தமிழ்நாடு

“காழ்ப்புணர்ச்சிக்கு பெயர்போனது உங்க ஆட்சி” : ஒரு கேள்வி கேட்ட OPS-ஐ பட்டியல் போட்டு திணறடித்த முதல்வர்!

“அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அரசு திட்டங்களை முடக்குவதற்குப் பெயர்போன அரசு முந்தைய அ.தி.மு.க அரசு” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலளித்துப் பேசினார்.

“காழ்ப்புணர்ச்சிக்கு பெயர்போனது உங்க ஆட்சி” : ஒரு கேள்வி கேட்ட OPS-ஐ பட்டியல் போட்டு திணறடித்த முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்ல்வம் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, தாலிக்குத் தங்கம் வழங்கக்கூடிய திட்டத்தை நிறுத்தியதாக ஒரு கருத்தை நம்முடைய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இங்கே பதிவு செய்திருக்கின்றார். அ.தி.மு.க தொடங்கிய திட்டங்களை, ஏதோ திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்ததும் நிறுத்தி விடுவதைப்போல ஒரு போலித் தோற்றத்தை இங்கே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்கள் தனது உரையிலே உருவாக்கியிருக்கிறார்கள்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, முந்தைய உங்களுடைய அரசு திட்டங்களை முடக்குவதற்குப் பெயர் போன அரசு; அது உங்களுடைய அரசு. இது கடந்த காலங்களில், பல நேரங்களில் நிரூபணமாகியிருக்கக்கூடிய உண்மை. ஊடகத்தினர், பொதுமக்கள் என அனைவரும் இதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆகவே, தலைவர் கலைஞர் அவர்களால், தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் மாபெரும் சட்டமன்ற-தலைமைச் செயலக வளாகம் கட்டப்பட்டு, அன்றைக்குப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அவர்களால் அது திறந்து வைக்கப்பட்டது. அந்த இடத்தில்தான், சட்டமன்றமும் நடந்திருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்குப்பிறகு, சட்டமன்றம் நடைபெற்ற அந்த இடத்தை மருத்துவமனையாக மாற்றியது யார்?

பேரறிஞர் அண்ணா அவர்களுடைய நூற்றாண்டு விழா நினைவாக, 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 8 மாடிகள் கொண்ட அளவில் ஒரு பெரிய மாளிகையை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை தி.மு.க. ஆட்சி கட்டியது. அந்த மாபெரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற நினைத்ததும், அதைப் பாழடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதும் யார்? அங்கிருந்த அண்ணாவினுடைய சிலைக்குக் கீழே கல்வெட்டு இருக்கும். அந்தக் கல்வெட்டில் முதலமைச்சர் கலைஞர் அவர்களது பெயர் இருந்தது. அந்தப் பெயரையே எடுத்த ஆட்சி எது?

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திலே, கலைஞர் வீடு வழங்கக்கூடிய திட்டத்திலே இருந்த கலைஞர் பெயரை நீக்கியது யார்? செம்மொழிப் பூங்காவிலே, கலைஞருடைய பெயரை மறைப்பதற்காக செடி, கொடிகளை கொண்டுபோய் வைத்து, அதை முழுமையாக மூடி மறைத்தது யார்? கடற்கரைப் பூங்காவில் இருந்த கலைஞர் பெயரை எடுத்தது யார்?

இராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு, அங்கிருந்த கல்லூரியை அப்புறப்படுத்த நினைத்தது உங்களுடைய ஆட்சி. அதை இடிக்கக்கூடாது, அந்தக் கல்லூரி பழமையான கல்லூரி, பல நூற்றாண்டுகளைக் கண்டிருக்கக்கூடிய வரலாற்றுச் சிறப்புக்குரிய கல்லூரி என்று நாங்கள் அன்றைக்குத் தி.மு.க. சார்பில் குரல் கொடுத்தோம். அதற்காகச் சிறைபிடிக்கப்பட்டு, சிறைக்குப் போய் பல நாட்கள் இருந்து வந்திருக்கிறோம். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததற்குப்பிறகு, அந்தக் கல்லூரி வளாகத்தில் ஒரு கட்டடம் கட்டப்பட்டு, கலைஞர் மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டது. நீங்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, அந்த கலைஞர் மாளிகையில் இருந்த கலைஞர் பெயரை நீக்கியதுதான் உங்களுடைய சாதனை.

ஆகவே, கலைஞர் கொண்டுவந்தார் என்பதற்காகவே சமத்துவபுரங்கள் எல்லாம் பழுதுபார்க்கப்படாமல், அவற்றைப் பேணிப் பாதுகாக்க முடியாத அளவிற்கு, அதைப் பாழடித்தது யார்? உழவர் சந்தைகளை மேலும் மேலும் வலுப்படுத்தக்கூடாது என்று அதை இடித்து மூடியது யார்? தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உடன்குடி பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்-ஐ முடக்கியது யார்? நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், வருமுன் காப்போம் திட்டம் போன்ற இந்தத் திட்டங்களையெல்லாம் உங்கள் ஆட்சியில் முடக்கினீர்கள். அதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

இன்னொன்று, முக்கியமான விஷயம்; இங்கே மதுரவாயல்-சென்னை துறைமுகம் உயர் மட்டச் சாலைத் திட்டம் குறித்தும் பேசினார்கள். அந்தத் திட்டத்தை முடக்கியது யார்? சமச்சீர் கல்விப் பாடப்புத்தகத்தில் கலைஞர் எழுதிய செம்மொழி வாழ்த்துப் பாடலையும், 7 ஆம் வகுப்புப் பாடத் திட்டத்திலே நாடகக் கலை குறித்த பாடத்தில் கலைஞர் அவர்களது பெயரையும் ஸ்டிக்கரை வைத்து மறைத்தது யார்?

இப்படி வரிசையாக என்னால் சொல்ல முடியும். அதற்காக, பழிவாங்குவதற்காக நாங்கள் செய்கிறோம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நல்ல திட்டங்கள் எதுவாக இருந்தாலும், முறையான திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அதை நிறைவேற்றுகிற ஆட்சிதான், கலைஞர் அவர்கள் உருவாக்கித் தந்திருக்கக்கூடிய, எங்கள் தலைமையில் நடைபெறக்கூடிய இந்த ஆட்சி என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories