தமிழ்நாடு

“மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் : நூறாண்டு காலம் ஆனாலும் அழியாத புகழை கொடுக்கும்” - நெகிழ்ச்சி பதிவு !

பேருக்காக ஒரு திட்டத்தை தொடங்கி அதை கிடப்பில் போடாமல்... அதனை மக்களிடம் முழுமையாக கொண்டு போய் சேர்ப்பதற்கான பணிகளை கண்காணிப்பதில் முதலமைச்சர் தவறியதில்லை.

“மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் : நூறாண்டு காலம் ஆனாலும் அழியாத புகழை கொடுக்கும்” - நெகிழ்ச்சி பதிவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
கவிமணி
Updated on

கடந்த வருடம் இதே நாள்..

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” ஆகிய நான், என கிண்டி ஆளுநர் மாளிகையில் ஒலித்தது அந்தக் குரல்.. கட்டம் சரியில்லை.. முதலமைச்சர் ஆவதற்கான ராசியில்லை என ஏலனம் பேசியவர்களின் முகத்தில்.. கரி பூசிய நாள் அது.

முதல் ஐந்து கையெழுத்து... தலைமைச் செயலாளர் மாற்றம்.. தனிச் செயலாளர்களாக களப்பணியில் சிறப்பாக பணியாற்றி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்... என பிரேக்கிங் செய்திகள் தமிழ்நாட்டில் ஒரு புதிய அதிர்வுகளை ஏற்படுத்தியது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்று நேற்றோடு ஓராண்டாகிறது. இந்த 365 நாட்களில் அவர் தொடங்கிய பல்வேறு திட்டங்களில்... மக்களைத் தேடி மருத்துவம் சிறப்பானதொரு திட்டம் எனலாம்.

இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கடந்த மூன்று மாதங்களாக கலைஞர் செய்திகளில் நிகழ்ச்சி தயாரித்து வருகிறேன். இதுவரை 14 எபிசோட்கள் ஒளிபரப்பாகியிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணித்து... நேரடியாக களத்திற்குச் சென்று ‘மக்களைத் தேடி மருத்துவத்தினால்’ பயனடைந்த பயனாளிகளை சந்திக்கிறேன்.

ஒவ்வொரு ஒன்றியத்திலும் இருக்கிற முதன்மை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ‘செவிலியர், இயன்முறை மருத்துவர், ஓட்டுநர், மிட் லெவல் ஹெல்த் ப்ரொவைடர், பெண் சுகாதார தன்னார்வலர்’ அடங்கிய ‘மக்களைத் தேடி மருத்துவக் குழு செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு கிராமமாகச் சென்று, வீடு வீடாகப் போய்... யாருக்கெல்லாம் ரத்தக் கொதிப்பு இருக்கிறது... சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கிறது... வேறு ஏதேனும் நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? யாருக்கேனும் கேன்சர் நோய் இருக்கிறதா? பக்கவாதம், மூளை நரம்பில் பாதிப்பு ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார்களா? என ஸ்கிரீனிஸ் செய்கிறார்கள் பெண் சுகாதார தன்னார்வலர்கள்.

பெரும்பாலான உடல்நிலை பிரச்சனைகளுக்கும்... இயல்பாக இருந்துவந்த ஒரு மனிதரை திடீரென புரட்டிப்போடு, படுத்தப் படுக்கையாக ஆக்கிவிடும் தன்மை ‘இரத்த அழுத்தம்’ மற்றும் சர்க்கரை நோய்க்கு உண்டு.

“மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் : நூறாண்டு காலம் ஆனாலும் அழியாத புகழை கொடுக்கும்” - நெகிழ்ச்சி பதிவு !

காலில் ஏற்பட்ட சிறிய கொப்புளமோ.. காயமோ ஒருவரின் காலை நீக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளிவிடுகிறது சர்க்கரை நோய். ஒருவரது மூளை நரம்பில் திடீரென ஏற்பட்டும் அடைப்போ, ரத்தக் கசிவோ அவரது கை கால்களை செயலிழக்கச் செய்து... வாழ்நாள் முழுவதும் படுத்த படுக்கையாக்கி விடுகிறது இரத்த அழுத்த பிரச்சனை.

இப்படியான பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படாமல் இருக்கவும், இப்படியான பாதிப்புகளில் சிக்கி தவித்து வரும் நோயாளிகளுக்கும்... மாத்திரை மருந்துகளை வழங்குவதோடு... அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு தேவையான இயன்முறை பயிற்சி... படுக்கைப் புண் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு செவிலியரின் உதவி போன்றவை மக்களைத் தேடி மருத்துவத்தின் மூலம் கிடைக்கிறது.

நீரிழிவு நோய், இரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்ட 48 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மருந்து மாத்திரைகள் வழங்குவதோடு... தொடர் பரிசோதனை மற்றும் கண்கானிப்பும் செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள் மட்டும் தான் பயனடைகிறார்கள். கடந்த வாரம் அரக்கோணம் அருகில் இருக்கும் மூதூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குப் போயிருந்தேன். புளியமங்கலம் கிராமத்தில் ரமேஷ் என்கிற ஒரு பேஷண்ட்டை பேட்டி எடுக்க மக்களை தேடி மருத்துவ குழு அழைத்துச் சென்றிருந்தது.

ஐந்து வயது முதல் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டும் இரண்டு கால்களும் செயலிழந்து போனவர் ரமேஷ். மூன்று சக்கர சைக்கிளின் மூலம் வெளியே சென்று கிடைத்த வேலைகளையோ... ஏதேனும் வியாபாரமோ செய்து பிழைத்து வந்தவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஸ்ட்ரோக் ஏற்பட்டு வலது கையும் செயலிழந்து போய் பேசும் திறனும் பறிபோய்விட்டது.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு திருப்பதி கோவிலுக்குப் போன இடத்தில் அவரது மனைமனைவி இறந்துவிட்டார். அங்கே ஆதரவற்று இருந்த அவரது குழந்தைகளை மீட்டுவந்து, இவரே பார்த்துக்கொள்கிறார். உறவினர்கள் உதவி செய்கிறார்கள் என்றாலும்... அவருக்கு கிடைக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு தனக்கான சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கூட போக முடியாதவராக, ஒரு சின்ன குடிசையில் குடித்தனம் நடத்தி வருகிறார்.

இப்போது அவருக்கு கடந்த ஆறு மாத காலமாக மக்களைத்தேடி மருத்துவக் குழு உதவி செய்து வருகிறது. பேச்சு சுத்தமாக வராமல் இருந்தாவர் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பேசவும். அவர் பேசுவது மற்றவர்களுக்கு புரியும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. கைகள் செயல்படவும், சரளமாக பேசுவதற்கும் தொடர்ச்சியாக இயன்முறை சிகிச்சை அளித்து வருகிறது மக்களைத்தேடி மருத்துவம்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என சொல்வார்கள் இல்லையா.. அப்படி மக்களைத் தேடி மருத்துவம் பற்றி சொல்வதற்கு ரமேஷ் அண்னின் கதையே போதும். இப்படி எண்ணற்ற நோயாளிகளைச் சந்தித்து இருக்கிறேன். கண்ணீர் மல்க முதலமைச்சர் தொடங்கிவைத்த இந்த திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கிறார்கள். குழந்தைகள் முதியவர்கள் என இதுவரை 50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து இருக்கிறார்கள்.

இந்த திட்டம் அனைத்து மக்களுக்கும் முழுமையாக போய் சேர இன்னும் இரண்டு வருடங்கள் கூட ஆகலாம்... ஆனால் கண்டிப்பாக போய் சேரும்.

பேருக்காக ஒரு திட்டத்தை தொடங்கி அதை கிடப்பில் போடாமல்... அதனை மக்களிடம் முழுமையாக கொண்டு போய் சேர்ப்பதற்கான பணிகளை கண்காணிப்பதில் முதலமைச்சர் தவறியதில்லை.

காலத்தால் அழியாத வரலாற்றில் இருந்து நீக்க முடியாத பேரும் புகழையும் இந்த திட்டம் முதலமைச்சருக்கு பெற்றுக்கொடுக்கும்.

banner

Related Stories

Related Stories