தமிழ்நாடு

“திமுக அரசின் திட்டங்களை ஒரே பெயரில் சொல்ல வேண்டும் என்றால், அதுதான் 'திராவிட மாடல்'” : முதல்வர் பேச்சு!

பேரறிஞர் அண்ணா சொன்ன, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!” என்கிற அந்த முழக்கத்தைத்தான் நாம் திட்டங்களின் வாயிலாக செயல்படுத்தி வருகிறோம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“திமுக அரசின் திட்டங்களை ஒரே பெயரில் சொல்ல வேண்டும் என்றால், அதுதான் 'திராவிட மாடல்'” : முதல்வர் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (8.06.2022) சிவகங்கை மாவட்டம், காரையூரில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி, பின்னர் விழாவில் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வீரம் விளைந்த இந்த சிவகங்கை மண்ணில் நடைபெறும் இந்த சிறப்பான விழாவில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

யாருக்கும் அஞ்சாத முத்து வடுகநாதர்- அந்த முத்து வடுகநாதர் மரணத்துக்குப் பிறகு தன்னோடு தாலியை காணிக்கையாக்கி, களத்தில் குதித்த வீரமங்கை தான் வேலுநாச்சியார் அவர்கள். அவர்களுக்குப் பிறகு, அவர்களுடைய மகள் வெள்ளை நாச்சியார் என்று மண்ணைக் காக்க, குடும்பம் குடும்பமாகத் தியாகம் செய்த பூமி தான், இந்த சிவகங்கை பூமி என்பதைப் பெருமையோடு நான் குறிப்பிட விரும்புகிறேன்.

இந்தியாவின் விடுதலைக்காகப் போராடுவதில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்த மண்தான், இந்த சிவகங்கை சீமை!

வீரத்துக்கு - மருது சகோதரர்கள்!

கவிதைக்கு - கவியரசு கண்ணதாசன்!

இறையியலுக்கு - தவத்திரு குன்றக்குடி அடிகளார்!

என்று இந்த தமிழினத்துக்கு பெருமதிப்புக்குரியவர்களை வாரி வழங்கிய மண், இந்த மண்! அத்தகைய சிறப்புக்குரிய இந்த மண்ணில் அரசின் சார்பிலே நிறைவேற்றப்பட்ட, நிறைவேற்றப்படவிருக்கக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த மாவட்டத்தில் அமைச்சராக இருக்கக்கூடியவர் ஊரக வளர்ச்சித் துறையினுடைய அமைச்சராக பொறுப்பை ஏற்றிருக்கிறார், என்னுடைய அருமை சகோதரர் பெரியகருப்பன் அவர்கள். பெயரைப் போலவே பெரிய விழாவாக இதை நடத்திக் கொண்டிருக்கிறார்.

பெரிய செயலுக்குரியவர் -

பெரிய சிறப்புக்குரியவர் -

பெரிய மீசைக்குரியவர்

அந்த வகையில் என்னுடைய பாராட்டுக்குரியவர் நம்முடைய பெரியகருப்பன் அவர்கள்!

இந்த மாவட்டத்தில் மட்டுமல்ல, அவர் ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஊரக வளர்ச்சித்துறையில் எந்தத் திட்டமாக இருந்தாலும், அதை கண்ணும் கருத்துமாகக் கவனித்து நிறைவேற்றக்கூடியவராக பெரியகருப்பன் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்போடு ஏற்பாடு செய்திருக்கக்கூடிய அவருக்கும், சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கும், ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், அதற்கு துணைநின்று பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய அரசு அலுவலர்கள் அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ‘கோட்டை வேங்கைப்பட்டி’ கிராமத்தில் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாக தந்தை பெரியார் பெயரில் அமைந்திருக்கக்கூடிய தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தைத் திறந்து வைத்துவிட்டு இந்த நிகழ்ச்சிக்கு வந்தததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நம்முடைய உள்ளத்தில் என்றைக்கும் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய கனவுத் திட்டங்களில் ஒன்று தான் சமத்துவபுர திட்டம்!

'சாதியை ஒழித்தல் ஒன்று -

தமிழை வளர்த்தல் மற்றொன்று' - என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடினார்.

இந்த அடித்தளத்தில் உருவாக்கப்பட்டதுதான் நம்முடைய திராவிட இயக்கம்!

தந்தை பெரியார் அவர்களின் கொள்கையினை நிலைப்படுத்தும் வகையிலும், பேரறிஞர் அண்ணாவின் கோட்பாடுகளை செயல்படுத்தும் விதமாகவும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள், அவர்களால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய சமத்துவபுரங்கள், அந்த எண்ணத்திலே தான் சமத்துவபுரத்தை உருவாக்கி, சமூகநீதியினை நிலைநாட்டி, அனைத்து சமுதாய மக்களும் சாதி-மத பேதமின்றி, சமுதாயத்தில் மட்டுமல்ல, சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி ஒரே குடும்பமாக, சமத்துவமாக வாழ வேண்டும் என்று கனவு கண்டார்.

1997-ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்களின் பெயரில் சமத்துவபுரத்தினை ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் சமத்துவபுரங்களைக் கட்டி, சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு புதிய ஒளியைக் காட்டினார்.

சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 9 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டது. அதில், 8 சமத்துவபுரங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு, நாம் ஆட்சிப் பொறுப்பில் அன்றைக்கு இருந்தபோதே அது வழங்கப்பட்டது. பெரியகருப்பன் அவர்கள் சொன்ன மாதிரி, இந்த கோட்டை வேங்கைப்பட்டி சமத்துவபுரமும் முன்கூட்டியே செயல்பட்டிருக்க வேண்டும்.

இந்த கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத்திற்கு 2010-2011-ஆம் நிதியாண்டில் அனுமதி அளிக்கப்பட்டது. 207 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் காரணமாக, இந்தச் சமத்துவபுரம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.

இந்த நிலையில்தான், தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு, மன்னிக்க வேண்டும், நம்முடைய அரசு அமைந்ததற்குப் பிறகு, 317 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முழுமையாக சரிசெய்யப்பட்டு, பழுது பார்க்கப்பட்டு, புனரமைக்கப்பட்டு பயனாளிகளுக்கு இன்றைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மக்களுக்கான திட்டங்களைக் கடந்த அ.தி.மு.க. அரசு எப்படியெல்லாம் பாழ்படுத்தியது என்பது இந்த விழாவை சாட்சியாக நீங்கள் பார்க்கலாம். கடந்த ஆட்சியானது மக்களுக்கான ஆட்சியாக இல்லாமல், அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சியாக இருந்த காரணத்தால் தான் இப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள்.

❖ இந்தச் சமத்துவபுரத்தில் 12 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

❖ ஒவ்வொரு வீடும் 290 சதுர அடியில் 1 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், குடிநீர் வசதி, மின்வசதி, மழைநீர் சேகரிப்பு தொட்டி,வீ ட்டுக்காய்கறி தோட்டம், மூலிகைத் தோட்டம், வீட்டிற்கு 2 தென்னை மரங்கள், கழிப்பிட வசதி போன்றவைகள் இணைத்து 5 சென்ட் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

❖ 15 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

❖ அது மட்டுமல்ல, அறிஞர் அண்ணா விளையாட்டுத் திடல்,

❖ அதேபோல, குழந்தைகள் விளையாட கலைஞர் சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

❖ சமத்துவபுரத்தின் முகப்பில் தந்தை பெரியாரின் மார்பளவு சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது.

❖ அங்கு வசிக்கும் 100 குடும்பங்களுக்கும், அரசால் வழங்கப்படும் குடிமைப்பொருட்கள் நியாய விலைக்கடையும் அமைக்கப்பட்டிருக்கிறது.

❖ அனைத்து தெருக்களிலும் மின் விளக்குகளும்,

❖ மழைக்காலத்தில் தெருக்களில் தண்ணீர் தேங்காத வகையில் மழைநீர் வடிகால்களும் அமைக்கப்பட்டிருக்கிறது.

❖ 54 லட்சத்து 29 ஆயிரம் ரூபாயில் அனைத்து தெருக்களும் தார் சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளன.

❖ அதோடு, அங்கன்வாடி மையம் மற்றும் நூலகம் மறைந்த அமைச்சராக இருந்த நம்முடைய மதிப்பிற்குரிய மாதவன் அவர்கள் பெயரிலே தான் அந்த நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதெல்லாம் அனைத்துச் சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ, ஒருமித்த கருத்தோடு வாழ முன்னெடுப்பட்டிருக்கக்கூடியது மட்டுமல்ல, இந்தச் சமத்துவபுரங்களில், வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் நீங்கள் வாழ்ந்து, இந்த நாட்டிற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். உங்களைப் பார்த்து அனைவரும் சமத்துவத்தைப் போற்றி, “இந்த நாடே சமத்துவபுரமாகத் திகழ வேண்டும்” என்ற நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எண்ணத்தை நாம் நினைவாக்க வேண்டும்!

சமத்துவபுர திறப்புவிழா மட்டுமல்ல, பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படக்கூடிய விழாவாக இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

❖ நெடுஞ்சாலைத்துறை சார்பில் 63 கோடியே 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 51 திட்டப்பணிகளும்,

❖ ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 42 கோடியே 48 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 69 பணிகளும்,

❖ நீர்வளத்துறையின் சார்பில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1 திட்டப்பணிக்கும்,

❖ நெடுஞ்சாலைத்துறையின் (நபார்டு) சார்பில் 4 கோடியே 95 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 1 திட்டப்பணிக்கும்,

❖ மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 1 கோடியே 90 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 5 பணிகளும் - என மொத்தம் 119 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில், 127 பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை நான் இந்த மேடையில் உங்களுக்கு முன்னால் நிறைவேற்றியிருக்கிறேன்.

அதேபோல் இந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய மக்கள் பயன்பெறக்கூடிய வகையில், தொடங்கி வைக்கக்கூடிய பணிகள் என்னவென்று சொன்னால்,

❖ தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், 5 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 1 திட்டப்பணியும்,

❖ பேரூராட்சிகள் துறையின் சார்பில், 5 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 3 திட்டப்பணிகளும்,

❖ ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், 3 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 22 திட்டப்பணிகளும்,

❖ நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1 திட்டப்பணியும்,

❖ வேளாண்துறையின் சார்பில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1 திட்டப்பணியும்,

❖ தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி கழகத்தின் (தாட்கோ) சார்பில், 1 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 4 திட்டப்பணிகளும்,

❖ மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 6 திட்டப்பணிகளும்,

❖ தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 2 திட்டப்பணிகளும்,

❖ பொதுப்பணித்துறையின் (கட்டடம் மற்றும் பராமரிப்பு) சார்பில், 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 1 திட்டப்பணியும்,

❖ கூட்டுறவுத்துறையின் சார்பில், 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 2 திட்டப்பணிகளும்,

❖ கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) சார்பில், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 1 திட்டப்பணியும் இங்கு தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. ஆக மொத்தம் 24 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 44 பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்றைக்கு இந்த விழாவின் மூலமாக அர்ப்பணிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், சமுதாய வங்கி பெருங்கடன், சமுதாய முதலீட்டு நிதி, தனிநபர் கடன் உட்பட 17 ஆயிரத்து 438 பயனாளிகளுக்கு 40 கோடியே 82 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.

தனிநபர் பண்ணைக் குட்டை அமைத்தல், ஊரக வீட்டுவசதித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் 14 ஆயிரத்து 300 பயனாளிகளுக்கும், டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு உதவித் திட்டம்,

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின்கீழ், மருந்து பெட்டகங்கள் வழங்குதல் உட்பட 7 ஆயிரத்து 665 பயனாளிகளுக்கும்,

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 4 ஆயிரத்து 84 பயனாளிகளுக்கும்,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 2 ஆயிரத்து 970 பயனாளிகளுக்கும்,

தொழிலாளர் நலன் துறை சார்பில் 2 ஆயிரத்து 550 பயனாளிகளுக்கும்,

கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், 2 ஆயிரத்து 357 பயனாளிகளுக்கும்,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், ஆயிரத்து 566 பயனாளிகளுக்கும்,

கூட்டுறவுத் துறையின் சார்பில் ஆயிரத்து 486 பயனாளிகளுக்கும்,

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 806 பயனாளிகளுக்கும்,

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் 521 பயனாளிகளுக்கும்,

மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் உயர்கல்வி மற்றும் வங்கிக்கடனாக 264 பயனாளிகளுக்கும்,-

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 238 பயனாளிகளுக்கும்,

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மகளிருக்கான உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம் உட்பட 229 பயனாளிகளுக்கும்,

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், பயனாளிகள் பங்களிப்புடன் மலிவு விலையில் வீடு திட்டம்,

பயனாளிகள் தாங்களாகவே வீடு கட்டும் திட்டத்தின்கீழ், 121 பயனாளிகளுக்கும்,

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், 75 சாலையோர வியாபாரிகளுக்கும்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் உதவி பராமரிப்புத் திட்டம்,

கொரோனா நோய்த்தொற்று நிவாரண நிதி உள்ளிட்ட 53 பயனாளிகளுக்கும்,

தாட்கோ நிறுவனத்தின் சார்பில்,

சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை உருவாக்கும் திட்டம்,

தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட 19 பயனாளிகளுக்கும்,

முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட 11 பயனாளிகளுக்கும்,

மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 1,359 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டைகளும்,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், ஆயிரம் பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டையினையும்,

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், 2 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையும் இங்கு வழங்கப்பட இருக்கிறது. இப்படி மொத்தம் 59 ஆயிரத்து 162 பயனாளிகளுக்கு 136 கோடியே 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.

இத்தனை திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் மட்டுமல்லாமல் இந்த மாவட்ட மக்கள் மேலும் பயனடையும் வகையில் பின்வரும் திட்டங்களை நான் அறிவிக்க விரும்புகிறேன்.

சிவகங்கை வட்டத்தில் இருக்கக்கூடிய பல கிராமங்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில், சீல்டுகால் கால்வாயை புனரமைக்கும் பணிகள் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இதனால் மேலப்பூங்குடி, சாலூர், சோழபுரம் மற்றும் நாலுகோட்டை கிராமங்களில் உள்ள கண்மாய்கள் நிறைந்து, 1800 ஏக்கர் வேளாண் நிலங்கள் இதனால் பயன்பெறும்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு சிகிச்சைகளை மேலும் சிறப்புடன் வழங்கிட, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவிற்கு 12 கோடி ரூபாய் செலவில் 100 படுக்கைகள் கொண்ட புதிய கூடுதல் கட்டிடம் அமைக்கப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவும், கடைக்கோடியில் இருக்கக்கூடிய குடிமகனுக்கும் சென்று சேர வேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய இலட்சியம், அரசினுடைய நோக்கம்!

இந்த நோக்கம் என்பது, பேரறிஞர் அண்ணா சொன்ன, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!” என்கிற அந்த முழக்கம்! அந்த முழக்கத்தைத்தான் நாம் திட்டங்களின் வாயிலாக செயல்படுத்தி வருகிறோம்.

இந்தத் திட்டங்களுக்கெல்லாம் கூட்டாக ஒரு பெயரிட வேண்டும் என்றால், அதுதான் ‘திராவிட மாடல்!’.

அரசின் திட்டங்களின் பயன் ஒவ்வொரு குடிமகனுக்கும் சென்று சேர்வதை நம்முடைய அரசு உறுதி செய்யும். இங்கே அமர்ந்துள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளும் அதனை நாள்தோறும் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டும்.

கழக ஆட்சி அமைந்த பிறகு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறேன், அடிக்கல் நாட்டுகிறேன், நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கும் தெரியும், அதை வழக்கமாக நான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.

புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதாக இருந்தாலும் சரி, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறேன்.

இப்படி ஒவ்வொரு மாவட்டமாக நானே நேரடியாகச் சென்று மக்களை சந்தித்து வருகிறேன். செல்லும் இடமெல்லாம், வழியெங்கும் சாலையோரங்களில் மக்கள் நின்று கொண்டு, மகிழ்ச்சியுடன் கையை அசைத்து, கரகொலி எழுப்பி, வணக்கம் செலுத்தி, ஆர்வத்தோடு அவர்களையெல்லாம் பார்க்கிறபோது, இதுதான் இந்த ஆட்சிக்கும், எனக்கும் தரப்படக்கூடிய நற்சான்று என்று நான் கருதுகிறேன்.

சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் இருந்ததைவிட, இப்போது அதிகமான அளவு, மூன்று மடங்கு, நான்கு மடங்கு எழுச்சி இன்றைக்கு மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது. காரணம் என்ன? மக்களுக்கு மிகமிக உண்மையாக இருப்பது, மக்களுக்கு நேர்மையான ஆட்சியை வழங்குவது தான் இதற்கு முக்கியக் காரணம்.

தேர்தலுக்கு முன்னால், எப்படி மக்களைச் சந்தித்து வந்தேனோ, அதைவிட அதிகமாகவே இப்போது நான் மக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். மக்களைத் தொடர்ச்சியாகச் சந்திப்பது, ஆட்சியாளர்களின் மிக முக்கியமான இலக்கணமாக நான் கருதுகிறேன்.

அண்மையில், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரும், பழுத்த அனுபவம் கொண்ட நாடாளுமன்றவாதியுமான மாண்புமிகு திரு. வெங்கையா நாயுடு அவர்களை அண்மையில் அழைத்தது எதற்கு என்றால், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையைத் திறந்து வைப்பதற்காக அழைத்திருந்தோம். அவரும் மகிழ்ச்சியோடு வந்தார், வந்து நிகழ்ச்சியில் மகிழ்ச்சியோடு பங்கேற்றார், மகிழ்ச்சியோடு பேசினார், சிறப்போடு பேசினார். எந்தவகையில் எல்லாம் சிறப்பாக கலைஞர் அவர்கள் ஆட்சி நடத்தினார்கள் என்பதை அவர் சுட்டிக் காட்டிப் பெருமைப்படுத்திப் பேசினார். அதோடு நிற்காமல், 'முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது வழித்தடத்தில் இப்போதைய முதலமைச்சரும் ஆட்சி நடத்தி வருகிறார்' என்று அவர் குறிப்பிட்டது தான் நமக்குப் பெருமை, என்னுடைய வாழ்வில் கிடைத்திருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பாராட்டாக நான் கருதுகிறேன்.

இந்தியாவின் பல்வேறு மாநில முதலமைச்சர்களை அறிந்த குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள், என்னையும் பாராட்டியும், தலைவர் கலைஞர் அவர்களைப் போல திறமையாக ஆட்சி நடத்துகிறேன் என்று ஒப்பிட்டுச் சொன்னது, எனக்குக் கிடைத்திருக்கக்கூடிய ஒரு மிகமிகப் பெரிய பாராட்டாக நான் கருதுகிறேன்.

தலைவர் கலைஞர் அவர்கள் இருந்த இடத்தை நான் நிரப்பிவிட்டேன் என்று சொல்லவில்லை. அவரது இடத்தை யாராலும், எந்தக் கொம்பனாலும் நிரப்பிட முடியாது. ஆனால் அவரைப் போலச் செயல்பட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், கடந்த ஓராண்டுகாலமாக என்னுடைய செயல்பாடு அமைந்துள்ளது. சொன்னார்களே, நம்பர் 1 முதலமைச்சர் ஆக, நம்பர் 1, நம்பர் 2, அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. தமிழ்நாடு நம்பர் 1-க்கு வர வேண்டும், அது தான் என்னுடைய லட்சியம். குடியரசுத் துணைத் தலைவரின் பாராட்டு அதனைத்தான் வெளிப்படுத்துகிறது என்று நினைத்து நான் பெருமை அடைகிறேன்.

'தமிழ்ச் சமுதாயத்துக்கு என்னால் முடிந்தவரை உழைத்துவிட்டேன். எனக்குப் பிறகு யார் என்று கேட்டால், தம்பி ஸ்டாலின்தான்' என்று தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு முறை சொன்னார். அந்த நம்பிக்கையை இந்த ஓராண்டுகாலத்தில் நான் காப்பாற்றி இருக்கிறேன். இனியும் தொடர்ந்து நான் காப்பாற்றுவேன்! அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

ஐந்து ஆண்டுகளில் செய்யவேண்டியதை இந்த ஓராண்டு காலத்தில் செய்திருக்கிறோம். இது ஏதோ ஆரம்ப கட்ட வேகம் என்று நீங்கள் நினைக்கலாம் -எல்லோரும் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். எப்போதும் இதே சுறுசுறுப்புடனும், இதே வேகத்துடனும் தான் நான் இருப்பேன். மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும், பாசமும் தான் என்னை இத்தகைய சுறுசுறுப்புடனும் வேகத்துடனும் பணியாற்ற வைக்கிறது. ஒவ்வொருவரும் காட்டும் அன்பிலும் அரவணைப்பிலும் தான் தமிழகம் அனைத்து வகையிலும் முன்னேற்றம் காணும்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பரந்துபட்ட அன்புப் பண்பாட்டைக் கொண்ட இனம் தான் இந்தத் தமிழினம். அந்தத் தமிழினம் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதற்கு எடுத்துக்காட்டாக, தமிழர்களின் தாய்மடியாக விளங்கும் கீழடி இருக்கக்கூடிய மாவட்டம் தான் இந்த சிவகங்கை மாவட்டம்!

அந்த கீழடியின் தொன்மையையும், அதன் மூலமாக தமிழினத்தின் கடந்த காலப் பெருமையையும் மீட்ட அரசுதான் இந்த அரசு. தமிழினத்தின் தொன்மையான பெருமைகளைப் பேசுவோம். அதற்காக அதை மட்டுமே பேசிக் கொண்டு இருந்துவிட மாட்டோம். நிகழ்கால மக்களை அனைத்து வகையிலும் மேன்மை அடைய வைப்போம். அதுதான் திராவிட முன்னேற்றக் கழக அரசு.

தமிழ்த் தொண்டு -

தமிழினத் தொண்டு -

தமிழ்நாட்டுத் தொண்டு

ஆகிய மூன்றையும் ஒருசேர நிகழ்காலத்தில் மட்டுமல்ல, வருங்காலத்திலும் வளமான வாழ்க்கைக்கு, வளமான தமிழ்நாட்டிற்கு வழிவகுப்போம் என்ற உறுதியை நான் இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்க விரும்புகிறேன்.

இங்கே கூட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கார்த்தி சிதம்பரம் அவர்கள், நாங்கள் ஏற்கனவே வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்து விட்டீர்கள், இப்போது ஒரு கோரிக்கை வைக்கிறேன், அதை நிறைவேற்றித் தர வேண்டும். யாரிடத்தில் சொன்னால் அது நடக்கும் என்று தெரிந்து நீங்களும் சொல்கிறீர்கள். வீரமங்கை வேலு நாச்சியாரை போற்றும் வகையில் சிவகங்கை நகரை தலைமையிடமாகக் கொண்டு, வீரமங்கை வேலு நாச்சியார் பெயரில் பெண் காவல் பயிற்சிக் கல்லூரி துவங்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார். நியாயமான கோரிக்கை. ஆனால் நான் சென்னைக்கு இன்று இரவு செல்கிறேன். நாளையே சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு கலந்துபேசி, ஆய்வு நடத்தி, அதைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, இந்தச் சிறப்பான நிகழ்ச்சியை எழுச்சியோடு நடத்திக் கொண்டிருக்கக்கூடிய திரு.பெரியகருப்பன், இந்த மாவட்டத்தினுடைய ஆட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இதில் பங்கேற்றிருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் மீண்டும் ஒருமுறை என்னுடைய நன்றி, நன்றி என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories