தமிழ்நாடு

“நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி மூலம் ‘திராவிட மாடல் ஆட்சி’யை உலகிற்கு உணர்த்துவோம்” : முதல்வர் உரை !

நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு கிராம ஊராட்சிகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு ‘திராவிட மாடல் ஆட்சி’ என்பதை உலகிற்கு நாம் உணர்த்திடப் போகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி மூலம் ‘திராவிட மாடல் ஆட்சி’யை உலகிற்கு உணர்த்துவோம்” : முதல்வர் உரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஒன்றியம், செங்காடு ஊராட்சியில் இன்று (24.4.2022) நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். செங்காடு ஊர் பொதுமக்களிடத்தில் குறைகளைக் கேட்டு அதைச் சரிசெய்ய வேண்டும், நிவர்த்தி செய்திட வேண்டும் என்கிற உணர்வோடு இந்த கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கக்கூடிய உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை, பாராட்டுகளை, நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த கிராம சபைக் கூட்டத்தில் இன்று தேசிய ஊராட்சிகள் நாள். அப்படிப்பட்ட இந்த நாளில் இந்த செங்காடு கிராமத்தில், உங்களோடு இந்த கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

எண்ணற்ற கோயில்கள், குடவரைகள், சின்னங்கள், புராதன கட்டடங்கள், கோபுரங்கள் ஆகியவற்றின் மூலமாக ஓர் உன்னத இடத்தைப் பெற்றிருக்கக்கூடிய ஊர்தான் இந்த காஞ்சி மாவட்டம் என்பதை அனைவரும் நன்றாக அறிவோம்.

நமக்கெல்லாம் ஆசானாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த ஊர் காஞ்சிபுரம். எனவே, அவர் வழி வந்திருக்கக்கூடிய நாம் இன்றைக்குக் காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய இந்த செங்காடு கிராம ஊராட்சியினுடைய மக்களைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பினைப் பெற்றிருக்கிறோம். இதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

“நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி மூலம் ‘திராவிட மாடல் ஆட்சி’யை உலகிற்கு உணர்த்துவோம்” : முதல்வர் உரை !

தமிழக உள்ளாட்சி அமைப்புகள், பாரம்பரியமான பழம்பெரும் வரலாறுகள் கொண்டது என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இந்த மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டு குறிப்புகள் இதற்குச் சான்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஊராட்சியினுடைய அமைப்புகளை வலுப்படுத்தவும், வலிமைப்படுத்தவும், அதிகாரப் பரவலை உறுதிப்படுத்தவும், அரசியலமைப்பினுடைய சட்டத்தில் 73வது திருத்தம் ஊராட்சி அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் முதன்முதலாக நடைமுறைக்கு வந்த நாளான ஏப்ரல் 24, தேசிய ஊராட்சிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஒரு நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அதற்குத் தேவையான எல்லா அடிப்படை வசதிகளையும் நாம் பூர்த்தி செய்தாக வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை, 17 வகையான நிலையான நீடித்த வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goal) அறிவித்திருக்கிறது. அதன்படி, ஊராட்சிகளில் எல்லா அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தன்னிறைவு அடையக்கூடிய வகையில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார் என்பது நாடறிந்த உண்மை.

அவர் கொண்டு வந்த திட்டம்தான் ‘அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்’. அந்தத் திட்டத்தை புதுப்பொலிவோடு நாம் இப்போது நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறோம். அவர் கொண்டு வந்திருக்கக்கூடிய திட்டங்களில் முக்கியமானவற்றை நான் சொல்ல வேண்டும் என்று சொன்னால், சமூகநீதியோடு இன, மத ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல், சாதி, பேத, மதங்களெல்லாம் கடந்து அனைவரும் ஒற்றுமையோடு வாழ வேண்டும், ஒருமித்த கருத்தோடு வாழ வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம்தான் தந்தை பெரியார் பெயரில் உருவாக்கிய ‘பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம்’ என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

அதேபோல, மக்கள் பணிகளை அடையாளம் கண்டு அரசின் உதவியோடு தங்களுக்குத் தேவையான பணிகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ள நிறைவேற்றப்பட்ட திட்டம்தான் ‘நமக்கு நாமே திட்டம்’. ஊராட்சிகள் அனைத்திலும் முழுமையாக அறிவுச் சுடரை ஏற்ற வேண்டும் என்பதற்காக பேரறிஞர் அண்ணா பெயரில் நூலகங்கள் (Library) உருவாக்கப்பட்டது.

“நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி மூலம் ‘திராவிட மாடல் ஆட்சி’யை உலகிற்கு உணர்த்துவோம்” : முதல்வர் உரை !

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் வழியில் செயல்படக்கூடிய நமது அரசு, உள்ளாட்சிகள் மீது கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளதுபோல, ஊராட்சி அளவிலும் அனைத்து துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, அரசின் சேவைகள் கிராம மக்களைச் சென்றடைய கிராம செயலகம் உருவாக்கப்பட இருக்கிறது.

மக்களுடைய பங்கேற்பினை அதிகப்படுத்தி முழு மக்கள் அதிகாரத்தினை ஏற்படுத்திட, கிராம சபைக் கூட்டங்கள் ஆண்டுக்கு ஆறு முறை கட்டாயமாக கூட்டப்பட வேண்டும் என்ற ஒரு அறிவிப்பை 110-விதியின் கீழ் சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் நான் அறிவித்திருக்கிறேன். முன்பெல்லாம் ஆண்டுக்கு நான்கு முறைதான் கிராம சபைக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது, அதையும் முறையாக கூட்டியதில்லை.

நோயற்ற ஊராட்சி இலக்கை எட்டுவதற்கு மக்களைத் தேடி மருத்துவம், மொத்தம் உள்ள ஊராட்சிப் பிரதிநிதிகளில் மகளிருக்கு 56 விழுக்காடு இட ஒதுக்கீடு, அனைத்து ஊராட்சிப் பிரதிநிதிகளுக்கும் 5 முதல் 10 மடங்கு வரை அமர்வுப் படி உயர்த்தி, அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல், நவம்பர் 1-ஆம் நாள் உள்ளாட்சிகளின் நாளாக கடைப்பிடித்து சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்குவது போன்ற அந்தத் திட்டங்களும் நிறைவேற்றப்பட இருக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 7.46 இலட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள 1.7 கோடி மகளிருடைய நிதி சுதந்திரத்தையும், நிதி மேலாண்மையையும் உறுதி செய்து நம்முடைய அரசு முனைப்போடு செயலாற்றிக் கொண்டிருக்கிறது. நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு கிராம ஊராட்சிகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு ‘திராவிட மாடல் ஆட்சி’ என்பதை உலகிற்கு நாம் உணர்த்திடப் போகிறோம். நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சிகளை எட்டுவதன் மூலமாக இந்த கிராம ஊராட்சிகள், தேசிய அளவில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கும்.

“நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி மூலம் ‘திராவிட மாடல் ஆட்சி’யை உலகிற்கு உணர்த்துவோம்” : முதல்வர் உரை !

கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்க, முன்மாதிரி கிராம விருது, உத்தமர் கிராம விருது அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படக்கூடிய சிறந்த தொழில் மற்றும் சிறந்த வணிக நிறுவனங்களுக்கு விருது என அரசு பல்வேறு விருதுகளை அறிவித்துக் கொண்டிருக்கிறோம். மாநில அளவிலும், ஒன்றிய அளவிலும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தத் திட்டங்களையெல்லாம் திறம்பட தேவைக்கேற்ப ஒருங்கிணைத்து கடைக்கோடி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது உள்ளாட்சி அமைப்புகளால்தான் முடியும்.

எனவே, இன்றைய கிராம சபைக் கூட்டத்தில் இங்கே உங்களிடத்தில் நான் கேள்விகளைக் கேட்டபோது, அத்தனை பேரும் எழுந்து சொன்னீர்கள். இது இந்த கிராமத்தில் மட்டும் அல்ல, ஏறக்குறைய 10 வருட காலமாக ஒரு ஆட்சி இருந்தது. அந்த ஆட்சியில் முறையாக உள்ளாட்சி அமைப்பினுடைய தேர்தலைக் கூட நடத்த முடியாத நிலை இருந்தது.

நாம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, உள்ளாட்சித் தேர்தலையும் முறையாக நடத்தி முடித்திருக்கிறோம். உள்ளாட்சியினுடைய பிரதிநிதிகள் எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஏதோ நூற்றுக்கு நூறு நம்முடைய ஆளும்கட்சிதான் வந்திருக்கிறது என்று இல்லை. 90 சதவீதம், 95 சதவீதம் நாம் வந்திருந்தாலும், 5 சதவீதம் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்களும் அந்தப் பொறுப்பிற்கு வந்திருக்கிறார்கள்.

எனவே, அவர்கள் எதிர்க்கட்சி, இன்னொரு கட்சி என்று நாங்கள் பார்க்காமல், எல்லா ஊராட்சிகளுக்கும், எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அந்த ஊராட்சிகளுக்கு என்னென்ன உதவிகள் வேண்டுமோ, என்னென்ன தேவைகள் அவசியமோ, குடிநீர் பிரச்சனையைப் பற்றி சொன்னீர்கள், ரேஷன் கடையைப் பற்றி சொன்னீர்கள், அதேபோல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இருக்கக்கூடிய இடையூறுகளைப் பற்றிச் சொன்னீர்கள், நூறு நாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறீர்கள், இப்படி பல கோரிக்கைகள் இருக்கின்றன. இதையெல்லாம் நாங்கள் இன்றைக்கு கவனமாக குறித்து வைத்துக்கொண்டு, நிச்சயமாக, உறுதியாக அதையெல்லாம் மிகமிக விரைவில், அனைத்தையும் நாங்கள் நிறைவேற்றித் தருவதற்குக் காத்திருக்கிறோம்.

“நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி மூலம் ‘திராவிட மாடல் ஆட்சி’யை உலகிற்கு உணர்த்துவோம்” : முதல்வர் உரை !

செங்காடு ஊராட்சியைப் பொறுத்தவரைக்கும் நான் சொல்ல வேண்டுமென்றால்,

❖அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், செங்காடு கிராமத்தில் ரூ.12 இலட்சத்து 11 ஆயிரம் செலவில் மதுரை வீரன் கோயில் குளம் புனரமைக்கப்படும் என்ற அந்த உறுதியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

❖அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், கண்டமங்கலம் கிராமத்தில் மாத்தம்மன் கோயில் தெரு, செங்காடு கிராமத்தில் செங்காடு குறுக்குத் தெரு, மதுரைவீரன் கோயில் தெரு மற்றும் கண்டமங்கலம் பிரதான தெருக்களுக்கு ரூ.9 இலட்சத்து 40 ஆயிரம் செலவில் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்படும்.

❖அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு ரூ.5 இலட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் பெண் குழந்தைகளுக்கான கழிவறை கட்டித் தரப்படும்.

❖ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், செங்காடு, கண்டமங்கலம் கிராமத்தில் உள்ள தெருக்களுக்கு ரூ.25 இலட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்படும்.

❖ ஊராட்சிப் பொது நிதியில், கண்டமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள மயானத்திற்கு ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கப்படும்.

❖ பதினைந்தாவது நிதிக்குழு மானிய நிதியில், செங்காடு கிராமத்தில் ரூ.23 இலட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கழீவுநீர் கால்வாய் அமைக்கப்படும்.

❖ ஆதிதிராவிடர் குக்கிராம மேம்பாட்டு திட்டத்தின் கீழ், செங்காடு கிராமத்தில் பெருமாள் கோயில் மற்றும் மாரியம்மன் கோயில் தெருக்களுக்கு

ரூ.14 இலட்சத்து 4 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கப்படும்.

இப்பொழுது நான் அறிவித்துள்ள திட்டங்கள் மட்டுமன்றி இன்னும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் கிராம அளவில் அனைத்துத் தரப்பு மக்களையும் அடைய வேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய குறிக்கோளாக இருக்கிறது. அதன் மூலம் உங்கள் ஒவ்வொருவருடைய வாழ்வு வளம் பெற வேண்டும் என்ற வகையிலேதான் நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவைகளெல்லாம் ஏதோ அறிவிப்புகளுக்கு அறிவித்துச் சென்றுவிட்டேன் என்று நீங்கள் நினைத்துவிட வேண்டாம்.

நாங்கள் எப்போதுமே, நம்முடைய ஆட்சியைப் பொறுத்தவரைக்கும் கலைஞர் வழியில் நின்று, அண்ணா வழி நின்று, சொன்னதைத்தான் செய்வோம் - செய்வதைத்தான் சொல்வோம் என்ற அந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது. அதை நான் நிச்சயமாக உணருகிறேன். எனவே, இது நடந்து முடிந்திருக்கிறதா என்பதை அவர்களிடத்தில் தொலைபேசியிலோ அல்லது கடிதம் மூலமாகவோ கேட்டு மட்டும் அல்ல, நேரடியாக வந்து அடுத்த முறையும் நான் வந்து பார்ப்பேன் என்ற அந்த உறுதிமொழியை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, எனவே, அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பும், உங்களுடைய ஆதரவும் தொடர்ந்து இந்த அரசுக்கு இருக்க வேண்டும் என்ற அந்தக் கோரிக்கையையும் வைத்து, இந்த கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கக்கூடிய உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து, நன்றி தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories