தமிழ்நாடு

தாலிக்கு தங்கம் வழங்குவதில் இருந்த குறைகள்.. ‘பக்கா பிளான்’ போட்டு திட்டத்தையே மாற்றியமைத்த அமைச்சர் PTR!

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் இருந்த குறைகளை திருத்தம் செய்து, மாதந்தோறும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டமாக கொண்டு வந்துள்ளோம் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தாலிக்கு தங்கம் வழங்குவதில் இருந்த குறைகள்.. ‘பக்கா பிளான்’ போட்டு திட்டத்தையே மாற்றியமைத்த அமைச்சர் PTR!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்தார். அப்போது, “தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது.

இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைபயின்றுமேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம்.

இத்திட்டத்தின் மூலம், சுமார் ஆறு இலட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது.இந்தப் புதிய முன்முயற்சிக்காக, வரவு-செலவுத் திட்டத்தில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈ.வே.ரா.மணியம்மையார் நினைவு வறிய நிலையில் உள்ள விதவையரின் மகள்களின் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் இத்தகைய அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து பட்ஜெட்டை வரவேற்றிருந்தனர். இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசினார். அப்போது, “பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

கல்வி மற்றும் பெண்களின் முன்னெற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் நிதி மற்றும் சட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதனைத்தான் நாங்கள் திராவிட மாடல் என்கின்றோம்.

மேலும், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் சில குறைகள் இருந்தது. அதில் 4 ஆண்டுகள் பின் தங்கியிருந்ததை பார்க்க முடிந்தது. அதனை சரிசெய்ய முடியாது. எனவே அந்த குறைகளில் திருத்தம் செய்து, மாதந்தோறும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டமாக கொண்டு வந்துள்ளோம்.

பள்ளிக்கல்வி அளவில் அளவில் தேர்ச்சி விகிதம் அதிகம் இருந்தாலும், கல்லூரி அளவில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. அதனைக் கருத்தில் கொண்டுத்தான் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories