மு.க.ஸ்டாலின்

மாணவர்களை கல்லறைக்கும், சிறை அறைக்கும் அனுப்பும் இந்த ’நீட்’ தேவையா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

நீ டாக்டர் ஆக முடியாது என்றும், உனக்கு தகுதியில்லை என்று தடுக்கிறது. அதனால் தான் நீட் விலக்கு மசோதாவைக் கொண்டு வருகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

மாணவர்களை கல்லறைக்கும், சிறை அறைக்கும் அனுப்பும் இந்த ’நீட்’ தேவையா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீட் விலக்கு தொடர்பான மசோதாவை நிறைவேற்ற கூட்டப்பட்ட சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தின் போது நீட் தேர்வுக்கு ஏன் விலக்களிக்க கோருகிறோம் எனக் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியிருந்தார்.

அப்போது அவர் பேசியதாவது, “நீட் தேர்வு என்பது அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட தேர்வு முறை கிடையாது. அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள தேர்வு முறையும் கிடையாது.

இந்திய அளவில் ஆட்சி மாற்றம் நடந்து, பாஜக ஆட்சி அமைந்ததும் ஒரு தனியார் பயிற்சி நிறுவனம் இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்தது.

உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியது. அப்போது கிடைத்த தீர்ப்பில் “Judgement is recalled” என்றும் “hear this case afresh” என்றும்தான் 24.5.2016 அன்று உச்சநீதிமன்றம் கூறியது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் ஒன்றிய அரசு 11.4.2016 அன்று ஒரு அவசரச் சட்டம் பிறப்பித்து, நாடு முழுவதும் நீட்டை செயல்படுத்தியது. அதாவது நீட் தேர்வு என்பதே தனியார் பயிற்சி நிறுவனங்களுக்குச் சாதகமானது.

இந்த தேர்வின் மூலமாக மாணவ, மாணவியரிடம் இருந்து லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் பணம் வசூலிக்கிறார்கள். அவர்களது நன்மைக்காக மட்டுமே இந்த தேர்வு பயனுள்ளதாக இருக்கிறது. இந்த பணத்தைச் செலுத்தி படிக்க முடியாதவர்களுக்காகத் தான் நாம் நீட் விலக்கு மசோதாவைக் கொண்டு வருகிறோம்.

நீட் தேர்வு என்பது ஏழை எளிய மாணவர்களது கல்வி உரிமைக்கு தடை போடுகிறது. அவர்களது மருத்துவக் கனவில் தடுப்புச் சுவர் எழுப்புகிறது. நீ டாக்டர் ஆக முடியாது என்று தடுக்கிறது. உனக்கு தகுதியில்லை என்று தடுக்கிறது. அதனால் தான் நீட் விலக்கு மசோதாவைக் கொண்டு வருகிறோம்.

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 15 மாணவர்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவையில் ஒன்றிய அரசே 3.12.2021 அன்று அறிவித்தது.

கடந்த 29.9.2021 அன்று உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் சிலர் வழக்கு தாக்கல் செய்தார்கள். செப்டம்பர் 12 அன்று நடந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. ஆள் மாறாட்டம் நடந்துள்ளது எனவே தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்கள்.

இது தான் நீட் தேர்வு. இந்த முறைகேடுகளை நாங்கள் எதிர்க்கிறோம். அதனால் நீட் தேர்வையும் எதிர்க்கிறோம். அதனால் தான் விலக்கு கோருகிறோம்.

அரியலூர் அனிதா முதல் 13 மாணவச் செல்வங்களை இந்தியாவின் வருங்கால தலைமுறையை இழந்தோம். பெற்றோர்கள் மட்டும் அந்த குழந்தைகளை, இளம் பிஞ்சுகளை பறிகொடுக்கவில்லை. நாமும் இழந்தோம், தமிழ்நாடும், ஏன் இந்திய நாடும் பறிகொடுத்தது.

சில மாணவர்களை கல்லறைக்கும், சில மாணவர்களை சிறை அறைக்கும் அனுப்பிய இந்த நீட் தேர்வு தேவையா என்பது தான் இந்த மாமன்றத்தில் நான் எழுப்பும் கேள்வி. அதனால் தான் நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறும் மசோதாவை நாம் நிறைவேற்றினோம்.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நிறைவேற்றி விடவில்லை. நீட் தேர்வால் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதா என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் டாக்டர் ஏ.கே.இராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைக்கப்பட்டது.

10.6.2021 அன்று இக்குழு அமைக்கப்பட்டது. மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. 86 ஆயிரத்து 342 பேர் தங்கள் கருத்தை பதிவு செய்தார்கள். இக்குழு அரசுக்கு 14.7.2021 அன்று அறிக்கை அளித்தது. நீட் தேர்வினால், சமுதாயத்தில் பின் தங்கியோர் மருத்துவக் கல்வியை பெற முடியவில்லை என்பதைப் புள்ளிவிபரங்களோடு இந்த குழு சொன்னது.

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க இயலவில்லை என்று சொன்னது. தகுதி, திறமை பேசுகிறார்களே- அந்த தகுதி, திறமை கூட இந்த தேர்வில் அடிபடுகிறது என்றும் இக்குழு சொன்னது.

இதனடிப்படையில் நீட் தேர்வை இக்குழு நிராகரித்தது. இந்த அறிக்கை மீது விரிவான பரிந்துரைகளை செயல்படுத்த தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழுவை நான் அமைத்தேன். அவர்கள் ஒரு மசோதாவை வடிவமைத்தார்கள்.

அது தான் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஒரு சட்டத்தை தயாரிப்பதற்கு முன்னால் இத்தனை முயற்சிகள் செய்யப்பட்டது. எனவே, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நாங்கள் செயல்படவில்லை.” எனக் கூறியிருந்தார்.

banner

Related Stories

Related Stories