராமப் பகுதிகளில்,

சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் டைடல் பார்க் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காட்பாடி வட்டம், சேர்க்காடு கிராமத்தில், சுமார் 6 ஏக்கர் பரப்பளவில், புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அணைக்கட்டு வட்டம், பள்ளிகொண்டா பேரூராட்சியில், புதிய உழவர் சந்தை அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.

வேலூர் வட்டச்சாலையானது 9 கிராமங்களின் வழியே, 13.7 கிலோமீட்டர் நீளத்தில், சுமார் 325 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட இருக்கிறது. தற்போது நில எடுப்புப் பணிகள் நிறைவடையக்கூடிய தருவாயில் உள்ளது.

காங்கேயநல்லூர் முதல் சத்துவாச்சாரி வரை பாலாற்றின் குறுக்கே, சுமார் 120 கோடி மதிப்பீட்டில், 3.2 கி.மீ நீளத்தில், உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட இருக்கிறது.

குடியாத்தம் புறவழிச்சாலை, 7 கிராமங்களின் வழியே 7 கிலோமீட்டர் நீளத்தில் சுமார் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட இருக்கிறது.

வேலூர் புறவழிச்சாலைகள் 13 கிராமங்களின் வழியே, 21 கிலோமீட்டர் நீளத்தில், சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட இருக்கிறது.

காட்பாடி வட்டம் சேர்க்காடு கிராமத்தில், சுமார் 6 ஏக்கர் பரப்பளவில், பன்னோக்கு அரசு மருத்துவமனை அமைக்கப்பட இருக்கிறது.

வல்லம் மற்றும் கீழ்ப்பள்ளிக் குப்பம் ஆகிய கிராமங்களுக்கிடையே இரயில்வே மேம்பாலம் (LC 109), சுமார் ரூ.181 கோடி மதிப்பீட்டில் அது அமைக்கப்பட இருக்கிறது.

அணைக்கட்டு ஒன்றியத்தில், பீஞ்சமந்தை, ஜர்தான்கொள்ளை மற்றும் பாலாம்பட்டு கிராமங்களில் உள்ள, 73 கிராமங்களில் சுமார் 18 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிக்கு நல்ல சாலை இணைப்பு வழங்கி, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட, 34 கோடி ரூபாய் செலவில் தரமான தார்சாலைகள் அமைக்கப்படும்.

வேலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் பல கிராமங்களின் சாலை இணைப்பு வசதி துண்டிக்கப்பட்டு, அந்த கிராமங்களில் வசிக்கக்கூடிய மக்கள் பல்வேறு இன்னலுக்கு உள்ளாகின்றார்கள். இதனை சரிசெய்யக்கூடிய வகையில், காட்பாடி ஒன்றியத்தில் ஒரு சாலையிலும், குடியாத்தம் ஒன்றியத்தில் இரண்டு சாலைகளிலும், பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் ஒரு சாலையிலும், அணைக்கட்டு ஒன்றியத்தில் இரண்டு சாலைகளிலும் 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலங்கள் அமைக்கப்படும்.

கே.வி.குப்பம் வட்டத்தில் உள்ள விரிஞ்சிபுரத்திலும், வேலூர் வட்டத்திலுள்ள கீழ்மொணவூரிலும், பாலாற்றின் கரையில் வெள்ளச் சேதங்களை தவிர்த்திட,

7 கோடி ரூபாய் செலவில் வெள்ளத்தடுப்புப் பணிகள் செயல்படுத்தப்படும்.

- ஆகிய திட்டங்களை நான் முதல்கட்டமாக அறிவித்திருக்கிறேன். இன்னும் பல சிறப்பான திட்டங்கள் வர இருக்கின்றன.

வேலூர் மாவட்டத்தில் என்னென்ன பணிகள் நடந்திருக்கிறது, நடக்கப் போகிறது என்பதை சொன்னேன். இதேபோல, அனைத்து மாவட்டங்களிலும் பணிகள் நடந்து வருகிறது.

கடந்த பத்தாண்டு காலத்தில் செய்யத் தவறிய அனைத்துப் பணிகளையும், கடந்த ஓராண்டு காலத்தில் செய்து முடித்திருக்கிறோம் என்கிற அந்த நெஞ்சை நிமிர்த்தி இன்றைக்கு நான் உங்கள் முன்னால் நின்றிருக்கிறேன். இப்படி, அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு பணிகளைச் செய்வதன் மூலமாகத்தான், தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் சிறந்த மாநிலமாக நாம் வளர்த்தெடுக்க முடியும். தமிழ்நாட்டை, இன்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், அண்ணாந்து பார்க்கும் நிலையில் வைத்திருக்கிறோம். நமது நாட்டின் வளர்ச்சியிலும், ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களிலும், தமிழ்நாடு எவ்வளவு அதிகமான பங்களிப்பைத் தருகிறது என்பதை அண்மையில் பாரதப் பிரதமர் அவர்கள் சென்னையில் வந்திருந்தபோது அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு அவர் முன்னிலையிலேயே சொன்னேன். பத்திரிகையில் படித்திருப்பீர்கள், ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்.

இந்தியாவினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு!

ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு!

இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4 விழுக்காடு!

இந்தியாவின் ஜவுளித் துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு!

கார்கள் ஏற்றுமதியில் 32.5 விழுக்காடு!

தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு!

ஆனால், நமது தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசால் பகிர்ந்தளிக்கப்படுவது 1.21 விழுக்காடு மட்டுமே! தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள், நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதாரத்திற்கும் அளிக்கக்கூடிய பங்கிற்கு ஏற்ப, ஒன்றிய அரசும், திட்டங்களிலும் நிதியிலும், தனது பங்களிப்பை உயர்த்த வேண்டும் என்று மாண்புமிகு பிரதமரை மேடையில் வைத்துக் கொண்டு நான் பேசும்பொழுது இந்தக் கோரிக்கையை எடுத்து வைத்தேன். உரிமையோடு கேட்டேன். மாநில சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி என்ற உணர்வோடு குறிப்பிட்டேன். அதுதான் உண்மையான கூட்டுறவுக் கூட்டாட்சியாக அமையும் என்றும் சொன்னேன்.

நிதி உரிமைகளைக் கேட்பது என்பது, ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்குக் கொண்டு வருவதற்காகத்தான். இந்த மாநிலத்தின் உரிமைகளைப் பெறுவதற்காகதான், எந்த சமரசத்துக்கும் இடமில்லாமல் போராடும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கிறது.

"மக்களுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க-வின் கொள்கை": முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமென்றால், மேகதாது அணை பிரச்சினை. தமிழ்நாட்டு மக்களின் உயிர்நாடியான பிரச்சினைகளில் ஒன்று காவிரிப் பிரச்னை. தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரில் முழு உரிமை இருக்கிறது. எனவே, காவிரி நீர் உரிமையைப் பெறுவதில், திராவிட முன்னேற்றக் கழக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடும்! வாதாடும்! என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். தனது உரிமையை நிலைநாட்டும்! என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதன்படிதான் இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு - மேகதாது என்ற புதிய அணையைக் கட்டத் திட்டமிட்டிருக்கிறது. அதைத் தொடக்கத்தில் இருந்தே நாம் எதிர்த்து, தடுத்து வருகிறோம். ஆனாலும் அவ்வப்போது நேரம் கிடைக்கிறபொழுது எல்லாம், பொழுது போகவில்லை என்றால், உடனே அதைப் பற்றி தொடங்கிவிடுகிறார்கள். அணை கட்ட நிதி ஒதுக்குவது, சட்டம் போடுவது, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது, டெல்லிக்குப் படையெடுப்பது என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அப்படிச் செய்யும்போதெல்லாம், நாமும் அவற்றுக்குத் தடுப்பணை போடும் காரியங்களைச் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறோம்.

இரண்டு வாரங்களுக்கு முன்னால், கர்நாடக அரசு இதில் அதிகமான முனைப்பைக் காட்டியது. காவிரி ஆணையத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டுமென்று சொன்னார்கள். உடனடியாக, நான் பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். மேகதாது தொடர்பாக விவாதிக்கக் கூடாது அப்படி என்று வலியுறுத்தி, வற்புறுத்தி பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்.

இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் அவர்கள், டெல்லி சென்று ஒன்றிய அமைச்சரைச் சந்தித்து, மேகதாது அணைக்கு ஆதரவா பேசிவிட்டு வந்திருக்கிறார்கள். உடனடியாக, நம்முடைய நீர்வளத் துறை அமைச்சர், காவிரிப் பிரச்சனையில் அத்துப்பிடி அவருக்கு. எந்த நேரத்தில், எதைக் கேட்டாலும், தூங்கிக் கொண்டிருக்கும் போது எழுப்பிக் கேட்டால் கூட அந்த காவிரிப் பிரச்சனையில் பட்டு, பட்டு என்று அப்படி Finger tips-ல் வைத்திருப்பார். அவர் தான் அன்றைக்கு அந்தத் துறையினுடைய அமைச்சராக பொறுப்பேற்றிருக்கக்கூடியவர். ஆகவே அவருடைய தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் எல்லாம் அழைத்துப் பேசி முடிவெடுத்து, ஒரு குழு அமைத்து, அந்தக் குழு டெல்லிக்கு போனது. அவருடைய தலைமையில் தான் போனார்கள். ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சரைச் போய் சந்தித்து நமது தரப்பினுடைய வாதங்களை வலியுறுத்தி சொல்லியிருந்தார்கள். ஆகவே டெல்லிக்கு சென்று அமைச்சரை சந்தித்து “தமிழகத்துக்கு உடன்பாடு இல்லாமல், எந்தக் காரியத்தையும் காவிரிப் பிரச்னையில் செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று ஒன்றிய அமைச்சரிடம் வாக்குறுதி பெற்று வந்திருக்கிறது நம்முடைய குழு. அந்த உறுதியைப் பெற்றுத்தான் அண்ணன் துரைமுருகன் அவர்கள் சென்னைக்கு வந்தார்கள்.

