மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு கலைஞரின் பிறந்த நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து மதுரை மாவட்டம், புது நத்தம் சாலையில் 6 தளங்கள் கொண்ட கலைஞர் நினைவு நூலகத்திற்கான கட்டுமானப் பணிகளை ஜனவரி 11ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இதையடுத்து நேற்று மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிட்டத்தட்ட கலைஞர் நினைவு நூலக கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளையும், கலைஞர் நினைவு நூலகம் அமைக்கும் பணியையும் ஒப்பிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களை உறுப்பினர் சு.வெங்கடேசனின் சமூகவலைதள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
மதுரை மக்களை உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டரில், ”அறிவிக்கப்பட்ட 8 மாதங்களில் உயர்ந்து நிற்கும் மதுரையின் கலைஞர் நினைவு நூலகம். அடிக்கல் நாட்டி 40 மாதங்களைக் கடந்தும் ஒற்றைச் செங்கலோடு நிற்கும் மதுரை எய்ம்ஸ். இரண்டும் மதுரையின் சாட்சிகள்!” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. பின் 2018 ல் மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, 2019 ஜனவரி 27ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டும்போது 45 மாதங்களில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அடிக்கல் நாட்டப்பட்ட ஒன்றை செங்கல்லோடு கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் சு.வெங்கடேசன் கலைஞர் நினைவு நூலகத்தையும், எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளையும் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.