இந்திய அரசியல் களம் - மாநில அரசு நிர்வாகத்தில் ஒரு “ஆல் ரவுண்டர்” முதல்வராக வலம் வருகிறார். தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் என ‘தினகரன்’ நாளேடு 23.4.2022 தேதியிட்ட இதழில் “ஆல் ரவுண்டர்” முதல்வர் என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது.
அதன்விவரம் பின்வருமாறு :-
ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள் வெற்றிவாகை சூடுவதற்காக உலகத்தரத்திலான கட்டமைப்புகளுடன் சென்னை அருகே பிரமாண்டமான விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் 110-வது விதியின்கீழ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஒலிம்பிக் போன்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்த, தமிழகத்தின் 4 மண்டலங்களில் தலா ஒன்று வீதம் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தலா ரூ.3 கோடி செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளது. ‘‘ஒலிம்பிக் தங்கம் தேடுதல்’’ என்ற திட்டம் ரூ.25 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது’’’’ என முதல்வர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் இந்தியாவில் விளையாட்டு உலகின் மணிமகுடமாக விளங்கக்கூடிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை தமிழகத்தில் நடக்க உள்ளது. உலகமே வியக்கக்கூடிய வகையில் இந்த போட்டி, தமிழக அரசால் பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளது. இப்போட்டியில், 180 நாடுகளை சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகிறார்கள். இந்த பணிகளும் சிறப்பாக நடந்து வருகிறது. இதன்மூலம் விளையாட்டு துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக உயர, வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக பதவி ஏற்றதுமுதல் மு.க.ஸ்டாலின் கல்வித்துறை, தொழில்துறை, வேளாண்மை துறை, குடிநீர் வழங்கல்துறை, வருவாய்துறை, மின்சாரத்துறை என ஒவ்வொரு துறையிலும் மேம்பாட்டு பணிகளையும், புதிய திட்டங்களையும் அதிரடியாக அறிவித்து அவற்றை அமல்படுத்தியும் வருகிறார். ஏழை-பணக்காரன் என்ற பாகுபாடின்றி, அனைவரது நலனும் பேணி வருகிறார். நரிக்குறவர் சமுதாய மேம்பாட்டை, இதுவரை தமிழகத்தை ஆண்ட எந்த முதல்வர்களும் கையில் எடுக்கவில்லை. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் அச்சமுதாய மக்களின் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருவதுடன், ‘’நான் இருக்கிறேன்.., கவலை வேண்டாம்...’’ என அச்சமுதாய மக்களையும் அரவணைத்து செல்கிறார்.
சென்னை ஆவடியில் அச்சமுதாய மக்களின் வீட்டுக்கே நேரில் சென்று உணவருந்தி வந்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரு துறை மட்டும் வளர்ந்தால் போதாது, ஒட்டுமொத்த துறைகளும் வளரவேண்டும், இந்திய அளவில், ‘’நம்பர் ஒன் மாநிலம் - தமிழ்நாடு’’ என்பதை நிலைநிறுத்த வேண்டும் என்ற ஒற்றை கொள்கையுடன் சுழன்று பணியாற்றி வருகிறார். இப்படி இந்திய அரசியல் களம் மற்றும் மாநில அரசு நிர்வாகத்தில் ஒரு ‘‘ஆல் ரவுண்டர்’’ முதல்வராக வலம் வருகிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.