அதேபோல், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க மாட்டோம் அப்படி என்று அந்த அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்கள். இப்போது தற்சமயத்தில், கூட்ட விவரத்தில் இருந்து மேகதாது விஷயத்தை நீக்கி விட்டார்கள்.

நான் என்ன சொல்கிறேன் என்றால், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பின்படி, தொடர்புடைய மாநிலத்தின் அனுமதியைப் பெறாமல், ஒன்றிய அரசின் அனுமதியையும் பெறாமல் அணையைக் கட்ட முடியாது.

ஆகவே, கர்நாடக அரசின் முடிவானது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது! எனவே, கர்நாடக அரசுக்கு எந்தவிதமான தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் அனுமதியையும், ஒன்றிய அரசு தரக்கூடாது என்பதை இந்தக் கூட்டத்தின் வாயிலாகவும் நான் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இப்படி தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளுக்காகவும், எந்த சமரசங்களுக்கும் இடமில்லாமல் போராடக்கூடிய, வாதாடக்கூடிய அரசு தான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு.

நிதி உரிமை வேண்டும் –

சமூகநீதி உரிமை வேண்டும் –

காவிரி உரிமை வேண்டும் –

கல்வி உரிமை வேண்டும் –

என்று குரல் கொடுப்பதால், இது ஏதோ ஒன்றிய அரசுக்கு எதிரான குரலாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஒரு சிலரால். இல்லை! இவை அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆதரவான குரல்கள்தான் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. ஆளும் கட்சியாக இருக்கும்போதும், தீட்டக்கூடிய திட்டமாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருக்கும்போது வைக்கும் கோரிக்கையாக இருந்தாலும் சரி, அவை அனைத்தும் தமிழ்நாட்டின் அனைத்து மக்களுடைய நலனுக்காக மட்டுமே! அப்படித்தான் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை என்பதே எல்லா மக்களும், எல்லா நலனையும் பெற வேண்டும் என்பதுதான். மக்களுக்காகத்தான் எங்களது கொள்கையே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, ஏழை, எளிய நடுத்தர வகுப்பு மக்களுக்காகவே பிறந்து, மக்களுக்காகவே வாழ்ந்து இன்றும் நம்மை இயக்கிக் கொண்டு இருப்பவர்கள்தான், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களும்.

95 வயதில், மூத்திரவாளியைத் தூக்கிக் கொண்டு, தமிழ்ச் சமுதாயத்துக்காக உழைத்தவர் தந்தை பெரியார் அவர்கள்.

புற்றுநோய் தன்னைத் துன்புறுத்திய நிலையிலும், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை உருவாக்கி நல்ல பல திட்டங்களை நிறைவேற்றிவிட்டு மறைந்தார் நம்முடைய பேரறிஞர் பெருந்தகை அண்ணா.

14 வயதில் தமிழ்க்கொடி தாங்கி, போராட்டக் களத்துக்கு வந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் 95 வயது வரையிலும் ஓயாமல் இந்த இனத்துக்காகப் போராடினார்.

இவர்களது வாழ்க்கையே ஒரு கொள்கைப் பாடம்!

மக்களுக்காகப் போராடு -

மக்களுக்காக வாதாடு -

மக்களுக்காகச் சேவை செய் -

மக்களுக்குத் தேவையானதை மட்டுமே செய் –

என்பதையே இவர்கள் மூவரும் இன்றைக்கும் நமக்கு உணர்த்திக் கொண்டு இருக்கிறார்கள்.

அத்தகைய மக்கள் நலனுக்காகவே, இத்தகைய விழாக்களை மாவட்டம்தோறும் அரசு விழாக்களாக மட்டுமல்ல, மக்கள் விழாக்களாகவே நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அந்த வகையில் இப்போது அமைந்துள்ள ஆட்சி, மக்களாட்சியாகத் தொடங்கியது!

மக்களாட்சியாகவே தொடரும்! தொடரும்! தொடரும்! என்று கூறி விடைபெறுகிறேன்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories