தமிழ்நாடு

”ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால்.. ஆசை வார்த்தை கூறி நூதன மோசடி?”: நிதி நிறுவனத்திற்கு சீல் - பின்னணி என்ன?

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆரூத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

”ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால்.. ஆசை வார்த்தை கூறி நூதன மோசடி?”: நிதி நிறுவனத்திற்கு சீல் - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு முழுதும் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்திருந்தது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், அவர்களுக்கு மாதம் குறிப்பிட்ட தொகை வட்டியாக வழங்கப்படும் என்ற தெரிவித்திருந்தது. இத்தகைய அறிவிப்பைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் அந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்துள்ளனர்.

ஆனால், அந்த விளம்பரம் போலியானது என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியதை தொடர்ந்து, இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆரூத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் அதிரடி சோதனை நடத்தினர். அந்தவகையில், ஆரூத்ரா கோல்டு நிதி நிறுவனங்களில் பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் காலை முதல் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது ஆரூத்ரா கோல்டு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்த சலுகை உண்மைதானா என்பது குறித்தும், இதுவரை நிறுவனத்தில் வழங்கப்பட்ட சலுகைகளின் உண்மை தன்மை குறித்தும் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்நிறுவனத்தின் நிதி நடவடிக்கைகள் குறித்தும் போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் 20 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூரில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 11 மணி நேர சோதனைக்குப் பிறகு சீல் வைக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூரில் ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்படுவதற்காக எந்த ஆவணமும், அரசின் அனுமதியும் இல்லாத நிலையில் சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஏற்கனவே இணையதளத்தில் பல்வேறு நிறுவனங்கள் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் 20 கிளைகளைக் கொண்ட பிரபல நிறுவனம் போலியான விளம்பரத்தை வெளியிட்டதாக எழுந்துள்ள சர்ச்சையும் அதன் பின்னணியாக தற்போது நடைபெற்று வரும் இந்த சோதனையும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories