தமிழ்நாடு

”என்னுடைய மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘ஜெய்பீம்’ ”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

என்னுடைய மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘ஜெய்பீம்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

”என்னுடைய மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘ஜெய்பீம்’ ”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க.ஸ்டாலின் இன்று (06.06.2022) முத்தமிழ்ப் பேரவை 41-ஆம் ஆண்டு இசைவிழாவில் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி ஆற்றிய உரை :-

என்னைப் பொறுத்தவரையில், இது ஒரு வித்தியாசமான மேடையாக அமைந்திருக்கிறது. முதலமைச்சராக நான் பொறுப்பேற்றதற்குப் பிறகு பங்கெடுக்கும் முதல் இசை மேடையாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. அதற்காக நான் பெருமைப்படுகிறேன். இந்த விழாவிலே நான் விரும்பிப் பங்கெடுப்பதற்குக் காரணம், முத்தமிழ்ப்பேரவை என்பது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு. எனவே முத்தமிழ்ப் பேரவையின் சார்பில் அழைக்கிறார்கள் என்றால், என்னைப் பொறுத்தவரைக்கும் கலைஞரே என்னை அழைக்கிறார் என்கிற அந்த உணர்வோடு தான் இந்த நிகழ்ச்சியில் நான் பங்கெடுக்க வந்திருக்கிறேன்.

அதிலும் குறிப்பாக, என்னுடைய பெருமதிப்பிற்குரிய அமிர்தம் அவர்கள் அழைக்கிறார்கள் என்றால், அங்கும் நான் தட்டாமல் வருவேன், ஏன் என்றால், என்னைத் தட்டிக் கொடுத்து வளர்த்தவர். தட்டிக் கொடுத்து வளர்த்தவர் என்றால் அதில் இன்னொரு பொருளும் உண்டு, அவருக்கும் தெரியும், சிரித்த உங்களுக்கும் புரியும். மிகச் சிறுவயதில் இருந்தே என் மீது தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டவர் அமிர்தம் அவர்கள்.

நான் ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவராக, தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றி வருகிறேன் என்றால், என் வளர்ச்சிக்குப் பின்னால் எத்தனையோ பேருடைய வழிகாட்டுதல் இருந்திருக்கிறது. அதில் நிச்சயமாக நம்முடைய அமிர்தம் அவர்களும் இடம் பெறுகிறார் என்பதை நான் மறக்காமல் சொல்லியாக வேண்டும். அவருடைய அழைப்பை ஏற்று, இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன். இந்த முத்தமிழ்ப்பேரவை மட்டுமல்ல, இந்த ராஜரத்தினம் கலையரங்கமும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

வாசலில், அரங்கின் முகப்பில் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. 41-ஆவது ஆண்டு விழாவை நீங்கள் கொண்டாடிக்கொண்டு இருக்கிறீர்கள். 1975-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களின் ஆலோசனையின்படி, இந்த முத்தமிழ்ப்பேரவை தொடங்கப்பட்டது. எந்த அமைப்பையும் உருவாக்குவது மிகவும் சுலபம். ஆனால், உருவாக்கப்பட்ட அந்த அமைப்பை தொடர்ந்து செயலாற்ற வைப்பது என்பது கடினமான பணி. எவ்வளவோ சோதனைகளுக்கிடையில், எவ்வளவோ வேதனைகளுக்கிடையில், எவ்வளவோ பிரச்சனைகளுக்கிடையில், எவ்வளவோ சங்கடங்களுக்கிடையில் இதைக் கட்டிக் காத்து, இது இன்றைக்கு கம்பீரமாக 41-ஆவது இசை விழாவை நடத்திக் கொண்டிருக்கிறது. தலைவர் கலைஞர் அவர்கள் எப்படிப்பட்ட தீர்க்கதரிசி என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு அமைப்பை உருவாக்கி அதை நம்முடைய அமிர்தம் அவர்களின் கையில் ஒப்படைத்ததுதான்.

அமிர்தம் அவர்கள் கையில் ஒப்படைத்தால் தடையில்லாமல், தடங்கல் இல்லாமல், அதே நேரத்தில் தகுதியோடு இசை விழாக்களும் நடக்கும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் நம்பினார்கள். தலைவர் கலைஞர் அவர்களுக்குக் கொடுத்த அந்த வாக்குறுதியை நம்முடைய அமிர்தம் அவர்கள் நிறைவேற்றி வருகிறார் என்பதற்கு அடையாளம் தான் இந்த விழா என்பதை நான் பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டு காலமாகக் கொடிகட்டிப் பறந்த அனைத்து இசை மேதைகளும் பாடிய அரங்கமாகவும்; பரிசும், விருதும் பெற்ற இடமாகவும் இந்த முத்தமிழ்ப்பேரவை இருப்பதுதான் தலைவர் கலைஞர் அவர்களது எண்ணத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய மாபெரும் வெற்றி.

41-ஆவது ஆண்டு விழாவை இன்று கொண்டாடி, அந்த விழாவின் மூலமாக விருதுகளைப் பெற்றுள்ள விருதாளர்கள் அனைவரையும் முதலில் உங்கள் அனைவரின் சார்பில் நானும் பாராட்ட, வாழ்த்த, போற்ற கடமைப்பட்டிருக்கிறேன்.

இயல் செல்வம் விருது – நம்முடைய இளம் இயக்குநர் த.செ.ஞானவேல் அவர்களுக்குத் தரப்பட்டிருக்கிறது. அவர் பேசுகிறபோது சொன்னார், பெரியார் தோளில் அமர்ந்த காரணத்தால் அண்ணா எந்த அளவுக்கு உயர்ந்தார், அதேபோல், அண்ணாவினுடைய தோளிலே அமர்ந்த காரணத்தால் கலைஞர் எந்த அளவுக்கு உயர்ந்தார், கலைஞருடைய தோளிலே அமர்ந்த காரணத்தால் என்னைக் குறிப்பிட்டு எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறேன் என்று பெருமையோடு பேசினார். எனக்கு அதில் உடன்பாடு இருக்கிறதோ, இல்லையோ, நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும் எல்லோருடைய தோளோடு தோளாக இருந்து உங்களில் ஒருவனாக நான் என்றைக்கும் இருப்பேன் என்ற உணர்வோடு இருக்கக்கூடியவன் நான் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இல்லை என்பதை நான் தெளிவாக உணர்ந்திருக்கிறேன். என்னுடைய மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் அவர் இயக்கிய ‘ஜெய்பீம்’ படம். ஆக, ஞானவேல் அவர்களுக்கு இந்த விருதை இன்றைக்கு நாம் வழங்கியிருக்கிறோம். அவருக்கு நான் விருது அளிப்பதையும் மகிழ்ச்சியாகவே கருதுகிறேன்.

‘தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஞானவேல் அவர்கள், பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர், பல்வேறு புத்தகங்களை எழுதியவர், மொழிபெயர்ப்பாளர், கடந்த பத்து ஆண்டுகளாக திரைத்துறையில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எனப் பணியாற்றியிருக்கக்கூடியவர்.

அந்த வரிசையில் அவரது "ஜெய்பீம்" படம் பலரது மனச்சாட்சியை உலுக்கியது. என்னுடைய அருமை நண்பர் நடிகர் சூர்யா அவர்கள் அந்தப் திரைப்படத்தைப் பார்க்க வேண்டுமென்று சொல்லி எனக்கு அழைப்பு விடுத்தார், அதைப் போய்ப் பார்த்தேன். அந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, இரண்டு, மூன்று நாட்களுக்கு நான் தூங்கவேயில்லை.

சிறைச்சாலைச் சித்ரவதையை நீங்கள் அந்த சினிமாவில் பார்த்திருப்பீர்கள். ஆனால் நான் அதை உண்மையில் அனுபவித்தவன் ஓராண்டு காலம். அதனால், மற்றவர்களைவிட என்னை அந்தப் படம் கூடுதலாகப் பாதித்தது. இளம் வயதில், மிகப்பெரிய உயரத்தை அடைந்திருக்கக்கூடிய ஞானவேல் அவர்களை முத்தமிழ்ப்பேரவையுடன் இணைந்து நானும் உங்கள் அனைவரின் சார்பில் அவருக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இசைச் செல்வம் விருது - ராஜ்குமார் பாரதி அவர்களுக்குத் தரப்பட்டிருக்கிறது.

பாட்டுத் திறத்தாலே இவ்வையகத்தையே கவர்ந்திருக்கக்கூடிய மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரன் அவர் என்பதே அவருக்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப் பெரிய பெருமை. பாரதியாருக்கும் பாடுவதில் பெரும் விருப்பம் இருந்தது. ஆனால் அவர் முழுமையாக அந்தப் பணியைச் செய்யவில்லை. ஆனால், ராஜ்குமார் பாரதி வடிவத்தில் அந்த ஆசையை பாரதியார் அவர்கள் நிறைவேற்றிக் கொள்வதாக அது அமைந்திருக்கிறது.

ஐந்து வயதில் இசையைக் கற்றவர். இன்று இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் சென்று இசைக் கச்சேரிகளை நடத்துபவராக உயர்ந்து நிற்கிறார். பல்வேறு மொழித் திரைப்படங்களில் பாடியிருக்கிறார். பாரதியின் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர் பெறாத விருதே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு பெயரும், பெருமையும் பெற்றுள்ள ராஜ்குமார் பாரதியை மனதார நான் பாராட்டுகிறேன். உங்கள் அனைவரின் சார்பில் அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைச் சொல்ல விரும்புகிறேன்.

நாட்டிய செல்வம் விருது - வி.பி.தனஞ்சயன் அவர்களுக்கும், அவருடைய மனைவி சாந்தா தனஞ்சயன் அவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் நாட்டிய இணையர்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுமைக்கும் புகழ்பெற்ற நாட்டிய இணையர்களாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடியவர்கள்.

மூன்று வயதில் இருந்தே நாட்டியம் ஆடிய கால்கள் அவருடைய கால்கள். உலகப்புகழ் பெற்ற ருக்மணி அருண்டேல் அவர்களிடம் நாட்டியம் கற்றவர் அவர்கள். அடையாறில் பாரத கலாஞ்சலி என்ற பெயரில் நாட்டியப் பள்ளியை உருவாக்கி, தன்னைப் போலவே பல கலைஞர்களை தனஞ்செயனும், சாந்தா அவர்களும் உருவாக்கி வருகிறார்கள். அத்தகைய நாட்டிய இணையர்கள் இருவரையும் முத்தமிழ்ப் பேரவை பாரட்டுகிற அதே நேரத்தில் நானும் அவர்களைப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். நாதசுரச் செல்வம் விருது - நாகேஷ்.ஏ.பப்பநாடு அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

புகழ்பெற்ற நாதசுரக் கலைஞரான அன்னு சேகரின் மகனான இவர், தன் தனித்திறனால், இன்று இத்துறையில் பல்வேறு சாதனைகளை அவர் செய்து கொண்டிருக்கிறார். பப்பநாடு துர்கா பரமேஸ்வரி கோவிலில் 35 ஆண்டுகளாக பணியாற்றியவர். கருநாடக சங்கீத நிருத்ய அகாடமியின் உறுப்பினராகவும் இருக்கிறார். நாதசுரக் கலையின் பாரம்பரியம் மாறாமல் பல புதுமைகளைச் செய்து வரும் நாகேஷ் ஏ.பப்பநாடு அவர்களைப் பாராட்டுகிறேன். தவில் செல்வம் விருது - ராமேஸ்வரம் பா.ராதாகிருஷ்ணன் அவர்களுக்குத் வழங்கப்பட்டிருக்கிறது.

தவில் இசையில் கடந்த கால் நூற்றாண்டாக, தன்னிகரற்ற கலைஞராக வலம் வரக்கூடியவர் ராதாகிருஷ்ணன் அவர்கள். 2011-ஆம் ஆண்டு முதல் தவில் கலையை திருவாரூர் அரசு இசைக் கல்லூரியில் பயிற்றுவித்து வருகிறார். மேடைகளில் மட்டுமல்ல, மின்னணுப் பதிப்புகளையும் வெளியிட்ட அப்படிப்பட்ட திறமைக்கு உரியவர் ராதாகிருஷ்ணன் அவர்கள். அவரையும் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.

அனைத்துக்கும் மகுடம் வைத்தாற்போல, ராஜரத்னா விருதானது ஷேக் மெஹபூப் சுபானி அவர்களுக்கும், அவரது மனைவி காலீஷாபி மெஹபூப் அவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆந்திராவில் பிறந்தவர்களாக இருந்தாலும், தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் இணையர்கள் இவர்கள். நாதசுர இசை உலகில் பாரம்பரியம் மாறாத இசை ஆலாபனை வழங்குவதில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றவர்கள். தாத்தா, தந்தை, மகன் எனத் தொடரும் இசை மரபுக்குச் சொந்தக்காரர்கள். அவரைப் போலவே அவர் மனைவியும் நாதசுரக் கலைஞர். மகனும் நாதசுரக் கலைஞர். அத்தகைய இசைப் பரம்பரைக்குச் சொந்தக்காரர்களுக்கு இந்த விருது தரப்பட்டிருக்கிறது. தமிழ்ச் சமுதாயத்தில் வாழ்ந்த மாபெரும் மேதைகள் பலரும் பெற்ற விருதை நீங்கள் பெற்றுள்ளீர்கள். அத்தகைய மேதைகளின் வரிசையில் நீங்களும் ஒருவராக இடம்பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.

முத்தமிழ்ப் பேரவையின் விருதுகளை இவர்கள் ஏற்றுக் கொண்டதால் முத்தமிழ்ப்பேரவை இன்றைக்கு பெருமை கொள்கிறது. இவர்களுக்கு விருது வழங்கியதன் மூலமாக நானும் பெருமை அடைகிறேன்.

உங்களது இசை மேதமைக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இசையை ரசிப்பேன், சினிமாப்பாடல்களைப் பாடும் அளவுக்குதான் இசை ஆர்வம் எனக்கு உண்டு. ஆனால், தலைவர் கலைஞர் அவர்கள் பாடல்கள் எழுதுவார்; ஆனால் பாடல்களைப் பாடுவது இல்லை. ஆனால் ஒருவர் பாடுவது சரியா? ஏதாவது பிழை இருக்கிறதா? என்பதை துல்லியமாகச் சொல்லும் வல்லமை, தலைவர் கலைஞர் அவர்களுக்கு உண்டு.

நாடகமாக இருந்தாலும், இசையாக இருந்தாலும், இயல் இலக்கியமாக இருந்தாலும் அவை அனைத்தும் மக்களின் உணர்வோடு கலந்த கலையாக இருக்கின்றன. உணர்வோடு கலந்த கலையாக இருந்தால்தான் அவை மக்களால் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. இக்கலைகளின் நோக்கம் மக்களை மேம்படுத்துவதற்காக இருக்க வேண்டும்.

இன்றைக்கு இசையானது பல பரிமாணங்களை அடைந்திருக்கிறது.

நாட்டுப்புற இசை

கர்நாடக இசை

மெல்லிசை

திரையிசை

தமிழ் ராப் இசை

தமிழ் ராக் இசை

தமிழ் கலப்பிசை (Remix)

தமிழ் இயைபிசை (Fusion) – என தமிழ் இசை பல்கிப் பெருகியுள்ளது.

எத்தனை இசைகளாக வந்தாலும், வளர்ந்தாலும் அவை அனைத்தும் தமிழ் இசையாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

இசையைக் காக்க இயக்கம் நடத்திய மாநிலம் நம்முடைய தமிழ்நாடு. இசை நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய இயக்கம் தான் நம்முடைய திராவிட இயக்கம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

ராஜா அண்ணாமலையார் இந்த இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்தார். 1943-ஆம் ஆண்டு இசைக்கல்லூரியையே தொடங்கினார். இசை மன்றங்களை இவர் தொடங்கினார். தமிழிசை மாநாடுகளை நடத்தினார். தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தப் பாடல்கள் தமிழ்நாட்டு மேடைகளில் ஒலித்தது. தமிழ்நாட்டில் எழுந்த தமிழிசை இயக்கத்திற்கு துணையாக இருந்தது திராவிட இயக்கம். தமிழ்நாட்டு இசை மேடைகளில் பாடப்படும் பாடல்கள் தமிழ்ப் பாடல்களாகத்தான் இருக்க வேண்டும் என்று 1940-ஆம் ஆண்டில் தமிழிசை இயக்கத்தைத் தொடங்கியவர் ராஜா அண்ணாமலை அவர்கள். அப்போது பெரும்பாலான பாடல்கள் சமஸ்கிருதம் மற்றும் தெலுங்குப் பாடல்களாகத்தான் இருக்கும்.

"தமிழர்கள் நடத்தும் இசைக் கச்சேரிக்கு பாடக்கூடியவர்கள், தமிழ்ப்பாடல்களைப் பாட வேண்டாமா?" என்று கேட்டவர் யார் என்றால், தந்தை பெரியார் அவர்கள்.

ராஜா அண்ணாமலையாரும், ஆர்.கே.சண்முகம் அவர்களும் சேர்ந்து உருவாக்கிய தமிழிசை இயக்கத்தை வரவேற்று பெரியார் அவர்கள் பக்கம், பக்கமாக எழுதினார்கள். வானொலி நிலையங்களுக்குச் சென்று தமிழ்ப்பாடல்களைத் தான் அதிகம் ஒலிபரப்ப வேண்டும் என்று போராடிய இயக்கம் தான் திராவிட இயக்கம்.

இசையாக இருந்தாலும், இலக்கியமாக இருந்தாலும், நாடகமாக இருந்தாலும், நாட்டியமாக இருந்தாலும் அதனால் இனத்துக்கு, மொழிக்கு, நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு நன்மை இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய இயக்கம் தான் திராவிட இயக்கம். இதை எல்லாம் சொல்வதால், நான் அரசியல் பேசுவதாக யாரும் கருதவேண்டாம். மக்களுக்காகக் கலைகள் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் சொல்கிறேன்.

கலையில் மூடநம்பிக்கைகளை விதைக்கக் கூடாது! கலைகள் முற்போக்கு எண்ணம் கொண்டவையாக இருக்க வேண்டும்! கலையின் மூலமாக மனிதனின் சிந்தனைக் கதவு திறக்கப்பட வேண்டும்!

கலைகள் மனதுக்கு இதமானதாக மட்டுமல்ல, மானுடத்துக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும்! கலையும் வளர வேண்டும்! மக்களும் வளர வேண்டும்! அத்தகைய கலையை வளர்க்கும் அமைப்பாக இருக்கக்கூடிய இந்த முத்தமிழ்ப் பேரவையை நான் வாழ்த்துகிறேன், போற்றுகிறேன்.

பல நூறு ஆண்டு இந்த அமைப்பு செயல்பட்டு, தமிழ்க் கலைகளை வாழ்விக்க வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டு, விருது பெற்றவர்களை மீண்டும் வாழ்த்தி அனைவருக்கும் நன்றி கூறி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories