தமிழ்நாடு

“கனவை நனவாக்கும் நல்லாட்சி.. மக்களின் இதயத்தை ஆள்கிறார் தளபதி மு.க.ஸ்டாலின்” : சிறப்புக் கட்டுரை!

பண்டித அயோத்தி தாசருக்கு மணிமண்டபம், பாரதி ஆய்வாளர்களுக்கான விருதுகள் என மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் அரசாக ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது தளபதி மு.க.ஸ்டாலின் அரசு.

“கனவை நனவாக்கும் நல்லாட்சி.. மக்களின் இதயத்தை ஆள்கிறார் தளபதி மு.க.ஸ்டாலின்” : சிறப்புக் கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp

கனவை நனவாக்கும் நல்லாட்சி!

ஒரு சிறப்பான மக்களாட்சிக்கு அடிப்படை வெளிப்படையான நிர்வாகம், மக்கள் நலத்திட்டங்கள், மக்களை பாதிக்காத செயல்திட்டங்கள் மற்றும் குறைகளை உடனுக்குடன் களைந்து தீர்வு காணும் நடவடிக்கைகள். இவை அத்தனையையும் ஒருங்கே பெற்று ஓராண்டு நிறைவு செய்திருக்கிறது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி.

திராவிட இன மக்களின் உரிமையை நிலைநாட்டிட, ஆதிக்கவாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டை காத்திட பேரறிஞர் அண்ணாவால் உருவான பேரியக்கமாக விளங்கும் தமிழர்களின் காவல் அரண் - திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கம் 72 ஆண்டுகளை கடந்து தமிழ்மொழி வளர்ச்சி, தமிழர் நலன், தமிழ்நாட்டின் வளம் ஆகியவற்றை உயிர்மூச்சாக காத்து வருகிறது.

1967 முதல் இன்று வரை நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், சமூக நீதி சமத்துவத்திற்காகவும், அனைத்து துறைகளிலும் தி.மு.கழக ஆட்சி ஆற்றிய பணிகள், இன்று தமிழ்நாட்டை இந்தியாவின் மிகவும் முன்னேறிய மாநிலங்களில் முதன்மையான மாநிலமாக மாற்றி இருக்கிறது. சுருங்கச் சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே, தமிழ்நாட்டின் பொற்காலம்!

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் அண்ணா ஆகியோருக்கு பிறகு கழகத்தின் காவல் அரணாக உருவான தளபதியாரின் மீது தமிழ்நாட்டு மக்கள் வைத்த நம்பிக்கையின் காரணமாக 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மக்களாட்சி மலர்ந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் யாராலும் அசைக்க முடியாத கோட்டை என்பதை சட்டசபைத் தேர்தல் உறுதி செய்தது. கழகத் தொண்டர்களின் உழைப்பும், கூட்டணி கட்சிகளின் ஆதரவும், தளபதியின் கரத்தை வலுப்படுத்தின. தமிழ்நாட்டின் புரட்சி முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.

“கனவை நனவாக்கும் நல்லாட்சி.. மக்களின் இதயத்தை ஆள்கிறார் தளபதி மு.க.ஸ்டாலின்” : சிறப்புக் கட்டுரை!

தமிழ்நாட்டில் தளபதியார் தலைமையில் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த போது, இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்றார் மாண்புமிகு முதல்வர். திராவிட மாடல் என்றால் எல்லார்க்கும் எல்லாம் என்பது தான். ஆம். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். இதைச் செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சி.

அனைத்துத் துறையிலும் வளர்ச்சி - அனைத்து சமூக வளர்ச்சி - அனைத்து மாவட்ட வளர்ச்சி - அனைத்து ஊரின் வளர்ச்சி இதுதான் மாண்புமிகு முதலமைச்சரின் தாரக மந்திரம். இந்த கொள்கைகளை வென்றெடுப்பதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி ஒன்றே ஒன்று தான். அதுதான். உழைப்பு.

மக்களிடம் செல்... மக்களுடன் பழகு... மக்களுக்காக வாழ்...மக்களிடம் இருந்து கற்றுக்கொள்.. என்ற அண்ணா காட்டிய வழியை உறுதியாக பிடித்துக் கொண்ட மாண்புமிகு தளபதியார் 24 மணிநேரமும் தமிழ்நாட்டின் மக்களுக்காக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பதை எதிர்கட்சிகளே பாராட்டும் நிலையை நாம் பார்க்கிறோம்.

இதோ... தளபதியார் தலைமையில் கழக ஆட்சி ஓராண்டை நிறைவு செய்கிறது. இந்த ஓராண்டில் திராவிட மாடல் ஆட்சி சாதித்தது ஏராளம். ஒவ்வொரு நாளும் ஒரு நூறு சாதனைகளை நிகழ்த்தி ஓராண்டில் ஆயிரக்கணக்கான சாதனைகளை நிறைவேற்றி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அடித்தட்டு மக்களை கனவை நினைவாக்கும் நல்லாட்சி இது என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுக்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் எண்ணத்தில் உதித்த, மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் எனும் திட்டம் அடித்தட்டு சமுதாயத்தில் உள்ள உழைக்கும் மகளிரின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்திருக்கிறது. வீட்டு வேலை செய்யும் பெண்மணிகள், கிராமம் மற்றும் புறநகர்களில் இருந்து நகரத்தில், தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பெரும் பயன் அளித்துள்ளது இந்த திட்டம். கட்டணமில்லா பேருந்துகளில் பயணம் செய்யும் ஒவ்வொரு பெண்களும் மாதந்தோறும் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பணத்தை மிச்சப்படுத்துகிறார்கள். இந்த தொலைநோக்கு திட்டத்தால் தமிழ்நாட்டு உழைக்கும் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளது திராவிட மாடல் விடியல் அரசு.

பால் விலையை லிட்டருக்கு 3 குறைத்து, அடித்தட்டு- நடுத்தர குடும்பங்களின் நம்பிக்கை அரசாக விளங்குகிறது திராவிட மாடல் அரசு.

ஒரு ஆட்சி இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படி இருந்தால் தான் நமக்கு நல்லது என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் அத்தனையையும் பூர்த்தி செய்து மக்களின் கனவுகளை நனவாக்கும் அரசாக ஓராண்டை பூர்த்தி செய்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ஆக்கப்பூர்வமான தளபதியாரின் ஆட்சி.

வெளிநாட்டு பிரதமர் வந்துவிட்டால் அவர் கண்ணில் ஏழ்மை படாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குடிசை பகுதிகளை வெள்ளை துணி போட்டு மறைக்கும் குஜராத் மாடல் அரசல்ல... தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு. குடிசையில்லா தமிழ்நாட்டை உருவாக்க கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குடிசைகளை கல்வீடுகளாக மாற்றி வருகிறது கழக ஆட்சி.

கடந்த ஓராண்டில் நமக்கு நாமே, அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்களுக்கு புத்துயிர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கப்பட வேண்டும் என்பது சமூகநீதியை லட்சியமாக கொண்ட திராவிட இயக்கத்தின் கொள்கை. அந்த கொள்கைக்கு செயல்வடிவம் கொடுத்து அனைத்து சாதியினரையும் அச்சகராக்கியது மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மக்கள் அரசு.

“கனவை நனவாக்கும் நல்லாட்சி.. மக்களின் இதயத்தை ஆள்கிறார் தளபதி மு.க.ஸ்டாலின்” : சிறப்புக் கட்டுரை!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டி, தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்து அண்ணாவின் கட்டுப்பாடான ஆட்சியை, கலைஞரின் கண்ணியமான ஆட்சியை நம் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் தமிழ்நாட்டின் முதல்வரும், தி.மு.கழகத்தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின்.

இதுமட்டுமல்ல... எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை அறிமுகப்படுத்தி அதை ஓராண்டு காலத்தில் செயல்படுத்தி வெற்றியும் கண்டுள்ளது திராவிட மாடல் அரசு.

முதலமைச்சரின் குறைதீர்ப்புத் துறைகளை ஒருங்கிணைத்து ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறையை கழக அரசு உருவாக்கியது. ‘முதலமைச்சரின் தனிப்பிரிவு’, ‘முதலமைச்சரின் உதவி மையம்’, ‘ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பு’, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை’ ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது

இந்த துறை மூலம் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மனுக்களின்மீதான குறை தீர்க்கப்படுகின்றன. முதல்வரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும், மக்கள் பணியாளர்களாக மாவட்ட ஆட்சியர்களுக்கு நற்சான்று அளிக்கும் விதமாக, முதல்வரின் முகவரி துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்களை உரிய முறையில் ஆய்வு செய்து குறைதீர்வு நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து புதிய எடுத்துக்காட்டை உருவாக்கியுள்ளது திராவிட மாடல் அரசு.

இதுமட்டுமல்லாமல், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட ஆட்சியர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மாவட்டங்களுக்கும் விருதுகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுக்காக சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்களுக்கும் விருதுகள் அளித்து மக்கள் பணியாளர்களுக்கு மகுடம் சூட்டியுள்ளார் புரட்சி முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்ச் சமுதாய உயர்வுக்கு, பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்களாக பேரறிஞர் அண்ணா, சிங்காரவேலர், இளங்கோவடிகள், கம்பர், பாரதியார், பாரதிதாசன், வள்ளலார், தேவநேய பாவாணர், உமறு புலவர், ஜி.யூ.போப், கி.அ.பெ. விருவநாதம், மறைமலையடிகள், அயோத்திதாச பண்டிதர் மற்றும் சி.பா. ஆதித்தனார் பெயரில், தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளையும் தகைசால் தமிழர்களை கவுரவித்து தமிழ்காக்கும் அரசாக விளங்கி வருகிறது தளபதியாரின் அரசு.

கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற பெர்னட் ரசூலின் தத்துவத்தை கடைபிடித்த மகாத்மா காந்தியடிகள், அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்து நலன்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக கிராம சுயராஜ்ஜியம் என்ற கொள்கையை விளக்கினார். இதனடிப்படையில் உருவான உள்ளாட்சி அமைப்புகளினால் மக்களுக்கான அதிகாரங்கள் பரவலாக்கப்படும் என்ற நிலையில் பல மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றன.

ஆனால், நம் தாய்தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் உத்வேகத்துடன் செயல்படும் நிலையை உருவாக்கி இருக்கிறது மாண்புமிகு தளபதியாரின் அரசு.

காந்தி, அம்பேத்கர், பெரியார் ஆகிய மூன்று முக்கியமான ஆளுமைகளின் கருத்துக்களையும் ஒருசேரப் பார்த்து ஒரு கருத்தை உருவாக்கியாக வேண்டும். கிராமங்களுக்கு முக்கியத்துவம் தந்தாக வேண்டும், அதே நேரத்தில் கிராமங்களை அப்படியே வைத்துக் கொண்டு இருக்க முடியாது. கிராமப்புறங்களுக்கு முக்கியத்துவம் என்பது, அதனை வளப்படுத்துவதாக அமைய வேண்டும். அந்த வளம் என்பது அனைவருக்குமான வளமாக அமைய வேண்டும். எல்லாருக்குமான வளர்ச்சியாக அது அமைய வேண்டும். இதுதான் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலினின் லட்சியம்.

“கனவை நனவாக்கும் நல்லாட்சி.. மக்களின் இதயத்தை ஆள்கிறார் தளபதி மு.க.ஸ்டாலின்” : சிறப்புக் கட்டுரை!

கிராமங்களைக் காப்போம் - அதேநேரத்தில் கிராமங்களை அனைத்து வகையிலும் மேம்படுத்தியதாக மாற்றுவோம் என்பதுதான் முதலமைச்சரின் சிந்தனையாக இருக்கிறது. வேளாண்மை உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகளைப் பாதுகாக்கவும், முதல்முறையாக வேளாண்மைக்கென்று தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத மாபெரும் முயற்சி இது.

வேளாண்மையை உயிர்காப்புத் துறையாகவும், அதனை அதிக லாபம் தரும் தொழிலாகவும் மாற்றுவதற்கு அரசு முயற்சிகள் எடுத்துள்ளதன் அடையாளம் இது.

இது கிராமப்புற மேம்பாட்டின் மிக முக்கியமான நகர்வு ஆகும்.

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு நான்கு முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இனி ஆறு முறை நடத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு உள்ளாட்சியில் நல்லாட்சி காணும் அவரது லட்சியத்தை பறைசாற்றுகிறது.

ஜனவரி 26, மார்ச் 22, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, நவம்பர் 1 ஆகிய நாட்களில் இந்த கிராம சபைக்கூட்டங்கள் நடக்கும். அதாவது, குடியரசு தினம், உலகத் தண்ணீர் தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி பிறந்தநாள், உள்ளாட்சிகள் தினம் ஆகிய நாட்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடக்க இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான மாதாந்திர அமர்வுப் படி உயர்த்தித் தரப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் தங்களின் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப் பணிகளைக் கண்காணித்திட வாகனங்கள் வழங்கப்படுகிறது.

கிராம ஊராட்சித் தலைவர்களின் தலைமைப் பண்பினை வெளிக்கொணரும் வகையிலும், ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், சிறப்பாக நிர்வகிக்கும் கிராம ஊராட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து உத்தமர் காந்தி பெயரில் விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் மாண்மிகு முதல்வர் வெளியிட்டுள்ளார்.

இவை அனைத்துக்கும் மேலாக ‘கிராம செயலகம்' அமைக்கப்பட உள்ளது. இதுதான் மிகமிக முக்கியமானது.. கிராம அளவில், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வருவாய்த் துறைக்கு மட்டுமே அலுவலகங்கள் தனித்தனியே செயல்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், பிற துறைகள் மூலம் கிராமங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒருங்கிணைத்து, அதனைக் கண்காணிக்க கிராம அளவில் கிராமச் செயலகங்கள் அமைக்கப்பட உள்ளன.

எமது மாநிலம் முதல் மாநிலமாக வேண்டும்; அதுவே எனது விருப்பம்'' என்று, தன்னை முன்னிலைப்படுத்தாது, நாட்டு நலனையே முன்னிலைப்படுத்தி ஓராண்டு காலத்தில் தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களும், ஒன்றிய அரசும் அண்ணாந்து பார்க்கும் நிலையை உருவாக்கியிருக்கிறார் மக்களின் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

“கனவை நனவாக்கும் நல்லாட்சி.. மக்களின் இதயத்தை ஆள்கிறார் தளபதி மு.க.ஸ்டாலின்” : சிறப்புக் கட்டுரை!

சமூகநீதிப் பயணத்தில் சிறந்த ஒரு மைல்கல் மாண்புமிகு முதல்வர் அவர்கள் உருவாக்கியுள்ள 'சமூகநீதி கண்காணிப்புக் குழு' என்ற குழு.

சமூக நீதிக்கு செயல்வடிவம் கொடுத்து, சமூகநீதி இனி வெறும் ஆணைகளாக, சட்டங்களாக - 'ஏட்டுச் சுரைக்காயாக' இல்லாது, நடைமுறையில் அதைக் கிட்டும்படிச் செய்ய, அரசு துறைகளுக்கு வழிகாட்டி, கண்காணித்து, மேலும் சிறப்பாக செயல்பட வைக்கும் செயலூக்கியாக தகுந்த திறமையுள்ள அறிஞர்களை, சமூகநீதிப் போராளிகளை, 'நுண்மான் நுழைபுலம்'மிக்க கல்வியாளர்களை அடையாளம் கண்டு, 'இதனை இதனால் இவர் முடிப்பார்' என்று அறிந்து, பொறுப்பில் அமர்த்தி, எமது அரசு 'சொல்வதோடு நிற்காது, செயலில் காட்டும்' என்று உலகுக்கே இந்தக் குழு நியமனம் மூலம் நிரூபித்துவிட்டார் மாண்புமிகு முதலமைச்சர்.

இனி தமிழ்நாட்டில் சமூக நீதி கானல் நீரல்ல. வற்றாத ஜீவநதியாக ஓடுவதற்கு வழிசெய்துவிட்டார் சமூகநீதிகாத்த சமத்துவ நாயகர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

சாமானிய மனிதனின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் சமூகநீதி, உழைக்கும் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திய கட்டணமில்லா பேருந்து பயணம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, கிராம செயலகத் திட்டங்கள் என இவற்றின் வரிசையில் மாணவர்களின் நலன்களை காக்க, நான் முதல்வன் எனும் திட்டத்தை நாட்டிற்கு அற்பணித்து மாணவ சமுதாயத்திற்கு நல்வழிகாட்டியிருக்கிறார் நம் மாண்புமிகு முதல்வர்.

தமிழ்நாட்டின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாக ‘நான் முதல்வன்’ என்ற திட்டம் அமைந்துள்ளது.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும்.

இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும்.

மாணவர்கள் அடுத்தடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படும்.

தமிழில் தனித் திறன் பெற சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு Coding, Robotics போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளர்களைக் கொண்டு கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.

மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களைக் கொண்டு திடமான உணவு வகைகள் உட்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்குவதுடன், உடற்பயிற்சி, நடை, உடை, நாகரீகம், மக்களோடு பழகுதல், ஆகியவை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.

தமிழ்ப் பண்பாடு, மரபு குறித்த விழிப்புணர்வும் மாணவ, மாணவியர்களிடம் ஏற்படுத்தப்படும்.

இதற்கான பயிற்சிகள் அனைத்தும், தலைசிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு நேரடிப் பயிற்சி, இணைய வழிப் பயிற்சி, அவரவர் கல்லூரியில் பயிற்சி, மாவட்ட ரீதியாக பயிற்சி எனத் தேவைக்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்படும்.

ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டி ஆலோசனை மையம் உருவாக்கப்படும். இதற்கென தனியே கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் வகுப்புகள் நடத்தப்படும்.

முன்னாள் மாணவர்களைக் கொண்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் நெறிப்படுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்படும்.

“கனவை நனவாக்கும் நல்லாட்சி.. மக்களின் இதயத்தை ஆள்கிறார் தளபதி மு.க.ஸ்டாலின்” : சிறப்புக் கட்டுரை!

கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்யை உறுதி செய்ய அவரவர் விருப்பத்திற்கேற்ப அயல்நாட்டு மொழிகள் கற்பிக்கப்படுவதற்கு இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும்.

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் Industry 4.0 தரத்திற்கு உயர்த்தப்படும்.

மாணவ, மாணவியர்களின் தகுதி மற்றும் ஆர்வத்திற்கு ஏற்ப, நாட்டின் தலைசிறந்த நிறுவனங்கள்/புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் / திறன் மேம்பாட்டு நிறுவனங்களில் சேர்க்கையையும் இந்த தொடர் பயிற்சிகள் மூலம் உறுதி செய்யப்படும்.

தமிழ்நாடு அரசுத்துறை மற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள், மத்திய அரசின் வேலைவாய்ப்புகள், பிற மாநிலங்களின் வேலைவாய்ப்புகள் ஆகிய அனைத்தும் இத்திட்டத்தின் கீழ் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டு, பயிற்சிகள் ஒருங்கிணைக்கப்படும்.

இவைதான் நான் முதல்வன் திட்டத்தின் சிறப்பம்சங்கள். இந்த திட்டங்களை இந்த ஓராண்டில் வகுத்தெடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நவீன தமிழ்நாட்டின் சிற்பியாக காட்சியளிக்கிறார்.

எதிர்கட்சி உறுப்பினர்களே… இப்படி ஒரு கண்ணியமான ஆட்சியை இதுவரை நாங்கள் கண்டதில்லை என்று சட்டப்பேரவையில் வெளிப்படையாக பாராட்டும் நிலையில் பார்போற்றும் ஆட்சியை செய்து வருகிறார் தளபதி மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டு மக்கள் மாத்திரமல்ல... ஜனநாயகத்தின் நான்காவது தூணான நீதித்துறையே நம் முதலமைச்சரின் உழைப்புக்கு பாராட்டு பத்திரம் வழங்கியுள்ளது. ஆம்..தமிழ்நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்துக்காக முதலமைச்சர் அவர்கள் மிகக் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்”என்று பாராட்டி இருப்பவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் என்.வி.ரமணா அவர்கள்.

உச்சநீதிமன்றம் மட்டுமல்ல இந்திய திருநாட்டின் குடியரசு துணைத்தலைவர் பதவியை அலங்கரித்துக் கொண்டிருக்கக்கூடிய வெங்கையா நாயுடு அவர்களும் நம் மேன்மைமிகு முதலமைச்சரின் உழைப்புக்கு உயரிய சான்றிதழை அளித்துள்ளார்.

தொழில் துறையில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என்று குடியரரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு அவர்கள் பாராட்டியிருப்பது முதலமைச்சரின் உழைப்புக்கும், தியாகத்திற்கும் கிடைத்த அங்கீகாரம்.

இது என் அரசல்ல, உங்களில் ஒருவனின் அரசு, உங்களின் அரசு என்று அடிக்கடிச் சொல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயலிலும் தனது அரசை மக்களுக்கான- மகத்தான அரசாக ஓராண்டாக செயலாற்றி வருகிறார்.

தமிழ்நாட்டு மக்களின் அரசியல், பொருளாதார, சமுதாய வாழ்வில் உள்ள இருண்ட நிலையை நீக்கும் வல்லமையும், தமிழர்கள் வாழ்வில் ஒளிஏற்றும் செயல்பாடும் கொண்டதாக அமைந்துள்ளது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் கழக அரசு.

இந்திய வரலாறு தமிழ்நாட்டில் இருந்து எழுதப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்த நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பேரறிஞர் அண்ணாவின் சிந்தனையையும், முத்தமிழறிஞர் கலைஞரின் செயல் திறமையையும் ஒருங்கே சேர்ந்த லட்சிய குறியீடாக தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கிறார்.

அரசுப்பணியில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிப்பு, தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதிநாள் என்ற அறிவிப்பு, சமூக நீதிப் போராளிகளுக்கான மணிமண்டபம், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் 150 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு 14 அற்புத பணிகள் நிறைவேற்றம், பண்டித அயோத்தி தாசருக்கு மணிமண்டபம், பாரதி ஆய்வாளர்களுக்கான விருதுகள் என மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் அரசாக ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது தளபதி மு.க.ஸ்டாலின் அரசு.

ஏழை, எளிய மக்களின் கனவுகளை நனவாக்கும் பணியில் செயலாற்றி வருகிறது தி.மு.கழக நல்லாட்சி. மக்களின் இதயத்தை ஆள்கிறார் தளபதி மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு வாழ்கிறது. வளர்கிறது. முன்னேறுகிறது. முதலிடத்தை பெறுகிறது. வாழ்க நல்லாட்சி நாயகன் தளபதி மு.க.ஸ்டாலின்.

- பி.என்.எஸ்.பாண்டியன்.

banner

Related Stories

Related Stories