தமிழ்நாடு

"வணிகர்களின் நலனை பேணும் அரசாக எப்போதும் தி.மு.க அரசு திகழும்".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

வணிகர்களின் நலனை பேணும் அரசாக எப்போதும் தி.மு.க அரசு திகழும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"வணிகர்களின் நலனை பேணும் அரசாக எப்போதும் தி.மு.க அரசு திகழும்".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

39-வது வணிகர் தினத்தையொட்டி திருச்சிராப்பள்ளியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-

தீரர்களின் கோட்டமாம் திருச்சியில் நடைபெறக் கூடிய தமிழக வணிகர் விடியல் மாநாட்டின் தலைவர் என்னுடைய அன்பிற்கினிய அருமை சகோதரர் விக்கிரமராஜா அவர்களே! இந்த மாநாட்டில் பங்கேற்றுப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கக்கூடிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களே! பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களே!வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி அவர்களே! மாநாட்டிற்கு வருகை தந்திருக்கக்கூடிய சட்டமன்ற, நாடாளுமன்ற முன்னாள், இந்நாள் உறுப்பினர்களே!

வணிகர் நலப் பேரவையின் மாநிலப் பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு அவர்களே! மாநிலப் பொருளாளர் சதக்கத்துல்லா அவர்களே! இந்த மாநாட்டுக் குழுவைச் சார்ந்திருக்கக்கூடிய அன்பர்களே! நண்பர்களே! வணிகர் சங்கத்தினுடைய நிர்வாகிகளே!பல்லாயிரக்கணக்கில் இங்கே திரண்டிருக்கும் என்னுடைய அன்பிற்கினிய வணிகர் பெருமக்களே! ஊடகத்துறை, பத்திரிகை நண்பர்கள் உள்ளிட்ட பாசமிகு நண்பர்களே!

என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புக்களே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

பொதுவாக, சட்டமன்றம் நடைபெறுகிற நேரத்தில், ஆட்சிப்பொறுப்பில் இருக்கக்கூடிய அந்த நிலையில் இருந்தாலும், எதிர்க்கட்சி என்ற நிலையில் நான் இருந்தாலும், இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு நான் செல்வதை தவிர்த்து விடுவது உண்டு. இருந்தாலும் இன்று காலையில் நான் சட்டமன்றத்திற்குச் சென்று, கேள்விநேர நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதற்குப் பிறகு விமானத்தைப் பிடித்து இந்த மாநாட்டிற்கு நான் வந்து சேர்ந்திருக்கிறேன். அதற்கு முழுக் காரணம் உங்கள் தலைவர் விக்கிரமராஜா அவர்கள்தான். அவர் எதைச் சொன்னாலும், நான் ஏதும் மறுத்துப் பேசாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடிய வழக்கத்தை, பழக்கத்தை, இன்றல்ல, நேற்றல்ல, பல ஆண்டுகாலமாக நான் கடைப்பிடித்து வந்து கொண்டிருக்கக்கூடியவன்.

அவர் பேசினார், பேசி முடித்தபிறகு, என் அருகே உட்கார்ந்து எப்படி பேசினேன் என்று கேட்டார், உணர்ச்சியோடு பேசினீர்கள் என்று நான் சொன்னேன். அவர் உடனே, "உணர்ச்சியல்ல, உண்மையைப் பேசினேன்" என்று சொன்னார். அதுதான் விக்கிரமராஜா. அவர் அன்பிற்கு நான் எப்போதும், இப்போது அல்ல, எப்போதும் கட்டுப்பட்டவன்தான். எனவே, அவருடைய அன்பான அந்தக் கட்டளையை ஏற்றுக்கொண்டு இங்கே எழுச்சியோடு, ஏற்றத்தோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்கக்கூடிய வாய்ப்பை நான் பெற்றிருப்பது உள்ளபடியே, அந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்திருக்கக்கூடிய நம்முடைய வணிகர் சங்கத்தின் தலைவராக இருக்கக்கூடிய விக்கிரமராஜா அவர்களுக்கும், அவரோடு இணைந்திருக்கக்கூடிய உங்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

"வணிகர்களின் நலனை பேணும் அரசாக எப்போதும் தி.மு.க அரசு திகழும்".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

அவர் சொன்னார், ஆட்சிப் பொறுப்பேற்றபோது, என்னுடைய தலைமையில் இந்த ஆட்சியை நாங்கள் ஏற்றுக்கொண்ட நேரத்தில், கொரோனா என்ற கொடூரமான தொற்றுநோய்; நாடு முழுவதும் மக்களை அச்சுறுத்தக்கூடிய கொரோனா என்ற தொற்றுநோய் தமிழ்நாட்டிலும் ஏற்பட்ட நேரத்தில், அரசாங்கத்தின் சார்பில் நிதி திரட்டி மக்களுக்கு நன்மை செய்வதற்காக முதலமைச்சர் நிவாரண நிதி வசூலிக்கப்பட்டது. அப்படி வசூலிக்கப்பட்ட நேரத்தில், நம்முடைய விக்கிரமராஜா அவர்கள், வணிகர்களையெல்லாம் ஒன்றுதிரட்டி நிதி உதவி வழங்கினார். கொரோனா காலத்தில் ஊரடங்கு, கடைகளைத் திறக்க முடியாத ஒரு கொடுமை, அந்தச் சூழல் ஏற்பட்டது. அப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்திலும் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக, நிதி உதவி வழங்கியிருக்கக்கூடிய வணிகர்களே உங்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

மாநாட்டிற்கு நான் உடனடியாக ஒப்புக்கொண்டு வந்ததற்குப் பல காரணங்கள் உண்டு, அதில் முக்கியமான காரணம், உங்களுக்கு நன்றி சொல்ல நான் இந்த மாநாட்டைப் பயன்படுத்திக் கொள்ள வந்திருக்கிறேன். இந்த தாராள மனப்பான்மை உங்களுக்குத் தொடர வேண்டும். அடுத்தது திரட்ட ஆரம்பித்தாகி விட்டது. இலங்கையில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு மட்டுமல்ல, இலங்கையில் இருக்கக்கூடிய அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நம்முடைய தமிழகத்தின் சார்பில், தமிழக அரசின் சார்பில் உதவி செய்வதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு அந்தப் பணியை நாம் தொடங்கியிருக்கிறோம்.

கொரோனா காலத்தில், அது முதன்முதலாக கொரோனா என்ற அந்தக் கொடிய நோய் நாட்டிலே பரவிய நேரத்தில், தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சி, ஆளும் கட்சி அல்ல. ஆனால், ஆளும்கட்சி என்னென்ன பணிகளெல்லாம் செய்ய வேண்டுமோ அந்தப் பணிகளை, எதிர்க்கட்சியாக இருந்தபோதே நாங்கள் செய்தோம் என்பது நாட்டுக்கு நன்றாகத் தெரியும்.

"ஒன்றிணைவோம் வா" என்ற தலைப்பில் மக்களுக்கு வேண்டிய வசதிகளை நம்மால் ஆன அத்துணை உதவிகளை நாம் செய்திருக்கிறோம் என்பது வரலாறு. திருச்சி என்றால் தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார், தீரர்கள் கோட்டம் என்று. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு மாநாடுகள் திருச்சியில் நடைபெற்றிருக்கிறது. திருச்சி என்றால் திமுக-விற்கு ஒரு திருப்புமுனை. அதுமாதிரி இன்றைக்கு திருச்சியில் வணிகர்கள் நடத்தக்கூடிய இந்த மாநாடு, ஒரு திருப்புமுனையை உருவாக்கக்கூடிய வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த மாநாடு நடக்கக்கூடிய தேதி மே-5ஆம் தேதி. இந்தத் தேதியின் பின்னால் வணிகர்களான உங்களுடைய வரலாறு இருக்கிறது. 1982-ஆம் ஆண்டு அன்றைய அதிமுக அரசு, நுழைவு வரி என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்து அதை உடனடியாக நடைமுறைப்படுத்தியது. அதை எதிர்த்து முதன் முதலில் சேலம் மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில், வணிகர்களை ஒன்று திரட்டி, மேற்குறிப்பிட்ட வரிகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று ஒரு மிகப் பெரிய போராட்டம் சேலம் மாவட்டத்திலே நடந்திருக்கிறது.

"வணிகர்களின் நலனை பேணும் அரசாக எப்போதும் தி.மு.க அரசு திகழும்".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் ஆங்காங்கே வணிகர்கள் போராட்டங்களை நடத்திக் காட்டினார்கள். அதன்பிறகு, சென்னையில் ஒரு மிகப்பெரிய எதிர்ப்பு ஊர்வலமும் நடத்திக் காட்டப்பட்டிருக்கிறது. சென்னையில் இருக்கக்கூடிய சாந்தோம் பகுதியில் கண்டன மாநாடும் நடத்தப்பட்டது. அப்போது போராட்டத்தில் காவல்துறையினரால் வணிகர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள்.

அப்போதைய அதிமுக அரசை வன்மையாகக் கண்டிக்கும் வகையில், தமிழக வணிகர்கள், போராட்டங்கள், ரயில் மறியல் போன்ற பல போராட்டங்களில் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டார்கள். அப்படி கைது செய்யப்பட்ட நாள்தான் மே 5-ஆம் தேதி. அப்படி சிறை வைக்கப்பட்ட நாளை வணிகர் தினமாக இன்றைக்கு நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது நடப்பது திமுக ஆட்சி, மன்னிக்க வேண்டும் நமது ஆட்சி. எனவே, இந்த மே-5 ஒரு மகிழ்ச்சிக்குரிய நாளாக இந்த மாநாட்டின் மூலமாக நாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியானது வணிகர்களது நலனைப் பேணும் ஆட்சியாகத்தான் எப்போதுமே இருந்திருக்கிறது; அப்படித்தான் இருக்கும். வணிகவரித் துறை என்று ஒரு துறையே செயல்பட்டு வருகிறது. வணிகவரித் துறையானது அரசுக்கு வருகிற வருவாயில் நான்கில் மூன்று பங்கை ஈட்டித்தரும் ஒரு முக்கியத் துறையாக விளங்கிக் கொண்டிருக்கிறது. வணிகர்களின் நலன் காக்கப்பட்டால்தான் அரசுக்கு வரும் வருவாயின் நலனும் காக்கப்படும் என்ற அந்த செய்தியை நான் உளப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

ஆட்சிப் பொறுப்பேற்று அனைத்து காலக்கட்டத்திலும் வணிகர்களின் நலனைக் காப்பதில் மிகவும் அக்கறை கொண்ட அரசாகச் செயல்பட்டு வந்துள்ளோம் என்பதை நீங்கள் யாரும் மறக்க மாட்டீர்கள். கடந்த தேர்தல் அறிக்கையில், வணிகர்களின் நலனைக் காப்பதற்காக வணிகர் நல வாரியம் சீரமைக்கப்பட்டு அதனால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அதிகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அடிப்படையில், ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே புதிய நலத் திட்ட உதவிகள் வணிகர் நல வாரியத்தால் வணிகப் பெருமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால்,

தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தை 1989-ஆம் ஆண்டு உருவாக்கியவரே நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். கழக ஆட்சியில்தான் அந்த வாரியமே உருவாக்கப்பட்டது.

முந்தைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் 2007-ஆம் ஆண்டு வணிகர் நல வாரியத்தின் கீழ், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த குடும்பநல உதவித் தொகை ரூ.20,000/-லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தப்பட்டது.

இதய அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.25,000/- உதவித் தொகை ரூ.50,000/- ஆக உயர்த்தப்பட்டது. பெண் உறுப்பினர்களுக்கு கருப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ.20,000/- உதவித் தொகை வழங்கப்படுகிறது. உறுப்பினர்களின் வாரிசுகளின் கல்லூரிப் படிப்பிற்கு முன்னர் வழங்கப்பட்டு வந்த வருடாந்திர கல்வி உதவித் தொகை ரூ.3,000/- இருந்து ரூ.5,000/- ஆக உயர்த்தப்பட்டது.

நலிவுற்ற வியாபாரிகளுக்கு கூட்டுறவுத் தொழிற்கூடங்களில் தயார் செய்யப்படும் பெட்டிக் கடை அல்லது மூன்று சக்கர மிதிவண்டி வாங்க ரூ.10,000/- நிதி உதவி வழங்கப்படுகிறது. வணிகர் நல வாரியத்தில் இதுவரை பதிவு செய்துள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 84,101. இந்த வாரியத்தின் நலத் திட்டங்களின் வாயிலாக 31.03.2022 வரை ரூ.3 கோடி மதிப்பீட்டில் 8,875 உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர்.

இவ்வாரியத்தில் இணையவழி மூலமாகவே உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளும் வசதி வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி அவர்களால் 16.06.2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

பேரிடர் காலங்களில் சிறு, குறு வணிகர்களுக்கு உதவி செய்யும் வகையில், சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தில் பதிவு பெற்று, விற்றுமுதல் அளவு ரூ. 40 இலட்சத்துக்கு உட்பட்ட சிறு வணிகர்கள் மற்றும் இச்சட்டத்தின்கீழ் பதிவுபெறாத குறு வணிகர்களை இவ்வாரியத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கவும், அதற்கான கட்டணத் தொகை ரூ.500/- செலுத்துவதிலிருந்து 15.07.2021 முதல் 14.10.2021 வரையிலான மூன்று மாத காலத்திற்கு விலக்களிக்கப்பட்டது. இச்சலுகையை 31.03.2022 வரை கால நீட்டிப்பு செய்து உத்தரவிட்டவன் நான்தான் என்பதைப் பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இந்தச் சிறப்பு முயற்சியின் பயனாக, 36,952 வணிகர்கள் புதிதாக தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்திருக்கிறார்கள்.

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் முன்பு வணிகர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய கருத்துக்களைக் கேட்க வேண்டும் என்ற நடைமுறையை முதன்முதலில் கொண்டு வந்தவர் யார் என்றால், நம்மை ஆளாக்கிய நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். அதைப் பின்பற்றித்தான் நிதிநிலை தாக்கல் செய்யும் முன்பு வணிகர்களின் கருத்தைக் கேட்டுத்தான், அதற்குப் பிறகு நிதிநிலை அறிக்கையைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்சிதான் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி. அந்த ஆட்சியினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய நான் இன்றைக்கு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன், இந்த மாநாட்டில் நான் பெருமையோடு பங்கேற்க வந்திருக்கிறேன்.

ஜிஎஸ்டி சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், தாங்கள் எதிர்கொள்ளும் சில சிரமங்கள் குறித்து வணிகர்கள் அப்போது எடுத்துரைத்தனர். உள்நாட்டு வணிகத்தில் உள்ள வரி சிரமங்கள் குறித்த வணிகர்களின் கருத்துக்கள் அவ்வப்போது பெறப்பட்டு ஜிஎஸ்டி மாமன்றத்திற்கு அவை அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

வணிகர்கள் ஜிஎஸ்டி சேவைகள் இணையவழிச் சேவைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதால் தமிழிலும் அவை தரப்பட வேண்டும் என்று வணிகர்கள் பெருவாரியாக கோரிக்கை வைத்தார்கள். நம்முடைய கழக அரசு அக்கோரிக்கையை ஏற்று, ஜிஎஸ்டி சேவைகள் தமிழிலும் வழங்கப்படலாம் என்று இன்றைக்கு நாம் கடிதம் எழுதியிருக்கிறோம். விரைவில் ஜி.எஸ்.டி சேவைகள் தமிழிலும் வழங்கப்படும் என்று நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து நம்முடைய அரசு வலியுறுத்தும், வற்புறுத்தும்.

தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தின்கீழ் படிவம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி 2020-2021-ஆம் ஆண்டிற்கான இணையவழி மூலமாகத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 31.03.2022 வரை நீட்டித்து ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

நமது அரசு பொறுப்பேற்ற பிறகு, வரி கைவிடுதல் ஆய்வுக் குழு துவக்கப்பட்டு மூன்று கூட்டங்கள் நடத்தப்பட்டு, 66 வரி கைவிடுதல் முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டு, 65 இனங்களில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. வணிக வரி ஆணையரின் தலைமையில், மாநில அளவிலான வரி செலுத்துவோர் ஆலோசனைக் குழுவும் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான வரி செலுத்துவோர் ஆலோசனைக் குழுவும் மறு உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

வணிகர் நட்புறவான சமாதானத் திட்டம் 2006, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்த பின்னர், இத்தகைய வரிச்சலுகைகளை மாநில அரசுகள் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டபோதிலும், இந்த வரிவிதிப்பு முறையில் வணிகர்கள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை வரும்போதெல்லாம், ஜிஎஸ்டி மன்றத்தில் எதிர்த்தும், மாற்றியமைத்தும் வணிகர்களின் நலன் காப்பதில் நமது திராவிட முன்னேற்றக் கழக அரசு என்றைக்கும் முன்னணியில் இருந்து வருகின்றது என்ற அந்த செய்தியையும் உங்களிடத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதுமட்டுமல்ல, வணிகர்களுக்கு எந்தவிதத் தொல்லையும் இருக்கக்கூடாது. இந்த மாநாட்டிற்கு நான் வருவதற்கு முன்பு தமிழகக் காவல்துறையின் தலைவர் டி.ஜி.பி. அவர்களிடத்தில் ஆலோசனை செய்தேன். அதன் விளைவாக, சில வாரங்களுக்கு முன்பு நான் அறிமுகம் செய்து வைத்த 'காவல் உதவி செயலி'-இல் வணிகர்கள் உதவி என்ற ஒரு புதிய பகுதியும் அதில் சேர்க்கப்படும் என்ற நல்ல செய்தியை உங்களிடத்தின் நான் தெரிவித்துக் கொள்கிறேன். வணிகர்களுக்கு யாராவது தொல்லை கொடுக்க நேரிட்டால், செயலியில் சேர்க்கப்பட்டுள்ள இந்தப் புதிய பகுதியில் காவல்துறையின் உதவியை நீங்கள் கோரலாம். உடனடியாக ரோந்து வாகன காவலர்கள் விரைந்து வந்து தகராறு செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கையை நிச்சயமாக, உறுதியாக எடுப்பார்கள்.

வணிகர்களை பாதுகாக்கின்ற இந்த வசதி இன்னும் ஓரிரு வாரத்தில் துவங்கப் போகிறது என்ற செய்தியையும் நான் மகிழ்ச்சியோடு இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய வணிகர் நல வாரியத்தில் செயல்பாடுகளை மேம்படுத்த உங்களிடையே இருந்து புதிய உறுப்பினர்களை நியமிக்க இருக்கிறேன். இதனால், வாரியத்துக்குப் புத்துயிர் ஊட்டப்பட்டு அனைத்து நலத்திட்டப் பணிகளும் முடுக்கி விடப்படும்.

வணிகர் நல வாரியத்தின் மூலமாக, இப்போது வழங்கப்பட்டு வரும் உறுப்பினர்களின் இறப்புக்கான குடும்பநல இழப்பீடு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து மூன்று இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். தீ விபத்துகளில் பாதிக்கப்படும் வணிகர்களுக்கான உடனடி இழப்பீடு 5,000 ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

உள்ளாட்சி அமைப்புகளின் கடைகள் மற்றும் வணிக இடங்களில் நிலவி வரும் வாடகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கொள்கை வழிமுறைகளை வகுக்க, நகராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் வழிகாட்டுக் குழு ஒன்று அமைக்கப்படும்.தற்போது வணிக நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வணிக உரிமம் எடுக்கப்பட வேண்டும் என்ற அந்த நிலையை மாற்றி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்கள் உரிமம் எடுப்பதற்கான திருத்தங்கள் கொண்டு வரப்படும். உடற்பயிற்சிக் கூடங்களுக்கு, இனிமேல் காவல்துறையின் உரிமம் தேவையில்லை.

பாலங்கள், மெட்ரோ இரயில் போன்ற பல்வேறு பணிகள் நடைபெறுகிற நேரத்தில், அதனால் பாதிக்கப்பட்டுக் கடைகளை இழக்கக்கூடிய வணிகர்களுக்கு, அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக வாடகைக் கடைகளை வழங்குவதில் நிச்சயமாக, உறுதியாக முன்னுரிமை வழங்கப்படும்.

இன்றைக்கு அமைந்திருக்கக்கூடிய இந்த அரசு என்பது, நான் நேற்றைக்குக்கூட சட்டமன்றத்தில் பேசுகிறபோது சொன்னேன், ஏதேதோ சொல்லி களங்கத்தை ஏற்படுத்த யார் யாரோ திட்டமிடுகிறார்கள், அது நிச்சயம் பலிக்காது. காரணம், இது பெரியார் ஆட்சி, அண்ணா ஆட்சி, கலைஞர் ஆட்சி, ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், திராவிட மாடலில் நடைபெறக்கூடிய ஆட்சி. 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற இலக்கை நோக்கிய அரசாக சமூக வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி ஆகிய அனைத்திலும் ஒரே நேரத்தில் வளர்ச்சியை எட்ட நினைக்கக்கூடிய அரசு. இது வணிகர் பெருமக்களுடைய மாநாடு என்கிற காரணத்தால், பொருளாதார வளர்ச்சி குறித்து மட்டும் சிலவற்றை விரிவாக உங்களிடத்தில் நான் சொல்ல விரும்புகிறேன்.

பெரிய பெரிய நிறுவனங்கள் வளர்வதை மட்டுமே பொருளாதார வளர்ச்சியாக நாங்கள் நினைக்கவில்லை. சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் வளர வேண்டும், அதுதான் பொருளாதார வளர்ச்சி, அப்படித்தான் நாங்கள் கருதுகிறோம். மிகப்பெரிய தொழிலதிபர்கள் வளர்ந்தால் மட்டும் போதாது, உங்களைப் போன்ற சிறுவணிகர்களும் வளர வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அதுதான் உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும், அதுதான் திராவிட மாடல் ஆட்சி.

பெரிய நிறுவனங்கள் தொடங்கி சிறு கடைகள் வரைக்கும் வளர்ந்தாக வேண்டும். வளர்ச்சியை நோக்கியதாக எல்லா தொழில்களும் மாற வேண்டும். அதனால் பெரும் தொழிலதிபர்கள் மாநாடு என்றாலும், சிறு வணிகர்கள் நடத்தும் மாநாடு என்றாலும் எனக்கு இரண்டும் ஒன்றுதான், நான் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. பெரிய தொழில்கள் செழிக்கும்போது சிறுதொழில்களும் வளரும். சிறு தொழில்கள் காலப்போக்கில் பெரும் நிறுவனங்கள் ஆகும். எனவே ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல. ஒன்றின் வளர்ச்சியில் மற்றொன்றுக்கும் பங்கு உண்டு என்ற எண்ணத்தோடு வணிகர் பெருமக்கள் தங்கள் தொழிலில் முனைப்போடு ஈடுபட வேண்டும்.

தொழில் முதலீடுகளை வரவேற்கக்கூடிய அதே நேரத்தில் வணிகர்களின் நலன் நிச்சயமாக, உறுதியாக பாதுகாக்கப்படும். அந்த அளவுக்கு உற்பத்தி ஆற்றல் மிக்க மாநிலமாக தமிழகம் மாற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. வணிகர்களாகிய நீங்கள் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களோடு பழகக் கூடியவர்கள், நேரடித் தொடர்பில் இருக்கக் கூடியவர்கள். தமிழ்நாடு அரசின் நல்ல பல திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் தூதுவர்களாக நீங்கள் செயல்பட வேண்டும். மக்களின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை அரசுக்கு நீங்கள் ஆலோசனைகளாகச் சொல்லலாம். அதைக் கேட்டுச் செயல்படுத்தித் தர நாங்கள் காத்திருக்கிறோம், தயாராக இருக்கிறோம். நல்ல யோசனைகள் எந்தப் பக்கத்திலிருந்து வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய திறந்த மனத்தோடு இருக்கக்கூடியவன்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்.

ஆனால், அதே நேரத்தில் திட்டமிட்டுப் பரப்பக்கூடிய அவதூறுகளுக்குப் பதில் சொல்லி என்னுடைய நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. அவர்களுக்கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஒரே பதில், திரும்பத்திரும்பச் சொல்கிறேன், பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன 'வாழ்க வசவாளர்கள்' என்பதுதான். வணிகர் சங்கப் பேரவை சார்பில் எனக்கு அளிக்கப்பட்ட பாராட்டுகள் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. அதற்கு அனைவருக்கும் நான் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த எழுச்சி மிகுந்த மாநாட்டை ஏற்பாடு செய்து அதில் பங்கெடுப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இந்த மாநாட்டின் தலைவர், உங்கள் அமைப்பினுடைய தலைவர் விக்கிரமராஜா அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து இங்கு வந்திருக்கிறீர்கள். கலைஞர் அவர்கள் மாநாட்டு நிகழ்ச்சிக்கு சென்றாலும், பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு சென்றாலும், எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அந்த நிகழ்ச்சியில் பேசி முடிக்கின்ற நேரத்தில் ஒரு வேண்டுகோளை வைப்பார், வந்திருக்கக்கூடியவர்கள் நீங்கள் பத்திரமாக ஊர் போய்ச் சேர வேண்டும். நான் அதைத்தான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என்று முதலமைச்சராக மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மட்டுமல்ல, உங்களில் ஒருவனாக இருந்து உங்கள் அன்புச் சகோதரனாக நான் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

நம்முடைய விக்கிரமராஜா அவர்கள் பல கோரிக்கைகளை அவரே சொன்னார், அவர் என்னை சந்திக்க வருகிறபோதெல்லாம் கோரிக்கையோடுதான் வருவார், அந்தக் கோரிக்கையோடு வருகிறபோதெல்லாம் பக்குவமாக அதை எடுத்துச் சொல்வார். அரசு அதிகாரிகளை அழைத்து உட்காரவைத்து அவர்களிடத்தில் பேசுகிறபோது, எப்படி சொன்னால் அதிகாரிகள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்று அறிந்து, புரிந்து அதற்கேற்ற வகையில் சொல்லக்கூடிய ஆற்றலைப் பெற்றவர் நம்முடைய விக்கிரமராஜா அவர்கள்.

கொரோனா நேரத்தில் கடையை மூடவேண்டும், Lockdown செய்ய வேண்டும் என்று சொல்கிறபோதெல்லாம், ஒவ்வொரு முறையும் அந்தக் கூட்டம் நடத்துவதற்கு முன் அவரைத் தனியாக அழைத்து கேட்ட பின்புதான் எந்த முடிவையும் நாங்கள் எடுத்திருக்கிறோம், அதுதான் உண்மை. ஆக, அவர் சொல்கிறார் என்றால், அது உங்களுடைய குரல். எனவே, வணிகப் பெருமக்களாக இருக்கக்கூடிய உங்களுடைய குரலாக அது ஒலிக்கிறது என்பதை நாங்கள் அறிந்து, புரிந்து வைத்திருக்கக்கூடிய காரணத்தினால்தான், அதே அடிப்படையில் இன்றைக்கும் பல கோரிக்கைகள் இந்த மேடையில் வைத்திருக்கிறார், மனுவும் கொடுத்திருக்கிறார். சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கிறது, 10-ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. நீங்கள் வைத்த கோரிக்கைகளை முடிந்த வரைக்கும் இப்போது எதை அறிவிக்க முடியுமோ அவற்றையெல்லாம் ஓரளவுக்குச் சொல்லியிருக்கிறேன். ஆனால், இன்னும் என் மனம் நிறைவடையவில்லை.

என் மனம் எப்போது நிறைவடையும் என்றால், அத்தனைக் கோரிக்கைகளையும் நாம் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம் என்று சொல்கிறபோதுதான் என் மனம் நிறைவடையும், அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஏதோ பேச்சுக்காக பேசுகிறான், மேடையில் நின்று பேசுகிறான், மாநாட்டில் ஏதோ கைத்தட்டல் வாங்குவதற்காக பேசுகிறான் என்று நினைத்துவிடாதீர்கள். திரும்பத் திரும்பச் சொல்கிறேன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இரண்டே வரி திருக்குறள்போன்று, ஒன்றிரண்டு தலைப்புச் செய்தியைச் சொல்வார் கலைஞர் அவர்கள்,

"சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்" என்று. ஆக அவர் வழி நடைபெறக்கூடிய இந்த ஆட்சிக்குப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய உங்களால் அந்தப் பொறுப்பில் உட்கார்ந்திருக்கக்கூடியவன் நான், அதை மறந்திட மாட்டேன். ஆகவே, நிச்சயம் இன்னும் என்னென்ன கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டுமோ, சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததற்குப் பிறகு அதிகாரிகளை அழைத்துப்பேசி, ஏன், உங்கள் தலைவரையும் மீண்டும் கோட்டைக்கு வரவழைத்துப் பேசி, எது, எது தீர்த்து வைக்கப்படுமோ அத்தனை கோரிக்கைகளையும் உறுதியாக நிறைவேற்றப்படும், நிறைவேற்றப்படும் என்ற உறுதியை, நம்பிக்கையை எடுத்துச்சொல்லி, இந்த மாநாட்டில் பங்கேற்கக்கூடிய நல்ல வாய்ப்பு தந்திருக்கக்கூடிய அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories