தமிழ்நாடு

”21ம் நூற்றாண்டின் அறிவுத் தீண்டாமை இந்த நீட் தேர்வு” - கொதித்தெழுந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கருப்பாக உள்ளவர்கள் உள்ளே வரக்கூடாது என்பது எத்தகைய பாகுபாடோ, அதைப் போல அரசு பள்ளியில் படித்தவர்களது புத்தகங்களில் இருந்து வினாத்தாள் தயாரிக்காததும் பாகுபாடுதான்.

”21ம் நூற்றாண்டின் அறிவுத் தீண்டாமை இந்த நீட் தேர்வு” - கொதித்தெழுந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீட் தேர்வுக்கு விலக்களிக்க கோரும் மசோதவை நிறைவேற்றுவதற்காக கூடிய சிறப்பு சட்டமன்றத்தில் ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்றும் ஆளுநரின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுக்கும் வகையில் உரையாற்றியிருந்தார்.

அதில், ”230 உறுப்பினர்கள் என்றால் தமிழ்நாட்டைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட மசோதா அது. அதனை ஏற்றுக் கொண்டு ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். மாறாக அது குறித்து முடிவெடுக்காமலேயே 142 நாட்கள் வைத்திருந்து, நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்திய நிலையில் மீண்டும் நமக்கே திருப்பி அனுப்பி உள்ளார்.

ஆளுநரின் அதிகாரத்தை நாம் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் நிராகரிப்பதற்காக அவர் சொன்ன காரணங்கள், சரியானவை அல்ல என்பதை இந்த மாமன்றத்தில் நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.

கருப்பாக உள்ளவர்கள் உள்ளே வரக்கூடாது என்பது எத்தகைய பாகுபாடோ, அதைப் போல அரசு பள்ளியில் படித்தவர்களது புத்தகங்களில் இருந்து வினாத்தாள் தயாரிக்காததும் பாகுபாடுதான்.

நீட் என்பது கல்வி முறை அல்ல. அது பயிற்சி முறை. இது தனிப்பயிற்சியைத் தான் ஊக்குவிக்கும். தனிப்பயிற்சி பெற முடியாதவர்கள், கல்வி பெற தகுதியற்றவர்கள் என்ற பாகுபாட்டை உருவாக்குகிறது.

ஒரு மாணவர் இரண்டு மூன்று ஆண்டுகள் படிக்க வேண்டும். இரண்டு மூன்று ஆண்டுகளை பயிற்சிக்காக ஒதுக்க வேண்டும். லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். இதனை பொருளாதாரத்தில் பின் தங்கிய, ஏழை எளிய மாணவர்களால் எப்படி சமாளிக்க முடியும்? என்பதுதான் திரும்பத் திரும்ப நாம் எழுப்பும் கேள்வி.

கட்டணம் செலுத்தி பயிற்சி எடுக்க முடியாதவர்களால் மருத்துவ படிப்புக்கு உள்ளே நுழைய முடியாது என்பதே, கட்டணம் செலுத்தி இரண்டு மூன்றாண்டு காலம் படிக்க முடிந்தவர்களால் உள்ளே நுழைய முடியும் என்பதே இந்த 21 ஆம் நூற்றாண்டில் மாபெரும் அறிவுத் தீண்டாமை. இந்த தீண்டாமை அகற்றப்பட வேண்டாமா? அதற்காகத் தான் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் கொண்டு வருகிறோம்.

வேலூர் மருத்துவக் கல்லூரி வழக்கை ஆளுநர் மேற்கோள் காட்டி இருக்கிறார். அதற்கும் நாம் கொண்டு வரும் நீட் விலக்கு மசோதாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மார்டன் பல் மருத்துவமனைக்கும் மத்திய பிரதேச அரசுக்குமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அமர்வில் நடந்தது. உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு என்று தீர்ப்பளித்தது.

அதே வழக்கில் நீதியரசர் பானுமதி வழங்கிய தனித்தீர்ப்பில், மாணவர் சேர்க்கையை ஒழுங்குறுத்தும் மாநில அரசின் சட்டம், மாநில அரசின் வரம்புக்கு உட்பட்டதே என்றும் தீர்ப்பளித்தார்கள்.

இந்த அடிப்படையில்தான் தமிழ்நாடு சட்டமன்றம் நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவை நிறைவேற்றி இருக்கிறது.

அரசமைப்பு ரீதியாக நீட் தேர்வு தேவைப்படுவதாக ஆளுநர் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின் தங்கியவர்களது உரிமைக்காக எந்தச் சட்ட ஏற்பாட்டையும் செய்து கொள்ளலாம் என்று அரசியலைப்புச் சட்டம் சொல்கிறது. அந்த அடிப்படையில் தான் நாங்கள் இந்த சட்ட மசோதாவை மீண்டும் கொண்டு வருகிறோம்.

அரசியலமைப்புச் சட்டம், பாகுபாட்டுக்கு எதிரானது.

நீட் தேர்வு, பாகுபாடு காட்டுகிறது.

அரசியலமைப்புச் சட்டம் சமூகநீதியை வலியுறுத்துகிறது.

நீட் தேர்வு, சமூகநீதிக்கு எதிரானது.

அரசியலமைப்புச் சட்டம், சட்டத்தின் நீதியைப் பேசுகிறது.

நீட் தேர்வு, பணக்கார நீதியைப் பேசுகிறது.

சமத்துவம் என்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம்.” இவ்வாறு தெரிவித்திருந்தார்.

banner

Related Stories

Related Stories