சென்னை அடுத்த அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவருக்குச் சேட்டு, சுரேஷ் என இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் சுரேஷுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான சுரேஷ்க்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக மூன்று வருடங்களாகச் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மூன்று நாட்களாக இவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் சுரேஷ் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து அறிந்த போலிஸார் சுரேஷ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் தம்பி இறந்த செய்தியைக் கேட்டு வேதனையடைந்த அண்ணன் சேட்டுவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரேநாளில் அண்ணனும், தம்பியும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.